பாடிபில்டர் ஆவதற்கு பக்கவாதமும் தடையல்ல!

லுவான உடற்கட்டு கொண்டவர்களால் மட்டுமே சாதிக்க முடியும் பாடி பில்டிங் துறையில் சாதனை புரிந்து வருகிறார் ஆனந்த்.

“நீ நட்சத்திரமாக ஜொலிக்க விரும்பினால்

நீ யார் என்பது முக்கியமல்ல

உனது மனம் எதை விரும்புகிறதோ

அது உன்னை நிச்சயம் வந்து சேரும்”

– கலாமின் இந்த வரிகளை உண்மையாக்கி ஜொலிக்கிறார் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான ஆனந்த் அர்னால்ட்.

ஆச்சர்யம் என்னவென்றால் ஆனந்த் இயல்பான ஒரு மனிதரல்ல; கேன்சர், மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட இளைஞர்.  வாழ்கையில் தான் சந்தித்த தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றி, வெற்றி கண்டிருக்கும் சாதனையாளர்.

13 வயதில், பாடிபில்டிங் துறையை பற்றிய கனவுகளில் அவரது மனம் சஞ்சரிக்கிறது. அதற்கான முயற்சிகளில் இறங்குகிறார். மிகச் சிறுவயதிலேயே முதல் டைட்டிலையும் பெற்றார். ஆனால் அதுவரைதான் அவரது மகிழ்ச்சி நீடித்தது. அதன்பின் அவர் சந்தித்த துயரங்கள் வார்த்தைகளில் வடிக்க முடியாதவை.

15 -வது வயதில், ஒருநாள் எதிர்பாராதவிதமாக உடல்நலம் குன்ற, பதறியடித்தபடி மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர் அவரது பெற்றோர். முதுகுத் தண்டை பாதிக்கும் மிகக் கொடுமையான கேன்சரால் பாதிப்படைந்துள்ளதாக மருத்துவர் சொல்ல,  ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ந்தது. ஆனாலும் சில நாட்களில் சுதாரித்துக்கொண்டனர். ஆனந்திற்கு மருந்து மாத்திரைகளோடு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் சேர்த்து அளித்தனர்.

அறுவை சிகிச்சை செய்தால் கேன்சர் குணமாகலாம் என்று மருத்துவர் ஒருவர் சொல்ல,  அதையும் செய்து கொண்டார். ஆனால் விதி விளையாடியது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கழுத்துக்கு கீழ் உள்ள தசைகளை விரும்பியவாறு அசைக்க முடியாதவாறு ஒரு வித பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். கைகள் மட்டுமே நன்றாக வேலை செய்தன. மூன்று வருடங்கள் படுக்கை மட்டுமே அவரது துணையானது.

சாதாரண இளைஞனாய் இருந்திருந்தால் “எனக்கு மட்டும்தான் இப்படி நடக்க வேண்டுமா?” என வாழ்வை வெறுத்து அதோடு முடங்கி போயிருப்பார். ஆனால் ஆனந்த் அப்படி சோர்ந்து போகவில்லை. பாடி பில்டிங் மேல் கொண்ட தீராத விருப்பத்தினால், உடல்நலம் கொஞ்சம் தேறியபின் பயிற்சிகள் மேற்கொள்ள ஆரம்பித்தார். சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே தொடர்ந்து பயிற்சிகள் மேற்கொண்டார். தொடர் சிகிச்சையால் ஏற்கனவே நலிந்து போயிருந்த உடலைக் கொண்டு, மேன் மேலும் பயிற்சிகள் செய்தார்.

தொடர்பயிற்சியினால் ஒரு கட்டத்தில் எழுந்து நிற்கவே முடியாத அளவு உடல்நிலை மோசமானது. ஓரளவு மன தைரியம் கொண்டவர்களே இவ்வளவு சோதனைகளுக்கு பிறகு பயிற்சிகளையாவது விட்டிருப்பர். ஆனால் ஆனந்த் சோர்ந்து போகவில்லை. ஆம். அதனால்தான் இன்று அவர் ஒரு நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

இதன் பிறகு இவர் குவித்த வெற்றிகள் ஏராளம். கடுமையான பயிற்சிகளுக்கும் பல கஷ்டங்களுக்கும் பிறகு இந்தியாவின் முதல் ‘வீல் சேர் பாடி பில்டர்’ ஆனார். ஆனந்த் 3 முறை மிஸ்டர் இந்தியா பட்டங்கள், 12 முறை மிஸ்டர் பஞ்சாப் பட்டங்கள், 27 இதர பட்டங்கள் என சாதனை மனிதராகியிருக்கிறார் இப்போது.

தன்னம்பிக்கையும், கடும் உழைப்பையும் கொண்டு வெற்றிக்கோட்டை தொட்ட ஆனந்த், இப்போது பல நிறுவனங்களின் விளம்பர மாடலும் கூட.

“ துயரங்கள் என்னைச் சூழும் ஒவ்வொரு முறையும் என் தன்னம்பிக்கை, அதை எதிர்த்து போராடும் துணிச்சலை தரும். எனது மிகப் பெரிய ஆசை, என் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக்க வேண்டும் என்பதுதான். காரணம் சோதனைகளாலும், விபத்துக்களாலும் தங்கள் வாழ்க்கையை முடக்கிக்கொள்கிற பலருடைய வாழ்வில், ஒரு சிறிய அளவிலாவது அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்தான். அந்த கனவு நிறைவேறினால் அதைவிட பெரிய விருது எனக்கு வேறு எதுவும் இல்லை” என்கிறார் ஊனத்தை வென்று நிற்கிற ஆனந்த்.

திறமைகள் பல இருந்தும், எல்லா வாய்ப்புகளும் கிடைக்கப்பெற்றிருந்தும், முயற்சியின்மையாலும், வாழ்க்கையில் எந்த ஒரு குறிக்கோளும் இல்லாததாலும் வாழ்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் ஆனந்தின் வாழ்க்கை ஒரு மிகப் பெரிய பாடம்.

சோதனைகள் பல கடந்து சாதனைகள் படைத்திருக்கும் இந்த அஞ்சா நெஞ்சனுக்கு ஒரு ராயல் சல்யூட்!

– கோ. இராக விஜயா

 

-Thanks Vikatan

Leave a Reply