நொச்சி

“இதென்ன புதுச்செடி?” என்று ஆச்சரியப்படாதீர்கள். வேலியோரங்களிலும், கிராமச்சாலைகளின் இருபுறங்களில் புதராக வளர்ந்த நொச்சிச் செடிகளை நிச்சயம் பார்த்திருப்பீர்கள். வெண்ணொச்சி, கருநொச்சி என்று இதில் இரண்டு வகை உண்டு.

வெண்ணொச்சி சுமார் முப்பதடி வரை மரம் மாதிரி வளரக்கூடிய தன்மை கொண்டது. இதன் கிளைகள் வெண்மை நிறத்தில் இருக்கும். கருநொச்சி ஆற்றங்கரையோரங்களில் புதர் மாதிரி வளரும். இதன் கிளைகள் ஒல்லியானதாக இருந்தாலும் வலிமையானவை. முன்பெல்லாம் வகுப்பறைகளில் மாணவர்களை மிரட்ட ஆசிரியர்கள் வைத்திருக்கும் பிரம்பு பெரும்பாலும் நொச்சிப் பிரம்பாக இருக்கும். கிராமங்களில் இதன் இளம் கிளைகளை கொண்டு கூடை பின்னுவார்கள். இந்த கூடையில் வைக்கப்படும் பொருட்களை பூச்சிப்பொட்டு நெருங்காது. வயற்காடுகளுக்கு வேலியாக நொச்சி வளர்ப்பதுண்டு. வலிமையான வேலியாக கால்நடைகளிடமிருந்து பயிரை காக்கும். வெள்ளாடு கூட நொச்சி இலைகளை சாப்பிட விரும்புவதில்லை. நொச்சித்தழைகளை இயற்கை உரமாகவும் பயன்படுத்துகிறார்கள்.

தமிழர் போர் மரபிலும் நொச்சிக்கு இடமுண்டு. சங்கக் காலத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த தித்தன் என்கிற சோழமன்னன் தன்னுடைய நாட்டு எல்லைக்கு நொச்சிவேலி அமைத்ததாக வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. சங்க இலக்கியத்தில் நொச்சித்திணை என்று ஒரு திணையே உண்டு. நொச்சித்திணை வீரர்கள் நொச்சிப்பூ மாலை சூடி எதிரிகளின் முற்றுகையை ஊடறுப்பார்கள் என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. நொச்சிப்பூக்கள் மயில்நீல நிறம் கொண்டவை.

நொச்சியின் எல்லா பயன்பாடுகளை காட்டிலும் அதன் மருத்துவக்குணங்களே சிறப்பானதாக இருக்கிறது. இன்றும் கிராமங்களில் கொசுக்களையும், பூச்சிகளையும் விரட்ட நொச்சி இலைகளை எரித்து புகை போடும் பழக்கம் நீடிக்கிறது (நொச்சி இல்லாத இடத்தில் வேம்பு).

. நொச்சி இலைகளை தலையணை உறைக்குள் பஞ்சுக்கு பதிலாக அடைத்து பயன்படுத்தினால் கழுத்து வலி, தலைவலி நீங்கும் என்பது பழங்காலத்து வைத்தியம்.

. நொச்சிவேர் போட்டு நீர் காய்ச்சி குடித்தால் வயிற்றில் பூச்சித்தொல்லை தீரும். இவ்வாறாக நம்முடைய பாட்டிவைத்திய முறைகளில் இன்னும் ஏராளமான பிரச்சினைகளுக்கு நொச்சி தீர்வளிக்கிறது. நாட்டு மருத்துவர்கள் தயார் செய்யும் பல மருந்துகளில் நொச்சி கட்டாயம் இடம்பெறுகிறது.
பாண்டிச்சேரி இந்திராகாந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உயிர் அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஜெ.பிரசன்னா
‘‘நொச்சிச் செடியின் அறிவியல் பெயர் ‘வைடக்ஸ் நிகுண்டோ’ (Vitex Negundo) . இது ‘வேர்பீனிஸியா’ குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். இந்தியில் ‘நிர்குண்டோ’ என்று அழைக்கப்படுகிறது. உலக அளவில் நொச்சிச் செடிக்கு 250 சிற்றினங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 14 சிற்றினங்கள் உள்ளன.  வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.

