பெண் கடம் வித்வான்

இன்றைய பெண்கள் வாய்ப்பு கிடைத்தால் எந்த துறையாக இருந்தாலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த தவறுவதில்லை. அந்த வரிசையில் முதல் பெண் கடம் வித்வான் என்ற புகழைப் பெற்றுள்ள சுகன்யா ராம்கோபால் (59) தொழில்ரீதியாக கடம் வாசிப்பதோடு, குறுகிய வாய் உள்ள கடத்தை கையாளும் திறமையும் பெற்றுள்ளார். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:
“பத்து வயதில் என்னுடைய குரு விக்கு விநாயகராமிடம் மிருதங்கம் பயின்று வந்தபோது கடம் கற்றுக் கொள்ள மேண்டுமென்ற ஆசை மனதில் தோன்றியது. அதெல்லாம் ஆண்கள் மட்டுமே வாசிக்கக் கூடிய பாரம்பரிய வாத்தியம். அதை கற்க வேண்டுமென்று நினைப்பதே தவறு என்று விக்கு என் ஆசையை நிராகரித்தார். வீட்டிலுள்ளவர்களும் தங்கள் ஆட்சேபனையை தெரிவித்தனர். இந்த எதிர்ப்பே கடம் வாசித்தே ஆக வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியது. என்னுடைய தந்தையின் பிடிவாதத்தையும் என் தாயார் மாற்றினார். கடம் எழுப்பும் ஓசை என் மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. என்னுடைய வாய்ப்பு வரும் வரை காத்திருப்பதென தீர்மானித்தேன்.
பின்னர் அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?
இரண்டாண்டுகள் கழித்து விக்கு விநாயக ராம் இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, என்னுடைய ஆசையை அவரது தந்தை ஹரிஹர சர்மாவிடம் கூறினேன். அப்போது எனக்கு 16 வயது. தன் சிறகுகளுக்குள் பாதுகாப்பாக குஞ்சுகளைப் பாதுகாக்கும் பறவையைப் போல் என்னை பாதுகாத்து ரகசியமாக கடம் வாசிக்க கற்றுத்தந்தார்.
வெளிநாட்டிலிருந்து வந்த விக்கு என் திறமையை அறிந்து அவரே பயிற்சியளிக்க முன்வந்தார்.
என்னுடைய வாழ்க்கையிலேயே அது ஒரு பொன்னான காலம். இன்று நினைத்தாலும் எப்படி அத்தனை வேகமாக கற்றுக் கொண்டேன் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. கச்சேரிகளில் வாசிக்க தொடங்கியபோது மூத்த கலைஞர்கள் கூட “உனக்கு ஏன்? இந்த வேண்டாத வேலை” என்று கூறி என் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர். அனைத்து எதிர்ப்புகளையும் எதிர்த்து நின்று என்னுடைய கனவை நிறைவேற்றிக் கொண்டேன்.
இன்று கச்சேரிகளில் கடம் வாசிக்க வாய்ப்புகள் உள்ளதா?
கடந்த 40 ஆண்டுகளில் பிரபல கர்நாடக பாடகர்களின் கச்சேரிகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாசித்துள்ளேன். ஒரு சில கச்சேரிகளில் என்னை கடம் வாசிக்க மறுத்ததும் உண்டு. தனி ஆவர்த்தனம் நடத்தும் போது மிருதங்கம் – கடம் வாசிப்பவர்களுக்கே அதிகம் வாய்ப்பளிப்பார்கள். தற்போது கர்நாடக இசையில் கடம் தனது பெருமையை இழந்து வருவதாகவே கருதுகிறேன். கடம் வித்வான்களுக்கு வழங்கும் சன்மானம் போதுமானதாக இல்லை என்பதும், அவர்களது வாழ்க்கைக்கு உதவும் வகையில் சன்மான தொகை இல்லை என்பதும் காரணமாக இருக்கலாம். இதனால் கடம் கற்றுக் கொள்பவர்களும் குறைந்து விட்டனர்.
கச்சேரிகளில் கடம் வாசிக்க செல்லும்போது குடும்ப வாழ்க்கை பாதிக்கப் படுவதில்லையா?
கடம் வாசிக்க, என்னுடைய குருநாதர் ஹரிஹர சர்மாவும், விக்கு விநாயக ராமும் எனக்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தார்களோ, அந்த அளவுக்கு என்னுடைய கணவரும் விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு குடும்பத்தை கவனித்து கொள்கிறார். கடம் வாசிப்பதில் எனக்குள்ள ஆர்வம் குறையாமல் இருப்பதற்கும், 2014 – ஆம் ஆண்டில் மத்திய சங்கீத நாடக அகாதெமியின் விருதை பெறுவதற்கும் அவரே காரணம்.
கடம் கற்று கொள்வது பற்றி புத்தகம் எழுத வேண்டுமென்ற எண்ணம் எப்படி தோன்றியது?
என்னுடைய குருநாதர் ஹரிஹர சர்மா மிருதங்கம் வாசிப்பது எப்படி? என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அதைப் பார்த்த பின்னரே இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நம்முடைய பாரம்பரிய வாத்தியத்தை விளக்கவும், தற்போது ஏற்பட்டுள்ள இடைவெளியை சமன் செய்வதற்கும் விக்கு விநாயக ராம் பாணியில் கடம் வாசிக்க கற்றுக்கொள்ள விளக்கப் படங்களுடன் “சுனாதனம்’ என்ற பெயரில் புத்தகமொன்றை எழுதி மல்லேஸ்வரம் சேவாசதன் ஆடிட்டோரியத்தில் சமீபத்தில் வெளியிட்டேன். இது பற்றிய தகவல்கள் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளேன். இது கடம் கற்க விரும்பும் இளம் கலைஞர்களுக்கு நிச்சயம் உதவும்.
அது போன்று, பல்வேறு வாத்தியங்களை வாசிக்கும் பெண் கலைஞர்களை இணைத்து “ஸ்த்ரீ தாள தரங்’ என்ற அமைப்பை நடத்திவருகிறேன். கடம் வாசிக்க கற்று கொள்ள பெண்கள் முன் வர வேண்டும் என்பது என் ஆசையாகும்.

Leave a Reply