சசிக்காக போக்குவரத்து நிறுத்தம்

அ.தி.மு.க., பொதுச்செயலராக தேர்வு செய்யப் பட்டுள்ள சசிகலா, நேற்று, பல கார்கள் புடைசூழ சென்று தலைவர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, போக்குவரத் தும் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட சசிகலா, நேற்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து, ஜெ., நினைவிடத்திற்கு புறப்பட்டார்.

ஜெயலலிதா எப்படி செல்வாரோ, அதேபோல பல கார்கள் புடைசூழ சென்றார்.ஜெயலலிதாவுக்கு அளித்தது போலவே, சசிகலாவுக்கும் அவர் வரும் வழியெங்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலை, 5:15 மணிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம், ஜெ., நினைவிடத்திற்கு வந்தார். அங்கு ஏற்கனவே நின்றிருந்த லோக் சபா துணை சபாநாயகர், தம்பிதுரை மற்றும் அமைச்சர்களுடன் இணைந்து, சசிகலாவை வரவேற்பதற்காக காத்திருந்தார். மாலை, 5:25 மணிக்கு, சசிகலா காரில் வந்து இறங்கினார். அவரை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலைகுனிந்து வணங்கினர்.

ஜெ., நினைவிடத்திற்கு சென்ற அவர், மலர் வளையம் வைத்து, மலர் துாவி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். பொதுக்குழு தீர்மானத்தை, சமாதியில் வைத்து, மண்டியிட்டு வணங்கினார்.அதன்பின், எம்.ஜி.ஆர்.,

அண்ணாதுரை நினைவிடங்களுக்கும் சென்று, மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்திய பின், போயஸ் தோட்டம் திரும்பினார்.

பொதுமக்கள் கோபம்

ஜெயலலிதா நினைவிடத்திற்கு, சசிகலா வந்து செல்லும் வரை, சென்னை, கடற்கரை சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசாரையும், சசிகலாவையும் திட்டி தீர்த்தனர்.சசிகலா வருவதற்கு, அரை மணி நேரத்திற்கு முன், கடற்கரை சாலையில், போலீசார் வாகனங்களை தடுத்து நிறுத்தினர். பாரிமுனையில் இருந்துகாமராஜர் சாலை வழியாக, மயிலாப்பூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும், போர் நினைவு சின்னம் அருகே தடுக்கப்பட்டு, அண்ணா சாலை வழியாக, திருப்பி விடப்பட்டன.

அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக, கடற்கரை வரும் வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி விடப்பட்டன. இதனால், அண்ணா சாலை, பல்லவன் சாலை, ஜி.பி., சாலை, மேயர் கபாலமூர்த்தி சாலையில், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
சசிகலா, போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டதும், டி.டி.கே., சாலை, கடற்கரை சாலையில், ஒரு புறம் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால், கடற்கரை சாலைக்கு, எந்த வாகனங்களும் வர முடியாத நிலை ஏற்பட்டது.
போலீசார் மவுனம்
வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசாரிடம், ‘ஏன் போக்குவரத்தை நிறுத்துகிறீர்கள்’ என, பொதுமக்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர். பதில் அளிக்க முடியாமல், மவுனம் காத்தனர்.

Leave a Reply