தாய்ப்பால் பணக்காரராக்கும்.

அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக“பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது.
குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின், IQ அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக The Lancet Global Health மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்துள்ளன.
அதாவது, ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் IQ, சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது அதிக அளவிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால் தமது ஆய்வும் அதன் முடிவுகளும் முந்தைய ஆய்வுகளைவிட மேம்பட்டவை என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக சுமார் 3500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு அலசப்பட்டிருக்கிறது.

Leave a Reply