காய் கறிகளும் மருத்துவக் குணங்களும்

ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..
காரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளகாய். நமது சமையலில் மிளகாய்க்கு சிறப்பான இடம் உண்டு. இது ஊசி மிளகாய், குண்டு மிளகாய், குடமிளகாய் என மூன்று வகைகளைக் கொண்டது.

இவை காரத்தன்மையால் வேறுபடுகின்றன.
குடமிளகாய் காரம் குறைந்தது. இத்தாவரத்தின் காய் சமையலுக்கும், கனிந்த கனிகள் மற்றும் விதைகள் நறுமணப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்
இத்தாவரத்தில் ஒலியோரெசின், கேப்சைசின், கரோடினாய்டுகள், பிளேவனாய்டுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் ஸ்டிராய்டல், சபோனின்கள், கெப்சைசிடின்ஸ் – (விதைகள் ) பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.
ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும்
விதைகளுடன் கனிகள், ஜீரணத்தை ஊக்குவித்து உடலுக்கு வலுவேற்றுகிறது. தசைக்குடைச்சல் வலியை போக்கும் தன்மை கொண்டது. கிருமி நாசினியாக செயல்படுகிறது. வியர்வை
மற்றும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும். வலிபோக்கும் மருத்துவத்தில் பயன்படுகிறது.

உடலுக்கு வெப்பத்தினை தரும் தன்மை. ரத்த ஓட்டத்தினை அதிகரிக்க உதவுகிறது. கை, கால், ஆகிய பகுதிகளுக்கும், மற்ற மைய உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டத்தினை சரி செய்கிறது. கெப்சைசின் எனும் வேதிப்பொருள் இத்தன்மைக்கு அடிப்படையாகிறது.

தோல் நோய்களை போக்கும்
தோல்களின் மீது தடவும் போது நரம்பு நுனிகளின் உணர்வினை மழுங்கச் செய்து ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கிறது. தோல் வியாதியான சொரியாசிஸ், நியூரால்ஜியா மற்றும் தலைவலி, மூட்டுவலி, ஆகியவற்றையும் போக்க வல்லது.

பாக்டீரியங்களுக்கு எதிராக செயல்புரிகிறது. உள்ளுக்குள் சாப்பிடும் போது வயிற்றுவலி, வாயு தீர்க்கும். ஜீரண சுரப்பிகள் சுரக்க தூண்டும். ஜீரண மண்டல நோய்களைப் போக்கும். தொண்டை கரகரப்பு கொப்பளிப்பாக பயன்படுகிறது.

வலிகளைப் போக்கும்
சர்க்கரை மற்றும் குல்கந்த் சேர்த்து முக்கோண வில்லைகளாகச் செய்யப்பட்டு தொண்டை கரகரப்புக்கு மருந்தாகிறது. மேடைப் பேச்சாளர்கள் மற்றும் பாடகர்களுக்கு மிகவும் உதவும். வலிகளைப் போக்க தேய்ப்புத் தைலமாக பயன்படுகிறது.

இந்திய மருத்துவத்தில் சின்கோனாவுடன் சேர்த்து நாட்பட்ட மூட்டுவலிக்கு மருந்தாகப்  பயன்படுத்தப்படுகிறது. பெருங்காயம் மற்றும் கற்பூரத்துடன் சேர்ந்து காலரா நோய்க்கு மருந்தாகிறது. தீப்புண் மேல் தூவப்படுகிறது.

உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள்.

காரணம் என்ன?
100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.

எனவே, பயமின்றிக் காளானை நன்கு சாப்பிடலாம். புரதச்சத்தும் உடலுக்குச் தேவையான சக்தியைத் தந்துவிடும். கொலாஸ்டிரல் சேரும் அபாயமும் இல்லை.

இதனால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதயவியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதலியனவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.

குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடுகின்றன.

புரதச்சத்து அதிகமாய் இருப்பதால் இராணி என்று வழங்கப்படும் காளானின் இரும்புச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவக் குணங்களும் மிக அதிகம். ஏ வைட்டமின் அதிகமாய் இருக்கிறது.

காளானின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.

காலரா,  அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகக் காளான் சூப் நல்ல பலன் தரும்.

காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.

வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியன குணமாகக் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். பிரியாணி செய்தால் காளான், முட்டைகோஸ் பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல், சேர்க்க வேண்டும். இது சத்துணவு, உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.

உடல் நலனில் அக்கறை உள்ள அனைத்து வயதுக்காரர்களும் வாரத்திற்கு இரு நாள்களாவது தக்காளி சூப் போல் காளான் சூப் தயாரித்து அருந்துதல் நலம்.

மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உடலில் கொலாஸ்டிரல் சேராது. இந்தக் காரணத்தால்தான் உலகம் முழுவதும் காளான் உணவு மிகவும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது.

ஆரஞ்சுப்பழத்தைவிட, 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியது, காளான்.

தாய்ப்பால் வற்ற….
தாய்பாலை வற்றச் செய்ய விரும்பினால் காளான் சூப் சாப்பிட ஆரம்பிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஏழு, எட்டு நாள்களில் தாய்ப்பால் வற்றிவிடும்.

புண்களைக் குணப்படுத்தி டானிக் போல உடலுக்குச் சக்தி தரும் காளானில் வைட்டமின் – ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘இ’ ஆகியன ஓரளவு உள்ளன.

காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான்.

இன்று தென்னமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெஃபியுகோ என்னும் பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் முக்கிய உணவாகக் காளான் இருக்கிறது. அவர்களைப் போல் வேறு எந்த ஒரு நாட்டிலும் காளானை அரிசி, கோதுமை போல் முக்கிய உணவாகப் பயன்படுத்துவதில்லை.

அமெரிக்கர்களைவிட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.

இந்தியாவில் எட்டு வகைக் காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான, வைக்கோல் காளான் என மூன்று வகைக் காளான்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.

இதய நோயாளிகள் வலிகுறைந்து உற்சாகமாய் இருக்க காளான் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆண்டு தோறும் ‘காளான் வளர்த்துப் பணம் குவிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. காளான் வளர்ப்பதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி நிலையங்களும் அதிகம் உள்ளன.

அமெரிக்க அரசு காளான் பற்றிய செய்திச் சுருள்களை அடிக்கடி வெளியிட்டு வருவது ஆச்சரியமான செய்தியாகும்.

இதயத்திற்கு வலிமையையும் உடலுக்கு அழகையும் தரும் மணத்தக்காளி!

கத்தரி இனத்தைச் சேர்ந்ததாகும், மணத்தக்காளி. அறுபது சென்டிமீட்டர் உயரம் வரை இச்செடி வளரும்.

இச்செடியின் கீரை, தண்டு, காய், பழம் என அனைத்தும் சிறந்த சத்துணவாகும்; உணவு மருந்தும் ஆகும்.
மணத்தக்காளியில் சிவப்பு, கருப்பு என இரு இனங்கள் உண்டு. காய்கள் கருப்பு நிறத்தில் இருக்கும். பழுக்குபோது சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் இருக்கும்.
இந்திய மருத்துவத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது, மணத்தக்காளி. இதயத்துக்கு பலம் ஊட்டும் உயர்ந்தவகை டானிக்காக மணத்தக்காளிக் கீரையும், இதன் பழங்களும் பயன்படுகின்றன.

இக்கீரை சத்துணவுப் பொருள்களைச் சரியாக வயிற்றுக்குள் அனுப்பிவிடுகிறது. இக்கீரையை உணவாகச் சாப்பிட்டால் அன்றைய தினம் நாம் சாப்பிட்ட உணவுப்பொருள்களை நன்கு செரிமானம் செய்துவிடும். எந்த உறுப்பு எந்தப் பொருளைக் கிரகித்துக் கொள்ள வேண்டுமோ அதற்கு ஏற்ற வகையில் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.

கழிவுப் பொருள்கள், சிறுநீர் முதலியவை உடனே வெளியேறவும் வழி அமைத்துக் கொடுக்கிறது. நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுக்கிறது.

குத்தலா? எரிச்சலா?
மனம் காரணம் இன்றிச் சில சமயங்களில் படபடக்கும். உடலுக்குள் குத்தலும் எரிச்சலும் இருக்கும். உடம்பில் வலியாகவும் இருக்கும. எதைக் கண்டாலும் இதனால் எரிச்சலும் உண்டாகும்.

இந்த நேரத்தில் மணத்தக்காளிக் கீரையைப் பருப்புடன் சேர்த்து மசியலாக்கிச் சாப்பிட்டால் உடல் உறுப்புகளும், மனமும் அமைதியடையும், மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாகும். உள் உறுப்புகளை மணத்தக்காளிக் கீரை பலப்படுத்தியும் விடுகிறது.

சிறுநீரகக் கோளாறு தீர்க்கும் இலைக் காய்கறி!
இக்கீரை உடலில் தோன்றும் வீக்கங்கள், கட்டிகள் முதலியவற்றை எதிர்த்துப் போரிடும். அவற்றைக் குணப்படுத்தியும் விடும். சிறுநீர்க் கோளாறுகளை நீக்கும். அத்துடன் சிறுநீர் நன்கு பிரியவும் வழி அமைத்துக் கொடுக்கும்.

சிறிது கசப்புச் சுவையுடையது இக்கீரை. சமைத்து சாப்பிடும் போது கசப்பு குறைவாய் இருக்கும்.

மலச்சிக்கலா?
மணத்தக்காளிப் பழம் டானிக் போல மதிப்பு மிகுந்த பழமாகும். பேதி மருந்தாக இப்பழத்தைச் சாப்பிடலாம். இந்த வகையில் மிகுந்த பயனைத் தந்து, நன்கு பசி எடுக்கவும் செய்கிறது.

வாரத்துக்கு இரு நாள் மட்டுமே மலம் கழிக்கிறவர்கள் இப்பழத்தைச் சாப்பிடலாம். இதனால் கழிவுகள் உடனே வெளியேறும்.

இக்கீரையிலும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. அதனால் மலச்சிக்கலை விரைந்து குணமாக்கும்.
நீர்க்கோவை குணமாகும்!

நீர்க்கோவை நோய் மகிச்சிறந்த முறையில் குணமாக இக்கீரை பயன்படுகிறது. இக்கீரையைக் கஷாயமாய் அருந்தலாம். அல்லது பருப்பு சேர்த்து மசியல், பொரியல் என்று சாப்பிடலாம்.

கீரையையும், இளந்தண்டுகளையும் சாறாக மாற்றி ஒரு வேளைக்கு ஆறு மில்லி வீதம் அருந்தலாம். மேற்கண்ட மூன்று முறைகளுள் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தினாலும் நீர்க்கோவை நோய் விரைந்து குணமாகும்.

வயிற்று வலி குணமாகும்!

செரிமானக் கோளாறுகள் அனைத்தையும் மணத்தக்காளிக் கீரையின் இரசம் குணப்படுத்துகிறது. ஒரு கைப்பிடி அளவு சுத்தம் செய்யப்பட்ட இக்கீரையை மிக்ஸி மூலம் சாறாக மாற்றுங்கள்.

உங்களுக்குப் பிடித்த பழ இரசப் பானம் ஒன்றுடன் இந்தக் கீரைச் சாற்றையும் சேர்த்து அருந்துங்கள். இந்தச் சாறு வயிற்றுப் பொருமல், பெருங்குடல் வீக்கம், வயிற்றுப் புண், வயிற்று வலி, குடல் புண், நாக்குப் புண், மூல வியாதி முதலியவற்றை விரைந்து குணமாக்கும்.

இக்கீரையை பச்சையாக மென்றும் சாப்பிடலாம். மேற்கண்ட வயிறு சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் குணமாக இக்கீரையுடன் பாசிப் பருப்பு, வெங்காயம் முதலிய சேர்த்து கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம்.

நல்ல தூக்கம் இல்லையா?

இக்கீரையை உண்டால் உடலுக்கு அழகு கூடும். இதயத்திற்கு வலிமை அதிகரிக்கும். வயிற்றுப் போக்கு, காய்ச்சல், குடல்புண் முதலியவற்றிற்கு உணவு மருந்தாகவும் இக்கீரை பயன்படுகிறது.

