சங்குப் பூ செடி

சங்குப் பூ செடிகளில் காய்ந்த காய்களிலிருந்து கருப்பு நிற விதைகளை சேகரித்துக் கொள்ளுங்கள்.
ஒரு காயில் நான்கு அல்லது ஐந்து விதைகள் இருக்கும். சுருக்கம் இல்லாத, பெரிதாக இருக்கும் விதைகள்தான் முளைக்கக் கூடியவை. சேகரித்த விதைகளை ஒரு நாள் வெயில் காயவைத்துக் கொள்ளுங்கள்.
மண் நிரப்பி தயாராக வைத்திருக்கும் தொட்டியில் ஈரப்பதத்தை ஏற்படுத்துங்கள். இதில் நான்கு விதைகளை 5 செ.மீ. இடைவெளியில் அருகருகே 2 அங்குல ஆழத்தில் ஊன்றுங்கள். நான்கு விதைகளில் இரண்டு செடிகள் முளைத்தால்கூட போதுமானது.
மண்ணின் ஈரப்பதமும் சத்துகளும் சரியான விகிதத்தில் இருக்கும்போது விதை 3 நாட்களில் முளைத்து விடும். ஒரு மாத காலத்தில் செடி, ஓரளவுக்கு கொடிவிட்டிருக்கும்.
இரண்டு மாதங்களில் வளர்ந்த செடி வெளிர், கரும் பச்சை நிறங்களில் இலைகள் கொடிகள் வளர்ந்து படர ஆரம்பித்ததும் இலை காம்புகளின் அடியில் மொட்டுகள் தோன்ற ஆரம்பிக்கும்.
மொட்டுக்கள் வளர்ந்து பூத்த சங்குப் பூ நீலநிறத்தில் வெண்மை படர்ந்து இருக்கும். மழை நேரத்தில் செடிகள் பளிச்சென, அங்காங்கே நீலநிறத்தில் பூத்து பார்க்க மனம் கொள்ளை கொள்ளும்.
போதுமான தண்ணீர், சூரிய ஒளி இருந்தாலே போதும் ஒரு வருடத்திற்கு இந்தச் செடிகள் பூத்து உங்கள் வீட்டை அழகாக்கும்.
ஒரு வருடத்திற்கு மேல் பூத்த செடிகள் காய்க்க ஆரம்பிக்கும், அந்த காய்களை விதைகளுக்காக சேகரித்து வைத்துக் கொள்ளலாம். அப்போது இலைகள் உதிரத் தொடங்கும். இந்த நேரத்தில் செடியைக் களைந்து விட்டு, தொட்டி மண்ணை மாற்றி மீண்டும் விதை போட்டு புதிய சங்குப் பூ செடியை வளர்க்க ஆரம்பிக்கலாம்.

Leave a Reply