ஜெ. பொதுக்குழு… சசி. பொதுக்குழு! என்ன இருந்தது… என்ன இல்லை…?

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம், ‘தீபாவளி’ திருவிழாபோலக் கொண்டாடப்படும். போயஸ் தோட்டத்தில் இருந்து கூட்டம் நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கட்சியினர் வழிநெடுக நின்று வரவேற்பார்கள். முக்கால் மணி நேரத்தில் கடக்க வேண்டிய இந்த 18 கிலோ மீட்டர் தூரத்தை… ஜெயலலிதாவின் கார், கடந்துசெல்ல ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்தபடியே அவர் செல்வார்.

போயஸ் கார்டன் கேட் திறந்து ஜெயலலிதாவின் கார் வெளியே வரும்போது… அஞ்சுலெட்சுமி என்ற அ.தி.மு.க பெண் தொண்டர் ஒருவரின் குரல் விண்ணைத் தொடும் அளவுக்கு, ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று குரல் கொடுப்பார். ஆரத்தி எடுத்து… பூசணிக்காய் உடைத்துத்தான் வழியனுப்புவார். போயஸ் கார்டனில் இருந்து இரட்டை விரலை காட்டிப் புன்னகைத்தவாறு செல்லும் ஜெயலலிதாவின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிப் பொங்கி இருக்கும். வழிநெடுக நின்று வரவேற்கும் தொண்டர்கள் முகத்திலும் அத்தகையதொரு சந்தோஷம் விளையாடும். ஃப்ளெக்ஸ் பேனர்கள், கொடி தோரணங்கள், வாழை மரங்கள் என வழிநெடுகிலும் கழகத் தொண்டர்கள் கட்டிவைத்துக் கலக்குவார்கள். இந்த உற்சாகப் பயணம், மண்டபத்தை நெருங்கும்போது அங்கு வேறு விதமான வரவேற்பு ஜெயலலிதாவுக்கு காத்து இருக்கும்.

ops

ஸ்ரீவாரி மண்டபம் அருகே… ஒரு கிலோ மீட்ட தூரத்தில் இருந்தே பேண்டு வாத்தியங்கள், சென்டை மேளம் முழங்க வரவேற்பார்கள். குதிரை மீது அமர்ந்த வீரர்களின் வரவேற்பு, பொய்க்கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் எல்லாம் அல்லோலப்படும். ஸ்பெஷல் மேடை அமைத்து ஜெயலலிதா – எம்.ஜி.ஆர் பாடல்கள் ஒலிபரப்ப டான்ஸ் தூள் கிளப்புவார்கள். சில இடங்களில் ஸ்பீக்கர் செட் கட்டி பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருப்பார்கள். மண்டபத்தின் நுழைவாயில் அருகே மகளிர் அணியினர் முளைப்பாரி, பால்குடம் எடுத்து ஜெயலலிதாவுக்கு கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பார்கள். கூட்டம் நடக்கும் மண்டப வாசல் அருகே நின்று மூத்த நிர்வாகிகள், பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை பவ்யமாக வரவேற்பார்கள்.

அதன் பிறகு, பொதுக்குழு கூடும். ஜெயலலிதாவுக்கு, தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று அடிக்கும் விசில் சத்தங்களும் கைதட்டல்களும் காதை பிளக்கும். நடுநாயகமாக ஜெயலலிதாவுக்கு இருக்கை போடப்பட்டு இருக்கும். அதற்கு இரு பக்கமும் இரண்டு அடி தூரம் விட்டுத்தான் மற்றவர்கள் உட்காரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு இருக்கும். தனது சேரில் ஜெயலலிதா உட்கார்ந்தவுடன்… மகளிர் அணியினர் ஜெயலலிதாவுக்கு ஆளுயர மாலை அணிவிப்பார்கள். அதன் பிறகு பொதுக்குழு நடவடிக்கைகள் தொடங்கும். ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான நூர்ஜகான், தனது வெண்கலக் குரலால் சிறுசிறு முன்னுரையுடன் நிகழ்ச்சிகளை நகர்த்திக் கொண்டிருப்பார். வரவேற்பு, தீர்மானங்கள், முக்கிய நிர்வாகிகள் சிலரின் பேச்சுகள், இறுதியாக ஜெயலலிதாவின் பேச்சோடு கூட்டம் முடியும். கடந்த ஆண்டு நிகழ்வுகளையும் அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் மேற்கோள் காட்டி ஜெயலலிதா பேசுவார். அது, ஜெயலலிதாவின் அரசியல் நகர்வுகளைத் தொண்டர்களுக்கு உணர்த்தும் வகையில் இருக்கும். ஜெயலலிதா தனது பேச்சை முடிக்கும்போது, ‘‘ஊருக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும்’’ என்று அறிவுரை சொல்லித்தான் தனது பேச்சை முடிப்பார். ‘‘சைவம், அசைவம் என்று இரண்டு பிரிவுகளிலும் உணவு தயாராக உள்ளது. அனைவரும் சாப்பிட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும்’’ என்றும் கேட்டுக் கொள்வார்.

