பசுவின் சிறுநீர் சேகரிக்க வழிமுறைகள்

“எங்களிடம் நிறைய பசு மாடுகள் உள்ளன. இதன் சிறுநீரைச் சேகரிப்பது சிரமமாக உள்ளது. இதற்கு எளிய வழிமுறைகள் இருந்தால், சொல்லுங்கள்?”
சேலம் மாவட்டம் ‘சுரபி கோசாலை’யைச் சேர்ந்த சுவாமி. ஆத்மானந்தா பதில் சொல்கிறார்.
“பால் கறப்பது போல, பசுவின் சிறுநீரைச் சேகரிப்பதும் ஒருவிதமான கலை என்றுதான் சொல்ல வேண்டும். அமுதக்கரைசல், ஜீவாமிர்தம், பூச்சிவிரட்டி தயாரிக்க மாட்டுச் சிறுநீர் தேவை என்றால், கட்டுத்தரையை சிறிது சாய்வாக அமைக்க வேண்டும். மாட்டின் சிறுநீர் ஓடிச் சென்று சேகரமாவதற்கு வசதியாக சிறிய வாய்க்கால் அமைத்து, சிறுநீரைச் சேகரிக்கலாம்.

மருந்து தயாரிக்க பசுவின் சிறுநீர் தேவை என்றால்,

சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது, கன்று போட்ட பசுவின் சிறுநீரில்தான் மருத்துவக் குணம் உண்டு. சினைப்பிடித்த எட்டு மாதத்துக்குப் பிரகு தொடங்கி, கன்று ஈன்ற முதல் மாதம் வரையிலும், கிடைக்கும் சிறுநீர்ப் பயன்படுத்தக் கூடாது என்பது அடிப்படையான விஷயம்.
சிறுநீரைப் பிடிக்கும்போது, முதலில் வெளிவரும் சிறுநீரையும் கடைசியில் வரும் சிறுநீரையும் விட்டு, விட்டு நடுவில் வரும் சிறுநீரை மட்டுமே சில்வர் பாத்திரத்தில் சேகரிக்க வேண்டும்.

பசுவின் சிறுநீரில் உள்ள மருத்துவக் குணங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால், 3 நாட்களில் அதன் மூலம் மருந்து தயாரித்துவிட வேண்டும்.
வழக்கமாக மாடுகள் அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் சிறுநீர் கழிக்கும். பால் கறக்கும் மாடு என்றால், மடியில் நீர் அடித்தவுடன் சிறுநீர் விடும். கலப்பின மாடுகளைவிட, நாட்டு மாடுகள்தான் லிட்டர் கணக்கில் சிறுநீர் கொடுத்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.”
தொடர்புக்கு, செல்போன்: 9443229061

Leave a Reply