பீட்டாவின் பிளான் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல… ‘அதுக்கும் மேல’ – ரியல் ரிப்போர்ட்

பீட்டாவின் உண்மை முகம் வெறும் ஜல்லிக்கட்டை தடை செய்துவிடுவதோடு முடிந்துவிடக் கூடியதா?  இதன் திட்டம் வெறும் பால் அரசியல் மட்டும்தானா? பீட்டாவின் உணவு அரசியலை நாம் முழுமையாக தெரிந்துகொண்டோமா? இன்னும் ஏராளமான கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும் தருணமிது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு

பீட்டாவை எதிர்த்து எந்த அரசிடம் ஜல்லிக்கட்டுக்காக ஒரு கோரிக்கையை வைக்கிறோமோ, அதே அரசின் உணவு அரசியலை சத்தமில்லாமல் மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு ஏஜென்ட் போல செயல்படுவதுதான் பீட்டா என்பது பலரும் அறிந்திராத, புரிந்திராத ஒன்று. முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பீட்டாவின் ட்விட்டர் கணக்கையும், அதன் உணவுப் புரட்சியையும் நன்றாக கவனித்தால் ஒரு விஷயம் தெளிவாகும். வீகன் டயட்டை அது  மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி வருவதை நன்றாக கவனிக்க முடியும்.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் ‛வீகன் டயட்’ இந்தியாவில் மிக வேகமாக பிரபலமாகி வருகிறது. சீனா, ரஷ்யா என பல நாடுகளில் இருந்தும் வீகன் நிபுணர்கள் சத்தமில்லாமல் இந்தியாவுக்கு வந்து வீகன் புரட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சைவம் என்பதை விடவும் நனி சைவம்(வீகன் டயட்) என்பதே சிறந்தது. புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கும் மறைமுகத் தீர்வு வீகன் டயட் தான். இதை கடைபிடிப்பவர்கள் பெருமை கொள்ள வேண்டும் ‘PROUD TO BE A VEGAN’ என பிரசாரம் செய்து வருகிறது. இயற்கை உணவு முறையைப் பற்றிய தெளிவு இல்லாமல், சைவம் உண்பதே சிறந்தது, அவர்களே மேலானவர்கள் என்ற கருத்தை விதைக்கும் மேட்டுக்குடி அரசியலின் இன்னொரு கிளை தான் இந்த வீகன் டயட்.

 

அசைவம் உண்பவர்கள் தீண்டத்தகாதவர்கள், இறைவனை பூஜிக்கத் தகுதியற்றவர்கள், அசைவம் உண்பதே கூனிக்குறுக வேண்டிய விஷயம் என்பது போன்ற கோட்பாடுகளைப் பின்பற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இயக்கிக்கொண்டிருக்கும் கட்சியான,  பா.ஜ.க. அரசில் தான் கடந்த 2000ம் ஆண்டு  பீட்டா அமைப்பு இந்தியாவில் அனுமதிக்கப்பட்டது. விலங்குகளைக் காக்கிறேன் பேர்வழி என்ற போர்வையில் உள்ளே நுழைந்த இந்த இயக்கம் சத்தமில்லாமல் அசைவம் இல்லாத இந்தியா என்ற கோஷத்தையும், நனி சைவம் என்ற உணவு முறையையும்  இந்தியாவில் விதைத்துக் கொண்டிருக்கிறது.

பீட்டாவும் வீகன் டயட்டும்

ஏற்கனவே  சமீப காலங்களில் மகாராஷ்டிரத்தில் மாடுகளை வெட்டத் தடை என அறிவித்து பெரும் எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கும் பா.ஜ.க  அரசாங்கம் இங்கே ‛டபுள் கேம்’ ஆட ஆரம்பித்திருக்கிறது. மாடு என்றால் புனிதம்; கோமாதா எங்கள் குலமாதா; மாடு பால் மட்டுமே நல்லது; மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறானது என முழங்கிக்கொண்டிருக்கும் இதே அரசு, மாட்டிடமிருந்து கிடைக்கும் பால் பொருட்கள் அத்தனையும் கெடுதியானது என பிரசாரம் செய்யும் பீட்டா அமைப்புக்குத் தாராளமாக எல்லா உதவிகளையும் செய்து வருகிறது.

