தீயாக மாறிய சந்தேகம்

தூரத்தில் திருவேற்காடு மாரியம்மன் கோயிலில் பாட்டுச் சத்தம் காற்றில் கலந்து வருகிறது. இரவு ஒன்பதரை மணிக்குத் தனியாக நடந்துவருகிறார் பானு. 16 வயது. தனியார் நிறுவனத்தில் வேலை. காத்திருக்கும் நம்மைக் கேள்விக்குறியோடு பார்த்துவிட்டு, அவசரமாக வீட்டுக்குள் சென்றார்.

ஒரு பெரியவரும் குட்டிப் பையன்கள் இருவரும் வயிற்றைப் பிடித்துக்கொண்டு பசியோடு காத்திருக்கிறார்கள். அவசரமாக அரிசியைக் கழுவி உலை வைக்கிறார் பானு. வந்த விஷயத்தைச் சொன்னவுடன் பானுவுக்குக் கண்கள் கலங்குகின்றன. “அம்மாவுக்கு இன்னைக்கு கோர்ட்டு. வந்துடு வாங்கண்ணே” என்கிறார்.

தனது தந்தை சக்திவேல் தீயில் எரிந்து கதறித் துடித்து இறந்ததை நேரில் பார்த்தவர் அவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. பானுவின் தந்தை சக்திவேலை தீ வைத்துக் கொளுத்தியது வேறு யாரும் இல்லை. பானுவின் தாய் பிருந்தாதான்.

இப்போதும் சக்திவேலின் அம்மா லட்சுமி, “நானே கொன் னுருப்பேன். மருமக முந்திக்கிட்டா” என்கிறார். தந்தை பச்சியப் பன், “அவன் சாக வேண்டியவன்தான்” என்று சபிக்கிறார். பெற்றோரே வெறுத்து ஒதுக்கிய துரதிர்ஷ்டசாலி அவர்.

அப்படி என்ன செய்தார் சக்திவேல்?

மனைவி பிருந்தாவை நிர்வாணமாக்கி வீட்டுக்குள் அடைத்தே வைத்திருந்தார். ஒருநாள், இருநாட்கள் இல்லை; மாதத்தில் பல நாட்கள் இப்படித்தான் நடந்தது. உடைகளை உருவிவிட்டு, அறைக்குள் மனைவியைப் பூட்டிவிட்டு மது அருந்தப் போய்விடுவார். குழந்தைகள் கதறித் துடிக்கும். திருவேற்காடு காவல் நிலையத்தில் பலமுறை பஞ்சாயத்து நடந்தது. வழக்குப் போட்டார்கள். அடித்துப் பார்த்தார்கள். சிறையில் அடைத்தார்கள். மனிதர் திருந்தவே இல்லை. மீண்டும் மீண்டும் சித்ரவதை. பிருந்தாவின் புடவை தொடங்கி அனைத்து ஆடைகளையும் நார்நாராகக் கிழித்துப்போட்டிருப்பார் சக்திவேல். கிணற்றில் பாதித் துணிகள் மிதக்கும். சக்தி வேலுக்குத் தினமும் காலையிலேயே மது அருந்த வேண்டும். பின்பு, மனைவியைக் கொடூரமாக வன்புணர்வு செய்வார். அடித்து உதைப்பார். சக்திவேலைக் கண்டாலே அவருடைய குழந்தைகள் தெறித்து ஓடும். அக்கம்பக்கத்தினரும் கேட்க முடியாது. அவர்களுக்கும் அடிவிழும். அடாவடிப் பேர்வழி.

“அந்த ஆளுக்கு எப்பப் பாரு பொஞ்சாதி மேல சந்தேகம். துணியை உருவிப் போட்டுட்டு அடைச்சு வெச்சிடுவான். தெனமும் வந்து ‘எவன் கூட போன’ன்னு கேட்டு அடிப்பான். பைத்தியம் பிடிச்சவன். பல சமயம் அந்தப் பொண்ணு துணி இல்லாம தெருவுல ஓடியிருக்கு” – இப்படி நூறு கதைகளைச் சொல்கிறார்கள் அக்கம்பக்கத்தினர். கேட்கவே கூசுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊரில் மாரியம்மன் பண்டிகை. சக்திவேல் வீட்டில் இல்லை. பிருந்தா மாரியம்மனுக்குக் கூழ் காய்ச்சிக்கொண்டிருந்தார். திடீரென்று வந்திருக்கிறார் சக்திவேல். கடும் போதை. கூழ் பாத்திரத்தை எட்டி உதைத்தார். மனைவியைப் பிடித்து இழுத்தார். தப்பி ஓடிவிட்டார் பிருந்தா. வீட்டுக்குள் காமப் பசியோடு காத்திருந்தது அந்த மிருகம். கடைக்குச் சென்றிருந்த மூத்த பெண் பானு, நடந்தது எதுவும் தெரியாமல் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

