நைட் ஷிப்ட்- கேன்சர் அபாயம்!

வழக்கமான பகல் நேரத்தில் பணிபுரிபவர்களை விட இரவு நேரத்தில் கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் டீ, காபி போன்றவற்றை அதிகம் குடிக்கின்றனர். அவர்களது உணவுப் பழக்கத்திலும் மாற்றம் ஏற்பட்டு விடுகிறது. உடலில் கொழுப்பை அதிகரிக்கும் உணவையே அதிகம் சாப்பிடுகின்றனர். இரவுப் பணியில் இருப்பவர்கள் சிறிய அளவில் கூட உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படாமல் போகிறது. இவை அனைத்துமே இதயம் தொடர்பான நோய்களுடன் நேரடியாகத் தொடர்புடையவை. இது தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் தொடர்ந்து இரவுப் பணியில் இருப்பவர்கள், இரவு, பகல், மாலை என மாறி மாறி பணிபுரிபவர் களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை உள்ளது தெரியவந்தது. மாரடைப்பு, வலிப்புநோய் போன்றவை மற்றவர்களுக்கு வருவதை விட இவர்களுக்கு ஏற்பட 40 சதவீதம் அதிகம் வாய்ப்பு உள்ளது. இரவு என்பது தூங்குவதற்கான நேரம் என்ற இயற்கை விதி. இதற்கு மாறாக இரவில் வெகுநேரம் கண்விழித்துப் பணியாற்றுவது உடல் ஆரோக்கி யத்துக்கு ஏற்றதல்ல என்பது பொதுவான உண்மை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கு இரவுப் பணி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. எனினும் இப்போதைய இளைஞர்கள் இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். மேலும், இரவுப் பணியின் இடையே புகைப்பிடிப்பது போன்றவை அவர்களை மேலும் ஆபத்தில் தள்ளுகிறது
இதனிடையே ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தை சேர்ந்த பல்கலைக் கழகம் ஒன்று நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு ஏன் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமாக உள்ளது என்பது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதற்காக இரவு வேலை பார்க்கும் 100 பேரை தேர்ந்தெடுத்து, 24-மணி நேரத்தில் அவர்கள் கழிக்கும் சிறுநீரை ஆய்வு செய்தது.
இந்த ஆய்வின் முடிவில் செக்ஸ் ஹார்மோன்களான ‘டெஸ்டோஸ்டிரோன்’ மற்றும் ‘ஈஸ்ட்ரோஜன்’ ஆகியவை தவறான நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவை விட அதிகமாக சுரப்பது கண்டறியப்பட்டுள்ளது. இயல்பு வாழ்க்கையில் காலை 6 மணி முதல் 10 வரை சுரக்கும் இந்த ஹார்மோன்கள், இரவு வேலை பார்ப்பவர்களுக்கு இரவு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்துள்ளது. இதனால் நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்களுக்கு மார்பக அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
About the Author
aanthai

Leave a Reply