மாடுகள் மீது இவ்வளவு அக்கறை இருப்பதாக காட்டிக்கொள்ளும் பா.ஜ.கவும் சரி, பீட்டாவும் சரி  விலங்குகளில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள், கிரீம்கள், ஷூக்கள் என பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்ட சந்தையை எதிர்க்க ஒருபோதும் துணிந்ததே இல்லை. ஏனெனில் அவர்களின் குறிக்கோள்கள் வேறு.

மாட்டு அரசியலை சற்று விரிவாகப் பார்ப்போம்…

பீட்டாவும் வீகன் டயட்டும்

மாடு சார்ந்த பொருளாதாரம் உள்ளூரில் மட்டுமே இருந்தால், இங்கேயே ஒருவர் மாடு வளர்ப்பார், அந்த மாட்டிடம் இருந்து கறக்கும் பால் அங்கே இருக்கும் மக்களிடமே புழங்கும்; விவசாயத்துக்குப் பயன்படும்; கடைசியில் மாடு அங்கே இருக்கும் மக்களிடமே  இறைச்சியாகப் பயன்படும்; இல்லையெனில் இறந்தும் அந்த மண்ணிலேயே அது உரமாகும்.

மாடு என்பது அவர்களைப் பொறுத்தவரையில் பணம் சம்பாதிக்கும் அட்சய பாத்திரம். தற்போது பால்காரர்களை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டியாயிற்று, மாடுகளை கார்ப்பரேட் கம்பெனிகள் வசப்படுத்தின. கூட்டுறவு நிறுவனங்களைத் தாண்டி, தனியார் பால் நிறுவனங்கள் விற்பனையில் தினமும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடத்துகின்றன. ஒருபக்கம் பசு மாடுகளை மக்களிடமே இருந்து பிரித்தது போலவே, விவசாயம், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட காரணங்களைச் சொல்லி காளைகளை வளர்க்கும் சாமானியர்களுக்கும் ஆப்பு வைத்திருக்கிறார்கள்.

அசைவ உணவுகளை உண்பவர்களில்  ஏழை, எளிய மக்களின் முக்கியமான உணவு மாட்டு இறைச்சி. இதைத் தடை செய்தால், மாட்டிறைச்சி உண்ணாத மக்களிடம் இருந்து மாட்டிறைச்சி உண்பவர்களை சிறுமைப்படுத்த முடியும், அவர்களைக் குற்ற உணர்வுகள் உள்ளவராக மாற்ற முடியும். மேலும் இந்துத்துவ உணர்வைத் தூண்டி இதில் குளிர்காய முடியும் என நம்பியது ஆர்.எஸ்.எஸ். ஆகவே , அது இயக்கிவரும் பா.ஜ.க அரசு மூலம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் மாடுகளை வெட்டத் தடை என்பதை கடுமையாக அமல்படுத்தியது.

கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டுமே சட்டப்படி மாடுகளை வெட்ட அனுமதி உண்டு. மாடுகளை வெட்ட அனுமதி மறுத்ததைப் போலவே கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும்  மாட்டிறைச்சி உண்ண தடை கொண்டுவரலாம்  என எண்ணிய மத்திய அரசுக்கு கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் நடந்த போராட்டங்கள் பின்னடைவை ஏற்படுத்தின. எனினும், சில இடங்களில் கடுமையான  தடையை அமல்படுத்தி ஆர்.எஸ்.எஸ் பலன் அடைந்து விட்டது. உத்தர பிரதேசத்தில் மாட்டுக்கறிக்காக கொலையும் நடந்தது. இந்த தடையில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மட்டுமல்ல பெரு வியாபாரிகளுக்கும் மிகப்பெரிய பலன் கிடைத்தது.

மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம் அயல் நாடுகளுக்கு பெருமளவு மாட்டு இறைச்சியை ஏற்றுமதி செய்ய முடியும், மற்ற நாடுகளை விட இந்தியா மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கே மாட்டிறைச்சி விற்பதை விட ஏற்றுமதி செய்தால் கொள்ளை லாபம் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை சுமார் எட்டு நிறுவனங்கள் பெரியளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி  செய்துவருகின்றன. அந்த வணிக அரசியலில் பெரும் நிறுவனங்களோடு அரசியல் வாதிகளும் கைகோத்திருக்கிறார்கள்.

marshmellow

மாட்டிறைச்சி தாண்டி பல்வேறு  பொருட்கள் செய்வதற்கும் மாடுகள் பயன்படுகின்றன. மாட்டுக் கொழுப்பு லிப்ஸ்டிக், அழகுக்காகப் பூசப்படும் ரசாயன கிரீம்கள், சூயிங் கம், மார்ஷ்மெல்லோ போன்ற மிட்டாய்கள் போன்ற பலவற்றுக்கும் பயன்படுகின்றன. மேலும் உடைகள், சோப்புகள், பெயின்டிங் பிரஷ்கள், கிரேயான்ஸ், டயர், ஃபிலிம்,  இசைக்கருவிகள், ஷூ, பைகள் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பிற்கு  பயன்படுகின்றன.

ரத்த உறைதலுக்கான மருந்து தயாரித்தல், கர்ப்ப காலத்தில் தரப்படும் மருந்துகள், இரைப்பைக் கோளாறுகள், நுரையீரலுக்கான மருந்துகள், ரத்த சோகைக்கான  மருந்துகள், மிக மிக முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்குத்  தரப்படும் இன்சுலின் மருந்துங்கள் என ஏகப்பட்ட மருத்துவம் சார்ந்த பொருட்கள் தயாரிக்க ஃபார்மா இண்டஸ்ட்ரிக்கு மாடுகள் தேவைப்படுகின்றன.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஏற்கனவே இயற்கையான உணவு முறையை அழித்து, செயற்கையான, பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தின, அதைச் சாப்பிட்டதால்தான் நமக்கு இளம் வயதிலேயே இவ்வளவு நோய்கள் வருகின்றன. இப்போது இந்த நோய்க்கு மருந்துகளையும் அவர்களே தயாரிக்கிறார்கள். அதற்கு மாடு அவர்களுக்கு அத்தியாவசியத்தேவை. ஆக மாடு சார்ந்த வணிகம் என்பது உலகம் முழுவதும் கோடிகளில் இருப்பதை நம் உணர வேண்டும்.

products made by using cow

இப்போது மாட்டிடம் இருந்து நமக்கு கிடைக்கும் பால், தயிர், பனீர், வெண்ணெய், நெய், சீஸ்  போன்றவற்றையும் புட்டிகளில் அடைத்து பல்வேறு நிறுவனங்கள் விற்க ஆரம்பித்து விட்டன.

நம்மை போன்ற சாதாரண மனிதர்களோடு கலந்திருக்கும் வரையில்தான் மாட்டுக்கும் நல்லது. நிறுவனங்கள் கையில் மாடுகள் செல்லும் போது உயிரோடு இருக்கும் வரை அன்பும் செலுத்தப்படுவதில்லை, அது நேரடியாக  மனிதனுக்கு உணவாகவும் ஆவதில்லை, வளம் கொழிக்கச் செய்யும் ஒரு விற்பனை பண்டம்தான் மாடுகள். அதுதான் நிதர்சனம்.

 

மாட்டிறைச்சி கெடுதியா?