இரவு நேரங்களில் இக்கீரையை உணவுடன் உண்டால் களைப்பு நீங்கும். இத்துடன் நன்கு தூக்கத்தையும் கொடுக்கவல்ல தூக்க மாத்திரையாகவும் செயல்படும்.

மஞ்சள் காமாலையை இக்கீரையின் சாறு குணமாக்குகிறது. மிக்ஸி மூலம் எடுத்த சாற்றை இவர்கள் அருந்த வேண்டும். இதே சாறு கல்லீரலில் ஏற்படும் வீக்கத்தையும் கணிக்கிறது. கல்லீரல் கோளாறுகள் அனைத்தையும் இக்கீரைச்சாறு குணமாக்கும்.

காய்ச்சலா? கவலை வேண்டா!
எல்லா வகையான காய்ச்சல்களையும் இக்கீரை தணிக்கும். உலர்ந்த மணத்தக்காளிக் கீரையை (அல்லது கீரைப் பொடி என்றால் ஒரு தேக்கரண்டி) தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். உடனே வடிகட்டி, சூட்டுடன் அருந்த வேண்டும்.

இது உடனே செயல்பட்டு நோயாளியை நன்கு வியர்க்கச் செய்துவிடும். வயிர்வை வெளியேறுவதால் காய்ச்சலின் தீவிரம் குறையும். காய்ச்சல் குணமாகும்வரை இக்கீரையைச் சமையல் செய்து உண்ண வேண்டும்.

மணத்தக்காளிப் பழமும் விரைந்து இதுபோல் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
கீரையைப் போலவே பழமும் சக்தவாய்ந்த மருந்தாகும். ஆஸ்துமா நோயாளிகள் சளியுடன் ‘கர்புர்’ என்று சிரமத்துடன் மூச்சு விட்டுக்கொண்டு இருப்பார்கள். இவர்களும் காசநோயாளிகளும் இப்பழங்களைத் தினமும் சாப்பிடுவது நல்லது. மணத்தக்காளியின் காயும், பழமும் மிளகு அளவேதான் இருக்கும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிடவும் இப்பழம் உதவுகிறது.
புதுமணத்தம்பதிகள் உடனே குழந்தை பெற்றுக்கொள்ள இப்பழம் போதும். இப்பழம் உடனே கரு தரிக்கச் செய்யும்.

உருவான கருவலிமை பெறவும் இப்பழம் பயன்படுகிறது. பிரசவம் எளிதாக நடைபெறவும் பயன்படுகிறது. குழந்தை ஆரோக்கியமாய் உருவாகிப் பிரசவமாக இப்பழம் ஒரு வரப்பிரசாதம் ஆகும். ஆண்கள் தாதுபலம் பெற இப்பழத்தை அவசியம் சாப்பிட வேண்டும்.

தேமல், வீக்கங்கள், பருக்கள், கொப்புளங்கள் குணமாக இக்கீரைச் சாற்றைத் தடவலாம். உடலில் வலி உள்ள இடங்களிலும் வலிநீக்கும் மருந்து போல இக்கீரைச் சாற்றைத் தேய்த்து உடல் வலி நீங்கப்பெறலாம்.

நாள்பட்ட நோய் வியாதிகள் குணமாக இக்கீரைச் சாற்றை மோர், தயிர், பால், தேங்காய் தண்ணீர், இளநீர் போன்ற ஏதாவது ஒன்றில் சேர்த்துத் தினமும் அருந்த வரவேண்டும்.

மணத்தக்காளிக் காயை வற்றல் போடலாம். வற்றலிலும் மருத்துவக் குணங்கள் சிதையாமல் இருக்கிறது. காசநோய், ஆஸ்துமாகாரர்கள் தொந்தரவு இன்றி இரவில் அயர்ந்து தூங்க வற்றல் குழம்பு உதவும்.

தினமும் சாப்பிடலாமா?

மனத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து உடலில் உள்ள நோய்களையும் குணப்படுத்தும் இக்கீரையைத் தினமும் உணவில் உண்ணலாம்.

100 கிராம் கீரையில் ஈரப்பதம் 82.1%, புரதம் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புகள் 2.1%, மாவுச்சத்து 8.9% உள்ளன. நோயைக் குணமாக்கி உடலின் கட்டுமானப் பகுதியைப் பார்த்துக் கொள்ள 410 மில்லி கிராம் கால்சியமும், மூளை வளர்ச்சி, மனத்திற்கு சுறுசுறுப்பு ஆகிய அளிக்க 70 மில்லி கிராம் பாஸ்பரஸும், நோய் எதிர்ப்புச் சக்தி அளிக்கும் 11 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும் இக்கீரையில் உள்ளன.

மகிழ்ச்சி வேண்டுமா?

மேலும், தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும் கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோஃபிலவின் என்னும் வைட்டமின் பி2ம், தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநலவளத்தை அதிகரிக்கும் ‘பி’ குரூப்பைச் சேர்த்த வைட்டமின் நியாஸினும் உள்ளன.

பழத்தில் உள்ள ஒரு வித காடிப்பொருள் செரிமானச் சக்தியைத் துரிதப்படுத்திப் பசியின்மையைப் போக்கிவிடுகிறது.

நெஞ்சவலி இனி இல்லை!
இக்கீரையையும், பழத்தின் விதைகளையும் உலர வைத்துப் பொடியாக்க வேண்டும். அவற்றைத் தலா அதைக் கரண்டி வீதம் காலையும் மாலையும் உட்கொண்டால் நெஞ்சுவலி குணமாகும். காய்ச்சல் நேரத்திலும் நாள்பட்ட புண்கள் இருந்தாலும் இதுபோல் உட்கொள்ள வேண்டும். இப்பொடியைத் தேன் கலந்தும் சாப்பிடலாம்.

மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது, மணத்தக்காளிக் கீரை, இதன் விஞ்ஞானப் பெயர், ஸோலனம் நைக்ரம் என்பதாகும். இப்போது உலகம் முழுவதும் இது பயிர் செய்யப்படுகிறது.
காரணம், குறைந்த செலவில் சிறந்த உணவாகவும் நோய்களைக் குணப்படுத்தும் மருந்துணவாகவும் இருப்பதால்தான்.

இன்றே, உங்கள் வீட்டில் மணத்தக்காளி விதையைத் தூவி இக்கீரையை வளர்க்க ஆரம்பியுங்கள், உடல் நலன் பெறுங்கள்.

உடல் பருமனைக் குறைக்கும் தக்காளி!
இரத்தத்தைச் சுத்தப்படுத்தவும், இரத்த சோகை குணமாகவும் தக்காளி பயன்படுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கழிவுப்பொருள்கள் அனைத்தும் வெளியேறவும் இது பயன்படுகிறது. விஷப் பொருள்கள் இருந்தாலும் அவற்றையும் வெளியேற்றிச் சிறுநீரகங்களை புதுப்பித்துத் தருகிறது தக்காளிச் சாறு.

தக்காளி இரசம்
நன்கு பழுத்த தக்காளிப் பழத்தையே சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும்.
பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் ‘சி’ அதிகமாய் இருக்கிறது.
சிறு நீர் எரிச்சல், மேக நோய், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவை குணமாகவும் தக்காளிச் சாறு சிறந்தது. மேற் குறித்த நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களைச் சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும்; நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
உடல் பருமன் குறையும்!

100 கிராம் தக்காளிப் பழத்தில் கிடைக்கும் கலோரி 20தான். எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும்.
உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்கள் காலைப் பலகாரமாய் பழுத்த இரு தக்காளிப் பழங்களைச் சாப்பிட்டால் போதும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படிச் சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். எடை கூடாது. காரணம், அதில் மாவுச்சத்து குறைவாய் இருப்பதுதான். அத்துடன் உடலுக்கு மேற்கண்ட தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகின்றன.

இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமைனக் குறைக்கலாம்.
தக்காளி உடலில் உள்ள நோய்க்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் விரும்பிப் பருகப்படும் பானங்களுள் தக்காளிச் சாறும் ஒன்றாய் இருக்கிறது.
தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

பார்வை நன்கு தெரிய
இரவு நேரத்தில் பார்வை சரியாகத் தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிடவேண்டும். அப்போதுதான் பறித்த தக்காளிச் செடியின் இலைகளை 15 நிமிடங்கள் சுடுதண்ணீரில் வைக்கவும். பிறகு, வடிகட்டி தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மட்டும் சாப்பிடவும்.

செடியின் தண்டை அரைத்து, அதில் வினிகரையும் கலந்து மார்புகளின்மீது வைத்துக் கட்ட வேண்டும். இதனால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

காய்ச்சலா? பித்த வாந்தியா?
காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், பித்த வாந்தி, கல்லீரல் ஆகியன தொடர்பாக ஏற்படும் மஞ்சள் காமாலை, மலச்சிக்கல், உணவு செரியாமை, வாயுத்தொந்தரவு, நெஞ்செரிச்சல் முதலியவை குணமாக ஒரு டம்ளர் தக்காளிச்சாறு போதும். காலையில் வெறும் வயிற்றில் தலா ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இந்தச் சாற்றை அருந்த வேண்டும்.

ஆஸ்துமாவா?
காச நோய், நுரையீரல் நோய், ஆஸ்துமா போன்ற மூச்சுக் குழல் நோய்களும் இச்சாறால் குணமாகின்றன. இரவில் படுக்கப்போகும் போது ஒரு டம்ளர் தக்காளிச்சாறு மிக்ஸி மூலம் தயாரித்துக் கொள்ள வேண்டும். அதில தலா ஒரு தேக்கரண்டி தேனும், ஏலக்காய்த் தூளும் கலக்க வேண்டும்.

முதலில் மூன்று உரித்த வெள்ளைப்பூண்டுகளை (மூன்று பற்கள்) மாத்திரை போல தண்ணீர் மூலம் விழுங்க வேண்டும். பிறகு டம்ளரில் உள்ள தக்காளிச் சாற்றை அருந்த வேண்டும். மேற்கண்ட மூன்று வகை நோயாளிகளுக்கும் மிக உயர்ந்த நன்மையளிக்கும் சிகிச்சை முறை இது.

சளி முற்றிலும் அகன்றுவிடும். அதனால் இவர்கள் குணமாகிவருவதும் கண்கூடாய்த் தெரியும். தக்காளியைப் பழமாகச் சாப்பிட்டாலும் இரசமாகச் சாப்பிட்டாலும் உடனே உடலில் கலந்துவிடும். இதனால் சக்தியும் கிடைக்கும். உண்ட மற்ற உணவுகளும் உடனே செரிமானம் ஆகிவிடும்.

இந்தக் காரணத்தால்தான் பெரிய ஓட்டல்களில் முதலில் தக்காளி சூப் தருகிறார்கள். பலமான விருந்தை ருசித்துச் சாப்பிட, ஏற்கனவே வயிற்றில் உள்ளதை இது ஜீரணிக்கச் செய்துவிடும்.

அத்துடன் இது உடனே உடலால் கிரகித்துக் கொள்ளப்படுவதால் வயிறு நிரம்பிவிடும். எனவே உணவைக் குறைவாகவே உண்ணுவார்கள். அதாவது வயிற்றில் பாதியைத் தக்காளி இரசம் அடைத்துக் கொள்வதால் மிகுதியாகச் சாப்பிட முடியாது. ஓட்டலுக்கு இந்த முறையால் லாபமும் கிடைக்கும்.

பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நல்லெண்ணெயில் தக்காளி சூப்பாகவும் அருந்தலாம். இந்த முறையும் உடலுக்கு நல்லதே. நோயின் போது ஏற்படும் நாக்கு வறட்சிக்கு இப்படித் தக்காளி சூப் மிகவும் நல்லது.

தக்காளியில் உள்ள இரும்புச்சத்து எளிதில் ஜீரணமாகிறது. அத்துடன் முழுமையாக உடலில் கலந்துவிடுகிறது. இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைந்து குணமாகிறார்கள். இவர்கள் தக்காளிச்சாறு இரண்டு அல்லது மூன்று தினமும் அருந்த வேண்டம். ஒரு வேளைக்கு ஒரு டம்ளர் சாறே போதும்.

