சசிகலாவை அதிரவைத்த ஆன்லைன் சர்வே முடிவு 

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானதற்கும், முதல்வராகும் முடிவுக்கும் பொது மக்களிடையே கருத்துக் கணிப்பை சட்ட பஞ்சாயத்து இயக்கம் ஆன்லைன் மூலம் நடத்தியது. இதன் முடிவு சசிகலாவுக்கு பாதகமாகவே வந்துள்ளதாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செந்தில் ஆறுமுகம் கூறுகையில், “சசிகலா முதல்வராவதற்கும், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரானது தொடர்பாக கடந்த டிசம்பர் 28-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். அதன்படி ஆன்-லைன் மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்பவர்களிடம் அவர்களின் வயது, மாவட்டம் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே கேட்கப்பட்டன. அதை பூர்த்தி செய்து விட்டு கருத்துக்கணிப்பில் பங்கேற்கலாம்.

இதில் சசிகலா முதல்வராவது, பொதுச் செயலாளராவது குறித்து இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. 32 மாவட்டங்களிலிருந்து 3,090 பேர்  கருத்துக்கணிப்பில் பங்கேற்று வாக்களித்துள்ளனர். இதில் 2,916 பேர், சசிகலா பொதுச் செயலாளரானதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது 94 சதவிகிதம். ஆதரவாக 174 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். இது 6 சதவிகிதம். அதுபோல முதல்வராவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2,984 பேரும், ஆதரவாக 106 பேரும் வாக்களித்துள்ளனர். 97 சதவிகிதம் முதல்வராகுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை, கோவை, நெல்லை ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து அதிகம் பேர் வாக்களித்துள்ளனர். மேலும், நீலகிரி, பெரம்பலூர், தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் குறைவான வாக்குப்பதிவாகி உள்ளது. 20 வயது முதல் 40 வயது வரை 72 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்” என்றார்.

vikatan

Leave a Reply