கூரைத்தோட்டம்

அரசு அலுவலகங்களில் கூரைத்தோட்டம்! வேகமெடுக்கும் புதுமுயற்சி!

தமிழ்நாட்டின் அரசு அலுவலகங்களில் ‘கூரைத்தோட்டம்’ எனும் திட்டத்தை, முதன்முறையாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அறிமுகப்படுத்தி அதன்மூலம், மொட்டை மாடியில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், கீரைகள், பூக்கள் வளர்க்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர்.

கேரட், பீன்ஸ், முள்ளங்கி, கத்திரி, மிளகாய், பட்டாணி, வெண்டை, புடல், பாகல், பீர்க்கன், சுரை, வெள்ளரி, அவரை, பீட்ரூட், வெங்காயம், கொத்தவரை, முருங்கை போன்ற காய்கள்; வாழை, மா, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள்; மல்லிகை, ஜாதிமல்லி, செண்பகப் பூ, சாமந்திப் பூ, சம்பங்கி, அடுக்குமல்லி, ஆகிய பூக்கள்; அகத்திக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை, சிறுகீரை, செங்கீரை, வெந்தயக்கீரை, கரி¢சலாங்கண்ணிக்கீரை உள்ளிட்ட பல தாவரங்களை இங்கு வளர்க்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் மூலமாக இது பராமரிக்கப் படுகிறது.

”மாடித் தோட்டத்தில் 7 ஆயிரத்து 200 சதுர அடியில் 720 கூடைகள் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கூடைகளிலும் ஒவ்வொரு விதமான செடிகள் வைக்கப்பட்டுள்ளன. சாணம், மண், தேங்காய்மஞ்சு (தேங்காய் நார்க்கழிவு) ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான இயற்கை உரங்களைத் தயாரித்துக் கொள்கிறோம். ‘எங்களுக்கும் இதுபோல கூரைத்தோட்டம் அமைத்துக் கொடுங்கள்’ என பலரும் எங்களிடம் கேட்கிறார்கள். இதன்மூலம் எங்களுக்கு நல்லதொரு தொழில்வாய்ப்பும், வருமானத்துக்கான வழியும் கிடைத்துள்ளது” என்கிறார்கள், மகளிர் சுய உதவிக்குழுப் பெண்கள்.

சூலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசுந்தரம், ”சில மாதங்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போயிருந்தபோது, கூரைத்தோட்டம் அமைப்பது பற்றி ஆலோசனை நடந்து கொண்டிருந்தது. எங்கள் அலுவலகம், தற்போதுதான் கட்டப்பட்டது என்பதால், அதிலேயே செயல்படுத்துமாறு கோரி¢க்கை வைத்தோம். அதனால்தான் எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

விளைவிக்கப்படும் பொருட்களை, இப்பகுதியில் உள்ள 94 சத்துணவு மையங்களுக்கு விற்பனை செய்கிறோம். விரைவில் அலுவலக வளாகத்திலேயே கடை அமைத்து, பொதுமக்களுக்கும் விற்பனை செய்ய இருக்கிறோம். இதன் மூலம், ஒவ்வொருவரின் வீட்டிலும் தோட்டம் அமைப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுதான் எங்கள் திட்டம்” என்கிறார்.

தொடர்புக்கு, பாலசுந்தரம், செல்போன்: 94433-50350

– தி. ஜெயப்பிரகாஷ்.

Thanks Pasumai Vikatan +Raju.S.Pragasam,Manchester

Leave a Reply