பார்வை நரம்புகள் பலம் பெற
வெண்ணெயில் உள்ளதைவிட அதிக அளவு வைட்டமின் ‘ஏ’ தக்காளிப் பழங்களில் இருக்கிறது. அதனால் கண் பார்வைக் கோளாறுகளுக்கும், உடல் பலவீனத்துக்கும் தக்காளிப் பழத்தையும், தக்காளிச் சாற்றையும் லண்டனின் உள்ள கைஸ் மருத்துவமனை (Guy’s Hospital) நோயாளிகளுக்குத் தொடர்ந்து கொடுத்துக் குணப்படுத்தி வருகிறது. இதற்குத் ‘தக்காளி வைத்தியம்’ என்று பெயர்.

தக்காளி தென்னமெரிக்காவில் தோன்றியது. ஐரோப்பியர்களால் ‘காதல் பழம்’ என்று வழங்கப்படுகிறது. உலகில் அதிகம் விளையும் முதல் காய்கறி உருளைக்கிழங்கு, இரண்டாவதாக அதிகம் விளையும் காய்கறி தக்காளி.

பதப்படுத்தப்பட்ட தக்காளி சூஸ் உலகிலுள்ள அனைவராலும் விரும்பப்படுகிறது.
தக்காளியுடன் துவரம் பருப்பு சேர்த்து பச்சடி செய்து எல்லா வயதினரும் நன்கு சாப்பிட்டு ஆரோக்கியமாய் திகழலாம்.

ஞாபக சக்தியைப் பெருகச் செய்யும் கீரை – வல்லாரை

ஞாபக சக்தியை வளர்க்கப் பயன்படும் காய்கறிகளுள் இலைக்காய்கறிகளுள் முதலிடத்தில் இருப்பது, வல்லாரைக் கீரை.

தங்களின் சிந்தனை சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறவர்கள் வாரம் ஒரு முறை சாப்பிட வேண்டிய கீரை இது.

இந்திய மருத்துவத்தில் ஞாபகசக்தியை வளர்க்க வல்லாரையைவிடச் சிறந்த மருந்து எதுவும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்பவர்களுக்கு வல்லாரை மாத்திரைகள் ஆங்கில மருந்துக் கடைகளில் விற்கப்படுகிறது.

அளவோடு சாப்பிட்டு நலமுடன் வாழ வேண்டும்.

மூளைக்கு நல்ல பலத்தையும், திறமையையும், சுறுசுறுப்பையும் தரும் இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்கக் கூடாது. அப்படி உபயோகித்தால் மூளை பாதிக்கப்படும். உடலில் வலி அதிகமாகும். கோமா நிலைக்குக் கொண்டு போய்விடும். எனவே வல்லாரைக் கீரையை அளவோடு பயன்படுத்த, பலவிதமான நோய்களையும் குணப்படுத்தி, நலமோடு வாழ வேண்டும்.

இது நம் நாட்டு இலைக் காய்கறி

ஆறு, வாய்க்கால், குளம், ஏரி முதலியவற்றின் ஓரங்களில் தானாகவே வளர்கிறது. வல்லாரைக் கீரை படர்கொடி, போல் வளரும். வல்லாரையின் தாயகம், இந்தியாதான். இது செடிதான்.
அதனால்தான் ஆங்கிலத்தில் இந்தக் கீரைக்கு இந்தியன் பென்னிவொர்ட் என்று பெயரிட்டிருக்கிறார்கள். பண்டைய இந்தியர்களின் சமஸ்கிருத நூல்களில் இந்தக் கீரையின் மருத்துவக் குணங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் பயிராகும் இக்கீரை இரண்டாயிரம் மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் கூடத் தானாகவே வளர்கிறது.

பறித்த புதிய வல்லாரைக் கீரையில் வெல்லாரைன் (Vellarine) என்னும் எண்ணெய்ப் பொருள் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கீரை மிகுந்த நறுமணத்தை உணவுக்கு ஊட்டுகிறது.

உலர்ந்த கீரையில் இந்த நறுமணம் மறைந்துவிடுகிறது. ஆனாலும் கீரையின் மருத்துவக் குணங்கள் அழியாமல் உலர்ந்த கீரையிலும், கீரைப் பொடியிலும் அப்படியே கிடைக்கிறது.

வல்லாரையில் கொழுப்பு எண்ணெய் சிட்டோஸ்டிரோல், டானின், ஒரு வகை மரப்பசை போன்ற பொருள்கள் உள்ளன. உலர்ந்த செடியில் காடிப்பொருளும், ஹைடிரோ கோட்டிலைன் என்னும் பொருளும் உள்ளன.

கீரையிலும் வேரிலும் வெல்லாரைன், பெக்டிக் அமிலம், நீரில் கரையாத மரப்பிசின் போன்றவை இருப்பதால் கசப்புச் சுவை அதிகம் இருப்பது போல் உணருகிறோம்.

கீரை மட்டும் இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவைகள் கொண்டுள்ளது.

ஊட்டம் தரும் இலைக்காய்கறி
வல்லாரைக்கீரை மிகுந்த சத்துணவு நிரம்பியது. அத்துடன் அது எளிதில் உணவை வயிற்றுக்குள் கொண்டு சென்று செரிக்கச் செய்துவிடுகிறது. உணவுப் பொருள்களையும் நன்கு உறிஞ்சிக்கொண்டு கழிவுப்பொருள்களையும் உடனே வெளியேற்றி உடலை பழையபடி ஆரோக்கியமான நிலைக்கே கொண்டுவந்துவிடுகிறது.

காய்ச்சல் உடனே தணிய….
அதனால்தான் எல்லாவகையான காய்ச்சல்களுக்கும் இதன் இலை, துளசியிலை, மிளகு போன்றவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கொடுக்கிறார்கள். காலை, மாலை என இருவேளை கொடுத்தால் காய்ச்சல் தணியும், இலையாகக் கிடைக்காதவர்கள் தலா அரை தேக்கரண்டி வீதம் வல்லாரைக் கீரைப்பொடி, துளசி இலைப் பொடி, கால் தேக்கரண்டி மிளகுப்பொடி சேர்த்துச் சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பிட வேண்டும்.

சிறு நீர் நன்கு பிரிய
இக்கீரையைச் சாதாரணமாய்ப் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், இது உடலில் உள்ள வீக்கங்களுடன் போரிட்டுச் சமாதானப்படுத்திவிடும். உள் உறுப்புகளில் உள்ள வீக்கங்களும் குணமாகிவிடும். ஓரளவு பேதி மருந்து போலவும் இது செயல்படுகிறது. சிறு நீர் நன்கு சுரந்து உடனே வெளியேறவும் இக்கீரை பயன்படுகிறது. வாரம் ஒரு முறை உடல் உறுப்புகளைப் புதுப்பித்துக்கொள்ளவும். பல்வேறு விதமான நோய்க் கிருமிகள் அகலவும் இக்கீரையைச் சமைத்துச் சாப்பிடலாம்.

ஆரோக்கியத்தைப் புதுப்பிக்க ஒரு டீஸ்பூன்!

இல்லையெனில் உலர்ந்த வல்லாரைக் கீரைப்பொடியில் ஒரு தேக்கரண்டியும் அதே அளவு நல்லெண்ணெயும் சேர்த்துச் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இந்த முறையில் தினசரி பயன்படுத்தினாலும் ஞாபக சக்தியும் உடல் நலனும் பாதுகாக்கப்படும்.

இக்கீரையின் தண்டு, வேர், பூ என அனைத்தும் சிறந்த உணவாகவும், நன்கு குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகின்றன. மேலை நாடுகளில் இந்தக் கீரையைச் சூப்பாக தயார் செய்து அருந்துகிறார்கள்.

100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி 37 ஆகும. இதில் ஈரப்பதம் 84.5%, புரதம் 2.1%, கொழுப்பு 0.5%, தாதுஉப்புகள் 2.7%, நார்சத்து 4.2%, மாவுச்சத்து 6.0% என்று உள்ளன. இத்துடன் 224 மில்லி கிராம் கால்சியமும், பாஸ்பரஸ் 32 மில்லி கிராமும், இரும்புச்சத்து 68.8 மில்லி கிராமும் உள்ளன. எனவே, உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் இரத்த சோகை குணமாக, இக்கீரையைத் தவறாது வாரம் ஒரு முறை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வல்லாரையில் நார்ச்சத்து அதிகமாய் இருப்பதால் கொலாஸ்டிரல் குறைக்கப்படும். மலச்சிக்கலும் உடனுக்குடன் குணப்படுத்தப்படும்.

இருமலா?
வாய்ப்புண், வயிற்றுவலி, எக்ஸிமா என்னும் சொறி சிரங்கு, வயிற்றுப்புண் முதலியவற்றையும் இக்கீரை குணப்படுத்துகிறது. டி.பி. நோயால் ஏற்படும் இருமலையும் குணப்படுத்துகிறது.
சொறிசிரங்கு, வி.டி. நோய், கெட்டுப்போன இரத்தம், வயிறு தொடர்பான நோய்கள் முதலியவை குணமாக ஒரு டம்ளர் பசும் பாலில் ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைப் பொடியும், ஒரு தேக்கரண்டி அதிமதுரமும் சேர்த்துக் கலந்து கொடுக்க வேண்டும். மிகச்சக்தி வாய்ந்த மருந்து இது. குணம் தெரிய ஆரம்பிக்கும் போது கீரைப்பொடி, அதிமதுரம் முதலியவற்றின் அளவைக் கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துப் பாலை அருந்த வேண்டும்.

வெட்டைச்சூடு குணமாகக் காலையில் வெறும் வயிற்றில் மிளகுப்பொடி சேர்த்து ஒரு தேக்கரண்டி வல்லாரைக் கீரைச் சாறு அருந்த வேண்டும்.

தலை முடி நன்கு வளரும்

ஞாபக சக்தி அதிகரிக்கவும், மன நோய் குணமாகவும், மூளை நல்ல பலத்தைப் பெறவும், தலை முடி நன்கு வளரவும் ஒரு டம்ளர் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு இக்கீரைக் பொடியைக் கலந்து அருந்த வேண்டும். தினமும் ஒரு வேளை மட்டும் இந்த முறையில் அருந்தினால் போதும்.
மனநோயாளிகள் விரைந்து குணமாக வாரம் இருமுறை மட்டும் இக்கீரையைச் சமைத்துப் பரிமாறலாம்.

காசநோய்க்காரர்களுக்கு ஏற்படும் தொண்டைக்கட்டு, தொண்டைக்கம்மல் முதலியவை இக்கீரையை உண்டால் குணமாகும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் சீதபேதி உடனே குணமாக நான்கு இலைகள், சீரகம், சர்க்கரை சேர்த்து துவையலாக அரைத்துப் பயன்படுத்த வேண்டும். இது மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகும். இந்தத்துவையலை கொப்பூழ் பகுதியைச் சுற்றித்தடவ வேண்டும், உணவாகவும் கொடுக்க வேண்டும்.

நரம்புத் தளர்ச்சியா?
தோல், நரம்பு, இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக இக்கீரையைப் பொடியாகத் தினமும் பாலுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். பலவீனம் அடைந்த நரம்புகளைப் புதுப்பிக்க அரை தேக்கரண்டி வீதம் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும. முதல் நாள் மட்டுந்தான் அரை டீஸ்பூன். மறுநாளிலிருந்து அளவைக் குறைத்துக்கொண்டே வந்து ஒரு சிட்டிகை வரை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு என்றால் ஒரு சிட்டிகையே போதும்.

யானைக்கால் வியாதி குணமாகும்!
இக்கீரையின் செடி, தண்டு, கீரை முதலியவற்றலிருந்து சாறு எடுத்து, யானைக்கால் வியாதியுள்ள பகுதிகளில் தடவினால் நாளடைவில் குணமாகும். அல்லது பறித்த கீரைகளை வேகவைத்துத் துணியில் கட்டிச் சூட்டுடன் குறிப்பிட்ட இடங்களில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இக்கீரைப் பொடித் தூளை நாட்பட்ட புண்கள் மீது தூவினால் குணமாகும். மேகப்புண் மற்றும் சொறி சிரங்குகளின் மீது இது போலவே தூவ வேண்டும்.

