தரையிலேயே பீர்க்கங்காய் சாகுபடி

நூழக்கமான பயிர்களை சாகுபடி செய்தால் போட்ட முதலை எடுப்பதற்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை. இதிலிருந்து மாறுதல் பெறத்தான் காய்கறிகளுக்கு மாறினர் விவசாயிகள். ஆனால் சில காய்கறிகளைப் பயிரிட பந்தல் அமைக்க வேண்டுமே! அதற்கென்று ஒரு பெரிய தொகையை அல்லவா செலவு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற புலம்பலோடு காய்கறிப் பயிரென்றால் “ஆளை விடுசாமி’ என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டார்கள். ஆனால் இப்போது பந்தல்பயம் தேவையில்லை. பந்தலில் பயிர்செய்ய வேண்டிய காய்கறிப் பயிர்களை தரையிலேயே பயிர் செய்யலாம் என்ற நிலை வந்துவிட்டது.

தரையில் பீர்க்கைப் பயிரிட முதலில் நிலத்தை நன்றாக இரண்டு முறை உழவு செய்வோம். இதற்கு நாங்கள் தொழு உரம் போடவில்லை. உழவு செய்தபின் நான்கு அடி இடைவெளிகளில் ஓரடி அகலமுள்ள வாய்க்கால்களை அமைப்போம். வாய்க்கால்களின் இரண்டு பக்க கரையோரங்களிலும் ஒரு மீட்டருக்கு இடையில் ஒரு விதை என ஊன்றுவோம். அரை ஏக்கருக்கு 400 கிராம் விதை தேவைப்பட்டது. விதைப்பதற்கு தேவையான வீரிய ரக விதையை பெரம்பலூரிலிருந்து வாங்கிவந்தோம். பாசனம் செய்து அந்த ஈரத்தில்தான் விதைஊன்றுவோம். விதை ஊன்றியபிறகு வாரத்திற்கு இரு முறை பாசனம் செய்வோம்.

ஐந்தாவது நாளில் விதை முளைத்து வந்துவிடும். இருபதாவது நாளில் ஒரு முறை களைஎடுப்போம். பின் களை இருப்பதைப் பொறுத்து அகற்றுவோம். 35வது நாளில் செடியில் இருந்து பூ வர ஆரம்பிக்கும். இதிலிருந்து ஒரு 10 நாள் கழித்து அதாவது விதை ஊன்றிய 45வது நாளில் 10 கிலோ டி.ஏ.பி., 5 கிலோ யூரியா, 2 கிலோ சல்பேட் ஆகியவற்றைக் கலந்து செடியைச் சுற்றி இடுவோம். உரமிட்டவுடன் நீர் பாய்ச்சிவிடுவோம். உரமிட்ட மறுநாளில் டைசர் மருந்தை டேங்குக்கு 10 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்போம். 50வது நாளிலிருந்து அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம். அதிலிருந்து 3 நாளைக்கு ஒரு அறுவடை என 125வது நாள் வரை தொடர்ந்து மேற்கொள்வோம். 60வது நாளில் முன் சொன்ன உரங்களை அதே அளவில் கலந்து இடுவோம். உரமிட்ட மறுநாளில் முன் சொன்ன மருந்தையே தெளிப்போம். எங்கள் நிலத்திற்குப் பக்கத்தில் வேறு யாரும் சாகுபடி செய்ய வில்லை என்பதால் பெரும்பாலும் எந்தவிதமான பூச்சிகளும் தாக்குவதில்லை. அப்படி ஏதாவது தாக்கினால் வேப்பங்கொட்டைச்சாறை தண்ணீரில் கலந்து தெளித்துவிடுவோம்.

50வது நாள் முதல் 125வது நாள் வரை மொத்தம் 25 அறுவடையை மேற்கொள்ளலாம். ஒரு அறுவடையில் 25 கிலோ முதல் 40 கிலோ வரை காய்கள் மகசூலாகக் கிடைக்கும். ஒவ்வொரு முறை அறுவடை செய்யும்போதும் சராசரியாக 30 கிலோ காய்கள் மகசூலாகக் கிடைத்துவிடுகிறது. இந்த அரை ஏக்கர் நிலத்திலிருந்து மொத்தமாக செய்யும் 25 அறுவடையில்இருந்து சராசரியாக 750 கிலோ மகசூல் கிடைத்துவிடுகிறது. அறுவடை செய்யும் காய்களை பெரம்பலூருக்கு எடுத்துச்சென்று விற்பனை செய்துவிடுகிறோம். அங்கு ஒரு கிலோ காய்க்கு 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலையாகக் கிடைக்கிறது. எப்படியும் ஒரு கிலோ காய்க்கு கமிஷனெல்லாம் போக சராசரியாக 10 ரூபாய் விலை கிடைக்கிறது. இதன்மூலம் அரை ஏக்கரிலிருந்து 125 நாளுக்கு 7,500 ரூபாய் வருமானமாகக் கிடைக்கிறது. இதற்கு பராமரிப்பு செய்வதற்காக 3,440 ரூபாய் செலவாகிறது. இதுபோக 4060 ரூபாய் நிகர லாபமாகக் கிடைக்கிறது.

அகமது கபீர்,
தாராபுரம். 93607 48542.

நன்றி: தினமலர்

Leave a Reply