டிகேஎம். 13

தென் மாவட்ட நெல் விவசாயிகள்  வருகிற சம்பா பருவத்தில் டிகேஎம். 13 என்ற நெல் ரகத்தை பயிரிட்டு அதிக மகசூல் பெறலாம் என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கா.பாஸ்கரராஜ் தெரிவித்துள்ளார்.
படிக்காசுவைத்தான்பட்டியில் அறுவடைக்கு தயாராக இருந்த டிகேஎம் 13 பயிரை புதன்கிழமை பார்வையிட்ட பின்னர் அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சம்பா பருவத்தில் பிபிடி 5204 என்ற டீலக்ஸ் பொன்னி நெல் ரகத்தினை ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்து வருகிறார்கள்.
இந்த நெல் ரகம் கடந்த 28 ஆண்டுகளாக சாகுபடியில் உள்ளது. 140 நாட்கள் வயதுடைய சன்ன நெல் ரகமாகும். மேலும் நுகர்வோரினால் சாப்பாட்டிற்கு அதிகளவில் விரும்பப்படுவதால் குவிண்டாலுக்கு ரூ.200 கூடுதலாக விலை கிடைக்கிறது.
ஆனால்  கடந்த 4, 5 ஆண்டுகளாக இந்த ரகத்தில் கதிர் பருவத்தில் குலை நோய் தாக்குதலுக்கு இலக்காகி மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது. பால் பிடிக்கும் தருணத்தில் வறட்சிக்கு இலக்காகி மகசூல் இழப்பு ஏற்படுகிறது. இதைக்கருத்தில் கொண்டு திருவூர் குப்பம் நெல் ஆராய்ச்சி நிலையத்தினால் டிகேஎம் 13 என்ற நெல் ரகம் வெளியிடப்பட்டுள்ளது.
இது டீலக்ஸ் பொன்னியைப் போன்று சன்ன நெல் மணிகளைத் தரக்கூடியது. இதனுடைய வயது 130  நாட்களாகும். டீலக்ஸ் பொன்னியை விட 10 நாள்களுக்கு முன்பாகவே, அறுவடை செய்யதுவிடலாம். மேலும் இந்த ரகமானது இலை சுருட்டு புழு, குருத்து பூச்சி, குலை நோய், தூங்க்ரோ வைரஸ் நோய் மற்றும் இலைப்புள்ளி நோய் தாக்குதலுக்கு எதிர்ப்பு தன்மை கொண்டது. மேலும் 10.7 சதவீதம் கூடுதல் மகசூலும் தரக்கூடியதாகும்.
நடப்பு ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாரம், படிக்காசுவைத்தான்பட்டியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி  முருகானந்தராஜா தனது வயலில் 2 ஏக்கர் பரப்பில் பயிரிட்டுள்ளார். இதில், ஒரு ஏக்கருக்கு சராசரி 4.5 டன்னிலிருந்து 5.00 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.
எனவே தென் மாவட்டங்களைச் சேர்ந்த நெல் விவசாயிகள் டிகேஎம் 13 நெல் ரகத்தினை பயிரிட்டு அதிக மகசூல் பெற்று நாட்டின் உணவு உற்பத்தியினை பெருக்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்

2 comments

  1. டிகேஎம் 13 விதை நெல் எங்கு கிடைக்கும்! கிலோ எவ்வளவு? நன்றி!!

Leave a Reply