பல்லில் படிந்துள்ள மஞ்சள் நிறம் அகல இந்தக் கீரையால் பல் துலக்கலாம். நிறம் மாறி பற்களும் வெண்மையாகிவிடும்.

கொப்புளங்கள் குணமாக இலைச் சாறுடன் கருஞ்சீரகம் நெய் ஆகியன சேர்த்துப் பூச வேண்டும்.
ஆரோக்கியத்துடன் உடல் உறுதி பெற வல்லாரைக் கீரையையும், கீரைப்பொடியையும் அளவுடன் பயன்படுத்தி, அளவற்ற நன்மை பெற வேண்டும்.

வெங்காயம் கொலாஸ்டிரலைக் குறைக்கும் அணுகுண்டு
காய்கறிகளுள் மிகவும் உறைப்பானது இஞ்சி. இஞ்சியைத் தொட்டு நாக்கில் வைத்தால் மிகவும் காரமாய் இருக்கும். இரண்டாவது காரமான காய்கறி வெங்காயம்.

ஆனால், வெங்காயத்தை ரசித்துச் சாப்பிடலாம். அவ்வளவாக காரம் இதில் இல்லை. நோய்களைக் குணப்படுத்தும் விதத்தில் அணுகுண்டைப் போல் பேராற்றல் வாய்ந்த காய்கறியாக வெங்காயம் சிறந்து விளங்குகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் வெங்காயம் இயற்கை கொடுத்துள்ள உணவு வகைகளுள் முதலிடத்தில் இருக்கிறது. உயர்தரமான புரதம், அதிக அளவில் கால்சியம், ரிபோபிளவின் போன்றவை இதில் அடங்கியுள்ளன. சிறு வெங்காயம், பெரிய வெங்காயம் என்று பல்வேறு இனங்கள் உள்ளன. அனைத்தையும் நீண்ட நாள்கள் பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் வைததிருந்தும் பயன்படுத்தலாம்.

வெங்காயத்தைக் கடியுங்கள்
வெங்காயத்தில் உள்ள வாசனை கந்தகப் பொருள்களின் கூட்டுப் பொருளால் உண்டாகிறது. ஒரு வெங்காயத்தைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிட்டால் அந்த வாசனை மறைய நீண்ட நேரம் ஆவதற்கு இதுதான் காரணம் இப்படிக் கடித்துச் சாப்பிட்டால் வாயில் உள்ள புண், கண்வலி, முதலியன குணமாகும். காரணம், வெங்காயத்தில் அதிக அளவு உள்ள ரிபோபிளவின் என்னும் ‘பி’ குரூப் வைட்டமினே இவற்றை எல்லாம் குணப்படுத்துகிறது.

சிறிய வெங்காயம் என்றாலும் சரி, பெரிய வெங்காயம் என்றாலும் சரி இரண்டிலும் ஒரே மாதிரியான மருத்துவக் குணங்கள்தான் உள்ளன.

தரம் மாறலாமா?
வெங்காயத்தை வதக்கியோ வேகவைத்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதில் உள்ள நறுமணச் சுவையோ, குணப்படுத்தும் மருத்துவக் குணங்களோ குறைந்துவிடாமல் அப்படியே கிடைக்கும். உறைப்பு அதிகமுள்ள வெங்காயத்தின் சுவையும் நறுமணமுங்கூட அழிந்துவிடாமல் அப்படியே கிடைக்கும்.
உடலுக்குக் கிளர்ச்சியூட்டும், சிறுநீர்க் கழிவினைத் தூண்டும், தோலைச் சிவக்கவைக்கிற மேற்பூச்சு மருந்தாகப் பயன்படும். கபத்தை வெளிக் கொண்டுவரப் பயன்படும். இவ்வாறு பல்வேறு வகைகளில் வெங்காயம் சிறந்த உணவு மருந்தாகத் திகழ்கிறது.

இரத்தம் விருத்தியாகத் தினமும் வெங்காயத்தைப் பச்சையாகச் சாப்பிட வேண்டும்.
நன்கு செரிமானம் ஆக பச்சையாகவோ, சமைத்தோ மற்ற உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிட வேண்டும்.

காய்ச்சல், சிறு நீர்க் கோளாறு, இருமல் போன்றவை குணமாக பெரிய வெங்காயம் ஒன்றை மிக்ஸி மூலம் இரசமாக மாற்றி அருந்த வேண்டும். வெங்காயம் உடலுக்குக் கிளர்ச்சியூட்டும் மருந்து. எனவே, அதைச் சாறாகச் சாப்பிடுகிறவர்கள் அளவுடன்தான் சாப்பிட வேண்டும்.

உடல் நலத்தோடிருப்பவர்கள் 100 கிராம் பச்சை வெங்காயத்தை மட்டும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளைக்கு எனப் பிரித்து வைத்துக்கொண்டு, தங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குளிர்காய்ச்சல் குணமாக வெங்காயத்துடன் மிளகையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.

நெஞ்சு வலியா? வெங்காயம் போதும்!
இதயப் பையின் சுவர்தசைக்குக் குருதி வழங்கும் நாடி நாளங்களில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தால் நெஞ்சு வலிக்கும். அப்போது வெங்காயத்தை சாப்பிட்டால் உடனே இரத்தம் உறைவது அகற்றப்பட்டு இதயத்துக்குத் தடையின்றி நாளங்கள் வழியாக இரத்தம் செல்லும்,

நெஞ்சு வலியும் குணமாகும். இதனால்தான் இயற்கை மருத்துவர்கள் நெஞ்சுவலித்தால் உடனே வெங்காயம் சாப்பிடச் சொல்கிறார்கள்.

இதய நோயாளிகளும், இரத்த அழுத்த நோயாளிகளும் கொலாஸ்டிரல் குறையவும் இதயம் சீராகத் துடிக்கவும் தினமும் 100 கிராம் வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிடவும்.

புகை பிடிப்பவர்கள் குணம் பெற…

சிகரெட் பிடிப்பவர்கள் நுரையீரல், புகையினால் பாதிக்கப்படுகிறது. இவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்ஸ் வெங்காயச் சாறு வீதம் தினமும் நான்கு வேளை அருந்த வேண்டும். இதனால் நுரையீரல் பலம் பெறும். இதே முறையில் வெங்காயச் சாற்றை அருந்தினால் இருமல், கபம், இரத்த வாந்தி, நீண்ட நாள்களாக இருந்து வரும் ஜலதோஷம், சளி முதலியவையும் பூரணமாய் குணமாகும்.

குளிர்கால ஜலதோஷமா?

ஜலதோஷம், குளிர்காலத்தில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், மார்புச்சளி, சளிக்காய்ச்சல் முதலியவை உடனே குணமாகச் சம அளவு வெங்காயச்சாறு, தேன் முதலியவை கலந்த மிக்ஸரை தயாரிக்கவும். இந்த மிக்ஸியில் தினமும் நான்கு தேக்கரண்டி வீதம் சாப்பிடவேண்டும்.

இந்த மிக்ஸரால் மூச்சுச் குழல் தொடர்பான அனைத்து நோய்களும் எந்த விதமான கெடுதலும் இன்றி உடனே குணமாகும்.

100 கிராம் வெங்காயத்தில் ஈரப்பதம் 82%ம், புரதம் 1.2%ம், கார்போஹைடிரேட் 11.1%ம், மீதியில் கொழுப்பு தாது உப்புகள் நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. 47 மில்லி கிராம் கால்சியமும், 50 மில்லி கிராம் பாஸ்பரஸும், 0.7 மில்லி கிராம் இரும்புச் சத்தும், வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’ முதலியன சிறிதளவும் உண்டு. கிடைக்கும் கலோரி 51.
வெங்காயத்தில் உள்ள இரும்புச்சத்து மிக எளிதாய் உடலில் கலந்துவிடும். இதனால் இரத்த சோகை நோயாளிகள் விரைவில் தேறிவிடுவார்கள்.

தாது பலம் பெறுங்கள்
சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டக்கூடிய முதல் பொருளாய் வெள்ளைப்பூண்டு இருக்கிறது. இரண்டாவதாய் இருப்பது வெங்காயம், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வமில்லாதவர்கள் உரிக்கப்பட்ட வெள்ளை நிற வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி, வெண்ணெயில் வதக்கி எடுக்க வேண்டும். இந்தக் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடவேண்டும். வெங்காயம், வெண்ணெய், தேன் ஆகியன சேர்ந்த இந்தக் கலவை சிறந்த டானிக்காகும். வெண்ணெயில் வதக்கிய வெங்காயத்துண்டுகளை ஒரு பாட்டிலில் நன்கு இறுக்கி மூடி வைத்துக்கெண்டு பயன்படுத்தவும்.

தினமும் வெங்காயத்தை உணவில் சேர்த்தால் தலைவலி, முழங்கால் வலி, பார்வை மங்குதல் முதலியவை குணமாகும்.

சளி உள்ளவர்கள் வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டால் சளி வெளியேறி இரத்தமும் சுத்தமாகிவிடும்.

வெங்காயத்தை வதக்கிச் சூட்டுடன் ஒருதுணியில் வைத்து பருக்கள், புண்கள், வெட்டுக் காயங்கள் முதலிய இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் விரைவில் குணம் பெறுவார்கள்.

காலரா உடனே குணமாக ….
காலரா நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து வெங்காயம். காரம் அதிகம் இல்லாத வெள்ளை நிற வெங்காயத்தில் ஐம்பது கிராமும், பத்து மிளகும் இதற்குப் போதும். உரித்த வெங்காயத்தையும் மிளகையும் ஒன்றாக வைத்து இடிக்க வேண்டும். அதனோடு ஜீனி சேர்த்து காலரா நோயாளிக்குக் கொடுக்க வேண்டும். வெங்காயம், மிளகு, ஜீனி சேர்த்த இந்தத் துவையல் காலரா நோயாளியின் தாகத்தைத் தணித்து மனத்திற்கு அமைதியைத்தரும். மேலும் வாந்தி, சீத பேதி முதலியவற்றையும் உடனடியாக இந்தத் துவையல் கட்டுப்படுத்திவிடும்!

இரத்த மூலம் குணமாகும்
இரத்தமூலம் குணமாக முப்பது கிராம் வெங்காயத் துண்டுகளைத் தண்ணீரில் போடவும். அதில் ஐம்பது கிராம் ஜீனியையும் சேர்த்து அருந்த வேண்டும். தினமும் இரு வேளை அருந்தினால் பத்து அல்லது பதினைந்து நாள்களில் இரத்தமூலமும், மூல நோயும் குணமாகும். வெங்காயத் துண்டுகளை டம்ளரில் நன்கு இடித்துப் போட வேண்டும்.

காதுவலியும் வெங்காயமும்!

காதில் சத்தம் வந்துகொண்டே இருந்தால் (மணி ஒலிப்பது போது போல்) வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியை பிழிந்து சில துளிகளைக் காதில் விட வேண்டும். இது ரஷ்யாவில் பிரபலமான மருத்துவமுறை, மயங்கி விழுந்துவிட்டவர்களின் மூக்கில் இரு துளி வெங்காயச்சாற்றை விட்டால் உடனே மயக்கம் தெளிந்து எழுவார்கள்.

காதில் வலி இருந்தால் சுட வைக்கப்பட்ட வெங்காயச் சாற்றில் ஒரு துணியை நனைத்து அத்துணியைப் பிழிந்து இரண்டு மூன்று துளிகளைக் காதில் விடவேண்டும்.

பற்களில் பாக்டீரியாக்கள் தங்க விடாமல் இருக்கத் தினமும் ஒரு வெங்காயத்தை பச்சயைாகக் கடித்துச் சாப்பிட வேண்டும். இப்படிமென்று தின்றால் பாக்டீரியாக்கள் அழிந்துவிடும் பற்களும், ஈறுகளும் பாதிக்கப்படுவதும் முன் கூட்டியே தடுக்கப்படும்.

பல் வலி உள்ள இடத்தில் ஒரு துண்டு வெங்காயத்தை வைத்துக்கொண்டால் பல்வலி குறையும். பல் ஈறுகளிலும் குறையும். பல் சம்பந்தமான அனைத்து வெங்காய வைத்தியமும் ரஷ்யாவில் பிரபலமான வைத்திய முறைகளாகும்.

