நன்றி மறவாத ‘ரிவல்டோ’ யானை!

னக்கு மருத்துவம் செய்து காயத்தை குணப்படுத்திய கிராமத்தை விட்டு அகலாத யானை,  அந்த கிராமத்திலேயே தங்கி வாழ்ந்து வருகிறது. அந்த யானைக்கு பிரபல பிரேசில் கால்பந்து வீரர் ரிவல்டோவின்  பெயர் சூட்டி, மக்கள் அழைத்து வருகின்றனர்.

உதகை அருகே சீகூர் என்ற கிராமத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன், காயம்பட்ட நிலையில் காட்டு யானை ஒன்று வந்தது. அதன் உடலில் காயங்கள் இருந்தன. யானையின் தும்பிக்கையில் பெரிய காயம் இருந்தது. இதன் காரணமாக யானை உணவு உட்கொள்ள  முடியாமல் அவதிப்பட்டு வந்தது.

அந்த சமயத்தில் சீகூரில் தனியார் விடுதி நடத்தி வந்த மார்க் என்பவர் , காயமுற்ற யானையை கண்டார். பரிதாப நிலையில் இருந்த யானைக்கு உதவ அவர் முடிவெடுத்து, அதற்கு உணவு வழங்கியும் காயத்துக்கு மருந்தும் போட்டு வந்தார். இதனால் மார்க்கிடம் அந்த காட்டு யானை குழந்தை போல ஒட்டிக் கொண்டது. அந்த யானைக்கு  பிரேசில் கால்பந்து வீரர் ரிவல்டோவின் பெயரை மார்க் சூட்டினார். ரிவல்டோ என்று மார்க் அழைத்தால் யானை வந்து நிற்கும். அந்தளவுக்கு மார்க், ரிவல்டோ இடையே நட்பு உருவாகியிருந்தது. இந்நிலையில் மார்க் இறந்து போனார்.

மார்க் இறந்து போனது ரிவல்டோவுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்  தனக்கு செய்த உதவியையும் நட்பையும் மறக்காத ரிவல்டோ , தொடர்ந்து மார்க்கை தேடி சீகூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தது. ஆனால் மார்க்கை காணோம். ஆதரித்து உணவளிக்கவும், காயத்துக்கு மருந்து போடவும் மார்க் இல்லை.

இந்த நிலையில் சீகுர் கிராமத்திற்கு காயமுற்ற நிலையில் யானை வந்து செல்வது குறித்து, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறையை சேர்ந்த பந்தன் என்பவர் அந்த காட்டு யானையிடம் மார்க்கை போலேவே பழகத் தொடங்கினார்.

யானையின் நம்பிக்கையை பெற்ற பின், அதன்  தும்பிக்கையில் மருந்துகள் வைத்து  காயத்தை குணப்படுத்தினார். ரிவல்டோவின் காயம் மெல்ல மெல்ல ஆறியது. தொடர்ந்து வழக்கம் போல உணவு உட்கொள்ளத் தொடங்கியது.  தற்போது பந்தனுடன் ரிவல்டோவுக்கு புதிய பந்தம் உருவாகியுள்ளது. காயம் குணமடைந்தாலும்  சீகூர் கிராமத்திலேயே ரிவல்டோ யானை தங்கி விட்டது. பந்தன், ரிவல்டோ என்று அழைத்தால், யானை ஆஜராகி விடும்.

காட்டு யானையாக இருந்தாலும் மிகுந்த பாசத்துடன் ரிவல்டோ இருப்பதால், பொதுமக்களும் அதனிடம் செல்வதற்கு அஞ்சுவதில்லை. சீகூர் கிராமத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளும் ரிவல்டோவுடன் செல்ஃபி எடுப்பது வழக்கமான காட்சியாகிவிட்டது.

எனினும் யானையை கோபப்படுத்தும் விதத்தில் யாரும் நடந்து விடக் கூடாது என்பதால், ரிவல்டோ அருகில் வனத்துறையை சேர்ந்தவர் ஒருவர்  பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

நன்றி-vikatan

Leave a Reply