சி.இ.ஓ ஆக 3 வழிகள்!

1980க்கு பின் பிறந்தவர்களை மில்லினியல் என்று கூறுவார்கள். 30 வயதுக்குள் இருக்கும் மில்லினியல் ஒருவர்,  “நான் புதுசா ஒரு கம்பெனி தொடங்கி, அதோட தலைமை நிர்வாகி ஆகப்போறேன்!”னு சொன்னா, “தம்பி இருக்குறத விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்படாதீங்க… ஒழுங்க ஏதாவது ஒரு கம்பெனில போய் வேலையப் பாருங்க…!” அப்படின்னு உங்களோட நெருங்கிய நலம் விரும்பி யாரேனும் சொல்ல வாய்ப்பிருக்கு. ஆனால் உலகில் எல்லாமும் சாத்தியப்படக்கூடிய இந்த 21ம் நூற்றாண்டில், ஒருவர் 30 வயதில் தலைமை நிர்வாக அதிகாரி ஆகவும் எளிய வழியிருக்கிறது.

இணையமும், தொழில் நுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்ட இன்றைய சூழலில், புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதை நிர்வகிப்பது என்பது மிகவும் எளிது. குறைந்தபட்ச தேவை என்பது நல்ல தலைமை பண்பு மட்டுமே. நல்ல தலைமை பண்பு என்பது, நீண்ட கால வாழ்கை அனுபவத்தின் மூலம் சாத்தியமடையும்.  ஆனால் 25-30 வயதிலேயே நல்ல தலைமை பண்பை பெறுவதற்கு பின்வரும் மூன்று வழிகளை பின்பற்றினாலே போதும்…

1)உங்களுக்கென்று ஓர் அணியை உருவாக்குங்கள் :-

ஒன்றை ‘செய்!’ என சொல்பவனைவிட,  “வா சேர்ந்து செய்யலாம்..!” என சொல்பவனே சிறந்த தலைவன். நீங்கள் ஒரு சிறந்த தலைவன் ஆகவேண்டும் என்றால், உங்களுக்கென்று ஒரு அணியை உருவாக்குங்கள்… நீங்கள் எழும் சமயத்தில் தூக்கிப்பிடிப்பதற்கும், விழும் சமயத்தில் தாங்கிப்பிடிப்பதற்கும் ஏற்ற வகையில்.

தலைமை நிர்வாகியாக இருப்பவர் எல்லாத் துறையிலும் சிறந்து விளங்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவரை தன்னுடைய பணியாளராக வைத்துக் கொண்டாலே போதும். உங்களுக்கு போதுமான அனுபவம் இல்லையென்று கவலைப்படாதீர்கள்.  உங்கள் பேச்சைக் கேட்க கூடிய அனுபவசாலிகளை உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள். தேவையற்ற பண, நேர விரயம், தவறான கொள்கை முடிவுகள், திறமையற்ற பணியாளர்களை தேர்ந்தெடுப்பது போன்ற தவறுகளை செய்யாமல் இருப்பதற்கு சிறந்த அனுபவசாலிகளை அருகில் வைத்துக் கொள்வதுதான் உதவும்.

உதாரணத்திற்கு,  ஃபேஸ்புக்கின் தலைமை இயக்க அதிகாரியான (COO) ஷேரில் காரா சேண்ட்பர்க் என்ற பெண்,  சிறந்த  பொருளாதார நுணுக்கங்களை அறிந்தவர். தலைமை நிர்வாகியான மார்க் ஸூக்கர்பெர்க்கிற்கு தொழில்நுட்ப அறிவு இருந்தாலும், பொருளாதார அறிவு குறைவு என்பதால் பொருளாதாரம் குறித்த எல்லா முடிவுகளையும் ஷேரிலிடம் கேட்டே முடிவு செய்வாராம்.

அதே போல் 24 வயதில் கூகுள் நிறுவனத்தை தொடங்கும்போது லாரி பேஜ், சேர்ஜி பிரின்  இருவரும் எரிக் ஸ்கிமிட் என்ற 50 வயது அனுபவசாலியை தங்களது வழிகாட்டியாக வைத்துக் கொண்டனர். எனவே உங்களுக்கென்று ஓர் அணியை உருவாக்குங்கள். எல்லோரும் உங்களைபோல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை; மாறாக உங்களை முழுமை அடையச் செய்பவராக இருந்தாலே போதும்.

