ஜீவகாருண்யம்

​அடுப்பறையில் உருட்டிக் கொண்டிருக்கும் எலியை விஷம் வைத்து கொன்று விடுகிறோம்.

கழிவறை முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் கரப்பான் பூச்சிக்கென்று தனியாக விற்கும் ஸ்பிரே வாங்கி அவற்றைக் கொன்று விடுகிறோம்.

ஈக்களினால் பெரும் தொந்தரவு என்று அவற்றையும் விஷம் வைத்து கொல்கிறோம்.

சர்க்கரை டப்பாவை நோக்கி சாரை சாரையாக படையெடுத்து செல்லும் எறும்புகளுக்கு வீட்டு மூலைகள் எங்கும் விஷப்பொடி தூவி அனைத்து எறும்புகளையும் கொன்று விடுகிறோம்.

கடித்து உறிஞ்சிக் குடிப்பது அதன் பிறவி இயல்பு என்கிற ஞானம் கூட இல்லாமல், கொசுவைக் கொல்ல எவ்வளவு செலவு செய்து அவற்றை கொலை செய்கிறோம்.

ஆனால் நம்மை இம்சை செய்யும் நம் குழந்தைகளை தூக்கி வைத்து கொஞ்சுகிறோம்.

எப்பொழுது மனிதன் மனிதனை மட்டும் செய்வது தான் கொலை என்கிற தப்பான எண்ணத்தில் இருந்து மீண்டு எந்த ஓர் உயிரையும் மாய்த்தால் அது கொலை தான் என்கிற ஞானம் பெறுகிறானோ, அப்போது தான் “ஞானம்” பெறுதல் என்கிற ஓர் உயர் நிலைக்கு உண்மையிலேயே செல்கிறான்.

தனக்கு மட்டும் வீடு.

தனக்கு மட்டும் ஏ சி அறை.

தனக்கு மட்டும் உணவு.
 தன்னுடைய வீட்டில் வேறு எந்த உயிரும் வாழக்கூடாது.

தன்னுடைய உணவை வேறு எந்த புழுக்களும் உண்ண கூடாது.

.

என்கிற மனோபாவம் இந்த கலியுகத்தில் மட்டுமே உண்டு

“இதை வாசிக்கும் போது நக்கலாகவும் கேலியாகவும் உங்கள் மனதில் தோன்றினாலே அது நிரூபணம், கலியுகம் தான் என்று”…

மற்ற உயிர்களைக் கொல்ல கூடாது என்கிற ஞானம் லட்சத்தில் ஒரு மனிதர்க்கு தான் தோன்றும். 

அப்படியே தோன்றினாலும் அதைக் கடை பிடிக்க மிகவும் கடினமாக இருக்கும்.
அன்பர்களே…!

நான் இதை மிகவும் எளிமைப் படுத்தி சொல்லிக் கொண்டிருக்கிறேன். 

“அஷ்டாங்க” யோகத்தில், முதல் யோகம் – “யமம்”… அதில் 5 விஷயங்கள் செய்யக் கூடாது என்று சொல்லப் படுகிறது. அதில் ஒன்று தான் நான் மேற்கூறிய “ஜீவகாருண்யம்” என்கிற உயிர் கொலை செய்யாமை.

இதைப் படித்துக் கொண்டிருக்கும் 100 நண்பர்களில் ஒருவருடைய மூளையில் ஒரு சின்ன பொறி தோன்றினாலே, இந்த பதிவு முழுமை அடைந்த திருப்தி எனக்கு வந்து சேரும். நன்றி

Leave a Reply