தேரோட்டம் என்பது…

நகரும் கோயில்
தேர் என்பது ஒரு வாகனம் மட்டுமே அல்ல; கோயிலில் குடிகொண் டிருக்கும் உத்ஸவ மூர்த்தியை அழைத்துக்கொண்டு வீதியுலா வருகிற பிரமாண்ட வண்டி மட்டுமே அல்ல! ஆகமங்கள், அதை ‘நகரும் கோயில்’ என்றுதான் வர்ணிக்கின்றன.

தேரோட்டம் நோக்கம்
அதாவது, கோயில் என்பது, அசைவற்றி ருப்பது. தேர் என்பது அதற்கு மாறாக, நகரும் கோயிலாகத் திகழ்வது. தீட்சை பெற்றவர்கள், தீட்சை பெறாதவர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள்… ஏன், நாத்திகர்கள் உள்பட உலகின் எல்லா உயிர்களும் கோயிலைத் தரிசிக்க வேண்டும், கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனின் பார்வை அவர்கள் அனைவரின் மீதும் விழவேண்டும், அனைவரும் அவனருளைப் பெற்று ஆனந்தமாக வாழ வேண்டும் என்கிற பாரபட்சமற்ற நோக்கத்திலேயே தேரோட்டம் நடத்தப்படுகிறது.

மேலும்  கருவறையில், அலங்காரங்கள் செய்யப்பட்டு, நறுமணப் பொருட்களால் தீப- தூப ஆராதனைகள் அனைத்தும் குறைவற நடைபெறுகின்றன. அந்தச் சக்தியின் அதிர்வலைகளை உள்வாங்கிக்கொண்டு, அனைத்து உயிர்களும் உய்யவேண்டும் என்பதற்காகவே ரதோத்ஸவம் எனும் வைபவம் சிறப்புற நடத்தப்படுகிறது.
தேரோட்டம், தேர்த்திருவிழா, ரதோத்ஸவம் என்றெல்லாம் இதைச் சிறப்பித்துச் சொல்வார்கள்.
ஸவம் என்றால் வெளிவருதல் என்று பொருள் (குழந்தை உள்ளிருந்து உலகுக்கு வெளிவருவதால் பிரசவம் என்கிறோம்).
தேரைச் செலுத்துவதற்கு ஒரு சாரதி தேவை. ஜீவாத்மாவாகிய நம்மைச் சாரதியாக இருந்து, பரமாத்மா வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை உணர்த்துவதற்காகவும் தேரோட்டம் நடைபெறுகிறது.

பலன்கள்

ஒரு கடும் தபஸ் என்னவெல்லாம் தருமோ, மிகப் பெரிதான உபாஸனை எதையெல்லாம் நமக்கு வழங்குமோ, அவை அனைத்தும் தேரோட்டத்தின்போது தேரினையும், அதில் உலா வரும் இறைவனையும் தரிசித்தால் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தேர் செய்யப்படும் மரம்
இலுப்பை மரத்தில்தான் பெருமளவு தேர்கள் செய்யப்படுகின்றன. காரணம், இந்த மரத்துக்கு எண்ணெய்ப் பசைத் தன்மை உண்டு. வேங்கை, சந்தனம் ஆகிய மரங்களுக்கும் இந்தத் தன்மை உள்ளது. இந்த மூன்று மரங்கள் வெடித்தாலும், விரிசல் விட்டாலும், சில நாளில் கூடுகிற தன்மை கொண்டவை. அதாவது, ஓரிடத்தில் விரிசல் ஏற்பட்டால், சில நாளிலேயே அந்த இடம் மீண்டும் இணைந்து ஒட்டிக்கொள்ளுமாம்! இதன் உறுதித் தன்மையும் குறையவே குறையாது; காலம் கடந்தும்கூட அப்படியே நிற்கும் என்கின்றனர்.

Leave a Reply