சென்னையில் சொந்த வீடு இல்லையா?

சென்னையை பொறுத்தவரை எந்த செய்தித்தாளை பார்த்தாலும் உங்களுக்கு சொந்த வீடு இல்லையா?, சொந்த வீடு வாங்கி ராஜாவாக இருங்கள்..இன்று வீடு புக் செய்தால் 10 லட்ச ரூபாய் தள்ளுபடி போன்ற விளம்பரங்களை பார்க்க முடிகிறது. இது ஒரு புறம் இருக்க அலுவலகங்களில் வேலை பார்க்கும் பலர் கொடுக்கும் அட்வைஸ் இருக்கே அப்பப்பா.. சொந்த ஊரில 2 வீடு இருந்தாலும் சென்னையில் ஒரு வீட்ட வாங்கி போட்டுருங்க.. அதான் இப்ப ஹவுஸ் லோன் நிறைய தர்றாங்களே? வாடகை குடுக்கிற மாதிரி நினைச்சி 25 வருஷம் கட்டுங்க. அப்புறம் அந்த வீடு நமக்கு தான்..

ஓலை குடிசையா இருந்தாலும் நம்ம குடிசைனா அது தனி மரியாதை தானே.. பாவம்.. இதில் அகப்பட்டு கொண்டு பலர் படும் பாடு இருக்கிறதே..

சென்னையில் நண்பர் ஒருவர் மாதம் 30000 ரூபாய் சம்பாதிக்கிறார்.வீட்டு வாடகை 9000 கொடுக்கிறார். இங்கிருந்து தொடங்கியது அட்வைஸ்.9000 வாடகை தர்றீங்க அப்படியே ஒரு 5000 மட்டும் சேர்த்து 14000 லோன் கட்டிடுங்க வாடகை மிச்சமாகுதுல்ல என்று ஆசைகாட்ட 30 லட்சத்தில் 700 சதுர அடியில் புற நகரில் ஒரு வீட்டை வாங்கிவிட்டார். இதுவரை அலுவலகத்தில் இருந்து சற்று பக்கத்திலோ அல்லது கொஞ்சம் தூரத்தில் இருந்தோ வந்து கொண்டிருந்தவர் புது வீட்டில் இருந்து வெகு தூரத்தில் உள்ள அலுவலகத்திற்கு வர காலை 6 மணிக்கே கிளம்ப வேண்டும்.

அவருடைய மனைவி காலை 4.30 மணிக்கு எழுந்து காலை சமையல் செய்தால் தான் இவர் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியும். குழந்தைகள் எழுவதற்கு முன்பே கிளம்பி விடுவார்.குழந்தைகள் இவரை பார்க்க முடியாது. இரவு அலுவலகம் முடிந்ததும் வீட்டிற்கு வர 10 மணி ஆகிவிடும். சென்னை டிராபிக் தான் ஊர் அறிந்த விஷயமாயிற்றே..

இவர் அலுவலகத்தில் மாதம் 1 நாள் தான் விடுமுறை.ஏதாவது விசேஷத்திற்கு லீவ் எடுக்கலாம் என்றால் சம்பளத்தில் பிடித்தம் செய்வார்கள். சினிமாவிற்கு செல்வதை கூட குறைத்துக் கொண்டார். வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்தோடு எங்காவது டூர் சென்றவர் இப்போது செலவு அதிகம் ஆகும் என்று அதுவும் இல்லை. இதனால் மனைவிக்கு இவர் மேலே கோபம். இவ்வளவு சம்பாதித்து என்ன புண்ணியம் என்று திட்டிக் கொண்டிருக்கிறாராம். மனதிற்கு பிடித்த ஒரு காஸ்டிலி சர்ட் வாங்க முடிவதில்லை, காரணம் பட்ஜெட் இடிக்கும். குழந்தைகளோடு நேரம் செலவிட முடிவதில்லை, மனைவியோடு மனது விட்டு பேச முடிவதில்லை என்கிறார்.

இப்போது சொந்தவீடு இருக்கிறது. ஆனால் சந்தோஷம் தான் இல்லை. வாடகை வீட்டில் இருந்த போது சீக்கிரமே வந்து விடுவேன். இப்போது பயணத்திற்கே அதிக நேரம் பிடிக்கிறது. லோன் கட்டுவதால் எதையும் கொஞ்சம் தாராளமாக செலவு செய்யமுடிவதில்லை என்று இப்போது புலம்பி கொண்டிருக்கிறார். இப்போது என்ன செய்ய? ..

ஒரு வேளை இன்னும் 10 வருடங்களில் இவர் அதிகம் சம்பாதிக்கலாம். ஆனால் இப்போது இருக்கும் காலம்,வயது,குழந்தைகள் எல்லாம் அப்படியே இருக்குமா என்ன? மனைவியின் அன்பான மதிய உணவு, குழந்தைளை யூனிபார்ம் போட்டு பள்ளிக்கு அனுப்பும் நேரம், குடும்பத்துடன் கோவிலுக்கு செல்லும் நேரம், இரவு உணவை குடும்பத்தோடு சாப்பிடுவது , குழந்தைகளின் சேட்டை பேச்சுக்கள், உறவினர்களின் முக்கிய விழாக்கள் இது போன்று இன்னும் அதிக மகிழ்ச்சியான தருணங்களை இவர் இழந்திருக்கலாம்.சொந்த வீட்டை வாங்கி விட்டோம் என்ற ஒற்றை வரிக்காகவே இவர் வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டதாக நினைக்க தோன்றுகிறது.

எதையுமே அந்தந்த காலத்தில் வாழ்ந்து பார்த்து விட வேண்டும். அது தான் வாழ்கையின் உண்மையான சந்தோஷம்.

Leave a Reply