நேர்மைக்கு கிடைத்த விருது தொகையை ஏழைகளுக்கு செலவிட்ட ஐஎப்எஸ் அதிகாரி!

ஐ.ஏ. எஸ் அதிகாரி சகாயத்தின் நேர்மையையும் , துணிச்சலையும் நாம் பாராட்டிக் கொண்டிருக்கும் அதே  நேரத்தில் சைலன்டாக பல சேவைகள் செய்துள்ளார்  சஞ்சீவ் சதுர்வேதி என்ற இந்திய வனத்துறை அதிகாரி ( ஐ. எஃப். எஸ்). ஆசியாவின் மிக உயரிய விருதான மகசேசே விருதை இவர்  பெற்றுள்ளார்.

பணியில் சிறப்பாக பணியாற்றி, எல்லா சூழ்நிலைகளிலும் நேர்மையை கடைப்பிடித்து, அரசாங்க அலுவலகங்களில் நடக்கும் ஊழலை வெளிக் கொண்டு வந்துள்ளதில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். இதற்காகதான் ரேமோன் மெகசேசே விருது வழங்கப்பட்டது.


இவரது நேர்மைக்கு பரிசாக இது வரை 12 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார், ஒரு முறை பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். மத்திய அரசு தலையிட்டு மீண்டும் பணியமர்த்தியது. அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகமான  ஏ. ஐ.ஐ. எம். எஸ் (AIIMS) இயக்கத்தின் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக, அங்கே உள்ள ஊழல்களையும் முறை கேடுகளையும் வெளிக் கொண்டு வந்தார். அதனால் மறுபடியும் பணிமாற்றம் செய்யப்பட்டார்.

தற்போது ஏ. ஐ.ஐ. எம். எஸ் நிறுவனத்தை சார்ந்த 250 மருத்துவ ஆராய்ச்சியாளர்களும்,  ஊழியர்களும்  மீண்டும் சஞ்சீவ் சதுர்வேதியை பணியமர்த்த பிரதமர் மோடியிடம் மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மகசேசே விருதுடன் இவர் பெற்ற 19.85 லட்சம் ரூபாயில் 5.63 லட்சம் வரி போக மீதமுள்ள தொகை முழுவதையும் ஏ. ஐ.ஐ. எம். எஸ் (AIIMS) ல் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்காக செலவிடுமாறு கொடுத்து விட்டார்.

தலைமை மருத்துவ கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் ஒரு ஃபைல் அமைத்து,  நோயாளிகளின் விவரங்களும், அவர்களுக்கு செய்யப்படும் நிதி உதவியையும் எழுதி வைக்குமாறு கூறியுள்ளார். பணம் சரியான முறையில் உதவி தேவைப்படும் நபர்களை சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

ஐ.மா.கிருத்திகா

Thanks-Vikatan

Leave a Reply