ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்த மூன்று வழிகளில்தான் நடத்த முடியும்

ஜல்லிக்கட்டு விளையாட்டை இந்த மூன்று வழிகளில்தான் நடத்த முடியும்’ என்று சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். ஜல்லிக்கட்டுக்கான ஆதரவு குரல் தமிழகம் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் கேட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெரினா, கோவை, மதுரை, நெல்லை போன்ற ஊர்களில் மாணவர்களும், பொது மக்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தொடர்ந்து போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு ஆதரவுக்காக நடந்து வரும் போராட்டங்களை வரவேற்றாலும் சட்ட ரீதியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மூன்று வழிகள் மட்டுமே இருக்கின்றன என்கிறார் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா. அவர் சொல்லும் ஆலோசனைகளை தமிழக அரசு கடைப்பிடித்தால் ஜல்லிக்கட்டுக்கு எளிதில் அனுமதி பெற்று விட வாய்ப்பு உள்ளது.

1. சுப்ரீம் கோர்ட்டில் 28.9.2015ல் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வழிவகை உள்ளது. பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடுகளை வெட்டத் தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் பி.சி.டி.ஏ. என்ற சட்டப்பிரிவு  28ன்கீழ் மத ரீதியான செயல்களில் எங்களால் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டும் மதம் சம்பந்தமானது என்ற விவாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் வைத்தால் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கலாம். பி.சி.டி.ஏ என்ற அட்டவணையில்தான் காளைகள் காட்சி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதில் மதரீதியான சம்பந்தப்பட்ட விலங்குகளுக்கு விலக்கு அளிக்கலாம் என்றும் அதில் சொல்லப்பட்டுள்ளது.

2. நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் அதை அமல்படுத்துவது நீதிமன்றங்களே. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் நாடாளுமன்றம், நீதித்துறை ஆகியவற்றைத் தாண்டி மறைமுகமாக செயல்படுத்தும் அதிகாரம் நம்முடைய குடியரசுத் தலைவரின் கையில் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 72, 74 (1) ஆகியவற்றின் கீழ் இந்திய ஜனாதிபதிக்கு மறைமுகமாக செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு அனுமதியை ஜனாதிபதி வழங்க முடியும்.

3. ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்தால் அதையும் சுப்ரீம் கோர்ட் செல்லாது என்று அறிவிக்க வாய்ப்புள்ளது. நம்முடைய இந்திய அரசியலமைப்பு சட்டம் 1950, அட்டவணை 9ல் வழிவகை உள்ளது. அதாவது, இந்திய குடிமக்களுக்கு பகுதி 3ல் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறாதவரையிலும் அரசியலமைப்பு சட்ட அடிப்படை கட்டமைப்பை மீறாதவரையிலும் அந்த சட்டத்தை கேள்வி கேட்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட்டுக்கு இல்லை.

நில சீர்திருத்த சட்டத்துக்காக 1951ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய அரசியலமைப்பு சட்டம் 31 (ஏ)ன் கீழ் 31 (பி) என்ற சட்டபிரிவை உட்புகுத்தினார். அந்த சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வழிவகை உள்ளது. இந்த வகையில்தான் பல வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகள் கிடைத்துள்ளன. இதற்கு சான்றாக ஐ.ஆர்.கோயல்ஹோ தீர்ப்பு உள்ளது.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால், நரேந்திர மோடியோ, ”இந்த விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது” என்று கைவிரித்து விட்டார். இந்த சமயத்தில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை ஜெனிதாவிடம் முன்வைத்தோம். அதற்கு அவர், “மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜராக மூத்த வழக்கறிஞர் பாலிநரிமன் நியமிக்கப்பட்டார். அதுபோல ஜல்லிக்கட்டு வழக்குகளிலும் சிறப்பு வழக்கறிஞர்களை ஆஜராக வைக்க வேண்டும்”.  

தற்போது நடந்து வரும் மாணவர்களின் போராட்டம் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரானதா?

இந்த போராட்டத்தை நடத்த சட்டத்தில் வழிவகை உள்ளது. இந்த அறப்போராட்டத்தில் ஈடுபடுவோர்கள் அறவழியிலேயே தங்களது போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டும். மேலும் இந்த அறப்போராட்டத்தை கூட்டு பேரமாகவும் உரிமையியல் கீழ்படியாமை போராட்டமாகத்தான் பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு இன்டஸ்டிரியல் டிஸ்பியூட் சட்டத்தில் போராட்டம் செய்ய உரிமை உள்ளது. எனவே ஜல்லிக்கட்டு ஆதரவான போராட்டம் அறவழி போராட்டம், கூட்டு பேர போராட்டமே. சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிரானது அல்ல. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளில் உள்ள சட்டத்தையும், உண்மைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்முடைய அரசியலைப்பு சட்டத்தில் பிரிவு  19ன் கீழ் பேச்சுரிமை  என்ற அடிப்படை மனித உரிமை உள்ளது. எனவே இந்த போராட்டத்தை நீதிமன்றத்துக்கு எதிரான போராட்டமாக பார்க்க முடியாது. காவல்துறையும் இதுவரை அசம்பாவிதங்கள் நிகழாமல் அமைதியான வழியில் போராட்டத்தை கொண்டு செல்கின்றனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply