காளான் வளர்க்கும் முறை

தேவையான பொருட்கள்

Oyster mushroom spawn
பிளாஸ்டிக் பை
வைக்கோல்

காளான் விதைகள் பொதுவாய் சோளம் மாவு போன்ற ஒரு மாவில் கலந்து கொடுக்கிறார்கள். விதைகள் சிறியதாக இருப்பதால் கையாள எளிதாக இப்படி கொடுக்கிறார்கள். இப்போது எங்கு பார்த்தாலும் நிறைய காளான் வளர்ப்பு பண்ணைகள் சுற்றி இருக்கிறது. விசாரித்து தேவையான spawn வாங்கி கொள்ளலாம்.

வைக்கோல் தான் காளானுக்கு உணவு, சத்து எல்லாமே. பக்கத்தில் யாரவது மாடு வைத்திருந்தால், வைக்கோல் வைத்திருந்தால் கொஞ்சம் வாங்கி கொள்ளலாம். வைக்கோலை கண்ணாடி பொருட்களை பேக்கிங் செய்யவும் பயன்படுத்துகிறார்கள். எதாவது தெரிந்த கடைகளில் கேட்டுப் பார்க்கலாம். தவிர காளானுக்கு முளைத்து வளர குளிர்ச்சியான, சுத்தமான, இருட்டான இடம் வேண்டும்.

இப்போது விவரமாக பார்க்கலாம்.

செய்முறை

1. வைக்கோலை 3 செ.மீ அளவுக்கு கத்தரியால் வெட்டி கொள்ளவும்
2. ஒரு பெரிய பாத்திரத்தில் நீர் வைத்து கொதிக்க வைக்கவும். வெட்டிய வைக்கோலை நீரில் போட்டு ஒரு மூடியால் மூடி, லேசான தீயில் ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கவும். பிறகு நன்றாக நீரை வடித்து விட்டு ஒரு நியூஸ் பேப்பரில் நீர் வடியும் உலர விடவேண்டும். சுத்தமாக உலர்ந்து விடக் கூடாது. பிழிந்தால் நீர் கொட்டக் கூடாது. ஆனால் நன்றாக ஈ”ரம் இருக்க வேண்டும் (60 % ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்).
3. ஒரு நீளமாக பிளாஸ்டிக் பேக் ஒன்றை எடுத்து (spawn வாங்கும் இடத்திலேயே கிடைக்கலாம்) முதலில் 3 இஞ்ச உயரத்திற்கு தயார் செய்த வைக்கோலை இறுக்கமாக அடுக்கவும். வைக்கோலை சடை போல சுற்றி அடுக்கலாம். நாம் எவ்வளவு இறுக்கமாக அடுக்குகிறோமோ அந்த அளவுக்கு காளான் நன்றாக வரும். அடுக்கிய பிறகு நன்றாக கைகளால் அழுத்தி இறுக்கமாக்கலாம் (கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது ரொம்ப முக்கியம்)
4. பிறகு ஒரு உள்ளங்கை அளவுக்கு spawn எடுத்து பையின் ஓரத்தில் சுற்றி தூவவும் (நடுவில் போட கூடாது. ஓரத்தில் இருந்து மட்டுமே காளான் முளைத்து வரும்)
5. பிறகு அதற்கு மேலே 2 இஞ்ச அளவுக்கு இன்னொரு அடுக்கு வைக்கோலை இறுக்கமாக அடுக்கவும். பிறகு அதில் spawn தூவவும்.
6. பிறகு இன்னொரு அடுக்கு, spawn. கடைசியாக வைக்கோலை அடுக்கி பையை இறுக்கமாக ஒரு கயிற்றால் கட்டவும்.
7. காற்று போக அங்கே அங்கே சிறியதாக ஒரு துளைகளை போடவும் (லேசாய் குத்தி விட்டால் போதும்)

இப்போது காளான் முளைக்க தயார். அடுத்ததாக அதை வைத்து வளர்க்க ஒரு அறை ஓன்று வேண்டும். நம் வீட்டில் பகலில் கூட நன்றாக இருளாக இருக்கும் ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கவும் (அலமாரி அல்லது கட்டிலின் கீழ்)

1. தேர்ந்தெடுத்த இடத்தை டெட்டால் போட்டு கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். காளான் வளர்ப்பில் இந்த சுத்தம் ரொம்ப முக்கியம்.
2. பிறகு தயார் செய்த காளான் பைகளை அதற்குள் வைக்கவும். சில அரிசி சணல் சாக்கு பைகளை அந்த இடத்தை சுற்றி கவர் செய்யவும்.
3. ஈரப்பதத்தை ஒரே அளவில் வைத்துக் கொள்ள ஒரு நாளைக்கு இரண்டு முறை அந்த சாக்கு பையில் நீர் தெளித்து வரவும்
4. மூன்று நான்கு நாளில் பையில் இருந்து பூஞ்சை மாதிரி (mycelium) வளர ஆரம்பிக்கும். இரண்டு வாரத்தில் பை முழுவதும் படந்து இருக்கும்.
5. பையை வெளியே எடுத்து வைக்கோல் அடுக்கு இடைவெளிகளில் (spawn தூவி myceliumவளர்ந்திருக்கும் இடங்களில்) சுத்தமான கத்தி ஒன்றை வைத்து எதையும் சேதப் படுத்தாமல் X போன்று கீறி விடவும்.
6. இப்போது இந்த பைகளை நல்ல வெளிச்சம் இருக்கும் இடத்திற்கு மாற்ற வேண்டும். வெளிச்சம் பட்டு தான் காளான் வெளியே வரும். தினமும் மூன்று முறை நீர் தெளித்து வரவும் (தேவையானால் ஐந்து முறை கூட தெளிக்கலாம். சரியான ஈ”ரப்பதம் எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்)
7. கொசு, பூச்சிகள் உட்காராமல் இருக்க கொசுவலை போன்று ஒரு அமைப்பை சுற்றி வைக்கலாம். பூச்சி, கொசு அமர்ந்தால் காளான் சரியாய் வராது.
8. ஓரிரு நாளில் X கட்டிங் வழியாக காளான் மொட்டுக்கள் வெளியே வர ஆரம்பிக்கும். தொடந்து நீர் தெளித்து வரவும்
9. 3 – 5 நாட்களில் காளான் முழுமையாக வளர்ந்திருக்கும்.

காளான் நுனி கீழ் நோக்கி வளைந்திருக்கும் போதே அறுவடை செய்து விடவேண்டும். முற்ற ஆரம்பித்து விட்டால் நுனி மேல் நோக்கி வளைய ஆரம்பிக்கும். அப்புறம் பறித்தால் காளான் ருசி இருக்காது.

.

Leave a Reply