காலியாகும் கோலி சோடா வியாபாரம்!

னோ, ஜெலசில் என எத்தனையோ மருந்துகள் ‘அஜீரணத்தைக் குணப்படுத்தும்’ என விதவிதமான விளம்பரங்கள் மூலம் வியாபாரம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அஜீரணக் கோளாறை நொடியில் போக்கக்கூடிய தன்னிகரில்லாத ஒரு பானம், இன்று உலகமயமாக்கலால் ஏற்பட்ட வியாபார போட்டியில் தன் அடையாளத்தை தொலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


ஆம். கோலி சோடா – கோலியை உடைத்து பருகிய மறுகணமே வயிற்றிலுள்ள கோளாறுகள் எல்லாம் வாயுவாய் வாய் வழியே வெளியேறிவிடும். இன்று இதைப் பருகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். அதுமட்டுமல்ல கோலி சோடாவிற்கான பாட்டில்கள் தயாரித்து வந்த தொழிற்சாலை சமீபத்தில் மூடப்பட்டு விட்டதால் இதன் அழிவு ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இதனால் நாம் யாரும் பாதிக்கப்படப் போவதில்லை. நாம்தான் எப்பொழுதோ பெப்சிக்கும், ஃபேன்டாவிற்கும் அடிமைகளாகிவிட்டோமே. பின்னர் பாதிக்கப்படப் போவது யார்? தலைமுறை தலைமுறையாக இந்தத் தொழிலையே நம்பியிருந்து, இன்னுமும் தினமும் சோடா பாட்டில்களோடும் அந்த சிறு சிறு கோலிகளோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் சோடா வியாபரிகள்தான்.

‘இந்த தொழில் வயித்த நிரப்பாது’

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சோடா தயாரிப்பவர்கள் இன்னும் அதிகமாக உள்ளனர். இத்தொழில் நலிந்து வந்தாலும் அதை விட்டு விடாமல் பலரும் இத்தொழிலை செய்துவருகின்றனர். ‘சோடாகடை விசு’ என்றே அனைவரும் அழைக்கும் விஸ்வநாதனிடம் பேசினோம்.

“கிட்டத்தட்ட 25 வருஷமா இந்தத் தொழில் பண்ணிட்டு இருக்கேன். சோடா, பன்னீர் சோடா (ஒயிட் ரோஸ்), கலர் (ஆரஞ்சு மற்றும் கோலா), ஜிஞ்சர் இதெல்லாம் தயார் பண்றோம். கடைகளுக்கு அஞ்சு ரூபாய்க்கு போடறேன். ஒரு நாளைக்கு  நூறுல இருந்து நூத்தி அம்பது ரூபாய் வரைக்கும் விற்கும். அதுல  ஒரு 100 ரூபாய்கு உள்ளதான் கையில நிக்கும். இதுல வண்டிக்கு பெட்ரோல் செலவு வேற. இத வச்செல்லாம் இப்போ வயித்த நிரப்ப முடியாது. பக்கத்துல எங்க கிராமத்துல கொஞ்சம் விவசாயமும் பாக்கறேன்” என்று சொல்பவர் தன் வீட்டிலேயே அவற்றைத் தயாரிக்கிறார்.

முன்பெல்லாம் வியாபாரம் எப்படி இருந்தது என்று கேட்டதற்கு, கண்கள் விரித்து அந்த பொற்காலத்தை நினைவு கூறுகிறார்.

“பத்து பதினஞ்சு வருஷம் முன்னாடிலாம் சைக்கிள்லதான் போய் சோடா போட்டுட்டு இருந்தேன். ஒரு நாளைக்கு குறைஞ்சது மூணு தடவையாவது வீட்டுக்கு வந்து சோடா எடுத்துட்டுப் போவேன். ஒரு ரூபாய்க்குதான் அப்போ நான்  வித்துட்டிருந்தேன். அப்பவே 400 ல இருந்து 500 சோடா வித்திடும் ஒரு நாள்ல. கையில இருநூறு முன்னூறு ரூபாய் நிக்கும். வியாபாரத்துக்குப் போக அவ்ளோ ஆசையா இருக்கும். இப்பல்லாம் ஏதோ ஒரு கடமைக்காக போயிட்டிருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல முழுசா இது நின்னுடும். அப்றம் என்ன பண்றதுனு தெரில” என்று அவர் கூறி முடிக்கும்போதுதான் புன்னகையும் சோகம் சுமக்கும் என்பது புரிகிறது.‘வியாபாரத்தை எப்பவோ விட்டுட்டேன்’

