பாலா

அப்பா..

————

அவரை எப்போதுமே பிடித்ததில்லை எனக்கு. எனக்கும் அவருக்கும் இடையில் பெரும் மலையாய் குறுக்கே நின்றது குடி. ஒரு  குடிகாரனுக்கான அத்தனை குணாம்சங்களையும் கொண்டிருந்தார் அவர். ஆனால் நல்லவராக இருந்தார். 
குடிகாரர்கள் பெரும்பாலும் குடும்பத்தினரை தவிர மற்ற அனைவருக்கும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். இவரும் அப்படித்தான்.. உற்றார் உறவுகள் மத்தியில் நன்கு மதிக்கப்பட்டார்.. 
“புள்ள பெத்தா பாலம்மா மாதிரி புள்ளப் பெக்கணும்..” என்று அவரின் இளமை காலம் குறித்து ஊரிலும் சொந்தபந்தங்களும் பெருமையாகச் சொல்வார்களாம். எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லாத.. பிறருக்கு புத்திமதி சொல்லக்கூடிய ஒருவர் பின்னாட்களில் அதற்கு நேர்மாறாக மாற முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. 
அந்தக் காலத்தில் பியூசி படித்தவர்.. நல்ல ஆங்கிலப்புலமை கொண்டவர். தவறாமல் எல்லாப் பத்திரிகைகளையும் படிக்கக் கூடியவர். இரவெல்லாம் விழித்திருந்து ஏதாவது அரசியல் இதழ்களைப் படித்துக்கொண்டிருப்பார்.ராணி, தேவி, குமுதம், விகடன், டால்ஸ்டாயின் ஆங்கில நாவல்கள் எனப் புத்தகங்கள் வீடெங்கும் நிறைந்திருக்கும். 
ஜூவியில் செளபா எழுத்தில் தொடராக வந்த சீவலப்பேரி பாண்டி தொடரின் தீவிர ரசிகர். அவரைப் பார்த்தே எனக்கும் புத்தகம் படிக்கிற ஆர்வம் வந்தது. 
ஆரம்பக் காலத்தில் மும்பையில் கடினமான வேலைகளையெல்லாம் பார்த்துவிட்டு பின்னர் ரயில்வேயில் சேர்ந்து அதிகாரி நிலைக்கு வந்திருந்தார். ஆனால் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் எல்லாம் சாராயக்கடைகளுக்கே போகும்போது என்ன செய்ய.. வீட்டில் கஷ்டம் தான். அதனாலயே நானும் சகோதரிகளும் சிலகாலம் ஊரில் தாத்தா பாட்டியுடன் தங்கியிருந்து படிக்க வேண்டியதானது.. 
எனக்குக் குடியினால் தான் அவரைப் பிடிக்காமல் போனது. ஆனால் அதைத் தவிர ஏகப்பட்ட நல்ல குணங்கள் அவரிடமிருந்தது. எல்லோரிடமும் அன்பு செலுத்தக்கூடியவர். யாரும் உதவி என்று வந்தால் போதும்.. முன்னின்று எல்லா உதவிகளையும் செய்து முடிப்பார். அவர் ஒரே பையன் என்பதால் எல்லாப் பெண்களையும் தனது தங்கைகளாக்கி மகிழ்வார். அவரால் வாழ்வு பெற்ற தங்கைகள் ஏராளம். 
வேலை முடிந்து வரும்போது பழங்கள் தின்பண்டங்கள் என்று கையிலிருப்பவற்றை வழிநெடுக கண்ணில் தென்படும் ரோட்டோரக் குழந்தைகளுக்கு  தானம் செய்து விட்டு மிஞ்சியதை வீட்டில் வந்து கொடுப்பார். அம்மா கோபத்தில் திட்டிக்கொண்டிருப்பார்.. 

