காலநிலை மாற்றம் ஆபத்து

வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதற்கு காலமாற்றமே காரணம் என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்தனர்.
விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தைத் பொருத்தவரையில் கடந்த மூன்று நாள்களாக 100 டிகிரியை நெருங்கி வெயில் பதிவாகியுள்ளது. அதாவது, புதன்கிழமை அதிகபட்சமாக 99.32 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், செவ்வாய், வியாழக்கிழமை 98.24 டிகிரி பாரன்ஹீட்டும் வெயில் பதிவாகின.
வெயில் வழக்கத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் அதிகமாக இருப்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
தென்மேற்கு பருவமழை வலுவிழந்துள்ளதால் மேகக் கூட்டங்கள் இல்லாமல் சூரியனின் வெப்பக் கதிர்கள் நேரடியாக பூமியில் விழுகிறது. இதனால், வெயில் அளவு அதிகரித்துள்ளது. இயல்பாகவே கீழிருந்து மேலாகச் செல்லும் காற்று தற்போது மேலிருந்து கீழாக வருகிறது. இதனால், இரவு நேரத்தில் புழுக்கம் நிலவுகிறது.
கடற்கரைப் பகுதியில் இரவில் ஈரக்கற்று வீசும்போது புழுக்கம் குறையலாம். ஆனால், கடற்கரையை அடுத்த உள் பகுதிகளில் புழுக்கம் இருக்கும். இது வருகிற 15-ஆம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும் என்றார்.
மாறுபட்ட வானிலை குறித்து அண்ணாப் பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம், தகவமைப்பு மையத்தின் இயக்குநர் பழனிவேலு கூறியது:
உலகம் முழுவதுமே காலநிலை மாற்றத்தால் பெருமளவு மழை பொழிவு, வெயில் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டு இறுதியில் கடலூர், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது.
இதைத்தொடர்ந்து, முன்கூட்டியே பிப்ரவரியில் வெயில் தொடங்கியது. இவற்றுக்கு காரணமாக அமைவது பூமியின் வெப்பநிலை உயர்வுதான்.
தொழிற்சாலைகள் பெருக்கத்தால், கடந்த 70 ஆண்டுகளில் பசுமை வீட்டு வாயுக்களின் அளவு 270 பிபிஎம் என்ற அளவில் இருந்து 406 பிபிஎம் அளவாக உயர்ந்துள்ளது. இது காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி, குறிப்பிட்ட நேரத்தில் அதிக மழை, அதிக வெயிலுக்கு காரணமாகிறது. இதைத் தவிர்க்க வெளியிடப்படும் கார்பன் டை ஆக்ûஸடு, மீத்தேன் போன்ற வாயுக்களின் அளவைக் குறைக்க வேண்டியது அவசியம்.
புவி வெப்பம் அதிகாரித்துக் கொண்டே சென்றால், 2100-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு சராசரி வெப்ப நிலை உயர வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
இது மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகள், தாவரங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றார் அவர்.

Leave a Reply