பனம் பழம்

பனை மரத்தின் பழம் பனம் பழம் எனப்படுகின்றது. 15 சமீ (6 அங்குலம்) தொடக்கம் 20 சமீ (8 அங்குலம்) வரை விட்டம் கொண்ட இவை குலைகளாகக் காய்க்கின்றன. நார்த் தன்மை கொண்ட இதன் தோல் கரு நிறமானது. இப் பழத்தில் இரண்டு அல்லது மூன்று விதைகள் இருக்கும். ஏறத்தாள 10 சமீ வரை அகல நீளங்களைக் கொண்ட சதுரப் பாங்கான வடிவம் கொண்ட இவ்விதைகள், அண்ணளவாக 2.5 சமீ தடிப்புக் கொண்டவை. இவற்றைச் சுற்றிலும் நீண்ட தும்புகள் காணப்படுகின்றன. இத் தும்புகளிடையே களித் தன்மை கொண்ட, உணவாகக் கொள்ளத்தக்க, செம்மஞ்சள் நிறப் பொருள் உள்ளது. இது பனங்களி எனப்படுகின்றது. ஏனைய பழங்களைப் போல் இப்பழத்தை நேரடியாக உட்கொள்வதில்லை. இதனை நெருப்பில் சுட்டே உண்பது வழக்கம். நெருப்பில் சுட்ட இப் பழத்தின் தோலை உரித்து எடுத்தபின், கனியைப் பிழிந்து உண்பார்கள்.

நுங்கு
இக்கனி கசப்புக் கலந்த இனிப்புத் தன்மை கொண்டது. இதை நேரடியாக உண்பது மட்டுமன்றி, இக்கனியைப் பதப்படுத்திப் பல வகையான உணவுப் பொருட்களையும் செய்வது உண்டு. இக்களியைப் பிழிந்து, பாய்களிற் பரவி, வெயிலில் காயவிட்டுப் பெறப்படுவது பனாட்டு எனப்படுகின்றது. இது நீண்ட காலம் வைத்து உண்ணத்தக்கது. இப் பனாட்டிலிருந்து பாணிப் பனாட்டு என்னும் ஒருவகைப் உணவுப் பண்டமும் தயாரிக்கலாம்.

இக் கனியை அரிசி மாவுடன் கலந்து, சீனியும் சேர்த்து பிசைந்து, உருண்டைகளாக்கி எண்ணெயில் பொரித்து எடுப்பர். இது யாழ்ப்பாணப் பகுதியில் பனங்காய்ப் பணியாரம் எனப்படுகின்றது.

இந்த பனம்பழமானது இளம் காய்களாக இருக்கையில் நுங்கு என அழைக்கப்படுகிறது. நுங்குக்கு என ஒரு நுணுப்பமான பருவம் உள்ளது. இந்தப் பருவத்திலே நுங்கில் காணப்படும் வழுவழுப்பான, திரவநிலை கலந்த திண்ம விதையானது மிகவும் இனிப்பாகவும், உண்பதற்கு சுவையானதாகவும் இருக்கும். இந்தப் பருவம் தாண்டி சற்று முற்றி விட்டால் இதன் சுவை குன்றி விடும். நன்கு முற்றி விட்ட பின் இதனை சீக்காய் என்பர். சீக்காய் திரவநிலை குறைந்து இறுக்கமாகக் காணப்படும். இதை உண்பதால் வயிற்றில் உபாதை ஏற்படும் என நம்பப் படுகிறது. சீக்காயை சிறுசிறு துண்டுகளாக்கி ஆடு, மாடுகளுக்கு உணவாகவும் கொடுப்பார்கள்.

-wiki

 

 

Leave a Reply