“விடுடி.. எல்லாம் நம்ம குழந்தைங்கதான்.. சாப்ட்டுட்டுப் போகட்டும்.. தொண்டைக்குக் கீழப்போனா நரவல்..” என்று சமாளிப்பார்.. 
ஏதாவது பிரச்னை என்றால் நமக்கெதுக்கு என்று ஒதுங்கிப் போக மாட்டார்.. மும்பை குண்டுவெடிப்பில் சிக்கி கை கால் எல்லாம் தனித்தனியாகப் பிய்ந்து ரத்த சகதியில் கிடந்தவர்களை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தோம் என அவர் சொல்லும் போது பிரம்மிப்பாக இருக்கும். நிச்சயமாகப் பிறரை சகமனிதராக மதிக்கும் பக்குவமும் இரக்க குணமும் அவரிடமிருந்தே எனக்கு வந்தது. 
எனது ஐந்தாவது வயதில் முதன்முதலாக  தெரு நாய்க்குட்டி ஒன்றை வீட்டுக்கு ஆசையாகத் தூக்கி வந்துவிட்டேன். வேறொருவராக இருந்தால் வரவேற்பு வேறுமாதிரி இருந்திருக்கும். ஆனால் அவர் என்னிடமிருந்து அந்த நாய்க்குட்டியை ஆசையாக வாங்கிப் பார்த்துத் தடவிக் கொடுத்துவிட்டு.. “நல்லா இருக்கு.. இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு’’ என்றார். 
அந்த முதல் அனுமதியே இதுவரை பல நாய்கள் வளர்த்த பின்பும் இன்னும் நாய் வளர்க்கும் ஆசையை என்னுள் தக்க வைத்திருக்கிறது. அவர் வேலைக்குப் போகும் போதும் சரி.. வீடு திரும்பும்போதும் சரி.. நாங்கள் வளர்க்கும் நாயோடு தெருவில் இருக்கும் எல்லா நாய்களும் அவர் பின்னாடியே போகும்.. எல்லாவற்றிற்கும் பாரபட்சமில்லாமல் பிஸ்கட்டுகள் போட்டுவிட்டு போவார். 
அப்பாவின் குடியை நிறுத்துவதற்கு அம்மா போய்க் கம்ளைண்ட் பண்ணின கடவுள்களின் கதையையெல்லாம் சொன்னா பயங்கரக் காமெடியாக இருக்கும். “கார்ரோடு சர்ச்சுக்கு போனா உன் புருசன் குடியை நிறுத்திருவாம்மா..’’ என்று யாராவது உறவினர் சொல்லியிருப்பார்.. அடுத்தவாரம் ஞாயிறன்று குழைந்தைகளையெல்லாம் தூக்கிக்கொண்டு அந்தச் சர்ச் வாசலில் இயேசு சிலை முன் மண்டியிட்டு மன்றாடிக்கொண்டிருப்பார். 
இது ஒரு ரெண்டு மாதம் தாங்கும். பின்னர் வேறு யாராவது “மாரியம்மன் கோவிலுக்குப் போம்மா..’’ என்று சொல்லியிருப்பார்.. அப்புறம் மாரியம்மன் கோவிலில் வேண்டுதல்.. ஆனால் எந்தக் கடவுளாலும் அவரின் குடியை நிறுத்த முடியவில்லை. 
என் மீது அதிக அன்பு வைத்திருந்தார். காட்டிக்க மாட்டார். “தோளுக்கு மேல் வளர்ந்துட்ட.. நீ என் தோழன்டா..” என்றார் போதையிலிருந்த தருணமொன்றில். என் எதிர்காலம் குறித்துக் கவலை கொண்டிருந்தார். 
“உனக்காக நான் காசு பணம் எதுவும் சேர்த்துவைக்கலடா..’’ என்பார்.. பையனுக்குக் கடன் தான் சேமித்து வைத்திருக்கிறோம் என்ற வருத்தமிருந்தது. எனக்காக ரயில்வேயில் வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான் மறுத்து விட்டுப் பத்திரிகை துறைக்கு வந்துவிட்டேன். அந்த வருத்தம் அவருக்கு இருந்தது. 
பத்திரிகைகளில் என் எழுத்துகளையும், கோடுகளையும் முதன் முதலாகப் பார்த்தபோது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார். குமுதத்தில் நான் வரைந்த கார்ட்டூன்களை எல்லாம் அலுவலக நண்பர்களிடத்தில் காட்டி பெருமை பட்டிருக்கிறார். . எங்கள் வீட்டுச் சுவரில் அவர் அம்மாவின் தோளில் கைப்போட்டுக்கொண்டு பாட்டிலும் கையுமாக இருப்பது போன்று கிண்டலாக ஒரு கார்ட்டூனை வரைந்து ஒட்டி வைத்திருந்ததைப் பார்த்து வெட்கப்பட்டுச் சிரித்தார். 
போதையின் உச்சத்தில் அவர் நடந்துக்கொள்வதைப் பார்த்து ஆத்திரத்தில் எனது நோட்டில் `எங்கள் வீட்டு நரகாசூரன்’ என்று கூடக் கார்ட்டூன் போட்டிருக்கிறேன்.. அதையும் ரசித்து நண்பர் பாலபாரதியிடம் சிலாகித்துப் பேசியிருக்கிறார். 
