பங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்!

பங்குச் சந்தையில் பணம் பண்ண…பஃபெட் சொன்ன 10 சூத்திரங்கள்!

செ.கார்த்திகேயன்

பிசினஸ்மேன், பங்குச் சந்தை முதலீட்டாளர், எழுத்தாளர், சமூக சேவை ஆர்வலர் என வாரன் பஃபெட்டுக்கு பல முகங்கள் உண்டு. என்றாலும், பங்குச் சந்தையின் ஜாம்பவான் என்பதுதான் மக்கள் மனதில் ஆணித்தரமாகப் பதிந்திருக்கிறது. இவர், பங்குச் சந்தையில் பல தந்திரங்களைக் கையாண்டு, யாரும் சம்பாதிக்க முடியாத லாபத்தைச் சம்பாதித்திருக்கிறார். அவர் பின்பற்றிய பங்குச் சந்தை சூத்திரங்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமான 10 சூத்திரங்களை இனி பார்ப்போம்.

1. பணத்தை இழக்காதீர்கள்!

பங்குச் சந்தை முதலீட்டாளர்களில் பலர் விவரம் தெரியாமல் ஏதேதோ நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, பணத்தை இழக்கிறார்கள். ஆனால், பங்குச் சந்தையில் பணத்தை இழக்கவே கூடாது. இதைத்தான் நம்முடைய முதல் விதியாக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த முதல் விதியை மறக்கக் கூடாது என்பதுதான் பஃபெட் சொல்லும் இரண்டாவது விதி.

வாரன் பஃபெட் சொல்கிறமாதிரி பங்குச் சந்தையில் பணத்தை இழக்காமல் இருக்க முடியுமா? முடியும். ஒரு நிறுவனத்தை வெறும் லாபத்தின் அடிப்படையில் குறுகிய நோக்கில் பார்க்காமல், வலுவான பிசினஸ் கொண்ட நிறுவனங்களை நீண்ட காலத்துக்கு வைத்திருக்க நீங்கள் முடிவெடுத்தால், பங்குச் சந்தையில் நீங்கள் பணத்தை இழப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்காது. பதிலாக, வாரன் பஃபெட் மாதிரி நிறையவே லாபம் பார்த்திருப்பீர்கள்.

2. சிறந்த நிறுவனமா, குறைந்த விலையா?

சிறந்ததொரு நிறுவனத்தின் பங்கை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, சிறந்த நிறுவனத்தின் பங்கை நியாயமான விலை தந்து வாங்குவது புத்திசாலித்தனம் என்கிறார் வாரன் பஃபெட். உதாரணத்துக்கு,  தற்போதைய நிலவரப்படி, ஒரு நிறுவனத்தின் பங்கு விலை 1,000 ரூபாய் எனக் கொள்வோம். அந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டாலும் பங்கின் விலை அதிகம் என்பதால் அதில் முதலீடு செய்யக்கூடாது. ஆனால், சிறப்பானதொரு நிறுவனத்தின் பங்கு குறைந்த விலையில், அதாவது, நியாயமான விலையில் கிடைக்கும்போது நிச்சயம் வாங்கலாம். ஆனால், விலை குறைவாக கிடைக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக சிறப்பாகச் செயல்படாத நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் அர்த்தமே இல்லை.

3. நீங்கள் மேதாவியாக இருக்கத் தேவையில்லை!

ஒருவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க மேதாவியாக இருக்க வேண்டும் என்று எந்தத் தேவையும் இல்லை. புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு பங்குச் சந்தை முதலீடு ஒன்றும் ராக்கெட் சயின்ஸும் அல்ல. அதேசமயம், 160 ஐக்யூ உள்ளவர்கள் 130 ஐக்யூ உள்ளவர்களைத் தோற்கடிக்கும் விளையாட்டுப் போட்டியும் அல்ல. எனவே, மேதாவிகள்தான் பங்குச் சந்தையில் பணம் பண்ண முடியும் என்கிற எண்ணத்தை மூட்டை கட்டிவிட்டு, அடிப்படையான சில விஷயங்களைக் கவனித்தாலே போதும், பங்குச் சந்தையில் பணத்தை இழக்கும் வாய்ப்பு குறையும்.

4. நேரம் நன்றாக இருந்தால், கெட்ட விஷயங்கள் தெரியாது!

ஒருவர் மீது மிக நல்ல அபிப்ராயத்தை வைத்திருக்கும்போது, அவரிடம் இருக்கும் சில கெட்ட விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. ஒரு நிறுவனத்தின் செயல்பாடு மிக நன்றாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். எல்லா பத்திரிகைகளும் அப்படித் தான் சொல்கின்றன. இந்தச் சமயத்தில், அந்த நிறுவனம் ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டியிருந்தாலும், அதை யாரும் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், செய்திகள் எல்லாம் அடங்கிய பின், உண்மை நிலைமை தெரியவரும் போதுதான், அந்தச் சிக்கல் எல்லோருக்கும் தெரியவரும். அப்போதுதான் தாங்கள் செய்த தவறு எல்லோருக்கும் புரியும். ஒரு புத்திசாலியான முதலீட்டாளர் இந்தத் தவறை ஒருபோதும் செய்யமாட்டார்.

5. பிரச்னையில் சிக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குங்கள்!