ஆட்டுக்கறியையோ, கோழிக்கறியையோ தடை  செய்யாமல் ஏன் மாட்டுக்கறிக்குத் தடை விதிக்கிறார்கள் என நமக்குச் சந்தேகம் வரலாம். மாடு என்பது உணவுக்காக மட்டுமல்ல. பல்வேறு வடிவங்களில் மக்களுக்குப் பயன்படுகிறது. மேலும், கோழி இறைச்சியில் கே.எஃப்.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் காலூன்றி இருக்கின்றன. ஆட்டுக்கறியும் பல பெரும் நிறுவனங்களால் சந்தைப்படுத்தப்படுகிறது. ஆனால் மாட்டுக்கறி உள்ளூர் பொருளாதாரத்தைச் சேர்ந்தது. இதற்கெல்லாம் மேலாக மக்களுக்கு மலிவாக கிடைக்ககூடிய கறி மாட்டுக்கறிதான்.

மாட்டிடம் இருந்து பெறப்படும் பால் மற்றும்  மாட்டுக்கறியின் மூலமாக ஏழை எளிய மக்கள் தங்கள் உடலுக்குத் தேவையான புரதச்சத்தைப் பெறுகிறார்கள். அவர்கள் அடிமடியில் கை வைக்கும் போதுதான் அவர்கள் கையில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் ஊட்டச்சத்தைக் காரணமாக வைத்துப் பிடுங்க முடியும். மேலும் இறந்த மாடு பல்வேறு வகையில் பல்வேறு பொருட்களின் வணிகத்துக்கும் பயன்டுகிறது. இதனால் தான் கோழி, மீன், ஆடு ஆகியவற்றை விட மாடு மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள் கார்ப்பரேட்டுகள். இதையடுத்து, இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதுமே தற்போது, மாட்டுக்கறியை ஒட்டுமொத்தமாகக் கெடுதி என நிறுவ கார்ப்பரேட் நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

மாட்டுக்கறி சாப்பிட்டால் வாடை வரும், சிவப்பு இறைச்சியான மாட்டுக்கறி சாப்பிட்டால் புற்றுநோய் வரும், மாட்டுக்கறி சாப்பிட்டால் உடல் அழகு கெட்டுவிடும் என பல்வேறு ஆதாரமற்ற வதந்திங்களைத் தொடர்ந்து கிளப்பிய வண்ணமே இருக்கிறார்கள். ஆனால் நம் அண்டை மாநிலமான கேரளாவில் தொடர்ந்து ஆயுசு முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிட்டு வருபவர்களையும், அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதையும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றின் தாக்கம் கேரளாவில் குறைவாக இருப்பதையும் உணர முடியும்.

பீட்டாவும் வீகனும்

இந்தியாவில் வீகன் டயட்டை பிரபலப்படுத்துவது பீட்டாவின் முக்கியமான ப்ராஜெக்ட்களில் ஒன்று. இதைப் பிரபலப்படுத்த பிரபலங்களின் விளம்பரங்களை நாடியிருக்கிறார்கள். கார்ல் லூயிஸ், வீனஸ் வில்லியம்ஸ், மார்ட்டினா நவரத்திலோவா, பில் கிளிண்டன், பில்கேட்ஸ் ஆகியோர் இந்த  டயட்டை ஃபாலோ செய்கிறார்கள். அதனால் நீங்களும் பாலோ செய்யுங்கள் என்கின்றன வீகன் டயட் அமைப்புகள். அல்பத்தனமான விளம்பரம். நாகார்ஜுனா மனைவி அமலா முதல் அமீர்கான் வரை அடுத்தபடியாக இந்திய பிரபலங்களையும் இந்த டயட்டை பிரபலப்படுத்த திட்டமிட்டு வருகிறது வீகன் அமைப்புகள். ஏற்கனவே பிரபலங்கள் மூலமே ஜல்லிக்கட்டு எதிர்ப்பை சமூக வலைத்தளங்களில் இந்த அமைப்பு பரப்பியதை நாம் மறந்துவிட கூடாது.