jayalalithaa

பொதுக்குழுவில் பரிமாறப்படும் சைவை உணவுகளை ஒவ்வொன்றாகக் கேட்டுச் சாப்பிட்டுவிட்டுத்தான் ஜெயலலிதா வீட்டுக்குப் புறப்படுவார். காரில் ஜெயலலிதா உட்கார்ந்த பிறகு, அங்கு விருப்பப்படும் தொண்டர்களிடமும் கட்சி நிர்வாகிகளிடமும் பூங்கொத்துகளைப் பெற்றுக் கொள்வார். இப்படித்தான் கலகலப்பாக முழு உற்சாகத்துடன் பொதுக்குழு நடந்து முடியும். ஆனால், கடந்த டிசம்பர் 29-ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் அழுது வடிந்தது. போயஸ் தோட்டத்தில் இருந்து வானகரம் ஸ்ரீவாரி மண்டபம் வரை கொடி தோரணங்கள் இல்லாமல்… சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பொதுக்குழு நடப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஜெயலலிதாவைக் பார்ப்பதற்காக காத்து நின்ற தொண்டர்கள் யாரையும் இந்தப் பொதுக்குழுவில் சாலை ஓரங்களில் பார்க்க முடியவில்லை.

‘பொதுக் குழுவுக்கு வாருங்கள்’ என்று கட்சியினருக்கு அனுப்பப்படும் அழைப்பிதழ்கள்கூட இந்த முறை தபால் இலாகா மூலம் அனுப்பாமல் பொதுக்குழு உறுப்பினர்களைச் சென்னைக்கு வரவழைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலம் கொடுத்தார்கள். அழைப்பிதழ்களைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் ஒப்புதல் கடிதமும் பெறப்பட்டது. மார்கழிப் பனியையும் கண்டுகொள்ளாமல் காலை 7 மணிக்குள் மண்டபத்துக்குள் ஆஜராகிவிட்டார்கள் கழக நிர்வாகிகள். அமைச்சர்கள் அனைவரும் 8 மணிக்கு ஏசி பஸ்களில் அழைத்து வரப்பட்டார்கள். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 9 மணிக்கு கடைசி ஆளாக பொதுக்குழுவுக்கு வந்தார். போயஸ் கார்டனில் இருந்து டவேரா காரில்… ஜெயலலிதாவின் பிரத்யேக சேர், அவரின் அதிகாரபூர்வ போட்டோ ஆகியவை எடுத்து வரப்பட்டு பொதுக்குழு மேடையின் நடுநாயகமாக வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டது.

ஜெயலலிதா முன்னிலையில் பொதுக்குழு நடக்கும்போது இரண்டு வரிசைகள் அளவுக்குத்தான் சேர்கள் போடப்பட்டு நிர்வாகிகள் அமரவைக்கப்படுவார்கள். ஆனால், இந்தத் தடவை ஐந்து வரிசைகளில் 45 நிர்வாகிகள் மேடையில் உட்கார வைக்கப்பட்டனர். ஜெயலலிதா மரணத்தையடுத்து அமைச்சராக பதவி ஏற்றபோது கண்ணீர் சிந்தாத ஓ.பன்னீர்செல்வம் கண்ணீரோடுதான் பொதுக்குழுவில் தனது பேச்சைத் தொடங்கினார். அதே பாணியில்தான் தீர்மானங்களை வாசித்த ஒவ்வொரு நிர்வாகியும் கண்ணீர் வடித்தனர். 14 தீர்மானங்களையும் வாசித்து முடித்தபோது பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்கள் மத்தியில் அமைதியே குடிகொண்டிருந்தது. பொதுக் குழு தீர்மானங்களை நிறைவேற்றச் சம்பிரதாயங்கள் முடிந்தவுடன்… ஓ.பன்னீர்செல்வம், தம்பிதுரை ஆகியோர் அந்தத் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு போயஸ் தோட்டத்துக்குப் பறந்தனர். சசிகலாவைச் சந்தித்து, பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட தகவலையும், தீர்மானங்களையும் கொடுத்தபோது… சசிகலாவும் ஜெயலலிதாவாகவே மாறி இருந்தார். அவரது உடையில், திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. டி.டி.வி.தினகரன், இளவரசி மகன் விவேக் என்று மன்னார்குடி சொந்தங்கள் புடைசூழ ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி பொதுச்செயலாளர் நியமனப் பதவியை 11.30 மணிக்கு நல்ல நேரத்தில் ஏற்றுக் கொண்டார்.

sasikala

சசிகலாவைச் சந்திக்க சென்ற ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் பொதுக்குழு கூட்டத்துக்கு வரவே இல்லை. அங்கிருந்தபடியே கூட்டத்தை முடிக்கச் சொன்னார். ‘‘சசிகலா, பொதுக் குழு தீர்மானத்தின்படி பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்’’ என்று திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்க, பொதுக் குழு முடிந்தது. மதிய சாப்பாடு தயார் நிலையில் இருந்தாலும்… அந்த உணவு அரங்கம் காலியாகவே கிடந்தது.
-vikatan

Leave a Reply