நாஞ்சில் சம்பத் மானஸ்தன் என்கின்ற நான்….

சசிகலா தலைமையை ஏற்க முடியாது’ என பகிரங்கமாகப் பேட்டியளித்த அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், தற்போது சசிகலாவை சந்திக்கக் காத்திருக்கிறார். ‘தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைகளுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை. நிலைமையைப் புரிய வைத்ததும், கழகத்திற்காக பணியாற்ற சம்மதித்தார்’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அ.தி.மு.க.வின் சீனியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரை வரவேற்றபோதும், வாழ்த்துச் சொல்வதற்கு நாஞ்சில் சம்பத் செல்லவில்லை.
‘ தி.மு.க.வில் இணைவதற்காக சேகர்பாபு எம்.எல்.ஏ மூலமாக பேசிக் கொண்டிருக்கிறார்’ என்ற தகவல் வெளியானது. அடுத்ததாக, ‘ஜெயலலிதா மரணத்தில் மர்மம்; ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை அமர்வதைப் பார்க்க முடியவில்லை’ என்றெல்லாம் பேசி வந்தார். கூடவே, ஜெயலலிதா கொடுத்த இனோவா காரையும் ஒப்படைத்தார். ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், இன்று சசிகலாவை சந்திப்பதற்காக போயஸ் கார்டனுக்கு வந்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். “சசிகலாவின் ஆணைகளை தமிழகம் முழுவதும் பரப்புவதற்காக சுற்றுப்பயணம் செய்வேன். தொய்வின்றி பணியாற்றுவேன்” எனப் பேசியிருக்கிறார்.

எப்படி நடந்தது இந்த மாற்றம்?’ என அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். “அ.தி.மு.க.வில் இருந்து விலகி, தி.மு.க.வில் இணையப் போகிறார் என்ற தகவல் கிடைத்ததுமே, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ‘ தி.மு.க.வில் ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டங்களிலேயே திருச்சி சிவாவை பேசவிடுவதில்லை. நீங்கள் அங்கு சென்றால் இன்னும் மோசமாக நடத்துவார்கள். அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு, உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. உங்களுக்கு உடல்நலமில்லாதபோது மருத்துவச் செலவையும் கழகம் ஏற்றுக் கொண்டது. உங்கள் மகனுக்கு மருத்துவ சீட்டும் ஏற்பாடு செய்தார் அம்மா. இப்படியொரு இக்கட்டான நேரத்தில், தி.மு.க.விற்குப் போகலாமா?’ என விவரித்தோம். தொடக்கத்தில் எங்கள் பேச்சுவார்த்தைக்கு அவர் பிடிகொடுக்கவில்லை. இதையடுத்து, மன்னார்குடி குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ சிவராஜ மாணிக்கம், சம்பத்திடம் பேசினார். ‘உங்கள் சூழல்களை நான் அறிவேன். இலக்கியவாதியான உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும். உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்’ என உறுதி கொடுத்தார். இனோவா காருக்கு டீசல் போடுவதற்குக்கூட வழியில்லாத காரணத்தால்தான், மிகுந்த கொதிப்பில் இருந்தார் சம்பத். கூடவே, அவருடைய மகனுக்கு மருத்துவப் படிப்பிற்குக் கட்டணம் கட்ட முடியாமல் சிரமப்பட்டு வந்தார். ‘ இதுவெல்லாம் ஒரு பிரச்னையா? எழுதப் படிக்கத் தெரியாதவன்கூட இந்தக் கட்சியில் ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறான். இனி உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது’ என மன்னார்குடி உறவு கொடுத்த தைரியம்தான், மீண்டும் கார்டனுக்குள் சம்பத்தை நுழைய வைத்தது. இனி வழக்கம்போல இனோவா காரில் பயணிப்பார் நாஞ்சில் சம்பத்” என்றார் விரிவாக.

“இப்படியொரு முடிவை அவர் எடுக்கலாம் என்பதும் எங்களுக்குத் தெரியும். தி.மு.க தலைமைக்கு வேண்டப்பட்ட பலருடனும் அவர் ஆலோசித்துக் கொண்டிருந்தார். ‘ பேசுவது இருக்கட்டும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என கட்சித் தலைமை தெரிவித்துவிட்டது. அவருக்கு எந்தவித வாக்குறுதியும் தி.மு.க.வில் வழங்கப்படவில்லை. அ.தி.மு.க.வில் வாக்குறுதி கொடுக்கப்பட்டதும் அங்கு சென்றுவிட்டார். இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். தி.மு.க.விற்கு வருகிறேன் என அவர் சொல்வது, இது மூன்றாவது முறை. இனி அவர் வருவேன் என்று சொன்னாலும், தி.மு.க.வினர் நம்ப மாட்டார்கள்” என்கிறார் அறிவாலய நிர்வாகி ஒருவர்.

இதுகுறித்து, நாஞ்சில் சம்பத்திடம் பேசுவதற்காக தொடர்பு கொண்டோம். போனை எடுத்த அவரது மகள் மதிவதனி, “அப்பா சென்னையில் இருக்கிறார். உங்களிடம் பேசச் சொல்கிறேன்” என்றார்.

‘இனோவா சம்பத் என்ற பழிச்சொல்லோடு இனியும் அலைய விரும்பவில்லை’ என சுயமரியாதைக் குரல் எழுப்பிய சம்பத்திற்கு, அதே இனோவா வந்துவிட்டது. அரசியல் என்பதே சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்வதுதானே!

-ஆ.விஜயானந்த் tickticknews

Leave a Reply