சரி,  வீகன் டயட் என்பது என்ன?

வீகன் உணவியல் நிபுணர் மற்றும் ஹோமியோபதி மருத்துவரான சரவணனிடம் பேசினோம். ‛‛அசைவ  உணவுகளை புறக்கணிப்பது மட்டுமின்றி, முட்டை, பால் மற்றும் பால் பொருட்களை முற்றிலுமாக புறக்கணிப்பது வீகன்  டயட். விலங்கினங்களில் இருந்து கிடைக்கும் எந்த பொருட்களையும் அறவே உண்ணாமல் தவிர்ப்பது இந்த வீகன் டயட்டின் முக்கிய அம்சம். தேன் கூட இந்த டயட்டில் கிடையாது.

sarvanan

இந்த உணவுப் பொருட்களுக்கு பதிலாக, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பயறு வகைககள், பருப்பு வகைககள், கொட்டை வகைககள், உலர் பழங்கள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை சாப்பிடவேண்டும்.

இந்த டயட்டில் பலர் விலங்கு புரதம் கிடைப்பதில்லையே எனச் சொல்கிறார்கள், அது உண்மை தான் என்றாலும்  தாவர புரதமே நமக்கு வீகன் டயட்டில் நிறைய கிடைக்கும். எல்லா வகையான காய்கறிகள், பருப்பு வகைகள், கீரை வகைகள் போன்றவற்றை சாப்பிடும்போது பல்வேறு அமினோ அமிலங்களும் கிடைத்துவிடும். பல விளையாட்டு வீரர்கள் கூட வீகனை வெற்றிகரமாக பயன்படுத்துகிறார்கள். இதில் வைட்டமின் பி12 மட்டும் தான் கிடையாது. அதற்கு மட்டும் மருத்துவர் அனுமதி பெற்று மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்’’ என்றார் மருத்துவர் சரவணன்.

vegan diet

இந்தப் பட்டியலைக் கவனித்தால், சோயாவை இவர்கள் உயர்த்திப் பிடிப்பதை நன்றாக கவனிக்க முடியும். சோயா பொருட்களின் பின்விளைவுகள் இன்னமும் மருத்துவ உலகில் சர்ச்சைக்குரிய பொருளாகவே இருக்கிறது. வீகன் டயட்டை கடைபிடிப்பதால் பல நோய்கள் அகலும், உடலுக்கு நல்லது என இவர்கள்  பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் வீகன் நல்லதா?

வைட்டமின் பி12, ஆன்டி ஆக்சிடன்ட்கள், விலங்கு புரதங்கள் போன்றவை இதில் கிடைக்காது. இந்த டயட்டில்  ஃபாஸ்ட் ஃபுட், சர்க்கரை, டிரான்ஸ்பேட் உள்ள உணவுகள் போன்றவற்றை தவிர்க்கச் சொல்கிறார்கள்.  வீகன் டயட் காரணமாக ஏதாவது பலன் கிடைத்தது என யாராவது சொன்னால் அது மேற்கண்ட ஃபாஸ்ட்புட், சர்க்கரை, டிரான்ஸ்பேட் உணவுகளை தவிர்த்ததால் கிடைத்ததே தவிர, வீகன் டயட் பின்பற்றுவதால் பெரிய அளவில் பயன்கள் கிடையாது. நம் நாட்டில் சைவ விரும்பிகள் அசைவ உணவுகளில் இருந்து போதிய புரதம் கிடைக்காதபோதும், பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் சரி கட்டிக்கொள்கிறார்கள். வீகன் டயட்டில் தாவர புரதம் மட்டுமே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

