சதுப்புநிலங்கள்

பிப்ரவரி 2
நீரும் நிலமும் சேருகின்ற இடங்கள் அனைத்தும் சதுப்பு நிலங்களே. ஊருணி, குளம், குட்டை, ஏரி, கண்மாய், அணை, கழிமுகம், கடலோரம், கடற்கரை, முகத்துவாரம், சதுப்பளம், உப்பளம், காயல், சேறும் சகதியுமான ஈரலிப்பான நிலம் ஆகியவை அனைத்தும் சதுப்புநிலங்கள் அல்லது நீர்நிலைகள் என்று அழைக்கப்படுகின்றன.
பயன்கள்
சதுப்புநிலங்கள்தான் நமது குடிநீருக்கான ஊற்றுக்கண்ணாக, வெள்ளப் பெருக்கை தாங்கிக்கொள்ளும் இயற்கைச் சுனையாக, கடலரிப்பையும் புயலையும் தடுத்து ஆட்கொள்ளும் இடமாகவும் பல்லுயிரினங்களின் புகலிடமாகவும், மனதுக்கு மகிழ்ச்சி தரும் இடங்களாகவும் உள்ளன. ஆழிப் பேரலை, புயல், வெள்ளம் போன்றவற்றின் பாதிப்பை இவை குறைக்கின்றன
சதுப்புநில நாள் தோற்றம்
1971இல் காஸ்பியன் கடல் பகுதியில் ஈரான் நாட்டிலுள்ள ராம்சர் நகரத்தில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்புநிலங்கள், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து பேசினர். அந்தக் கூட்டம் ஃபிப்ரவரி 2ந் தேதி நிறைவடைந்தது. அந்த நாளே உலக சதுப்புநில நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட 161 நாடுகள் ராம்சர் அமைப்பில் உள்ளன. உலகில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்புநிலங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 25 இடங்கள் ராம்சர் தகுதி பெற்றுள்ளன. அதில் தமிழகத்தின் கோடிக்கரை, பழவேற்காடு அடங்கும்.
சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கள் (வேடந்தாங்கல்) வீட்டு மனைகளாகவும், குப்பை கொட்டும் இடமாகவும், தொழிற்சாலை கழிவுகளை கலக்கும் இடமாகவும், பேருந்து நிலையமாகவும், வணிக வளாகங்களாகவும் மாறுவதைத் தடுக்க வேண்டும்.
சதுப்புநிலங்களின் முழுமையான அழிவு, நாளைக்கு நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் ஆதாரத்தை முற்றிலும் சிதைத்துவிடும். இதனால் நாம் அனைவரும் தண்ணீருக்கு திண்டாடி, பஞ்சத்தில் வாட நேரிடும். நன்னீர் ஆதாரங்களை ஆக்கிரமிப்போர் மனதில் இந்தக் கருத்தை விதைக்க வேண்டும்.
ஏனென்றால், நீரின்றி அமையாது உலகு.

Leave a Reply