தும்பைச் செடி

தமிழகமெங்கும் கிராமங்களில் சர்வ சாதாரமாகக் காணப்படும் செடி வகைகளில் தும்பைச் செடியும் ஒன்றாகும். பச்சைப் பசேல் நிறத்தில், கத்திபோல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும். கரும்பச்சை நிறமான இலைகள், நான்கு பக்கங்களைக் கொண்ட தண்டு, நடுவில் மஞ்சரித் தொகுப்பில் சுற்றி மலர்ந்துள்ள வெண்மையான, தேன்சத்து நிறைந்த நாக்கு வடிவ மலர்கள் இவற்றைக் கொண்டு தும்பைச் செடிகளை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம். பெரும்பாலும் மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை விரும்பி வளர்கிறது. விவசாய நிலங்களில் இந்தச் செடி மழைக்காலங்களில் மிகச் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, பூக்கள் மருத்துவப் பயன் அதிகமானவை.

தும்பை மலர்களில் உற்பத்தியாகும் தேனைக் குடிக்க எப்போதும் தேனீ, எறும்பு, வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் பிறவகைப் பூச்சிகள் காத்துக் கொண்டிருக்கும். செடியைப் பிடுங்கினால் எளிதில் வேறுடன் வந்துவிடும். வேரில் மண் ஒட்டாமல் வெண்மையாகவே காணப்படுவது தும்பையின் சிறப்பு அம்சமாகும். மேலும், எளிதாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரவும் தன்மையுடையது. கடவுள் வழிபாட்டிற்க்கு தும்பைப் பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத்தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகின்றன. முருகக் கடவுளுக்கு தும்பை மலர்களால் சிறப்பு அர்ச்சனை செய்யப்படுவதுண்டு.

தும்பை ஆனைத்தும்பை, பெருந்தும்பை என இருவகைப்படும். இதில் மலைப்பகுதிகளில் பெரிதாக காணப்படும் தும்பைக்கு மலைத்தும்பை என்றும், நிலத்தில் காணப்படும் தும்பையை நிலத்தும்பை என்றும் அழைக்கின்றனர். இரண்டிற்கும் மருத்துவ குணங்கள் ஒன்றுதான்.

மருத்துவக்குணங்கள்:

சளியைப்போக்க:
உடம்பில் கப மாற்றத்தால் ஏற்படும் நோய்களைப் போக்கும் அருமருந்தாகும். சளி பிடித்தால் நோய்களின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் தும்பை இலையின் சாற்றில் தேன் கலந்து அருந்தினால் சளித்தொல்லையிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் தீர:
மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் இரசாயனம் கலந்த உணவுகளை உண்பதாலும், அதிக மன அழுத்தத்தாலும், மலச்சிக்கல் ஏற்படுகிறது. இவர்கள் தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா, கொத்துமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.

வாயுத் தொல்லை நீங்க:
வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லயிலிருந்து விடுபட தும்பை இலையின் சாறை தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் அருந்திவரக் குணம் தெரியும்.

தலைவலிபோக:
தும்பை இலையை நன்றாக கசக்கி தலையின் பொட்டுகளிலும், நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளிலும் தடவி வந்தால் தலைவலி குணமாகும்.

பித்தம் குறைய:
பித்தம் குறைக்கும் தன்மை இதற்கு அதிகமுண்டு.

கண் நோய் அகல:
கணிணியில் வேலை செய்பவர்களின் கண்கள் வேகமாக சோர்வடையும். இதனால் கண்களில் ஒரு விதமான வலி ஏற்படும். இதனைப் போக்கவும், கண்களில் ஏற்படும்நோய்களை அகற்றவும் தும்பை இலையின் சாறே சிறந்த மருந்தாகும்.

தொண்டைச் சதை வளர்ச்சியை போக்க:
டான்சில்ஸ் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சியை தடுத்து விடும் தன்மையும் இதற்கு உண்டு. தும்பையின் இளம் இலைகளை பறித்து நன்கு நீர் விட்டு அலசி அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேக வைத்து பின்னர் புளி கரைசலை ஊற்றி சிறிது நேரம் கழித்து தாளித்து கடைந்து சாப்பிட்டால் தொண்டைச் சதை வளர்ச்சி தடுக்கப்பட்டு விடும்.

எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது:
வாரம் இரு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது நல்லெண்ணெயில் தும்பைப் பூக்களைப் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஜலதோஷம், தலைப்பாரம், சிருரோகம் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீரும். கண்களுக்கு நல்ல ஒளியைத் தரும்.

குழந்தைகளுக்கு:
தும்பைப் பூவின் சாறு – 4 துளி, உத்தாமணிச் சாறு – 4 துளி, மிளகுத்தூள் – 3 கிராம் இம் மூன்றையும் தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுக் கோளாறுகளும், மாந்தம், பேதி போன்ற நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு:
வாயுப்பிரச்சினையால் சில பெண்களுக்கு மாதவிடாய் தடைப்பட்டு தாமதமாகும். இவர்கள் தும்பை இலை, உத்தாமணி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் 3 கிராம் அளவு, பசும்பாலுடன் கலந்து சாப்பிட மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கும். இதைச் சாப்பிடும் காலங்களில் புளி, காரம் ஆகியவற்றை உணவில் சேர்க்கக் கூடாது.

விஷம் முறிய:
எப்படிப்பட்ட விஷத்தையும் முறிக்கும் தன்மை தும்பை இலைக்கு உண்டு. பாம்பு கடிபட்டவர்களுக்கு தும்பை இலைச்சாறு 20 முதல் 30 மில்லி வரையில் கொடுக்க வேண்டும். சிறிது நேரத்தில் பாம்பு கடிபட்டவருக்கு இரண்டு மூன்று முறை பேதியாகும், வாந்தி சளியுடன் வெளியேறும். அப்போது அவருடைய உடல் மீண்டும் உஷ்ணமாகும். இதுவே குணமாவதற்கான அறிகுறியாகும்.
குறிப்பு இந்த மருந்து சாப்பிடுபவர்கள் சுமார் 24 மணி நேரம் வரையில் உறங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவாக புதிய மண் பானையில் பச்சை அரிசியும், பாசிப்பயறும் கலந்து சமைத்து சாப்பிட வேண்டும். உப்பு, புளி, காரம் உணவில் மூன்று நாட்களுக்கு சேர்க்கக் கூடாது.

தேள் கடிக்கு:
தேள் கொட்டியவுடன் வலி தாங்காமல் துடிப்பவர்களுக்கு தும்பை இலைச்சாற்றை 4 துளிகள் எடுத்து சிறிது தேனில் கலந்து உள்ளுக்குக் கொடுத்து கொட்டிய இடத்தில் தும்பை இலைச் சாற்றில் தேய்த்து விட வலி குறைந்து விஷம் முறிந்து விடும். சகல விஷப் பூச்சிக்கடிக்கும் இந்த முறையைக் கையாளலாம்.
எங்கும் கிடைக்கும் தும்பையை நாம் சாதாரண செடி போல நினைக்காமல், அதன் மருத்துவப் பயன்களை பயன்படுத்தி நோயின்றி வாழ முயற்சிப்போம்.

Leave a Reply