பெத்த மனம்

ஞாயிறு அதிகாலையில் குடும்பத்துடன் மெரினா செல்வது வழக்கம். அப்படித்தான் அந்த ஞாயிறும் கடற்கரைக்கு சென்று அலைகளுடனும் குழந்தைகளுடனும் விளையாடிவிட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தோம்.

சரியாக அயனாவரம் k2 காவல் நிலையத்தை கடந்தபோதுதான் அந்த காட்சி கண்ணில் பட்டது.
வயதான பாட்டி ஒருவரை ஒருவன் கழுத்தைப் பிடித்து நெறித்து சாலையை நோக்கி தள்ளினான். பாட்டி மல்லாக்கடிக்க அப்படியே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்தது.

காவல் நிலையத்திற்கும் பாரதம் ஸ்டோருக்கும் நடுவில் இருந்த ஒரு மெத்தை கடையின் வாசலில் இந்த சம்பவம் நடந்தது. பதறிப்போய் வண்டியை திருப்பிக் கொண்டு நான் வந்ததைப்போலவே வேறு சிலரும் பாட்டியை நோக்கி ஓடி வந்தார்கள்.

நாங்கள் அனைவரும் முதலில் பாட்டியை தூக்கி அமர வைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தோம்.

என்னபிரச்னை என்று யாருக்கும் தெரியவில்லை.

பாட்டிக்கு வயது எப்படியும் 70க்கு மேல் இருக்கும். கூன் விழுந்த முதுகும் எலும்பும் தோலுமாக இருந்தார். ஒரு கண்ணில் பூ விழுந்து பார்வை இல்லாமலிருந்தது. நெற்றியில் திருநீறு பட்டை அடித்திருந்தார். கையில் ஒரு பிளாஸ்டிக் பை வைத்திருந்தார். ஆடையில் ஏழ்மையிருந்தாலும் கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவர் போலிருந்தார்.

“இப்படி வயசானவங்களை தள்ளிவிடுறியே.. அறிவிருக்கா..” என்று அவரை மெத்தைக்கடைக்காரர் உட்பட பலரும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஆளைப் பார்த்தேன். 40 வயதிருக்கும். கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியில்லாமல் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். கண்ணில் போதை வழிந்து கொண்டிருந்தது. ஓங்கி நாலு அப்பு அப்பலாமா என்று ஆத்திரமாக இருந்தது.

என் மனைவி பாட்டியை தன் தோளில் சாய்த்து பிடித்திருந்தார். நான் பாட்டி அருகே அமர்ந்து கைகளை பிடித்தபடி “யாரு பாட்டி அந்தாளு.. என்னாச்சு..” என்று கேட்டேன்.

என் கேள்விக்கு பாட்டியின் கண்களிலிருந்து கண்ணீர் தான் பதிலாக வந்து கொண்டிருந்தது. ரொம்ப அழுத்தி கேட்கவே..

“அவன் என் மவன்யா..” என்றார் அழுகையினூடாக.

விசயம் என்னவென்றால்,

அம்பத்தூரை சேர்ந்தவர் பாட்டி. கணவரின் மறைவுக்குப் பின் மகன் மருமகளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். மகன் வேலைக்கு போகாமல் எப்போதும் குடியே கதியாக இருந்ததால் மருமகள் பிறந்த விட்டுக்கு சென்றுவிட்டார்.

அன்றையதினம் பணம் கேட்டு நச்சரித்த மகனுக்கு காதில் இருந்த ஒரு கம்மலையும் விற்று கொடுத்திருக்கிறார். வீடு திரும்பும் வழியில் மேலும் பணம் கேட்க பாட்டி இல்லை என மறுக்கவே, அந்த குடிகார மகன் கழுத்தை நெறித்து தள்ளிவிட்டதெல்லாம் நடந்திருக்கிறது. இத்தனையையும் அழுகையினூடாக பாட்டி சொல்லி முடித்தார்..

அவ்வளவுதான் சுற்றி நின்ற கூட்டத்திலிருந்த லோக்கல் இளைஞர் ஒருவர்“ ஏண்டா.. பெத்த ஆத்தாளை இப்படி கழுத்தப்பிடிச்சு நெறிச்சு தள்ளிவிடுறீயே.. “ என்றபடியே பாட்டியின் மகனின் சட்டை காலரை கொத்தாக பிடித்து இழுத்து அடிக்க கைகளை ஓங்கினார்.

ஆனால் அதற்கெல்லாம் பாட்டியின் மகன் அசரவில்லை… அப்படியே தெனாவட்டாக நின்று கொண்டிருந்தார்.

ஆத்திரம் அடங்காத இளைஞர், பாட்டியின் மகனை அப்படியே பக்கத்திலிருந்த காவல் நிலையத்தை நோக்கி தரதரவென இழுத்து சென்றார்.

கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் “அழாதீங்கம்மா..” என்றபடி கையிலிருந்த சில நூறு ரூபாய் தாள்களை பாட்டி கையில் திணித்தார்.

அந்த காட்சியை கண்ட ஒருவர் “குடிகார நாயி.. ஒரு நிமிசத்துல பெத்த ஆத்தாள பிச்சக்காரியாக்கிட்டான் பாரு..” என்றார் வருத்தமாக.

“ஸ்டேஷன்ல வச்சு நல்லா உதைக்க சொல்லுங்க..” என்றார் மற்றொருவர்.

அவ்வளவுதான்..

“வேணாம்ய்யா.. எம்புள்ளைய அடிக்காதீங்க..
அவன் அடி தாங்க மாட்டான்யா…
அடிக்க வேணாம்னு சொல்லுங்கய்யா…”
என்று கையெடுத்து கும்பிட்டபடி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் பாட்டி… frown உணர்ச்சிலை

-கார்ட்டூனிஸ்ட் பாலா
15-9-15

Leave a Reply