வீட்டுக்குள் மகளின் கதறல் சத்தம். பக்கத்தில் எங்கேயோ பதுங்கியிருந்த பிருந்தா, ஓடி வந்து கதவை உதைத்து வீட்டுக்குள் புயலாகப் புகுந்தார். கணவனிடமிருந்து மகளை வெறித்தனமாக விடுவித்தவர், அதே வேகத்தில் மண்ணெண் ணெயை அவர்மீது ஊற்றிக் கொளுத்திவிட்டார். தன் மீதான தாக்குதல்களைத் தாங்கிக்கொண்ட தாய் மனம், தனது மகள் பாதிக்கப்படுவதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இரவு பத்தரை மணிக்கு வீட்டுக்கு வருகிறார் பிருந்தா. “ஒரு மாசம் புழல் சிறையில இருந்தேன். ஜாமீன்லதான் வெளியே வந்திருக்கேன். மாசம் ரெண்டு தபா பூந்தமல்லி கோர்ட்டுல ஆஜராகணும். கேஸ் நடந்துட்டு இருக்கு. தண்டனை அறிவிச்சு ஜெயில்ல அடைச்சிடுவாங்களோன்னு பயமா இருக்குது. இப்பவே சாப்பாட்டுக்குக் கஸ்டம். பாதி நேரம் குழந்தைங்க கஞ்சிதான் குடிக்குதுங்க. நானும் உள்ள போயிட்டா அவங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியல” – குழந்தைகளைக் கட்டிக்கொண்டு அழுகிறார் பிருந்தா.

பிருந்தா தினமும் அதிகாலை 3 மணிக்கு எழ வேண்டும். 4 மணிக்கு திருவேற்காடு பேருந்து நிலையத்தில் முதல் பேருந்தைப் பிடித்து 5 மணிக்கு சென்னை என்.எஸ்.கே. நகருக்கு வருவார். அங்கு பத்து வீடுகளுக்கு வாசல் தெளித்துக் கோலம் போடுவார். நான்கு வீடுகளில் பாத்திரம் கழுவி, சமைக்கிறார். ரூ. 5,000 கிடைக்கிறது. வேலை முடிந்து வீட்டுக்கு வர இரவு 7 மணியாகிவிடும். இன்னொரு பக்கம் படிக்க வேண்டிய வயதில் மொத்தக் குடும்பத்தையும் தாங்கிக்கொண்டிருக்கிறார் 16 வயதுச் சிறுமி பானு.

டாக்டரிடம் பேசினேன். “குடிநோயின் பிரதான அம்சம், சந்தேகம். குறிப்பாக, மனைவி மீது. நடத்தை கெட்டவளோ என்கிற பயம். இதற்கு முக்கியமான மருத்துவக் காரணம், ஆண் மலட்டுத் தன்மை. அதாவது, தொடர்ந்து மது அருந்துவதால் ஆண்மைக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. அதே சமயம், மது காமத்தைத் தூண்டும். ஆனால், செயல்பட விடாது. மனைவியுடன் எவ்வளவு நேரம் மல்லுக்கட்டினாலும் உருப்படியாக எதுவும் நடக்காது. பெண்ணுக்குத் திருப்தி ஏற்படாது. ஆணுக்கும், தன்னால் இயங்க முடியவில்லையே என்கிற குற்ற உணர்வு அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை ஏற்படும். நாங்கள் இதனை ‘டிலூஷன் ஆஃப் இன்ஃபிடலிட்டி’ (Delusion of infidelity) என்போம். ஆனால், தன் மீது தவறு என்பதை ஆண் குடிநோயாளி ஏற்றுக்கொள்ள மாட்டான். ஈகோ. இங்குதான், மனைவி வேறு எங்கேனும் தாகத்தைத் தீர்த்துக்கொள்கிறாளோ என்கிற சந்தேகம் ஒரு புள்ளியாகத் தொடங்குகிறது. ஒருகட்டத்தில் அது பெரும் நோயாக உருவெடுக்கிறது” என்றார்.

புள்ளியாகத் தொடங்கி, தீயாக மாறி அழித்ததைத்தானே சக்திவேல் போன்றவர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்கிறது!

(தெளிவோம்)

டி.எல். சஞ்சீவிகுமார்

http://tamil.thehindu.com

Leave a Reply