கார்ப்பரேட் மருத்துவமனைகள்

பணக்காரர்களுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்கின்றன. ஏழைகளுக்கு அரசு மருத்துவமனைகள் இருக்கின்றன. இடையில் உள்ள மிடில் கிளாஸ் மக்கள் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கின்றனர்.

அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்கு அவர்களின் கௌரவம் தடுக்கிறது. கடன் வாங்கி, சொத்துக்களை விற்று கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போனால், அங்கே இருப்பதையும் இழக்க வேண்டியிருக்கிறது.
இதற்கான மாற்றாக உருவானதுதான் டிரஸ்ட் ஹாஸ்பிடல். இது மக்கள் மருத்துவமனை!” – மென்மையான குரலில் பேசுகிறார் மருத்துவர் ஜீவானந்தம்.

ஈரோட்டில் ‘டிரஸ்ட் ஹாஸ்பிடல்’ என்ற கூட்டுறவு மருத்துவமனைக்கான விதை விதைத்தவர்.
ஊழலும் கொள்ளையும் மிகுந்துவிட்ட இன்றைய தனியார் மருத்துவத் துறையில் இவர் நிகழ்த்தியிருப்பது ஒரு சாதனை. பணமும் மனமும் உள்ள நல்லவர்களிடம் ஆளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் எனப் பணம் வாங்கி, ஈரோட்டில் உருவான டிரஸ்ட் ஹாஸ்பிடல், இன்று இன்னும் பல ஊர்களிலும் கிளைவிடத் துவங்கியுள்ளது.

”இதற்குத் தனிப்பட்ட உரிமையாளர் என யாரும் இல்லை. பணம் போட்ட அனைவருமே உரிமையாளர்கள்தான். மக்கள் பங்கேற்புடன் ஒரு விஷயம் நடக்கும்போது, ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது இலவச மருத்துவமனை அல்ல. மருந்து, மாத்திரை, கட்டில், ஸ்கேன் என அனைத்துக்கும் கட்டணம் உண்டு. ஆனால், மிக மிகக் குறைவாக இருக்கும். வெளியில் 500 ரூபாய் என்றால், நாங்கள் 250 ரூபாய். குறைந்த லாபம், அதிக மக்களுக்கான சேவை… இதுதான் எங்கள் நோக்கம்!” என்று எளிமையாகப் பேசுகிறார் மருத்துவர். ”அந்தக் காலத்தில் நான் எம்.பி.பி.எஸ். படித்தபோது ஒரு வருட ஃபீஸ், 1,200 ரூபாய்தான். ஆனால், இப்போது தனியார் மருத்துவக்கல்லூரி களில் எம்.பி.பி.எஸ். சீட் ஒன்றுக்கு 70 லட்சம், 1 கோடி. நான் 3,000 ரூபாய் செலவில் படித்த அனஸ்தீஸியாவை இப்போது படிக்க 1 கோடி ரூபாய் வேண்டும்.

காலம் மாறியிருக்கிறது, விலைவாசி ஏறியிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இது மலைக்கவைக்கும் ஏற்றம் இல்லையா? அன்று 5,000 சம்பாதித்த யாரும் இன்று 50 லட்சம் சம்பாதிக்கவில்லை. 50 ஆயிரம், அதிகபட்சம் 1 லட்சம் சம்பாதிக்கலாம். ஆனால், மருத்துவப் படிப்பு மட்டும் கோடிகளில் மாறி இருக்க என்ன காரணம்? முழுக்க முழுக்க கார்ப்பரேட் மருத்துவமனைகளின் கொள்ளை. மருத்துவர்களின் கிளினிக்கும் உள்ளூரில் சிறு சிறு அளவில் தனியார் மருத்துவமனைகளும் இயங்கிய காலம் வரை மனிதாபிமானம் இருந்தது. மருத்துவருக்கும் நோயாளிக்குமான உறவு என்பது பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கமானதாக இருக்கும்.
ஆனால், இன்றைய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குப் பெயர்கள் இல்லை. நம்பர்கள் மட்டும்தான். அங்கு மனிதர்கள் பேசுவது இல்லை. கம்ப்யூட்டர் மட்டுமே பேசுகிறது. மனிதாபிமானத்துக்கும் மருத்துவமனைகளுக்கும் தொடர்பு இல்லாமல் போய்விட்டது.

இந்த சீர்கெட்ட நிலை என் மனதை அரித்தது. கேரளாவின் கொச்சின் நகரத்தில் கூட்டுறவு மருத்துவமனைகள் இயங்குகின்றன. கூட்டுறவு என்ற வார்த்தையைத் தவிர்த்து விட்டு, டிரஸ்ட் ஹாஸ்பிடல் என்று துவங் கினோம். 25 மருத்துவர்கள், 25 பொதுமக்கள், ஒரு நபருக்கு மூன்று லட்ச ரூபாய் முதலீடு. இதில் 50 ஆயிரம் டிரஸ்ட்டுக்குச் சேர்ந்துவிடும். மீதம் உள்ள 2.5 லட்ச ரூபாய் வட்டியுடன் திருப்பித் தரப்படும். இப்படி 1.5 கோடி ரூபாய் சேர்ந்தது. மேலும் 3 கோடி ரூபாய் வங்கியில் கடன் பெற்று, 4.5 கோடி ரூபாய் முதலீட்டில் 2001-ம் ஆண்டில் இந்த மருத்துவமனை உருவானது.