வெங்காயத்தின் தாயகம்!
வெங்காயத்தின் தாவர விஞ்ஞானப் பெயர், அலியம் சிபா (Allium cepa) என்பதாகும்.
ஈரான் – பாகிஸ்தான் பகுதியில் தோன்றிய காய்கறி இது. மத்திய ஆசியாவில் தோன்றிய வெங்காயம் பண்டைய காலத்திலேயே மத்திய கிழக்கு நாடுகளிலும், இந்தியாவிலும் பயிர் செய்யப்பட்டுள்ளது.

பண்டைய எகிப்து நாட்டில் மிகவும் பிரபலமான உணவு, வெங்காயம். ஒரு வகை வெங்காயத்தைக் கடவுளாகவே இவர்கள் வணங்கி வந்தார்கள். உறவினர்களைப் பார்க்கப் போகும் போதும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் வெங்காயத்தைப் பரிசுப் பொருளாகக் கொடுத்து மகிழந்தனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகளிலும் வெங்காயம் வைத்தே புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யூதர்களுக்கு மிகவும் பிடித்தமானது வெங்காயம். அதனால் சூயஸ் வளைகுடாவில் ஆனியன் என்று பெயரிலே ஒரு நகரை கி.மு.430இல் யூதர்கள் நிறுவினார்கள். இந்த நகரம் 340 ஆண்டுகள் வரை இருந்தது.

இன்று உலகம் முழுவதும் வெங்காயம் பயிர் செய்யப்படுகிறது.
தாராளமாகவும் கிடைக்கும் வெங்காயம் மிகச்சக்தி வாய்ந்த உணவு மருந்தாகவும் இருப்பது மனிதனுக்கு இயற்கை அளித்துள்ள பெரிய பரிசாகும்.

உடலுக்கு நன்மை செய்யும் கருணைக் கிழங்கு
கிழங்கு வகைகளுள் மிக முக்கியமானது, கருணைக் கிழங்கு.
உருளைக் கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியன போல் உடலுக்கு நன்மை செய்யும் கிழங்கு இது. எல்லா வயதுக்காரர்களும் குறிப்பாக வாத நோயாளிகள், சிறுவர்கள், வயதானவர்கள் என அனைவரும் பயமில்லாமல் சமைத்துச் சாப்பிடலாம். எந்தத் தீங்கும் செய்யாத கிழங்கு என்பதால்தான் இதைக் கருணைக் கிழங்கு என்கிறார்கள்.

100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 111 ஆகும். கால்சியம் 35 மில்லி கிராம், பாஸ்பரஸ் 20 மில்லி கிராம், வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி’ ஆகியவையும் இக்கிழங்கில் உள்ளன. எனவே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இக்கிழங்கு இன்றியமையாத ஒன்றாய்த் திகழ்கிறது.
கால்சியத்தால் குழந்தைகள் நன்கு வளர்கிறார்கள். இதே கால்சியம் வயதானவர்களின் எலும்புகள் பலவீனமடைந்து விடாமல் பாதுகாக்கப்படுகிறது. 100 கிராம் கிழங்கில் கார்போஹைடிரேட் 26%ம் ஈரப்பதம் 69.9%ம் இருப்பதால் உடலுக்கு நன்மையும் சக்தியும் அதிகம் கிட்டுகின்றன.

உடலில் எரிச்சலா?
இக்கிழங்கு வாதநோய், மூல நோய், உடல் எரிச்சல், பெளத்ரம், உடல் சூடு, மாதவிடாய்க் கோளாறு, வயிற்றுஉப்புசம், வயிற்றுவலி, பிற வயிற்றுக் கோளாறு போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

அதனால் ஜப்பானில் நோய்தீர்க்கும் கேப்ஸுல்களாக கருணைக் கிழங்கு கேப்ஸுல்கள் தயாரித்து விற்கின்றனர்.

கருணைக் கிழங்கு ஒல்லியானவர்களைக் குண்டாக மாற்றுகிறது. உடலுக்கு நல்ல வலுவையும் கருணைக் கிழங்கு வழங்குகிறது.

நன்கு பசிக்க …

கருணைக் கிழங்கு மலச்சிக்கலை நீக்கும். நன்கு பசிக்கச் செய்யும். இந்தக் கிழங்கைச் சாப்பிட்டால் உடனே மலச்சிக்கல் குணமாகி அடுத்த வேளை நன்கு ருசித்து ஆவலுடன் சாப்பிட நம்மைத் தயார்படுத்திவிடும்.

‘பசியில்லை, ருசியில்லை’ என்பவர்கள் அவ்வப்போது கருணைக்கிழங்குகளைச் சேர்த்து வருதல் நன்று. அடிக்கடி காபி சாப்பிடுகிறவர்களுக்கு ஏற்படும் பித்தக் கோளாறுகள் இக்கிழங்கால் குணமாகிறது. பசியைத் தூண்டுகிறது.

மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகத் தினமும் இக்கிழங்கை உணவில் சேர்த்து வருதல் வேண்டும்.

சாதாரணமாகக் கருணைக் கிழங்கைத் தோல் நீக்கிச் சிறுதுண்டுகளாய் நறுக்கி குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே மேற்கண்ட நன்மைகள் தொடர்ந்து கிடைக்கும்.

மூலநோய் குணமாக மேற்படி முறையில் சிறுதுண்டுகளாக்கி பசும்பாலில் அவித்து உப்பு சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிட வேண்டும். தினமும் அதிகபட்சம் இரு வேளை இது போல் சாப்பிட வேண்டும்.

பெளத்திரம் என்னும் இரத்த மூலம் குணமாகப் பசும் பாலில் அவித்த கருணைக் கிழங்குடன் உப்பு, ஒரு டீஸ்பூன் சாப்பாட்டு நெய் முதலியவற்றையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகச் சாப்பிடவேண்டும். மூலநோய்க்கான இந்த உணவு மருந்தை தயாரிக்க மண்சட்டியிலேயே கருணைக்கிழங்கை பயன்படுத்தவேண்டும்.

செரிமானத்துக்கு ….
அடிக்கடி வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி ஏற்படும் வளரும் குழந்தைகளுக்கு கருணைக் கிழங்கைச் சமைத்துக் கொடுத்து வந்தால் போதும். இக்கிழங்கில் உள்ள செரிமானப் பொருள்களும், கால்சியச் சத்தும் குழந்தைகளுக்கு அதிகம் நன்மை செய்கின்றன.

மூலம், பசியின்மை, தாது பலவீனம் போன்றவை குணமாகக் கருணைக் கிழங்கின் தண்டை கீரை போன்று சமைத்து உண்ண வேண்டும். இதனால் உடலுக்குப் பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கின்றன.

கருணைக் கிழங்கைப் பிரிட்டனில் என்ன செய்கிறார்கள்.
கருணைக் கிழங்கின் தாயகம் இந்தியாதான். இரு கோளார்த்தங்களிலும் இக்கிழங்கு பயிராகிறது.
இந்தியாவைப் போலவே தெற்கு வியட்நாம், தெற்குக் கடல் தீவுகள் ஆகிய பகுதிகளிலும் கருணைக் கிழங்கு முக்கியமான சிறந்த உணவாகக் கருதப்படுகிறது. ஒரு விதமான நறுமணத்துடன் சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும் இக்கிழங்கை மேற்கண்ட மூன்று நாடுகளின் மக்கள்தாம் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

கருணைக் கிழங்கு வகையை சேர்ந்த காட்டுக் கருணை, காடுகருணை ஆகியவை மிகவும் காரமாய் இருக்கும். இவற்றை அளவுடன்தான் சாப்பிடவேண்டும்.

டி.பாட்டாட்டஸ் என்பது சீன வகை கருணை கிழங்கு ஆகும். இந்தக் கிழங்கை வீட்டை அழகுப்படுத்துவதற்காக பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிர் செய்கின்றனர். வீடுகளில் இக்கிழங்கு அழகிற்காகத் தொங்கும். இதில் வேலைப்பாடுகள் செய்தும் தொங்க விட்டிருக்கிறார்கள்.

கருணைக்கிழங்கின் மருத்துவக் குணங்களை நன்கு அறிந்திருந்த இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்களே!.


வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

அடிக்கடி காய்ச்சல், எப்போதும் சளித் தொந்தரவு, எந்த உணவையும் ருசித்துச் சாப்பிட்ட முடியாமை, நீரிழிவு, எப்போதும் உடலில் சூடு, ஜலதோஷம், சொறிசிரங்கு, பித்தக் கோளாறுகள் போன்ற குறைபாடுகளைக் களைவதில் முதலிடத்தில் இருக்கும் காய்கறிகளின் கோவைக்காயும் ஒன்றாகும்.

காரணம்?
இது கத்தரிக்காயை விடக் கசப்புச் சுவையுடையது. இந்தக் குணத்தால் மேற்கண்ட வியாதிகளைக் குணப்படுத்திவிடுகிறது.
கோவைக் காயைச் சமைத்தே சாப்பிடலாம். இல்லையெனில் நறுக்கப்பட்ட இக்காய்த் துண்டுகளை வெயிலில் காயப்போட்டு, அவற்றின் மீது உப்பு இட்டு மோரைத் தெளித்து மீண்டும் காயப்போட்டு வற்றல்களாக எடுத்துவைத்துக் கொண்டு பொரித்துச் சாப்பிடலாம்.

இந்தியாதான் இதன் தாயகம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வீடுகளில பயிர் செய்யப்படுகிறது.

கோவைக்காயின் வேர்கள், தண்டுகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றைத் தோல் வியாதிகள், நீரிழிவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், ‘பிரான்கைட்டிஸ்’ போன்ற நோய்களைக் குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.

கோவைக் கீரையும் கசக்கும். ஆனால், அது மருத்துவக் குணம் நிரம்பியது. மற்ற கீரைகளுடன் இதைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உணவுகள் விரைந்து ஜீரணமாகும்.

அடுத்த வேளை உணவு மிகவும் ருசியாய் இருக்கும். நாக்கு செத்துப்போனவர்கள் சர்க்கரையையும், உப்பையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வார்கள். கோவைக்காயையும், கோவைக் கீரையையும் இவர்கள் சாப்பிட்டால் இவர்கள் நாக்கு மீண்டும் சக்தியுடன் உயிர் பெற்றுவிடும்.

இக்கீரை கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். இக்கீரையின் கஷாயம் இருமல், நீரடைப்பு முதலியவற்றை உடனே குணமாக்கும். சீதபேதியைக் குணப்படுத்த இதன் இலைச்சாற்றை மிகவும் விருப்பத்துடன் அருந்த வேண்டும்.

வெட்டை நோயைக் குணப்படுத்த இக்காயின் இலைச் சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய், முதல் நாள் நீராகாரம் முதலியவற்றைச் சேர்த்து அருந்த வேண்டும். பத்து நாட்கள் இதுபோல் ஒரு வேளை அதிகாலையில் அருந்தி வந்தால் வெட்டை நோய் முற்றிலும் குணமாகும்.

இலைச் சாறுடன் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைப் படர்தாமரை மீது பூசி வந்தால் படர்தாமரை விரைவில் குணமாகும்.

கோவைக்கொடியின் வேரில் நீரில் கரையாத ஒரு வகை மரப்பிசின் இருக்கிறது. அதனால் இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் சாற்றை நீரிழிவு நோயாளிகளுக்குச் சித்த மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.

கோவைப்பழம் மிகவும் ருசியானது. அதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து முதலியவை உள்ளன. சிந்தனையாளர்களும், ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிபவர்களும் இதைப் பயன்படுத்தினால் மலச்சிக்கல் ஏற்படாது. மூளையும் உடலும் சுறுசுறுப்புடன் திகழும், நன்கு பசியெடுக்கும்.

நோஞ்சான் குழந்தைகள் நன்கு வளர இதில் உள்ள இரும்புச் சத்து பயன்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகளை அண்டவிடாதபடி செய்துவிடுவதால்தான் சித்த மருத்துவர்கள் கோவக்காய், கோவக்காய் இலை முதலியவற்றையும் பயன்படுத்திப் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தி, கைராசியான மருத்துவர் என்னும் பட்டத்தையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.