2) நல்லது-கெட்டது இரண்டையும் பயன்படுத்துதல் :-

சிறுவயதிலேயே நிறுவனம் தொடங்கப்போகும் எவருக்கும் பின்வரும் நன்மைகளும்,பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பிரச்னைகள் என பார்க்கும் நீங்கள், அந்தக் களத்திற்கு புதிது என்பதால், உங்களுக்கென்று சாதனை வரலாறோ,சோதனை வரலாறோ எதுவும் இருக்காது. எனவே உங்கள் மீது பிறர் வைக்கும் நம்பிக்கை மிகவும் குறைவாக இருக்கும். மேலும் பெரு முதலீட்டாளர்கள் பெரும்பாலும், உங்களது கடந்த கால செயல்திட்டங்களை கருத்தில் கொள்ளவே ஆர்வம் காட்டுவர். எனவே அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை புதிதாக நிறுவனம் தொடங்கும் நீங்கள், உங்களது புதுப்புது ஐடியா குறித்து நிறைய பேரிடம் பேச வேண்டியதிருக்கும், நிறைய விளக்கங்கள் கொடுக்க வேண்டியதிருக்கும். எனவே ஏற்கனவே கூறியது போல உங்களுடன் அனுபவசாலிகளை வைத்துக் கொண்டு, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தலாம் – அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரை.

இதில் இருக்கும் நன்மை என்னவெனில், உங்களுக்குத்தான் கடந்த கால அனுபவம் என்று எதுவுமே இல்லையே… எனவே நீங்கள் புதிதாக எதை வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம். முன்பு யாருக்கோ தோல்வியை தந்த ஒன்று. உங்களுக்கு இன்று வெற்றியை தரலாம். ஒரு வேளை உங்களுக்கு அனுபவம் இருந்தால், பலருக்கு தோல்வியை தந்த அந்த விசயத்தை முயற்சி செய்யாமலேயே விட வாய்ப்பிருக்கிறது. எனவே கடந்ததை கருத்தில் கொள்ளாமல் முயற்சி செய்வது கூட, சமயங்களில் பலன் அளிக்கும்.ஆகவே நல்லது, கெட்டது இரண்டையும் நமக்கு உற்றதாக பயன்படுத்துவதே சிறந்தது.

3) பணிவு

டவுன் டு எர்த் என்று அழைக்கப்படும் பணிவு  ஒரு தலைவனுக்கு மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய ஒரு குணம். Intellectual humility என்று அழைக்கப்படும் அறிவாற்றல் சார்ந்த பணிவு இருக்கும் பட்சத்தில், நம்மிடம் வேலை செய்யும் பணியாளர்களிடம் இருந்து நமக்கு தேவையானதை எளியைமாக பெற முடியும். இதன் மூலம் நம்முடைய களத்தில், நமக்கு தேவைப்படும் விசயங்களை தெரிந்துகொள்வது எளிதாகும்.

உங்களுக்கு ஒன்று தெரியாத சமயத்தில், தெரிந்தவர்களிடம் அது குறித்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு விஷயத்தில் 100% சதவிகத திறமை இல்லையெனில், உங்கள் பணியாளரில் யாருக்கு திறமை இருக்கிறதோ அவரை முன் நிறுத்துங்கள். முன் இருக்கையில் அமர்வது மட்டும் தலைமைப் பண்பு அல்ல, தேவைப்படும் சமயங்களில் பின் இருக்கையில் அமர்ந்து கை தட்டுவதும் கூட தலைமைப் பண்புதான். உங்களுடைய குறிக்கேள் வெற்றி மட்டுமே. எனவே உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத பணிவில் எந்தத் தவறும் இல்லை. எனவே பணிவு என்பதை எந்த விதத்திலும் குனிவாக நினைக்ககூடாது. தலைமை பண்பில் தலையாயப் பண்பு பணிவுதான்.

வழியை உருவாக்குபவன்,அந்த வழியில் பயணிப்பவன், அந்த வழியில் பயணிக்க வைப்பவன் எவனோ அவனே நல்லதொரு தலைவன்.

உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்…!

லோ.சியாம் சுந்தர்

 

-http://www.vikatan.com/

Leave a Reply