டைட்டானிக் மூழ்கிய நாள் – ஏப்ரல் 14

ஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.

புறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர்.

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.

இரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல் முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40 க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது.

மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.

டைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.

கப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது.

டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது.

Leave a Reply