சேவற்கொடியோன்

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மீது நரபலி புகார் கூறிய சேவற்கொடியோன்.

தோண்டியெடுக்கப்பட்ட 4 சடலங்களில், நான் சொன்ன இரு நபர்களின் சடலங்கள் சிக்கிவிட்டதாக நரபலி புகார் கூறிய சேவற்கொடியோன் தெரிவித்தார்.

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சட்ட ஆணையர் சகாயத் திடம், நரபலி புகாரை கூறியிருந் தார். இவரது புகாரின் அடிப்படை யில்தான் நேற்று சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் அவர் ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி.

எந்த அடிப்படையில் நரபலி புகாரை கொடுத்துள்ளீர்கள்?

பி.ஆர்.பி. நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தபோது, பெரிய பொறுப்புகளில் இருந்த அனுமந்தன், அய்யப்பன், பழனி, ஜோதிபாசு போன்றவர்கள் சம்பந்தமில்லாமல் சாலையோரத்தில் சுற்றித் திரியும் மனநோயாளிகளை என்னுடைய வாகனத்தில் ஏற்றுவார்கள். போகிற வழியில் 100 ரூபாய் கொடுத்து சாப்பாடு வாங்கி வரச் சொல்வார்கள். நானும் வாங்கிக் கொடுப்பேன். கடைசியில் அவர்களை கீழவளவு கிராமத்தில் வீரகாளியம்மன் கோயில் பின்புறமுள்ள பிஆர்பி முதலாளி பழனிச்சாமியின் அலுவலகத்தில் இறங்கிவிடுவேன். அலுவலகத்தின் பாதாள அறைக்குள் சென்ற மனநோயாளிகளில் பலரை நான் திரும்ப பார்த்ததில்லை.

ஒருமுறை மனநோயாளிகளை இறக்கிவிட்டதும், பழனிச்சாமியின் ஓட்டுநர் முத்து என்னிடம் 5 ரூபாய் கொடுத்து பூ வாங்கி வரச் சொன்னார். அவரிடம் மனநோயாளிகளை எதற்கு பிடித்து வருகிறார்கள் என்று கேட்டேன். இவர்களை எல்லாம் நம்ம முதலாளி குணப்படுத்தி அனுப்புகிறார் என்று கூறினார்.

நரபலி நடந்ததை நீங்கள் பார்த்தீர்களா?

கடந்த 2005-ம் ஆண்டு இ.மலம்பட்டி ஆற்று குவாரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றவதற்காக ஆயில் மோட்டாரை நானும், அய்யப்பனும் ஜீப்பில் கொண்டு சென்றோம். ஆற்றின் நடுவே ஒடுக்கமான பாதையில் சென்றபோது, எதிரே திறந்த ஜீப் ஒன்று வந்தது. நான் சில நாட்களுக்கு முன் ஏற்றி அனுப்பிய 2 மனநோயாளி கள் அந்த ஜீப்பில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடல மாகக் கிடந்தார்கள். அதை நான் கவனிப்பதை கண்ட அய்யப்பன் என்னை கன்னத்தில் அறைந்தார். பனை மரம் அருகே ஜே.சி.பி. யால் குழி தோண்டி, அந்த இரு சடலங்களையும் புதைத்ததை பார்த்தேன். அந்த இடத்தைத்தான் இப்போது அடையாளம் காட்டினேன்.

இப்போது தோண்டியெடுக்கப் பட்ட சடலங்கள் அவர்களுடையது தானா?

முதலில் எடுக்கப்பட்ட சடலம் நான் அழைத்து வந்தவரைப் போல இல்லை. அடுத்து கிடைத்த இரு சடலங்களும் அதில் கிடைத்த துணிகளை வைத்து பார்க்கும்போது நான் அழைத்து வந்தவர்களாக இருக்கும் என்று நம்புகிறேன். காரணம், அவை இரண்டும் அவசர அவசரமாக ஒரே குழிக்குள் புதைக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நான் ஓட்டிய ஜீப்பில் ஒரு பெண் உட்பட 12 மனநோயாளிகள் அழைத்து வரப்பட்டனர். அதில் இருவர் புதைக்கப்பட்ட இடம் மட்டுமே எனக்குத் தெரியும் என்பதால், சகாயத்திடம் புகார் செய்தேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-Thanks – http://tamil.thehindu.com/

Leave a Reply