இங்கு அனைத்துவிதமான நடைமுறை களும் வெளிப்படையாக நடைபெறும். மருந்துப் பொருட்களின் விலை, சிகிச்சைக்கான செலவு, ஆக்ஸிஜன் வைத்தால் எவ்வளவு, செயற்கை சுவாசத்துக்கு எவ்வளவு, ஸ்கேனிங், அறை வாடகை, மருத்துவர்களுக்கான கன்சல்டிங் ஃபீஸ்… அனைத்துமே அறிவிப்புப் பலகையில் இருக்கும். எதுவும் மறைமுகம் இல்லை.
மருந்து, மாத்திரைகளை மக்களே வாங்கி வரலாம். முடிந்து திரும்பச் செல்லும்போது மீதம் இருக்கும் மருந்து, மாத்திரைகளைக் கொடுத்து பணம் வாங்கிக்கொள்ளலாம். கட்டணத்தையும் முடிந்த வரை குறைவாகவே நிர்ணயிக்கிறோம்.

ஜெனரல் வார்டு பெட்டில் சேர்ந்து ஒரு நாள் சிகிச்சை பெற, மருத்துவரின் ஆலோசனையும் சேர்த்து நாங்கள் வாங்குவது 150 ரூபாய். இது அரசு மருத்துவமனையில் கம்பவுண்டருக்குக் கொடுக்கும் லஞ்சத்துக்குச் சமம். இப்படிப் பல மருந்துப் பொருட்களை மிகக் குறைவான லாபத்துக்குத்தான் தருகிறோம்.

ஆனால், மருத்துவ உலகில் 300 சதவிகிதம், 400 சதவிகிதம் லாபம் வைத்துத்தான் மருந்துகள் விற்கப்படுகின்றன. உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். உயிர் காக்கும் மருந்தான ஹீமோ தெரபிக்குப் பயன்படும் ஊசி மருந்து 900 ரூபாய்க்கு வருகிறது. நாங்கள் அதை 1,300 ரூபாய்க்குத் தருகிறோம். ஆனால், அதில் இருக்கும் எம்.ஆர்.பி. விலை 3,700 ரூபாய். பல இடங்களில் இந்த விலைக்குத்தான் விற்பனை செய்கின்றனர்.

ஆனால், குறைவான லாபம் வைத்து நடத்தப்படும் இந்த மருத்துவமனையிலும் எங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. ஒரு நாள் வருமானம் ஒரு லட்சம் ரூபாய் என்றால், அதில் 18 ஆயிரம் ரூபாய் லாபம். இது போதாதா? இந்த லாபத்தைக் கொண்டு தஞ்சாவூர், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் மேலும் இரண்டு மருத்துவமனைகளை உருவாக்கியிருக் கிறோம்.
இப்போது பாண்டிச்சேரியி லும் பெங்களூரிலும் வேலை நடந்துவருகிறது. ஊத்துக்குளியில் அந்த ஊரை சேர்ந்த 100 பேர் ஆளுக்கு 2 லட்சம் பணம் போட்டு 2 கோடி ரூபாய் முதலீட்டில் மருத்துவமனையை உருவாக்கியிருக்கிறார்கள்” என்றார் ஜீவானந்தம்.
”தரமான, இலவச மருத்துவம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். கல்வியும் அரசின் வசம்தான் இருக்க வேண்டும். ஏனெனில், தரமான கல்வியும் மருத்துவமும் பெறுவது, ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. ஆனால் நம் அரசு, தனியார் மருத்துவத்தை ஊக்குவிக்கும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் அக்கறை செலுத்துவது இல்லை.

எப்படி சாராய முதலாளிகள் கல்வி நிறுவனங்களைத் துவங்கினார்களோ… அதுபோல, மருத்துவத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்கள் மருத்துவமனைகளைக் கட்டிவருகின்றன. சென்னையில் முளைத்திருப்பவை சரிபாதி இவைதான்.
நம் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவம் படிப்பவர்களின் எண்ணிக்கையே குறைவுதான். அவர்களில் அதிகபட்சம் பேரை இந்த நிறுவனங்கள் கூலிக்கு எடுத்துக்கொள்கின்றன. எனில், கோடிக்கணக்கான நடுத்தர, ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது யார்? மருத்துவத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும்!”

பாரதி தம்பி
படங்கள் : தி.விஜய்
Vikatan EMagazine
Contact Information Of Erode Trust Hospital
+(91)-424-2266273, 2262014, 2262015, 6538977
Natesan Mill Enclave, Perundurai Road, Erode HO, Erode – 638001

Leave a Reply