கோவக்காய், கீரை, பழம் முதலியவற்றை எல்லா வயதினரும் நன்கு உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழலாம்.
எந்த நோய்க்காரரும் விலக்கக்கூடாத காய் இது!

புத்துணர்ச்சி தரும் சுரைக்காய்
உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காய்.

சுரைக்காய் எவரும் பச்சையாக சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும்.

சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். பித்தத்தை வெளியேற்றும். புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது.

சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.

100 கிராம் சுரைக்காயில் கிடைக்கும் கலோரி அளவு 12 தான். அதில் சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 10 மில்லி கிராமும், இரும்புச் சத்து 0.7 மில்லி கிராமும், வைட்டமின் பி போன்றவை சிறிதளவும் உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் உள்ளன.

எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.

அதிக தாகத்தைக் கட்டுப்படுத்த வழி!
கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.

கோடைக் காலத்தில் சுரைக்காய்ச் சாம்பார், பச்சடி தயாரித்துச் சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.

தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் (இரவில்) நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்க்க வேண்டும். இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும்.

சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.
கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.

வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம்.

பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது.
இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று நம்பப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.

சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் Bottle Gourd என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய்ச் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர்.

வயிற்றுப்புசத்தைக் குணமாக்கும் புதினாக்கீரை
வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள்காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், இயற்கையான குடும்பக்கட்டுப்பாடு திட்ட முறை ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை, புதினாக்கீரையாகும்.

மருத்துவக் குணங்களுடன் மனத்தை மயக்கும் மணத்தையும் இக்கீரை பெற்றுள்ளது. எல்லா உணவு வகைகளிலும் மணம் ஊட்ட இக்கீரையை அயல் நாடுகளில் சேர்க்கின்றன. இதற்காகவே தோட்டம் இல்லாத சூழ்நிலையிலும் தொட்டியிலேயே இக்கீரையைப் பயிர் செய்கின்றனர்.

100கிராம் புதினாக்கீரையில் ஈரப்பதம் 85%ம், புரதம் 5%ம், கார்போஹைடிரேட் 6%ம், நார்ச்சத்து 2%ம் உள்ளன; இரண்டு சதவிகிதத்தில் தாது உப்புகளும், கொழுப்பும் அடங்கியுள்ளன. கால்சியம் 200 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 62 மில்லிகிராமும், இரும்புச்சத்து 15.6மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி’ 2,700 சர்வதேச அலகும் உள்ளன. வைட்டமின் ‘சி; 27 மில்லிகிராமும், வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘ஈ’ முதலியன தக்க அளவிலும் அமைந்துள்ளன.

இதில் கிடைக்கும் கலோரி 48 ஆகும்.
புதினா உணவிற்கு நறுமணமூட்டும் உயர்ந்த வகை மூலிகையும் ஆகும். நறுமணமுள்ள சாஸ்வகைகள், பழச்சாறுவகைகள் தயாரிக்கும் போது புதிய புதினாக்கீரைகளையோ உலர்ந்த புதினா இலைத் தூளையோ உபயோகிக்கின்றனர்.

அனைத்துத் தனிபண்டப் பொருள்களைத் தயாரிக்க இக்கீரையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைப் பயன்படுத்துகின்றனர். இதே புதினா எண்ணெய் பற்பசைகள், மருத்துவப்பொருள்கள், மிட்டாய், சூயிங்கம் முதலிய தயாரிப்புகளிலும் முக்கிய மூலப் பொருளாய் இடம் பெறுகிறது.

உலர்ந்த புதினாக் கீரையைப் பொடிசெய்து பல் துலக்கினால் பல் தொடர்பான அனைத்து நோய்களும் உடனே குணமாகும்.

நன்கு பசி எடுத்துச் சாப்பிட….
வயிற்று உப்புசத்திற்கும், நரம்புத்தளர்ச்சிக்கும், இசிவு நோய்க்கும் அரியமருந்து புதினாக் கீரையாகும். அப்போதுதான் பறித்த புதினாக் கீரையை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து சாறெடுத்து அருந்தினால் நன்கு செரிமானமும் ஆகும். நன்கு பசியெடுக்கும், ஒருகப் சாற்றில் தலா ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசமும் தேனும் சேர்த்து அதிகாலையில் அருந்த வேண்டும்.

(புதினாச்சாறு தயாரிக்க 50கிராம் கீரையே போதும்) இப்படி அருந்தினால் காலை நேர வயிற்றுப்போக்கு, பித்தமயக்கம், காலையில் எழுந்ததும் ஏற்படும் காய்ச்சல், சிறுநீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்புகள், வயிற்றுப்பொருமல், குழந்தைகளின் மலக்குடலில் உள்ள கீரைப் பூச்சிகள் முதலியன உடனே குணமாகும்; உணவு உடனே செரிமானம் ஆகும். ஒரு கப் புதினாச் சாறு அருந்த விருப்பம் இல்லை என்றால், மூன்று வேளையும் தலா ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றில் தேனையும் எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து உணவு சாப்பிடுவதற்கு முன்பாக அருந்தினால் போதும், மேற்கண்ட அனைத்து நன்மைகளும் கிட்டும்.

புதினா இலைகளைப் பச்சையாகவும் மென்று தின்னலாம். அனைத்து மருத்துவ நன்மைகளும் கிடைக்கும்.

வாந்தி குணமாக….
வாந்தி, குமட்டல், பசியின்மை போன்ற கோளாறு உள்ளவர்கள் புதினாத் துவையல், புதினாசட்னி என்று தயாரித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். புதினாக்கீரையுடன் புளி, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு முதலியவற்றைச் சேர்த்து, முதலில் வதக்கி பிறகு அரைத்துத் துவையல் செய்ய வேண்டும்.

அடிக்கடி வயிற்றவலியால் வருந்துபவர்கள் இந்த முறையில் துவையல் செய்து, பலகாரம், சாதம் முதலியவற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் வயிற்று வலி பூரணமாய்க் குணமாகும்.

இக்கீரையைப் பச்சடியாகக் சமைத்துச் சாப்பிட்டாலும் வாந்தி, பசியின்மை அகலும். புதினாக் கீரையுடன் இஞ்சியும், மிளகும் சேர்த்துப் பச்சடி தயாரிக்க வேண்டும்.

ஆஸ்துமா குணமாகப் புதினாக் கீரை போதும்!
மூச்சுவிடச் சிரமப்படுபவர்களும், ஆஸ்தமா நோயாளிகளும், எலும்புருக்கி மற்றும் வறட்டு இருமல், சளி முதலியவற்றால் அவதிப்படுபவர்களும் பின் வருமாறு உட்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி புதினாச்சாற்றுடன் தலா இரு தேக்கரண்டி வினிகர், தேன், நான்கு அவுன்ஸ் காரட் சாறு ஆகியவற்றைக் கலந்து, தினமும் மூன்று வேளை அருந்த வேண்டும்.

இது சிறந்த மருத்துவ டானிக் ஆகும். மேற்கண்ட நோய்களுக்கு வேறு எம்மருந்து உட்கொள்பவரும் இந்த டானிக்கை உட்கொள்ளலாம். இது கட்டியான சளியை நீர்த்துவிடக் செய்துவிடுகிறது. டி.பி. மற்றும் ஆஸ்துமா தொடர்பான நோய்க்கிருமிகள் வந்து தாக்கமுடியாதபடி நுரையீரல்களுக்கு நல்ல ஊட்டச்சத்தையும் இந்த டானிக் வழங்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. அதனால் ஆஸ்துமாகாரர்கள் ‘கர்புர்’ ரென்று மூச்சுவிடச் சிரமப்படாமல் நிம்மதியாய் இரவில் தூங்கலாம்.

சுவை நரம்புகள் சக்தி பெற…
பச்சையாக மென்று புதினாக்கீரையை சாப்பிட்டால் பல் ஈறுகள் பலம் பெறும். பல் தொடர்பான நோய்கள் ஏற்படாமல் முன்கூட்டியே தடுக்கலாம். பற்சிதைவும் தடுக்கப்படும். பற்கள் விழுவதும் தாமதப்படும். மேலும் கீரையை மெல்லுவதால் நாக்கில் உள்ள சுவை நரம்புகள் மீண்டும் சக்தி பெறுகின்றன. இதனால் இனிப்பு, உறைப்பு போன்ற எல்லாவிதமான சுவையுள்ள உணவு வகைகளையும் நன்கு ருசித்துச்சாப்பிட முடியும்.

மஞ்சள் காமாலை குணமாக…..
உலர்த்தப்பட்ட புதினாக் கீரையைப் பொடி செய்து பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மஞ்சள் காமாலை, வாதநோய், காய்ச்சல் முதலியவை குணமாக, மேற்கண்ட நோய்கள் குணமாகும்வரை, இரு சிட்டிகை புதினாப் பொடியைச் சோற்றிலோ ஒரு டம்ளர் தண்ணீர் கலந்தோ சாப்பிட வேண்டும். அவ்வாறு மூன்று வேளை உட்கொள்ள வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் தேயிலைத் தூளிற்குப் பதிலாகப் புதினாத் தூளைப் பயன்படுத்தித் தேநீர் தயாரித்து அருந்தினால் ஒவ்வொரு நாளும் புத்தம் புது துடிப்புடன் கழியும், சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். புதினாத்தேநீர் தயாரிக்கும் போது பாலும் சேர்த்துத்தான் தயாரிக்க வேண்டும். பால்சேர்த்துத் தயாரிக்கப்பட்ட புதினாத் தேநீர் வயிற்றுவலியைப் போக்கி நலம் பயக்கும்.

பாடகர்கள், பேச்சாளர்கள் ஆகியோர் இனிய குரல் வளம் பெற….
புதினாக்கீரையைக் கஷாயமாய்த் தயாரித்து, அதைக் கொண்டு வாயை நன்கு கொப்புளித்தால் பாடகர்கள் இனிமையான குரல் வளத்தைத் தொடர்ந்து பெறுவார்கள்; பேச்சாளர்கள்

தொண்டைக்கட்டு இல்லாமல் உரத்த குரலில் நன்றாகப் பேசமுடியும். பாட்டுக் கச்சேரி செய்யுமுன்பு இந்தக் கஷாய நீர் கொண்டு வாய் கொப்பளித்து விட்டுப் பாட ஆரம்பித்தால் குரல் பிசிறின்றி ஒலிக்கும். மேற்படி புதினாக் கஷாயத்தில் ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்த பிறகே வாயைக் கொப்புளிக்க வேண்டும்.

கர்ப்பம் தரிக்காமல் இருக்க….
ஆயுர்வேத மருத்துவத்தில் கெடுதல் விளைவிக்காத குடும்பக்கட்டுபாட்டு மருந்தாகப் புதினாப்பொடி திகழ்கிறது. கரு உருவாவதைத் தடுக்க நினைக்கும் பெண்கள், தாம்பத்தய உறவுக்கு முன்னால், ஒரு தேக்கரண்டிப் பொடியை வாயில் போட்டுத் தண்ணீர் ஊற்றிக்கொண்டால் போதும்.

மாதவிடாய் தாமதமானால், மூன்று அல்லது நான்கு நாள்கள், ஒரு தேக்கரண்டிப்பொடியைத் தேனில் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டால் மாதவிடாய் தாமதமாவது தடுக்கப்படும்.

மருந்துகளும், வறண்ட தோலும் குணமாக….
முகத்தில் பருக்கள் உள்ளவர்களும், வறண்ட தோல் உள்ளவர்களும் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது, புதினாக் கீரையைச் சாறாக்கி அதை உடலிலும், முகத்திலும் தடவிக் கொள்ள வேண்டும். காலையில் இரண்டு தேக்கரண்டி புதினாக்கீரைப் பொடியைத் தேன்கலந்து உட்கொள்ள வேண்டும் அல்லது தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும்.

