தமிழ்நாடு மட்டுமல்ல மேலும் 13 மாநிலங்கள் பீட்டாவால் பாதிக்கப்பட்டுள்ளன!

காங்கேயம் காளை அறக்கட்டளைத் தலைவரும், ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவினரின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள  கார்த்திகேயன் சிவ சேனாதிபதி, மாணவர்களின் ஒருங்கிணைந்த ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தமது கருத்துக்களை தனியார் செய்தித் தொலைக்காட்சி சேனலில் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் சொன்ன விசயம் மிகவும் குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டு விவகாரத்தைப் போன்று மேலும் 13 மாநிலங்களில் பீட்டாவால் கலாச்சாரத் தடை உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு அடிப்படை காரணம் இந்தியா முழுவதிலுமே உள்ள நாட்டு மாடுகளை ஒழிப்பது மட்டும் தான் என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறியதிலிருந்து;

மத்திய அரசு உடனடியாக PCA மசோதாவில் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இப்போதைக்கு பாராளுமன்றக் கூட்டம் நடைபெற வாய்ப்பில்லாததால் சட்டத் திருத்தம் கொண்டு வர வாய்ப்பில்லை என்றாலும் மத்திய அரசு அவசரச் சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு, கேரளாவில் ரேக்ளா, கர்நாடகத்தில் கம்பாலா, மகராஷ்டிராவில் பேல்கோடா, ஆந்திராவில் கல் இழுக்கக் கூடிய விளையாட்டு உள்ளிட்ட கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட விளையாட்டுகளை தடை நீக்கம் செய்து, பீட்டாவின் வழக்குகளால் பாதிக்கப்பட்ட 13 மாநில மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர முடியும்.

“தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிலுள்ள 13 மாநிலங்கள் இதே விதமாகத் தங்களது கலாச்சார அடையாளங்களை இழக்கும் வண்ணம் பீட்டாவால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன என்பதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இது ஜல்லிக்கட்டுக்காக மட்டுமல்ல நமது ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ள நாட்டு மாடுகளை அழிக்க பீட்டா, இந்திய விலங்குகள் நல வாரியம்,புளூ கிராஸ், உள்ளிட்ட அமைப்புகள் இந்தியா மீது தொடுத்திருக்கும் ஒரு போர் இது, இதை மத்திய அரசு புரிந்து கொண்டு உடனடியாக அவசர சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இது நிகழாவிட்டால் தமிழகத்தை சேர்ந்த அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்றே ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

மேலும் இந்த விசயத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்தவரை மாநில அரசின் பங்கு மிகவும் குறைவானது, காரணம் என்னவென்றால் 2012 ஆம் வருடம் ஜெயராம் ரமேஷ் மத்திய அமைச்சராக இருந்த போது அந்த சட்டத் திருத்தத்தை கொண்டு வந்த போது தான் பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டு ஜல்லிக்கட்டுக்கான தடையைக் கொண்டு வந்தார்கள். ஆகவே இதை சரி செய்ய முடியும் என்றால் இன்று மத்திய அரசால் மட்டும் தான் முடியும். ஆகவே மாணவர்களின் போராட்டம் மத்திய அரசை அவசரச் சட்டத் திருத்த மசோதா கொண்டு வரச் செய்யும் முனைப்பில் மட்டுமே இருக்க வேண்டும். தீக்குளிப்பில் இறங்குவது, உணர்ச்சிவசப்படுவது  மாதிரியான விசயங்கள் எல்லாம் எந்த விதமான பிரயோஜனத்தையும் தரப்போவதில்லை, அது பின்னர் ஜல்லிக்கட்டுக்காகப் போராடியதால் மாணவர்களுக்கு ஏற்பட்ட இழப்பாக மாறி  பிரச்சினையை திசை திருப்பி விட்டு விடக் கூடும். ஆகவே மாணவர்கள் தங்களது தன்னெழுச்சிப் போராட்டத்தை, அதற்கான தீர்வு கிடைக்கும் வரை அமைதியான வழியிலேயே நடத்த வேண்டும்.”

இன்று அதிகாலை தந்தி டி.வி க்கு இவர் அளித்த நேர்காணல் இது. அதற்குப் பின் நடந்ததை நாம் அனைவருமே ஊடகங்களில் கண்டு வருகிறோம். பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இப்போதைக்கு மத்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கை விரித்து விட்டார். ஆனால் ஜல்லிக்கட்டு தமிழக கலாச்சரம் சார்ந்த விசயம் என்பதில் மறுப்பில்லை, ஜல்லிக்கட்டு விசயத்தில்  தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமரின் இந்த முன்னுக்குப் பின் முரணான பதிலால் மாணவர் போராட்டம் ஒன்றும் உறுதி குலைந்து விடவில்லை. அது மேலும் அதிகரித்திருப்பதாக மக்கள் உணர்கிறார்கள்.

 

Leave a Reply