“இப்பல்லாம் நான் வியாபரத்துக்குப் போறது இல்ல. போறது விட்டு ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு. வேலைக்குத் தான் போயிட்டு இருக்கேன். அப்பா அவரோட 25 வயசுல இருந்து சோடா வியாபாரம்தான் பண்றார். ஆனா இப்பல்லாம் இதுல கிடைக்கிற வருமானத்தை எதிர்பார்த்துட்டு இருக்க முடியாது. ஒரு நாளைக்கு முப்பது சோடா வாங்குன கடைக்காரங்களாம் இப்போ ஒரு வாரத்துக்கு கூட அவ்ளோ வாங்குறதில்ல. அப்பா வீட்ல கூல்டிரிங்க்ஸ் விக்கிறாரு. முதல்ல வியாபாரம் பண்ணுனதால பக்கத்துல இருக்குறவங்கள்லாம் சோடா கேப்பாங்க. அதனால கூடவே சோடாவையும் கொஞ்சம் வித்துட்டு இருக்காரு. எல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தான்.அப்புறம் இந்த பாட்டில்லாம் கூட காய்லாங்கடைக்குத் தான் போகும்” – வியாபாரம் குறைந்து வந்ததால் சென்ற வருடமே தயாரிப்பை நிறுத்திவிட்ட மேலப்பாளையம் ராஜாவிடம் பூர்வீகத் தொழிலை விட்ட ஏக்கம் ஏகமாகவே வெளிப்பட்டது.

‘சோடா இருந்தாதான் அது பெட்டிக்கடை’

மருந்தாக மட்டுமல்ல, மதுவோடு கலக்கவும் சாமான்ய மனிதன் சோடாவையும் கலரையும் (ஆரஞ்சு மற்றும் கோலா)  வாங்கிப் பருகுகிறான் என்கிறார் பெருந்துறை ரோட்டில் பெட்டிக்கடை வைத்திருக்கும் நடராஜ். குறைந்து வரும் சோடா வியாபாரம் ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்பு இவரிடமும் வெளிப்பட்டது.

“இன்னைக்கு பெட்டிக்கடைனா சிகரெட், பீடி, பாக்கு இதெல்லாம் மட்டும்தான் வச்சு விக்கிறாங்க. பெட்டிக்கடைனா எல்லாமே இருக்கணும். முன்னலாம் பெட்டிக்கடைல மிட்டாய், இஞ்சி முரப்பா, காரம், இனிப்பு எல்லாமே இருக்கும். எல்லாத்துக்கும் மேல சோடா இல்லைனா அது பெட்டிக்கடையே இல்ல. ஆனா இன்னைக்கெல்லாம் யாரும் சோடா வாங்க வர்றது இல்ல. ஒரு வாரத்துக்கே 2 டஜன்தான் விக்குது. அந்த அளவுக்கு வியாபாரம் குறைஞ்சு போச்சு. 5 ரூபாய்க்கு வாங்கி ஆறு ரூபாய்க்கு விக்கிறேன். பெருசா லாபம்லாம் இல்ல. ஆனா கிராமத்துல இருந்து டவுன் பக்கம் வர்றவங்க, பேக்கரி போய் கூல்டிரிக்ஸ் குடிக்க மாட்டாங்க. சோடா குடிக்க பெட்டிக்கடையத்தான் தேடுவாங்க. அப்படித் தேடுன ஆளுகள்ல நானும் ஒருத்தன். அதனாலதான் இன்னுமும் விடாம சோடா வித்துட்டு இருக்கேன்” என்கிறார்.

கோலிய உடைக்கிறவன்தான் கில்லி!

எத்தனை குளிர்பானங்கள் வந்தாலும் கோலி சோடாவின் மீது தான் கொண்ட பிரியத்தை விடாத வேலுச்சாமி, “சோடா குடிச்சாத்தான் நமக்கு ஒரு சுறுசுறுப்பே வரும். வயிறு வலி வந்தாலே சோடாதான். வேற எந்த மருந்தும் கிடையாது. அதக் குடிச்சு ஒரு ஏப்பம் வந்துட்டா எல்லாத் தொந்தரவும் ஓடிடும். சின்ன வயசுல எங்க நண்பர்களுக்குள்ள யாரு கோலிய உடைக்கறதுனு போட்டியே வரும். யார் உடைக்கிறாங்களோ அவங்கதான் கில்லி. அவன் பாதிய குடிக்கலாம். மத்தவங்க எல்லோருக்கும் அந்த மீதிதான்” என்று தனது சிறுவயது ஞாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.


இப்படி பலரது வாழ்விலும் கோலி சோடாவிற்கு ஒரு இடமுண்டு. ஆனால் நவீனமயத்தாலும் உலகமயமாக்கலாலும் ஏற்பட்ட வியாபார மாற்றங்களால் இன்று தனக்கான இடத்தை இழந்து நிற்கிறது கோலிசோடா. ஏற்கனவே செல்போன் மற்றும் இ-மெயில் பயன்பாட்டால்  தந்திக்கு குட்பை சொல்லிவிட்டோம். இனி அந்த வரிசையில் கோலி சோடாவும் இணையப் போகிறது.

உலகமயமாக்கலின் கோரப்பசிக்கு அடுத்து இரையாகப்போவது எதுவோ?

மு.பிரதீப் கிருஷ்ணா
படங்கள்: கோ.கி.சரண் பிரசாத்

-Vikatan

Leave a Reply