ஜெயலலிதா தோழி சசிகலா. சசிகலா தோழி யார் தெரியுமா?

வாழ்ந்த வரை எவ்வளவு மர்மங்களோடு ஜெயலலிதா இருந்தாரோ அதில் துளி கூட குறைவில்லாமல் தன்னைப் பற்றிய எந்த விஷயங்களும் வெளிவராமல் பாதுகாத்து வந்திருக்கிறார் சசிகலா. சிறிய உதாரணம் அவரின் குரலை கேட்க இன்று தமிழகமே காத்திருக்கிறது. சசிகலாவை ஜெயலலிதாவின் தோழியாக மட்டுமே பார்த்துப் பழகிய மக்களுக்கு அவரை ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக ஏற்று கொள்ளும் மன நிலைக்கு வரவில்லை எனலாம்.

அதற்கு முன்பு அவரைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எல்லோருக்குமே உள்ளது. கணவரைப் பிரிந்து, குழந்தை இல்லாமல், தன் வாழ்நாளில் வெளிநாடுகளுக்கு கூட செல்லாமல் ஜெயலலிதாவுக்காக ‘தியாக வாழ்கை’ வாழ்ந்தவர் என முன்னிறுத்துகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

சசிகலாவை பற்றி இதுவரை தெரியாத விஷயங்கள்.

உடையும் நிறமும்

கிராமத்து நடுத்தர பெண்ணின் ரசனையிலேயே சசிகலாவின் உடை தேர்வுகள் இருந்துள்ளன என்பது அவரை நன்றாக கவனித்து வந்தவர்களுக்கு தெரியும். அவரின் உடை நிறங்கள் எல்லாமே ‘டல்’ கலரில் தான் இருக்கும். மர கலரிலும், தேன் கலரிலுமான புடவைகளை மட்டுமே விரும்பி அணிவாரம். இது குறித்து ஜெயலலிதா கூட பல முறை கூறியும் அந்த நிறங்களில் மேல் அவருக்கு அப்படி ஒரு பிரியம். இதற்காக சவுகார்பேட்டையில் உள்ள துணிக் கடையில் மொத்தமாக ஆர்டர் செய்து சேலைகள் வரவழைக்கப்படுமாம். ஜெயா டிவி, சசிகலா கட்டுப்பாட்டில் வந்த பிறகு ஜெயலலிதா அறிக்கைகளைக் காட்டும் கிராபிக்ஸ் கார்டுகள் கூட ‘டல்’ கலரிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டார் சசிகலா. ‘பொது இடங்களில் தனியாக தெரியக் கூடாது என்று தனக்குத் தானே போட்டு கொண்ட வைராக்கியத்தின் அடையாளம் தான், நான் இது போன்ற உடைகளை தேர்வு செய்யக் காரணம்’ என்று சசிகலாவே பலமுறை தனது உறவினர்களிடம் கூறியுள்ளாராம்.

‘ஆக்ரோஷ சாமிகள்’

ஜெயலலிதாவை விடவும் தெய்வ பக்தி அதிகம் கொண்டவர் சசிகலா. வைணவ கடவுள்களை அதிகமாக வழிபடும் ஜெயலலிதாவில் இருந்து சசிகலாவின் வழிபட்டு முறை முற்றிலும் மாறுபட்டது. பெண் தெய்வங்களான காளி, துர்க்கை வழிபாடுகளில் அதிக விருப்பம் கொண்டவர் சசிகலா. ஆரம்ப காலங்களில் கல்கி, சாய்பாபா பக்தராகவும் இருந்துள்ளார். பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சசிகலா குரல்!?

திராவிட இயக்கங்களில் பேச்சும், குரலுமே ஒருவருக்கு முக்கிய தகுதியாக பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவருக்கு குரல் மிகவும் முக்கியம். அரசியலில் ஒருவரின் ஆளுமையை நிறுவிப்பதில் குரலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அண்ணாவின் குரலும், கருணாநிதி குரலும் தனித்தன்மை உடையது, எம்.ஜி.ஆருக்கு தொண்டையில் குண்டடிபட்டபிறகு அவர் குரல் மாற, அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியை எதிர்கொண்டாலும், அதுவும் அவரது ‘சிக்னேச்சர்’ ஆனது. ஜெயலலிதாவின் கணீர் குரல் எல்லோரையும் கட்டிப் போட்டது, அதன்படி இன்றைக்கு தமிழகமே எதிர்பார்ப்பது சசிகலாவின் குரலைத்தான். எப்படி இருக்கும் அவரின் குரல்!? தஞ்சாவூரில் ஒரு கிராமத்து நடுத்தர குடும்பத்து பெண்ணின் பேச்சு மொழியாக இருக்கும். கொஞ்சம் கட்டை குரலாகவும் இருக்கும் என்கின்றனர். ஆனால் அவர் கார்டனில் இருந்தால் பயத்துடனே பணியாளர்களும் கட்சி நிர்வாகிகளும் இருப்பார்கள். தவறு செய்பவர்களை அவர் திட்டும்போது எதிரே நிற்பவர் நிலை குலைந்து விடுவாராம். குரல் எப்படி இருந்தாலும் அது ஒலிக்குமிடம் அதிகாரமிக்கதாக இருப்பதால் அதற்கு வலிமை அதிகமாகத் தானே இருக்கும்.

உறவும் தோழியும்

சசிகலாவுக்கு ஜெயலலிதாவைத் தவிர தனியாக தோழிகள் என்று யாரும் கிடையாது. குடும்ப உறவுகளில் இளவரசியிடம் நட்புடன் இருப்பது போல் தெரிந்தாலும் அவரை விட சசிகலா மிகவும் நேசித்தது நடராஜனின் தங்கை மாலாவைத் தான். திருமணம் ஆகி அவர் வீட்டுக்கு வரும் போது மாலா சின்னப் பெண்ணாக இருந்ததால் அப்போது அவருக்குத் தோழி, உறவு எல்லாமே மாலா தான். பின்னர் அவருக்கு திருமணம் முடித்து சென்னை வந்த பிறகும் இருவரும் நெருங்கிய நட்புடன் தான் இருந்துள்ளனர். அரசு அலுவலகம்
ஒன்றில் நூலகராக உள்ளார் மாலா. ஜெயலலிதா போயஸ் தோட்டத்தை விட்டு சசிகலாவை வெளியேற்றிய போது அவர் முதலில் சென்றது தி.நகரில் உள்ள மாலா வீட்டுக்குத் தான். இப்போதும் கஷ்டமான நேரங்களில் மாலாவிடம் பேசுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார் சசிகலா.

கண்டிப்பும் சிக்கனமும்

இரும்புக் கோட்டை, ராணுவக் கட்டுப்பாடு என்றெல்லாம் அதிமுக வர்ணிக்கப்பட ஜெயலலிதா காரணம் எனக் கூறப்பட்டாலும். அதன் பின்னணியில் இருந்தவர் சசிகலாதான் என்று இப்போது கூறிக்கொண்டிருக்கின்றனர் கட்சியினர். கட்சியினர் கொண்டு வரும் பிரச்னைகளை எல்லாம் ஜெயலலிதாவிடம் கூற முடியாது. முழுவதுமாக கேட்பவர் சசிகலாதான். தீர்ப்பு மட்டுமே ஜெயலலிதா வசம். வெறும் வார்த்தைகளில் இருக்கும் கண்டிப்பை வேறு வகையில் மாற்றுவதும் சசிகலாவின் கோபத்தை பொறுத்ததுதான்.

தனக்கு எதிரானவர்களை, ஜெயலலிதா கூட மன்னித்து விடுவார். ஆனால் சசிகலாவைப் பொறுத்தவரை அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்கிறார்கள். நமது எம்.ஜி.ஆர், ஜெயா டிவி, அதிமுக தலைமை அலுவலகம், போயஸ் கார்டன் போன்றவற்றில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கையை குறைத்ததுடன் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர்களை வேலையை விட்டும் நிறுத்தி சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டதிலும் சசிகலாவின் பங்கு உண்டு. ஜெயலலிதாவிடம் இருந்த தாராளத்தை சசிகலாவிடம் எதிர்பார்க்க முடியாது என்கிறார்கள்.

Leave a Reply