ஊட்டச்சத்து குறைவாக உள்ள சாதாரண நிலத்திலும் வளரும். செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், சிறிய மரம் போல காணப்படும். நான்கு புறமும் தண்டு நீண்டு இருக்கும். தண்டின் மேல்பக்கம் பச்சையாகவும், கீழே வெண்மையாகவும் இருக்கும். பூக்கள் நீலமும் ஊதாவும் கலந்த நிறத்தில் இருக்கும். மேலைநாடுகளில் ‘வைடக்ஸ்’ என்று அழைக்கப்படுகிற நொச்சியை, வீடுகளில் அழகுக்காகவும் பூச்சிகள் வராமல் காக்கவும் வளர்க்கிறார்கள். தமிழ்நாட்டில் நீர் நொச்சி வகை அதிகமாகக் காணப்படுகிறது…’’ என நொச்சியின் தாவரவியல் பண்புகளை விளக்கும் பிரசன்னா, அதன் மருத்துவ பயன்களையும் பட்டியலிடுகிறார்.

‘‘இது மூட்டுவலியைக் குறைக்கும் வலி நிவாரணியாக பயன்படுகிறது. உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்க உதவுகிறது. குடலில் ஏற்படும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்கவல்லது. ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. ‘வைடக்ஸ் ஆக்னஸ் கேஸ்டஸ்’ என்கிற நொச்சி வகை பெண் நலத்துக்கு அருமையான மருந்து. மாதவிடாய், கர்ப்பகாலப் பிரச்னைகள், ஹார்மோன் குறைபாடுகள், பிசிஓடி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டிகள் போன்றவற்றுக்கு உலகெங்கிலும் மாற்று மருத்துவர்கள் நொச்சியைப் பயன்படுத்துகிறார்கள். சருமப் பிரச்னைகளுக்கு கூட நொச்சி நிவாரணம் அளிக்கிறது.

நொச்சியின் இலைகளில் இருந்து ‘வாலடைல்’ எனப்படும் ஆயில் எடுக்கப்படுகிறது. இது எளிதில் ஆவியாகக் கூடியது. இந்த எண்ணெய்க்கு கொசு மற்றும் பூச்சிகளை விரட்டும் தன்மை உள்ளது. நொச்சி இலைகளை நெருப்புத் தணலில் போட்டு அதன் மூலம் வரும் புகையை வீடு முழுவதும் பரவவிட்டால் கொசுக்கள் இருக்கும் இடம் தெரியாமல் ஓடும். ‘ஏடிஸ்’ எனப்படும் வரிக்கொசுவை விரட்டிவிடும் நொச்சி இலைகளின் புகை. ‘ஏடிஸ்’ கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் மனிதர்களைத் தாக்கும். இந்த கொசுவை உற்றுநோக்கினால் வரி வரியாக கோடுகள் தெரியும்.

சிக்குன்குனியா மற்றும் டெங்கு போன்ற நோய்களை இந்த கொசுவே பரப்புகிறது. இந்த கொசுவுக்கு நொச்சி இலையின் வாசனையே ஆகாது.

வீட்டில் நொச்சிச் செடி வளர்ப்பதன் மூலம் நோய்களைப் பரப்பும் கொசுக்களையும் பூச்சிகளையும் எளிதாக தடுக்கலாம். நோய்கள் வராமல் தற்காக்கலாம்

. நொச்சிச் செடியை விதை போட்டும் வளர்க்கலாம். பதியம் வைத்தும் வளர்க்கலாம். நொச்சிச் செடிகளை வீட்டில் வளர்ப்பது மிக எளிதானது.

நொச்சிச் செடி வீட்டில் இருப்பது விலையுயர்ந்த மருத்துவப் பொருட்கள் உங்களிடம் இருப்பதற்கு சமமானது!’’ என ஆர்வம் ஊட்டுகிறார் பிரசன்னா. – See more at: http://m.dinakaran.com/hdetail.asp?Nid=3026#sthash.KT1fChHI.dpuf

Leave a Reply