dietetian krishnamoorthy

சீனியர் டயட்டீஷியன்களில் ஒருவரான டாக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினேன். “சமச்சீர் டயட் என்பதே சிறந்தது. அதிக அசைவமும் தேவையில்லை, அசைவத்தை  புறக்கணிப்பதும் நல்லதல்ல. அசைவ உணவுகளில் தான் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. அது வீகனில் குறைவாகவே இருக்கும். கேரட், கீரை போன்றவற்றில் பீட்டா கரோட்டின் மட்டுமே இருக்கும். முழுமையான வைட்டமின்- ஏ கிடைக்காது. இதனால்  எழும்புகள், கண், தோல் போன்றவைக்கு பாதிப்பு ஏற்படலாம். பாலில் இருக்கும் லாக்டோஸ் மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்தாகும். பாலில் கிடைப்பது போன்ற தரமான கால்ஷியம் வீகனில் கிடைக்காது. மீனில் இருக்கும் ஒமேகா-3 சத்தும் இவர்களுக்கு கிடைக்காது. வைட்டமின் பி12 சத்து அசைவ உணவுகளில் மட்டுமே இருக்கும் எனவே அவற்றை முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டாம். அதே சமயம் வீகன் டயட்டில் அதிக நார்ச்சத்து இருப்பதால் சிறுகுடலின்  இயக்கம் நன்றாக இருக்கும். தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேராது. மேலோட்டமாகப் பார்த்தால் உடலுக்குக் கெடுதி எதுவும் கிடையாது ஆனால் சில ஊட்டச்சத்துக் குறைவு ஏற்படும்” என தெளிவாகவே விளக்கினார் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி.

vegan diet

கொலஸ்டரால், கொழுப்பு, பால், அசைவ உணவுகள் ஆகிய நான்கின்  மீதும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு அரசியலைக் காலத்துக்கு ஏற்றவாறு பல்வேறு விதமாக கட்டமைத்துக்கொண்டே இருக்கின்றன. உண்மையில் எது நிஜம், எது பொய் என்பது புரியாமல் இது தான் ஆரோக்கியமானது என யாராவது விளம்பரப்படுத்தினால் அதை நோக்கியே ஓடும் நம் மக்கள்தான் அவர்களின் பகடைக் காய்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை நம் தெருக்களில், நம்மோடு இயைந்து வாழ்ந்திருந்த, பால்காரர்கள் தந்த பாலில் எந்த கெடுதியும் இருக்கவில்லை. நம் ஊர் நாட்டுக்கோழிகளை உண்டதால் எந்த உபாதைகளும் வந்து விட வில்லை, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, கார்ப்பரேட் கம்பெனிகளின் இறைச்சி துண்டு வருவல்கள், எங்கிருந்தோ வரும் பால் பாக்கெட்டுகள், பால் பொருட்கள், பாக்கெட் உணவுகள், பாக்கெட் நொறுக்குத் தீனிகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட கோலா பானங்கள் போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்த பிறகே நம் உடல் நலன் கெட்டது. சர்க்கரை நோய் பெருகியது, புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்தது.

.

vegan diet

இன்றைக்கு கோழி, ஆடு, மாடு மேய்வதற்கு நல்ல நிலமும் இல்லை, ரசாயனங்கள் பயன்படுத்தபடாத உணவு வகைகள் அவைகளுக்கு கிடைப்பதும் இல்லை, ஆனால் அதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் ஒட்டுமொத்தமாக மாட்டுக்கறி சாப்பிட்டால் கெட்டது, பால் சாப்பிடுவது கெட்டது, ஆட்டுக் கறி கொழுப்பு நிறைந்தது; அதைச் சாப்பிட்டால் மாரடைப்பு வரும் என விஷத்தை விதைப்பதும், பரப்புவதும்  மிகவும் அபத்தமானது. இயற்கை நமக்கு நல்லதையே  செய்தது. ஆனால்  தன் சுயலாபத்துக்காக அந்த  உணவுச் சங்கிலியை கெடுத்து  செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகளை  மக்களிடம் பிரபலப்படுத்துவது  அருவருக்கத்தக்கது. நம் பாட்டன்களும் பூட்டன்களும் மாட்டுப் பால் குடித்து, ஆட்டு எலும்பு கடித்து, நாட்டுக்கோழியை அடித்து குழம்பு வைத்து சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. நாம் மீட்க வேண்டியது அந்த விலங்குகளையோடு இயைந்த அந்த வாழ்வியல் முறையைத் தான் அதை விடுத்துவிட்டு விலங்குகளை அழித்தோ, ஒதுக்கியோ வாழ்ந்தால் நாம் மீண்டும் மோசமான விளைவுகளையே வருங்காலத்தில் பார்க்க வேண்டியதிருக்கும்.