ஒரு நிறுவனத்துக்கு இரண்டு வகையான பிரச்னைகள் வரலாம். ஒன்று, நிரந்தரமானது. இன்னொன்று, தற்காலிகமானது. ஒரு நிறுவனம் தற்காலிகமான பிரச்னையில் மாட்டும்போது அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம். ஒரு சிறந்த நிறுவனம் தனக்கு ஏற்பட்டிருக்கும் தற்காலிக பிரச்னையை எப்படி சரிசெய்து வெளியே வருவது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும். சிறு பிரச்னை என்றாலும் அதைப் பெரிதாக்க விட்டுவிட்டு, தரமான முதலீட்டாளர்களை இழக்காது. எனவே, சிறிது கீறல் விழுந்த பழம் குறைந்த விலைக்கு கிடைக்கிற மாதிரி, சிறு பிரச்னையில் சிக்கிய நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதில் தவறில்லை!

6.எல்லா நெருக்கடியிலிருந்தும் பங்குச் சந்தை மீண்டு வரும்!

உலக அளவில் எத்தனை பெரிய நெருக்கடி உருவானாலும் அதிலிருந்து மீண்டு வரக்கூடிய திறன் பங்குச் சந்தைக்கு உண்டு. இருபதாம் நூற்றாண்டில் மட்டும் இரண்டு உலகப் போர்கள் நடந்தது. இதனால் மனித குலம் எதிர்கொண்ட சிக்கல்களும் அனுபவித்த துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல.

1930-ல் அமெரிக்காவில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவானது. அதன்பிறகும் உலகம் முழுக்க பல பொருளாதார நெருக்கடிகள் வந்துபோய்விட்டன. கச்சா எண்ணெய் உச்சத்துக்குப் போனதையும் பார்த்தோம்; தரை தட்டியதையும் பார்த்தோம். கொள்ளை நோய் வந்து பல லட்சம் பேர் இறந்துபோன சம்பவங்களும் உண்டு. மக்கள் செல்வாக்கை இழந்து அதிபர் பதவியைத் துறந்த நிகழ்ச்சிகளும் நடந்ததுண்டு. இத்தனைக்குப் பிறகும் அமெரிக்கா பங்குச் சந்தை குறியீடான டவ் ஜோன்ஸ் 66 புள்ளிகளில் இருந்து 11497 புள்ளிகளுக்கு உயரவே செய்திருக்கிறது. இதிலிருந்து நமக்குத் தெரிவதென்ன? சந்தை இன்று சரிந்தாலும் அது மீண்டும் உயரும் என்பதே.

7. நீண்ட காலமே லாபம் தரும்!

எப்போதுமே நீண்ட கால நோக்கில் தான் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க முடியும் என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை வைத்திருந்து லாபம் பார்க்கக்கூடிய பங்கு நிறுவனங்கள் ஒருசிலவே இருக்கின்றன.
சரியான நிறுவனப் பங்குகளைத் தேர்வு செய்ய வேண்டியது முதலீட்டாளர்களின் கடமை. குறைந்தபட்சம் பத்து வருடங்கள் ஒரு பங்கை நீங்கள் வைத்திருக்க நினைக்கவில்லை எனில், அந்தப் பங்கை பத்து நிமிடம்கூட வைத்திருக்காதீர்கள் என்பதே பஃபெட் சொல்லும் பாடம்.

8. பிசினஸ் எப்படி என்று பாருங்கள்!

நீங்கள் வாங்கும் பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள் அறிவில்லாதவர்களால் கூட நடத்த முடிகிறமாதிரி இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்குங்கள். நீங்கள் பார்க்க வேண்டியது அந்த நிறுவனத்தின் செயல்பாடு களையே ஒழிய, அந்த நிறுவனத்தை நடத்துபவர்களை அல்ல. இன்று புத்திசாலியான ஒருவர் அந்த நிறுவனத்தை நடத்தி வரலாம்.

நாளைக்கு அவர் அந்த நிறுவனத்திலிருந்து விலகினால், வேறு ஒரு அறிவில்லாதவர் கூட அந்த நிறுவனத்தை நடத்தலாம். யார் நடத்தினாலும், நிறுவனத்தின் பிசினஸ் எப்படி இருக்கும் என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

9. பங்கின் விலை வேறு; மதிப்பு வேறு!

ஒரு பங்குக்கான விலை என்பது நாம் வழங்குவதாகவும், மதிப்பு என்பது நாம் பெறுவதாகவும் இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதன் மதிப்பை வைத்துதான் விலையை நிர்ணயம் செய்கிறோம். அதேபோலத்தான் ஒரு நிறுவனத்தின் மதிப்பை வைத்து, அந்த நிறுவனத்தின் பங்கு விலையானது வர்த்தகமா கிறது. அதனால் முதலீட்டாளர்கள் குறைந்த மதிப்புக்கு அதிக விலை தரக்கூடாது. அதிக மதிப்புள்ளது குறைந்த விலையில் கிடைக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும்.

10. மற்றவர்கள் பயப்படும்போது..!

பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஏதோ ஒரு பயத்தின் காரணமாக நல்ல நிறுவனத்தின் பங்குகளை விற்கும்போது, நீங்கள் துணிந்து வாங்கலாம். சில நாட்களுக்குப்பின் அந்தப் பயம் விலகிவிட்டால், அந்தப் பங்கின் விலை உயரும் என்பதால், நீங்கள் லாபம் பார்க்க முடியும். அதேபோல், ஒரு பங்கை மற்றவர்கள் பேராசையுடன் அணுகும்போது, அதன் விலை உச்சத்தில் இருந்தால், நீங்கள் அந்தப் பங்கை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்க்கலாம். பங்குச் சந்தையில் மற்றவர்களைப்போலவே நாமும் இல்லாமல் எதிர்மறையாகச் சிந்தித்தால்தான் லாபம் பார்க்க முடியும்.

நாணயம் விகடன் – 14 Dec, 2014– இதழிலிருந்து…

Leave a Reply