இத்தனை சிறப்புக்கள் கொண்ட புதினாக் கீரையின் தாயகம், ஐரோப்பா, பண்டைய ரோமானியர்களும் கிரேக்கர்களும் புதினாவை அறிந்திருந்தார்கள். கிரேக்க மருத்துவர்கள் இக்கீரையைப் பல விதமான வயிற்றுக் கோளாறுகள், வயிற்று உப்புசம் முதலியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தினர். இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜப்பானியரும் சீனரும் மருத்துவக் குணம் நிரம்பிய மூலிகையாக இக்கீரையைப் பயன்படுத்தி வருகிறார்கள். இன்றும் இஸ்லாமிய நாடுகளில் புதினாவை முக்கிய மருந்தாக மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர்.

இந்தோனிஷியா, மேற்கு ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இக்கீரை, அதிகம் பயிராகிறது. மற்ற நாடுகளில் இது ஓரளவு பயிராகிறது.

இந்தியாவில், இயற்கை மருத்துவர்கள் இக்கீரையைப் பொடியாகத் தயாரித்துப் பெரும்பாலான மக்களுக்குத் தினமும் ஆரோக்கிய மருந்து போல் கொடுப்பது கவனத்துக்குரிய ஒன்றாகும்.
புதினாக்கீரை மூலம் (இதன் விஞ்ஞானப் பெயர் : மின்த்தி ஸ்பைகாட்டா) தினமும் புத்துணர்ச்சி பெறலாம் என்பது உறுதி.

மருந்துபோல் குணப்படுத்தும் இயல்புகள் உருளைக்கிழங்கு!
சாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப்பொருள் உருளைக்கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.

மேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே! இதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.

100 கிராம் உருளைக் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். இதில் ஈரப்பதம் 75%ம், புரதம் 2%ம், கொழுப்பு 0.1%ம், தாது உப்புகள் 0.61%ம், நார்ச்சத்து 0.41%ம் மீதி கார்போஹைடிரேட்டும் ஆகும். இவை தவிர வைட்டமின் சி 17 மில்லிகிராமமும், கால்சியம் 10 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 40 மில்லிகிராமும், வைட்டமின் ‘ஏ’யும் வைட்டமின் ‘பி’ முதலியவையும் உள்ளன. சோடா உப்பு, பொட்டாசியம் முதலியனவும் அதிக அளவில் உள்ளன.

ஒரு மனிதன் தினமும் பாலும், உருளைக்கிழங்கும் மட்டும் சாப்பிட்டால் போதும். அவன் உடலக்குத் தேவையான அனைத்தும் கிடைத்துவிடும். அந்த அளவுக்கு கார்ப்போஹைடிரேட்டுகள் (மாவுப்பொருளும் சர்க்கரையும்) உருளைக்கிழங்கில் அபரிதமாய் உள்ளன. வேகவைத்தோ, பொரித்து வறுவலாகவோ, நீண்ட நாள்களுக்கு வைத்திருந்தோ சாப்பிடப்பயன்படும் காய்கறி இதுதான்.

மத்திய அமெரிக்கப் பழங்குடிகள் 5000 ஆண்டுகளுக்கு முன்பு நூறுவகையான உருளைக் கிழங்கு வகைகளைப் பயிர்செய்து தினமும் இதை மட்டுமே சாப்பிட்டு வந்தனர். சிலி நாட்டிலிருந்து ஈக்வடார் நாடு வரை ஆய்வுப்பயணம் செய்த ஸ்பானியர்களின் மூலமே உருளைக்கிழங்கு எல்லாக் கண்டங்களுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டில் பரவியது

அரிசி, கோதுமைக்கு அடுத்து அதிகம் சாப்பிடப்படுவது, உருளைக்கிழங்கு. எல்லா தட்பவெப்ப நிலைகளிலும் விளையக்கூடியது என்பதால், உலகின் மிகமுக்கியமான வியாபாரப் பொருளாகவும் இது இருக்கிறது. எல்லா நாட்டு மக்களின் உணவுத் தட்டிலும் இதைப்பார்க்கலாம்.

‘சொந்தமாகத் தனிப்பட்ட எந்த ஒரு சுவையையும் பெற்றிராத இந்தக்கிழங்கு இயற்கையிலேயே முறைப்படியாக உணவு ஊட்டத்துடன் வளர்ச்சி பெற்று நமக்குக் கிடைக்கிறது என்று கூறிச் சத்துணவு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் வியக்கின்றனர். தண்ணீராலும், மாவுப் பொருளாலும் பருத்திருக்கும் ஒரே காய்கறி இதுதான்.

உருளைக் கிழங்கைச் சாப்பிட்டதும் அதில் உள்ள ஓர் இரசாயனப் பொருள் உடனடியாக உடலுக்குச் சக்தியைத் தருகிறது. தரவரிசைப்படி ஒழுங்குப்படுத்தினால் பால், முட்டை, ரொட்டி, பிஸ்கட், கோழி ஆகியவற்றிற்கும் முதலில் இருப்பது உருளைக்கிழங்குதான்.

சாதாரண அளவில் உள்ள ஓர் உருளைக் கிழங்கில் 3.2கிராம் அளவுகூட புரதச்சத்து கிடைக்கிறது. பாலைவிடப் புரதச்சத்து இதில் அதிகமாய் இருக்கிறது. பாலுக்குப் பதிலாக உருளைக்கிழங்கு மசியலைக் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அது இரவில் ‘திடீர் திடீர்’ என்று பசியினால் அலறாது. நிம்மதியாகத் தூங்கும்.

அரிசி, கோதுமை, ஜவ்வரிசி முதலியவற்றை நாம் சமைத்துச் சாப்பிடும்போது அவற்றில் உள்ள பல்வேறு ஊட்டச்சத்துகள் அழிந்தநிலையில் தான் கிடைக்கின்றன. உருளைக்கிழங்கு மாவுப் பொருள். அதனால் இதில் உள்ள எந்தச் சத்தும் அழியாமல் கிடைக்கிறது. கைக்குத்தல் அரிசிக்கு இணையான சக்தி தோலுடன் சாப்பிடப்படும் உருளைக்கிழங்கில் கிடைக்கிறது.

உருளைக்கிழங்கில் தோலுக்கு அருகில் தான் அதிக அளவு ஊட்டச்சத்தும் புரதச்சத்தும் தாது உப்புகளும் உள்ளன. எனவே, தோலுடன் வேக வைத்தே சாப்பிட்டால் உருளைக்கிழங்கில் உள்ள அனைத்துச் சத்துணவையும் மருத்துவக் குணங்களையும் முழுமையாகப் பெறலாம்.

உருளைக்கிழங்கைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசியைப் பொறுத்துக்கொள்ள முடியும். உலகில் பல்வேறு காலகட்டங்களில் பஞ்ச காலத்தில் பட்டினியைத் தவிர்த்துக் கோதுமைக்குப் பதிலாக உருளைக்கிழங்கைச் சாப்பிட்ட வரலாறும் உண்டு. புரதம், மாவுப்பொருள், சர்க்கரை என அனைத்து சத்துணவும் இதிலேயே கிடைத்துவிடுவதால்தான் பசியைப் பொறுத்துக்கொள்ளமுடிகிறது.

வாயுப்பொருள் என்று ஒதுக்காமல் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடாமல் மற்றவகைகளில் உருளைக்கிழங்கை சமைத்துச் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வைத் தொடர்ந்து பெறுங்கள்.
ஆரோக்கியத்தைப் புதுப்பிக்கும் உருளைக்கிழங்கு!

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது. யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்த்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சயைாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்குமுன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும். இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும்.

உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது.

இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும்; வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர….
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப்கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவீடாதீர்கள்.
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக் கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது.

உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது?
வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம். சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு! எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும். குண்டானவர்களை மேலும் குண்டாகிவிடும்! எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும். (ஆசைக்காக)
வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

வற்றாத நன்மை தரும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு!

உலகின் பல நாடுகளில் முக்கிய உணவாகவும் சத்துணவாகவும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு திகழ்கிறது.

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விளையும் இக்கிழங்கின் தாயகம், அமெரிக்காவாகும். 1492 ஆம் ஆண்டு கொலம்பஸ் இக்கிழங்கை ஸ்பெயினுக்குக் கொண்டு சென்றார். 1572 ஆம் ஆண்டு ஐரோப்பாவிலும் இக்கிழங்கு முதன் முதலாக அறிமுகம் ஆனது. இப்போது இது எல்லா நாடுகளிலும் விளைகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து உலகில் உள்ள பெரும்பாலான வெப்பமண்டலம் பிரதேசப்பகுதிகளில் இது அதிகம் விளைகிறது.

அமெரிக்காவில் மஞ்சள் நிறத்திலும், ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிகளில் வெள்ளை நிறத்திலும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு விளைகிறது.

ரொட்டி, பிஸ்கட், மதுவகைகள் முதலியவற்றில் முக்கிய மூலப்பொருளாய் விளங்கும் இக்கிழங்கு உருளைக்கிழங்கை விட அதிக அளவு உயர்தரமான சத்துக்கொண்டதாகவும் விளங்குகிறது.

இதில் ஈரப்பதம் குறைவு. ஆனால் கார்போஹைடிரேட் அதிகம் இருக்கிறது. உருளைக்கிழங்கில் இருப்பதைவிடப் புரதமும், வைட்டமின்களும் அதிக அளவு இக்கிழங்கில் உள்ளன.

இதில் உள்ள பழச்சர்க்கரை உடனே உடலுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. அதனால் கிராமப்புறங்களில் காய்ச்சல் நேரத்தில் தண்ணீர்த்தாகம் ஏற்பட்டால், ஆவியில் வேகவைத்த இக்கிழங்கைக் கொடுக்கிறார்கள். இதனால் பசியும் அடங்குகிறது. மேலை நாடுகளில் இக்கிழங்கை மிக்ஸியில் அரைத்துத் தண்ணீர் சேர்த்துப் பால்போல் சுடவைத்துக் கொடுக்கிறார்கள். இப்படிச் சாப்பிட்டால் காய்ச்சல் மட்டுப்படுகிறது. சோர்ந்துவிட்ட உடலுக்கும் சக்தி கிடைக்கிறது.

100 கிராம் சர்க்கரை வள்ளிக்கிழங்கில் கிடைக்கும் கலோரி 120 ஆகும். இதில் மாவுச்சத்து 28%, கால்சியம் 45 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 50 மில்லிகிராமும், இரும்புச்சத்து 0.8 மில்லிகிராமும் மற்றவையும் உள்ளன. இதனால் சிலர் இதைக் காலைப் பலகாரமாகவோ மதிய அரிசி உணவுக்குப் பதிலாகவோ வள்ளிக் கிழங்கை மட்டுமே சாப்பிடுகின்றனர்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இக்கிழங்கில் தயாமின் ரிபோபிலவின், நியாஸின் போன்ற ‘பி’ வைட்டமின்கள், வைட்டமின் ‘சி’ ஆகியவற்றுடன் மூளைச்சுறுசுறுப்பிற்குப் பயன்படும் பாஸ்பரஸும், இரத்தம் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படும் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன.

இக்கிழங்கு ஓர் உயர்தரமான மாவுப்பொருள் என்பதால், இதைக் குழந்தைகளுக்கு இனிப்புத் தின்பண்டம் போலவும் கொடுக்கலாம். இதனால் உடல் வளர்ச்சி உறுதி செய்யப்படுகிறது.
வைட்டமின் ‘சி’ நன்கு கிடைக்க வேண்டுமானால் முன்பு சொல்லப்பட்டபடி பாலைப்போல் தயாரித்து அருந்த வேண்டும்.

பொரித்தும், தண்ணீரில் வேகவைத்தும் சாப்பிடலாம். இட்லி அவிப்பது போல ஆவியில் வேகவைத்துச் சாப்பிடுவதுதான் ருசி குறையாதிருக்க வழி.

பண்டைக்காலத்தில் வயிற்றுக்கடுப்பு, சீதளபேதி, மலச்சிக்கல் ஆகியவை குணமாக சர்க்கரை வள்ளிக்கிழங்கைத்தான் அவித்துச் சாப்பிட்டார்கள்.

சிறுநீர் கழிக்கச் சிரமப்படுபவர்களும் இக்கிழங்கைச் சாப்பிடவேண்டும்.
சர்க்கரை வியாதிக்காரர்கள் கசப்புச் சுவையை உடைய வள்ளிக்கிழங்கின் கீரையை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டித் தேநீர் போல அருந்தலாம். இந்த இலைகளுடன் பாகற்காய்த் தோலையும் சேர்த்து கஷாயமாக்கித் தேநீர் தயாரிக்கலாம்.