ஆடு, மாடு, கோழி போன்ற எந்த விலங்கும் மனிதனுக்குப் பயன்பட்டால் தான், அவை இந்த உலகத்தில் தொடர்ந்து ஜீவித்திருக்கும். இல்லையென்றால் ஒன்று இந்த விலங்கினங்கள் எல்லாம் அழிந்து விடும். அல்லது ஏதோ சில கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் மட்டுமே இவை இருக்கும். ஜல்லிக்கட்டை நிறுத்துவது, பீட்டா முன்வைக்கும் உணவு அரசியலின் முதல் படி தான். இதில் அட்டகாசமாக ஒரு விளையாட்டை ஆரம்பித்தது வைத்திருக்கிறது பீட்டா. மாட்டு இறைச்சி உண்பவர்களுக்கு, மாடுகளை பாதுகாக்க போராடுபவர்களுக்கு இடையே ஒரு மெல்லிய சீண்டலை தூண்டிவிட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டை  அடுத்து  இஸ்லாமியர்களின் பண்டிகையான பக்ரீத், ரம்ஜான் போன்றவற்றில் ஒட்டகம், ஆடு சாப்பிட தடை விதிக்க வேண்டும் என போராட ஆரம்பித்திருக்கிறது .

 

H raja tweete

பாஜகவை  சேர்ந்த ஹெச்.ராஜா போன்றவர்கள் இந்த புள்ளியில் இரு தரப்பினரிடையே சண்டை மூட்டிவிட முயன்று கொண்டிருக்கிறார்கள். இதை மிக கவனமாக நாம் கையாள வேண்டும். வீகன் டயட், பீட்டா என பல அமைப்புகள் இயற்கை வாழ்வியல் முறையை சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் நிறுவனங்களோடு இணைந்து தங்கள் கொள்கைகளை செயல்படுத்த மதவாத இயக்கங்களும் துடிக்கிறார்கள். வணிக அரசியலுக்காக எதையும் செய்ய துடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், வெறுப்பு அரசியலை முன்வைத்து மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் மதவாதச் சக்திகளுக்கும் உதவுகிறது பீட்டா. நம் உணவு முறைக்கும், பண்பாட்டுக்கும் தடை கேட்கும் இந்த அமைப்புகள் கே.எஃப்.சி போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் கால் பதிக்க கூடாது என என்றாவது தடை கேட்டிருக்கின்றனவா?

நாம் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நமக்கு உரிமை உண்டு, ஆனால் நாம் உண்ணும் உணவைத்  தான் மற்றவர்களும் உண்ண வேண்டும் என வற்புறுத்துவதற்கு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. இந்த புள்ளியில் சைவம், அசைவம் என அத்தனை உணவுமுறைகளைப் பின்பற்றுவர்களும் ஒன்றாக இணைய வேண்டும். நாம் மீட்க வேண்டியது நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை மட்டுமல்ல நம் ஒட்டுமொத்த  சமூக வாழ்வையும், உணவுச் சங்கிலியையும், நம் ஆரோக்கியமான வாழ்வியல் முறையையும் தான். தயக்கமின்றி ஒரு நீண்டதொரு போராட்டத்துக்குத் தயாராவோம்.

Leave a Reply