குடும்பத்தின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ் – முருங்கைகாய்

முருங்கைக் கீரை கடைகளில் கிடைப்பதில்லை, அப்படியே கிடைத்தாலும் அதைக் கழுவி… உருருருருவி…. கஷ்டம் சார்! சமையல் எப்போ முடியறது? ஆஃபீஸ் எப்போ போறது? முருங்கைக் காய்… சமயத்தில ரொம்ப காஸ்ட்லி காய்கறி ஆகிடுது!” எனும் நம் அம்மணிகளின் நொண்டிச் சாக்குகளுக்குக் காரணம், இன்ஸ்டன்ட் நூடுல்ஸ்க்கும், ‘நோகாமல் நொங்கெடுக்கும்’ இங்கிலீஸ் காய்கறிகளுக்கும் நாம் பழகிவிட்டதுதான்.

பரபரப்பான வாழ்க்கையில், நாம் ஓடும் ஓட்டத்தில், மிகச் சுலபமாகத் தவறவிடுவது நம் உடல், மன நலம்தான். ஆரோக்கியம் காக்கும் எளிய உபாயங்களையும் இந்த ஓட்டத்தில் அலட்சியமாகத் தொலைக்கிறோம். அந்த லிஸ்டில் முருங்கையும் ஒன்றே! விழித்துக் கொள்ளவில்லை என்றால், முருங்கைப் பவுடரை பன்னாட்டு கம்பெனியின் அழகிய கேப்ஸுல் வடிவில், உணவுக்குப்பின் எடுத்துக்கொள்ள நாம் தயாராக வேண்டியது தான்.

“சர்க்கரை நோயால் கிட்னி ஃபைலியர் ஆனால், எந்த இடத்தில் டயாலிசிஸ் செய்வது? ஹார்ட் அட்டாக் வந்தால் எங்கு ஆன்ஜியோ செய்வது?” என்பதில் நாம் காட்டும் அக்கறையை, நோய் தடுப்பு, ஆரோக்கிய மேம்பாடு குறித்த அடிப்படை விஷயங்களுக்கும் கொடுத்துப் பின்பற்றுவதே அறிவுடைமை. இதைச் செய்யாமல் விட்டு, ஆட்டமெல்லாம் ஆடி முடித்து, டோட்டல் சிஸ்டமும் டேமேஜ் ஆனபின், ‘மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் கொள்ளையடிக்கிறார்கள்’, ‘மருத்துவர்கள் வியாபாரம் செய்கிறார்கள்’ எனக் குறைக் கூறி காலம் கழிப்பது மடைமை.

அன்றெல்லாம், வீடு கட்டத் துவங்கும் முன்னே முருங்கைக் கொம்பை நட்டு வைத்தனர். அதைத்தான் குடும்பத்தின் மெடிக்கல் இன்ஷுரன்ஸாக பாவித்தனர். மீண்டும், நாம் அந்த இன்ஷுரன்ஸை எடுக்கலாமே?

ஒன் டைம் இன்வெஸ்ட்மென்ட், மிகச் சொற்பமே!! தலைமுறைக்கும் பலன்கள்!! நல்ல டீல்தானே?

முருங்கை வளர்ப்பு முறைகள்

முருங்கை விதை (அல்லது) முருங்கைக் கொம்பை 1*1*1 அடி குழியில், எரு உரமிட்டு, மாட்டு சாணத்தை கொம்பின் நுனிப்பகுதியில் உருண்டையாக வைத்து நட வேண்டும். மதில் சுவருக்கு குறைந்த பட்சம் 3 அடி இடைவெளி தேவை.

முருங்கை விதை நாட்டு மருந்து கடைகள், நாற்றுப் பண்ணைகளில் கிடைக்கும்.

முருங்கைக் கொம்புகளை பக்கத்து வீட்டுக் கொல்லைகளில் கேட்டு வாங்குவதோ அல்லது எடுத்துக்கொள்வதோ உங்கள் சாமர்த்தியம்!

வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர். ஆதலால், குறைந்த அளவு நீர் பாய்ச்சினாலே போதுமானது. முளைவிடும் காலம் வரை மட்டும் பராமரித்தாலே போதும்.

வளர்ந்த முருங்கை மரங்களில் பொதுவாக காணப்படும் ரோமம் அதிகமுடைய புழுக்களால் தோல்களில் அரிப்பு, தடிப்பு போன்ற தொந்தரவு ஏற்படுவது உண்டு. மேலும், இவற்றிற்கு மொத்த மரத்தையும் மொட்டை அடித்துவிடும் திறமை உண்டு. (மொஸ்கட்டான், என்பது தஞ்சை பகுதியின் வழக்கு மொழி சிறுவர்கள் சண்டையில், எதிராளியின் சட்டைக்குள் பிடித்துப் போடப்படும் ஃபேவரைட் பழிவாங்கும் வஸ்து!!) பெரும்பாலும் இந்தப் புழுக்கள், இரவு நேரங்களில் கீரைகளை மொய்க்கும், பகல் நேரங்களில் கூட்டாக தண்டு பகுதியில் கூடியிருக்கும். அவற்றின் தொல்லை அதிகமிருப்பின், அந்நேரம் சிறிது டிடெர்ஜென்ட் கரைசலை தெளிப்பதன் மூலம் விடுபடலாம்.

Read more at : இரும்புச் சத்தும்.. முருங்கைக் கீரையும்! http://isha.sadhguru.org/blog/ta/irumbu-sathum-murungai-keeraiyum/

Leave a Reply