அவரின் குடியை நிறுத்துவதற்கு எவ்வளவோ முயற்சித்துப் பார்த்தேன். முடியவில்லை. அவருக்கும் தெரியும்.. தனது குடிப்பழக்கத்தால் தான் குடும்பம் சீரழிந்துவிட்டது என்று. ஆனால் நிறுத்துவதற்கான காலகட்டத்தையெல்லாம் கடந்துவிட்டிருந்தது அவரது உடல். முழுக்க குடிக்கு அடிமையாகிப்போனது நரம்புகள். 
எப்போதாவது ஆத்திரத்தில் “நானும் போட்டிக்கு குடிப்பேன்’’ என்று செண்டிமெண்டாக பேசுவேன். நான் விளையாட்டுக்கு சொல்வதைக்கூட அவரால் தாங்க முடியாது.. “வேணாம்டா.. என்னோட போகட்டும்’’ என்று அழ ஆரம்பித்துவிடுவார். குடிக்காத நேரத்தை தவிர மற்ற நேரங்களில் தங்கமானவர். 
இப்போது யோசித்துப்பார்த்தால் நான் அவரை சரியாக புரிந்துக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஒருவேளை இப்போது ஜூவியில் சஞ்சீவிகுமார் எழுதும் `மயக்கம் என்ன’ தொடர் முன்பே வந்திருந்தால் அவரை புரிந்துகொண்டிருப்பேனோ என்னவோ.. குடிகாரணமாக  பலமுறை மருத்துவமனையில் வைத்து காப்பாற்றி கொண்டுவந்திருக்கிறோம். 
அம்மா இப்போதும் கூட சொல்வார்.. “உன் முத பிறந்த நாள் பார்ட்டிக்கு தான் அவர் முதமுதல்ல குடிக்க ஆரம்பிச்சார்” என்று. என் முதலாவது பிறந்த நாளில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக ஆசைக்காக குடித்தவர்.. பின்னாட்களில் வெளிநாட்டுக்கு போக ஆசைப்பட்டு ஏஜெண்ட் ஒருவனால் ஏமாற்றப்பட்ட விரக்தியில் குடியை தொடர ஆரம்பித்தார்.. சாகும் வரை அவரை அது விடவே இல்லை.. அவரும் அதை விடவில்லை.
 ரிட்டயர்டு ஆனப்பிறகு அம்மா அப்பாவை சென்னைக்கு கூட்டி வந்துவிடலாம் என்று கனவிலிருந்தேன். 
ஆனால்… இதேப் போன்ற ஒரு மழை நாளில் தான் (2010 ஆகஸ்ட் 30) மும்பையிலிருந்து அக்காவிடமிருந்து போன் வந்தது. அழுகையினூடாக “அப்பா இறந்துட்டார்டா’’ என்றாள்.. அதிர்ச்சியில் உறைந்து போனேன். இளமாறனை கட்டிப்பிடித்துக்கொண்டு நானும் மனைவியும் அழுது கொண்டிருந்தோம். 
மறுநாள் குமுதத்திற்கு கார்ட்டூன் கொடுத்தாக வேண்டும். பொங்கிவரும் அழுகையினூடாக அன்றைய இரவு கார்ட்டூன் வரைந்து  அலுவலகத்துக்கு மெயில் அனுப்பினேன், அதிகாலை விமானத்தில் மும்பை போய் சேர்ந்திருந்தோம். 
குடித்திருக்கும்போது ஏற்படும் வாக்குவாதத்தில் அவரிடம் பலமுறை சொல்லியிருக்கிறேன்.. “நீங்க செத்தாக்கூட ஒரு சொட்டு கண்ணீர் விடமாட்டேன்’’ என்று. இப்போது அவர் உடல் என் முன் கிடத்தப்பட்டிருந்தது.. ஓ..வென்று கதறி அழுது கொண்டிருந்தேன். 
இன்றோடு அவர் இறந்து இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. இந்த இரண்டாண்டில் அவரின் இல்லாமையின் கொடுமையை வெகுவாக அனுபவித்துவிட்டேன். எவ்வளவு பிரச்னைகளிலிருந்து அவர் என்னை காப்பாற்றிக்கொண்டு வந்திருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறேன். 
உயிரோடு இருக்கும் போது அவர் ஏற்பாடு செய்த ரயில்வே வேலையை மறுத்திருந்தேன். ஆனால் இறந்தப்பின்னரும் அவர் எனக்காக ரயில்வே வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டே போயிருந்தார். 
ஓய்வு பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டதால் வாரிசு அடிப்படையில் எனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ஆனால் இப்போதும் என்னால் அவரின் ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை. அரசு வேலை வேண்டாம் என்று கூறிவிட்டேன். 
அந்த வருத்தம் இன்னும் என் குடும்பத்தினரிடம் இருக்கிறது.. அம்மாவும் என்னை புரிந்துக்கொள்ளவில்லை.. பரவாயில்லை.. என்றாவது ஒருநாள் புரிந்து கொள்வார்கள்.. 
ஆனால் அப்பா.. உங்களிடம் மட்டும் ஒன்றே ஒன்று சொல்ல ஆசை.. 
உங்கள் பையன் நான் .. நிச்சயமாக  தோற்றுப் போகமாட்டேன் அப்பா..
-கார்ட்டூனிஸ்ட்.பாலா

30-8-12

Leave a Reply