பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

“குருவே, எனக்கு பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது’ என்று சொன்னவனைப் பார்த்தார் குரு.

“என்ன சங்கதி’ என்றார்.

“என் வாழ்க்கையில் எங்கு பார்த்தாலும் பிரச்னைகள் தான் தெரிகிறது. அவற்றை எப்படிச் சமாளிப்பது என்று தெரிய வில்லை” என்றான் வந்தவன்.

இதைக் கேட்டதும் குருவுக்கு அவனுடைய பிரச்னை புரிந்தது. அவனுக்கு ஒரு சம்பவத்தை சொல்லத் துவங்கினார்.

“ஒரு பஸ் கண்டக்டர் இருந்தார். தினமும் அவருக்கு ஒரே ரூட் தான். ஒரு நாள் வழக்கமான பாதையில் பஸ் பயணித்துக் கொண்டிருந்தது. நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஒரு நிறுத்தத்தில் முரட்டுத்தனமான மனிதன் ஒருவன் ஏறினான். பெரிய மீசையும் தடித்த உருவமுமாய் இருந்தவனைப் பார்த்த எல்லோருக்குமே கொஞ்சம் அச்சமாய்தான் இருந்தது. கண்டக்டர் அவனிடம் சென்று, “டிக்கெட்’ என்று கேட்டார்.

அவன் உடனே, “எனக்கு டிக்கெட் வேண்டாம்” என்று சொல்லி சட்டென்று முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டான்.

“ஏன் டிக்கெட் வேண்டாம்” என்று கேட்க கண்டக்டருக்குப் பயம். தள்ளி வந்து விட்டார்.

மறுநாளும் இதே கதை. “எனக்கு டிக்கெட் வேண்டாம்” என்று முறைத்தக் கொண்டோ சொல்லக் கண்டக்டர் வந்து விட்டார்.

இப்படியே ஒரு வாரம் கழிந்தது. கண்டக்டருக்கு எரிச்சல் அதிகரித்தக் கொண்டே இருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணினார்.

அவன் பலசாலியாக இருப்பதால்தானே பயமாக இருக்கிறது, நாமும் பலசாலியாவோம் என்று எண்ணி உடற்பயிற்சிகள் செய்யத் துவங்கினார். தற்காப்பு கலை வகுப்புகளுக்குப் போனார். ஆறு மாதங்கள் இப்படியே போனது.

கண்டக்டரின் உடல் வலுவானது. பயம் கொஞ்சம் போனது.

இன்று அந்த தடியனிடம் டிக்கெட் ஏன் எடுப்பதில்லை என்று கேட்டுவிட வேண்டும் என்று பஸ்ஸில் ஏறினார்.
இரண்டு ஸ்டாப்புகள் கழித்து அவன் ஏறினான்.

கண்டக்டர் டிக்கெட் கேட்க அவன் வழக்கம் போல், “நான் டிக்கெட் எடுக்கத் தேவையில்லை” என்று சொல்லி தலையைத் திருப்பிக் கொண்டான்.

கண்டக்டர் தன் தைரியத்தையெல்லாம் வர வழைத்துக் கொண்டு “ஏன் தேவையில்லை?” என்று விறைப்பாய் கேட்டார்.

அதற்கு அவன் சொன்ன பதில், “நான் பஸ் பாஸ் வைத்திருக்கிறேன்”.

இந்தக் கதையைச் சொன்னதும் வந்தவனுக்கு எல்லாவற்றையும் பார்த்து மிரளும் தன்னுடைய குணம் புரிந்தது.

அப்போது குரு அவனுக்கு சொன்ன ஒரு பழமொழி:
பிரச்னைகளை ஆராயாமல் பயப்படக் கூடாது!

Leave a Reply