பணம் பார்க்கலாம்

கீழாநெல்லி பயிரிட்டு பணம் பார்க்கலாம்

இப்போது மருத்துவ வியாபாரம்தான் கொடிகட்டிப் பறக்கிறது. புதுப்புது வியாதிகள், வாயில் நுழையாத புதுப்புது மருந்துகள் என போய்க்கொண்டிருக்கிறது உலகம்.
அதேநேரம் இதையெல்லாம் மெல்ல உணர்ந்து, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மூலிகை மருத்துவத்தின் பக்கம் மக்கள் கவனம் திரும்பியுள்ளது.
செலவுக் குறைவு ஒருபக்கம், பக்கவிளைவுகள் இல்லாத ஆரோக்கியம் மறுபக்கம்.
இதைவிட முக்கியம், மூலிகை மருத்துவத்துக்கு பெருகும் ஆதரவைக் கண்டு, அதிலும் வெறும் வியாபார நோக்கமே மிஞ்சினால் என்னாவது?
இங்குதான் ஒரு விவசாயியின் பங்களிப்பு அவசியமாகிறது. வணிக நோக்கம் ஒருபக்கம் இருந்தாலும், தரமான மூலிகைகளை விளைவித்து சற்று மலிவு விலையில் மக்களுக்கு தரும்போது, பலவகையிலும் நன்மைகளை இந்த சமூகம் அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது.
மூலிகைப் பயிர் வளர்ப்பை தோட்டக் கலைத் துறை ஊக்குவித்து வருகிறது.
மூலிகைப் பயிர்களில் மிக முக்கியமானது கீழா நெல்லி.

மஞ்சள் காமாலைக்கு கைகண்ட மருந்து.
இது தவிர, ரத்த சோகை, ஆஸ்துமா, இருமல், குடற்புண், சிறுநீர் கற்களை கரைய வைத்தல், சர்க்கரை, கொழுப்பை கட்டுப்படுத்துதலுக்கு பயன்படுத்தும் மூலிகைப் பயிராகத் திகழும் கீழா நெல்லியை வேலூர், தர்மபுரி போன்ற வட மாவட்டங்களில் சாதாரணமாக கரம்பு நிலங்களில், வழியோரங்களில் கூட பார்க்க முடியும். இதையே வடிகால் வசதி கொண்ட நிலத்தில் பயிரிட்டால், தரமாகவும் சுத்தமாகவும் மக்களுக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
இப்பயிரை ஆண்டுமுழுவதும் பயிரிட முடியும். விதைகள் தூவி நாற்று வளர்த்து, பயிரிடுவது ஏற்றது.

25 நாள் நாற்றை 30க்கு 15 செ.மீ. இடைவெளியில் பார் அமைத்து நட வேண்டும்.
ஏக்கருக்கு அடி உரமாக 6 டன் தொழு உரத்தை கடைசி உழவில் இட வேண்டும்.
அத்துடன் புண்ணாக்கு கலவை 100 கிலோ இட வேண்டும். ரசாயன உரங்கள் இடுவதற்கு அவசியமில்லை. 3 மாத காலத்தில் அறுவடைக்கு தயாராகும். ஏக்கருக்கு 1000 கிலோ உலர்ந்த இலை கிடைக்கும். இது மிக முக்கிய மருந்து.
ஏக்கருக்கு ரூ.3,500 செலவாகும். வரவு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் கிடைக்கும். போகிற போக்கில் கிடைக்கிற வருவாய் இது. ஆனால் நன்மை அதைவிட அதிகம்.
ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தோட்டக்கலைத்துறையை அணுகி விதைகளை பெற்றுக் கொள்ளலாம்.
-விவசாயி

Leave a Reply