ஜெ. வின் திறமைக்கு விழுந்த அடி

ஒரே வாரத்தில் இரு பெரும் அடி.. ஜெயலலிதா நிர்வாக திறமை பிம்பம் தூள் தூளானது!
ஜெயலலிதா அரசு நிர்வாகத்தில் நடைபெற்ற இருபெரும் நிர்வாக குளறுபடிகள் தற்போது அம்பலமாகியுள்ளது.

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிம்பத்தின் மீது இவ்வாரத்தில் மட்டும் இரண்டு பெரிய அடிகள் விழுந்துள்ளன.
அரசு ஊழியர்கள் 2 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியவர், இரும்பு பெண்மணி என்றெல்லாம் அவரது ஆதரவாளர்களால் புகழப் பெற்றவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால் அவரது நிர்வாக திறனை கேள்விக்குள்ளாக்கும் இரு அதிரடி சம்பவங்கள் இந்த வாரத்தில் நடந்துள்ளன.
1 . ராம மோகன ராவ்

முதலாவது அடி, தலைமைச் செயலராக பதவி வகித்த ராம மோகன ராவ் வீட்டில் நடந்த ஐடி சோதனையும், அதைத் தொடர்ந்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பதுதான்.
ஜெயலலிதாவின் நேரடி தேர்வு

ஏனெனில் ராம மோகன ராவை தலைமைச் செயலாளராக நியமித்தது சாட்சாத், ஜெயலலிதாதான். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ராம மோகன ராவை, சீனியர்களுக்கு டிமிக்கி கொடுத்து தலைமைச் செயலராக்கினார் ஜெயலலிதா. 1980 பேட்ஜ் அதிகாரியான சக்திகாந்த தாஸ், 1981ம் பேட்ஜ் அதிகாரி கிரிஜா வைத்தியநாதன் மற்றும் பல சீனியர்களை தலைமைச் செயலராக்காமல் 1985ம் பேட்ஜ் அதிகாரியான ராம மோகன ராவை ஜெயலலிதா தலைமைச் செயலாளராக நியமித்தபோது, அவரது திறமையில் ஜெயலலிதா நம்பிக்கை வைத்துள்ளதாகவே பலரும் நினைத்தனர்.
திறமையின்மை?

ராம மோகன ராவ் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பிடிபட்ட நிலையில், அவர் தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவே பைபாஸ் செய்து தேர்ந்தெடுத்த ஒரு அதிகாரி ஊழல் குற்றவாளியாக மக்கள் முன்பு கை கட்டி நிற்கிறார். முதல்வருக்கே தெரியாமல் ராம மோகன ராவ் ஊழல் செய்திருந்தால், அது ஜெயலலிதாவின் நிர்வாக திறமையின்மையை புடம் போட்டு காட்டியதாகத்தானே அர்த்தம்?
2.  டிஎன்பிஎஸ்சி தேர்வு

மற்றொரு அடி என்னவென்றால் ஜெயலலிதா அரசு நியமித்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 11 பேரையும் நீக்கி உத்தரவிட்டுள்ளது சென்னை ஹைகோர்ட். திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்த வழக்கில்

(டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட 11பேரும் அதிமுக வை சார்ந்தவர்கள் என்றும் அவர்கள் ஒரு சார்பில் செயல்படுபவர்கள் என்றும் தெரிவித்திருந்தார். 

மேலும் விதிகளை பின்பற்றாமல் 11 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தார்.)

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரின் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நிர்வாக தோல்வி

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரும் அப்பதவிக்கு தகுதியில்லாத நபர்கள் என்று ஹைகோர்ட் கூறியுள்ளது. இதன் மூலம் முக்கியமான இந்த பதவியிடங்களுக்கு தகுதியற்ற நபர்களை ஜெயலலிதா அரசு நியமித்துள்ளது உறுதியாகியுள்ளது. ஜெயலலிதாவுக்கு தெரியாமல் இந்த நியமனம் நடந்ததாக கூட அதிமுகவினரால் சொல்லி தப்பிக்க முடியாது. சாதரண முடிவுகளை கூட ஜெயலலிதா எடுத்து வந்த ஒரு ஆட்சி நிர்வாகத்தில், அதி முக்கியத்துவம் வாய்ந்த டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் நியமனமும் ஜெயலலிதா விருப்பப்படியே நடந்திருக்கும். ஆக மொத்தத்தில் இரு பெரும் முக்கிய முடிவுகளில் ஜெயலலிதா இடறி விழுந்துள்ளது இவ்வார நிகழ்வுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.

oneindia

Leave a Reply