திருவள்ளுவரை வரைந்த ஓவியர்

உருவம் கொடுத்த ஓவிய மேதையின் பிறந்தநாள் டிச. 17

அவர் வரைந்த ஓவியத்துக்கு (1964 – 2016) இந்த ஆண்டுடன் 52 வயது நிறைவடைகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை இயற்றிய திரு வள்ளுவரை பல்வேறு காலகட்டங் களில் ஓவியர்கள் வெவ்வேறு கோணங்களில் படமாக வரைந்தனர். அவை பெரும்பாலும் சாமியார் கோலத்திலேயே இருந்தன. திருக்குறள் உலகப் பொதுமறை என்பதால் எந்த ஒரு மதத்துக்குள்ளும் வள்ளுவரை சுருக்க இயலாது. எனவே, அந்த ஓவியங்களை மக்களும் அரசுகளும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில்தான் ஓவிய மேதை யும் திருக்குறளின் தீவிர பற்றாளரு மான கே.ஆர்.வேணுகோபால் சர்மா, கடந்த 1964-ம் ஆண்டு வள்ளுவரின் திருவுருவத்தை வரைந்தார். அந்த ஓவியமும் அவருக்கு அவ்வளவு சீக்கிரம் வாய்த்துவிடவில்லை. திரு வள்ளுவரின் உருவத்தை வரையாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் எடுத்தவர், சுமார் 40 ஆண்டுகள் திருக்குறள் மற்றும் ஓவியங்களை ஆராய்ச்சி செய்து, அதன் பிறகே வள்ளுவரை வரைந்தார். தமிழக அரசும் முதல்முறையாக இவரது ஓவியத்தை வள்ளுவரின் அதிகாரப்பூர்வமான ஓவியமாக ஏற்றுக்கொண்டது. முதல்முறையாக 1964-ம் ஆண்டு மார்ச் 23-ம் தேதி தமிழக சட்டசபைக்குள் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணை ஜனாதி பதி ஜாகீர் உசேன் திறந்துவைத்தார். சட்டசபையில் வேணுகோபால் சர்மா வுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது.

இவருக்கு ‘ஓவியப் பெருந்தகை’ என்ற பட்டத்தை பேரறி ஞர் அண்ணா அளித்து கவுரவித்தார். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட திரு வள்ளுவர் திருவுருவம் வெளியாகி (1964 – 2016) தற்போது பொன்விழா ஆண்டு நடக்கிறது. இதுகுறித்து ஓவியர் வேணு கோபால் சர்மாவின் மகன் வே.ஸ்ரீராம் சர்மா, ‘தி இந்து’விடம் கூறியதாவது:
எனது தந்தை 1908-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி சேலம் மாவட்டத்தில் பிறந்தார்.

தெனாலிராமன் பரம்பரை வழிவந்தவர். மைசூர் சமஸ்தானத்தில் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடை யார் அவையில் ஆஸ்தான விகடகவி யாக இருந்தார். சுதந்திரப் போராட்ட வீரரான எனது தந்தை, நண்பர்களுடன் சேர்ந்து ‘ஸ்வதேச டிராமா பார்ட்டி’ ஆரம்பித்து விடுதலை வேட்கையை தூண்டும் வகையில் நாடகங்களை அரங்கேற்றினார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறையைத் தொடர்ந்து மும்பைக்கு இடம் பெயர்ந்தார். அங்கு பிரபல சினிமா இயக்குநர் ஸ்ரீபகவான் தாதாவிடம் சினிமாவை கற்றுக்கொண்டார். சென்னை திரும்பியவர் கலங்கரை விளக்கம் அருகே ‘கிரீன் பிக்ஸர்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார். ‘நாத விஜயம்’, ‘தெய்வீகம்’, ‘மை சன்’ ஆகிய படங்களை தயாரித்து இயக்கினார்.

வள்ளுவர் மட்டுமின்றி இவர் வரைந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரின் படங்களும் சட்டப்பேரவைக்குள் இருக்கின்றன.

நாடு முழுவதும் திருவள்ளுவரை கொண்டுபோய் சேர்ப்போம் என்று தற்போது மத்திய அரசு கூறுகிறது. 1967-ல் முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா ‘எங்கும் திருவள்ளுவர்’ என்ற உத்தரவை வெளியிட்டார். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், காவல் நிலையங்கள் அனைத்திலும் வள்ளு வரின் படமும் இடம் பெறவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில காலம் மட்டுமே அந்த உத்தரவு பின்பற்றப்பட்டது.

காலப்போக்கில் ஏனோ அதை பெரும்பாலும் மறந்து விட்டனர். இவ்வாறு ஸ்ரீராம் கூறினார். திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்த ஓவிய மேதைக்கு காலம் கடந்தாவது அரசுகள் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்பது தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை.

Leave a Reply