வள்ளிக்கிழங்குக் கீரையை மற்ற கீரைகளுடன் சமைத்துச் சாப்பிடுவது நீரிழிவுக்கு நல்லது. ஆனால் நீரிழிவுக்காரர்கள் சர்க்கரை வள்ளிக் கிழங்கைத் தவிர்ப்பதே நலம்!

மாவுப்பொருள் அதிகமாய் இருப்பதால் இதய நோய்க்காரர்கள் குறைவாகவே சாப்பிடவேண்டும்.
மற்றவர்கள் அளவுடன் சாப்பிட்டு, வள்ளிக்கிழங்கின் மூலம் வற்றாத நன்மைகளை உடல் ஆரோக்கியத்திற்குப் பெற வேண்டும்.

உணவுகள் சத்தாக மாறப் பயன்படும் கத்தரிக்காய்
ஆண்டு முழுவதும் கிடைக்கும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாகும். கத்தரிப்பிஞ்சும், முற்றிய காய்களும் சமைத்து உண்ண உபயோகப்படுகின்றன!

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் குறிப்பிடத்தக்கது.

100 கிராம் கத்தரிக்காயில் புரதம்1.4 கிராம், கொழுப்பு 0.3 கிராம், நார்ச்சத்து 0.3 கிராம், தயாமின் 0.04 மில்லி கிராம், ரைபோபிளேவின் 0.11 மில்லிகிராம், நிகோடினிக் அமிலம் 0.09 மில்லிகிராம், வைட்டமின் ‘சி’ 12 கிராம், வைட்டமின் ‘ஏ’ 124 சர்வதேச அலகுகள் என்னும் கணக்கில் உள்ளன. 100 கிராம் காயில் கிடைக்கும் கலோரி அளவு 24 தான்.

கத்தரிக்காய் அறியாத சில உண்மைகள்!
கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால்தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.

தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன; ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.

இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது.

பாரிசவாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகல்கிறது. உடல் வலிவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.

குளிர்க்காலத்திற்கு ஏற்றகாய்!
உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட – இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரிவற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும்.

கத்தரிக்காயை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
இந்தியாவில் தோன்றியது கத்தரிக்காய். நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிர் செய்யப்பட்டுவருகிறது. இந்தியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் முக்கிய காய்கறிப் பதார்த்தமாய் இப்பொழுதும் இருந்து வருகிறது.

மத்திய தரைக்கடல் நாடுகளிலும், பால்கன் பகுதிகளிலும் முக்கிய உணவாகக் கத்தரிக்காயைப் போற்றி உண்ணுகின்றனர்.

அமெரிக்காவின் முக்கியமான முதன்மையான 22 காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்றாய் விளங்குகிறது.

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும்.

இக்காய் ஊதா அல்லது பச்சை நிறத்தில் இருக்கும். அவை இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்.

வெட்டை நோயைக் குணப்படுத்தும் சேப்பங்கிழங்கு
கிழங்குவகைகளுள் அதிகமான மாவுச்சத்தைக் கொண்டவை, சேப்பங்கிழங்குகள் தான், உருளைக் கிழங்கைவிட எளிதில் வேகக்கூடியவை; செரிமானம் ஆகக்கூடியவை. உருளைக் கிழங்கைவிட, இனிப்புச் சுவை அதிகம் கொண்டவை.

சேப்பங்கிழங்கில் வெண்மை, கருமை என இரு நிறவகை உண்டு. ஐரோப்பாவில் 13 வகைகள் உள்ளன.

100 கிராம் சேப்பங்கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 97 ஆகும். அதில் மாவுச்சத்து 21 சதவிகிதமும், புரதம் சதவிகிதமும், ஈரப்பதம் 73 சதவிகிதமும் உள்ளன.

குழந்தைகள் அறிவுடனும் உடல் உறுதியுடனும் வளர….
சேப்பங்கிழங்கு வெட்டை நோயைக் குணமாக்கும். இருசாராரின் மலட்டுத் தன்மையையும் நீக்கும். இரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும். காய்ச்சல் நேரத்திலோ, தொடர்ந்து மருந்து சாப்பிட்டு வரும் காலத்திலோ இக்கிழங்கைச் சாப்பிட்டால் அது மருந்தை முரிக்கும். வாதம், இருமல் ஆகியன உள்ளவர்களும் தவிரிக்க வேண்டிய கிழங்கு இது. மற்றபடி எல்லா வயதுக்காரர்களும் நனகு சாப்பிட வேண்டிய கிழங்குகளுள் இதவும் ஒன்றாகும். கண்பார்வைத் திறனை அதிகரிக்கும்.

ஹாவாயிலும் மற்ற பசிபிக் தீவுகளிலும் சேப்பங்கிழங்கும், சேப்பங்கீரையும் முக்கிய உணவாக உள்ளன. தென்னமெரிக்காவில் டாஸீன் என்று இதற்குப் பெயர்.

வேகவைத்த கிழங்கைக்கொண்டு சூப்பு, குழம்பு, கேக் முதலியன தயாரிக்கிறார்கள்.

இக்கிழங்கிலிருந்து குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான மற்ற சத்துணவுப் பொருள்களில் முக்கிய மூலப் பொருளாகவும் இக்கிழங்கு மாவு பயன்படுகிறது. வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அளவு பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’ போன்றவையும் இக்கிழங்கில் அதிக அளவு உள்ளன. இதனால் குழந்தைகள் புத்திக்கூர்மையுள்ளவர்களாய் வளர்கின்றனர்.

மேற்கண்ட நன்மைகளை இக்கிழங்கை வேகவைத்துப் பொரியல் செய்து சாப்பிட்டாலே பெறலாம். சேப்பங்கிழங்கும், கீரையும் சற்றுக் கசப்பாய் இருக்கும். இதைப் போக்கப் புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.

கிழங்கைப் போலவே கீரையும் சத்து மிகுந்தது. 100 கிராம் சேப்பங்கீரையில் 56 கலோரி வெப்பம் உடலுக்குக் கிடைக்கிறது. ஆனால், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகமாகவும், மாவுச்சத்து குறைவாகவும் சேப்பங்கீரையில் உள்ளன.

சேப்பங்கீரையைத் தண்டுடன் சேர்த்துச் சமைத்தால் சத்துகள் அதிகமாய்க் கிடைக்கும். வாடிய கீரையையும் சமைத்துண்ணலாம். இது இக்கீரைக்கு மட்டுமே உள்ள சிறப்பம்சமாகும். வளரும் குழந்தைகளுக்குக் கால்சியமும், பாஸ்பரஸும் மிக அவசியமானவையாகும். 100 கிராம் உலர்ந்த சேப்பங்கீரையில் 1500 மில்லிகிராம் கால்சியமும், 308 மில்லிகிராம் பாஸ்பரஸும் கிடைக்கின்றன.

சேப்பங்கிழங்கின் இலைகள் முக்கோணவடிவில் பெரிய அளவில் இருக்கும்: பார்க்க மிகவும் அழகானவையாகவும் இருக்கும்.

சிறந்த உணவான சேப்பங்கீரையை வேகவைத்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் முதலியவை உடனே குணமாகும்.

சேப்ப இலையின் சாறு வெட்டுக்காயங்களை உடனே ஆற்றும். வெட்டுக்காயத்தின்
மீது சில துளிகள் விட்டால் போதும்.

மூல நோய்க்கு மிகச்சிறந்த உணவு மருந்து, இக்கீரை. காதுவலி, காதில் சீழ் வடிதல் முதலியவை குணமாக சேப்பங்கீரைச் சாற்றினை துளியளவு காதில் விட்டால் போதும்! காதுவலி குறையும் குணமாகும். காதில் உள்ள சீழ் நீங்கும்; அதனால் ஏற்பட்ட புண்ணும் உடனே குணமாகும்.

பூச்சிகள் கடித்த இடத்தில் இக்கீரைச் சாற்றைப் பூசினால் நஞ்சு இறங்கிவிடும்; வலியும் குறையும்.
புளி சேர்த்துச் சமைத்துண்பதால் சேப்பங்கீரை இரத்தக் கடுப்பை குணமாக்குகிறது. தாது விருத்தியை அதிகரித்து குழந்தைப் பேறு கிடைக்கவும் வழி செய்யப்பயன்படுகிறது.

சேப்பங்கிழங்கின் தாயகம் ஐரோப்பாவும் மேற்கு ஆசியாவும் ஆகும்.
சேப்பங்கிழங்கின் மாவுச்சத்து, கீரையின் மருத்துவக்குணங்கள் முதலியவற்றிற்காக இந்தியா உட்பட பல நாடுகள் சேப்பங்கிழங்கு உற்பத்தியில் அதிகம் ஈடுபாடு காட்டிவருகின்றன.

வீட்டுத் தோட்டங்களில் சேப்பங்கீரையை உணவிற்காக வளர்ப்பது இந்தியாவின் அதிகரித்துள்ளது. இது சிறந்த மூலிகையாகும்.

மூலநோய் குணமாகவும், மூளைவளர்ச்சி அதிகரிக்கவும் சேப்பங்கிழங்கு, சேப்பங்கீரை முதலியவற்றை உணவில் அடிக்கடி இடம் பெறச் செய்யுங்கள்.

அவரைக்காய் : சில அரிய உண்மைகள்
நமக்கு அவரைக்காயாகவும், முற்றிய பிறகு அவரை மொச்சையாகவும் கிடைக்கும் அவரைக்காயே பிரெஞ்சு பீன்ஸ் என்று வழங்கப்படுகிறது.

பிரெஞ்சு பீன்சின் தாயகம் பிரான்ஸ் நாடு அன்று, அமெரிக்காவாகும். உலக அளவில் இங்கே உள்ள கலிபோர்னியா மாநிலம் அவரைக்காய் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது.

பண்டைக்காலத்தில் இருந்தே முக்கியமான காய்கறியாக இக்காய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆயுர்வேத மருத்துவம், இதை மாவு வகையில் கெட்டியான உணவுப்பொருள் என்கிறது. மேலும் உடலுக்குக் குளிர்ச்சி தரும் காயாகவும், இழந்த பலத்தை மீட்டுப் புத்துணர்ச்சி தரும் மருந்தாகவும், பித்த நோய்களைக் குணமாக்கும் மருந்தாகவும் அவரைக்காய் திகழ்கிறது என்கிறது.

அவரைக்காயில் புரதமும் வைட்டமின் ‘ஏ’, ‘சி’ ஆகியவையும் அதிக அளவில் உள்ளன. மேலும், புரதத்தைவிட மாவுச்சத்து மூன்று மடங்கு அதிகமாய் இருக்கிறது. 100 கிராம் அவரைக்காயில் கார்போஹைட்ரேட் 4.5% ஆகும்; புரோட்டீன் 1.7 ஆகும்.

ஹார்ட் அட்டாக் ஏற்படாது

அப்போதுதான் பறித்த அவரைக்காயில் க்ரோட்டின் சத்து அதிக அளவு இருக்கிறது. எனவே கண்பார்வை நன்கு அதிகரிக்கவும், பார்வை மங்குவதைத் தடுக்கவும் அவரைக்காயைச் சமைத்து உண்ணலாம்.

ஹார்ட் அட்டாக், உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல் ஆகியன ஏற்படாமல் தடுக்க அவரைக்காயில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் பயன்படுகிறது.

அவரைக்காய்தான் கொழுப்புப் பொருள்கள் இரத்தக் குழாய்களை அடைத்துவிடாமல் தடுக்கிறது. அவரை விதையை நீரிழிவு மற்றும் இதய நோய்காரர்களும் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களும் சிறிதளவாவது சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

இளவயதுக்காரர்களும், விளையாட்டு வீரர்களும் அவரைக்காய்ப் பொரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உடல் வளர்ச்சிக்கு இக்காய் மிகவும் பயன்படும்.

அவரை இன்சுலினை உற்பத்தி செய்து கொண்டே இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நன்மை செய்யும் காயாகிறது.

100 கிராம் அவரைக்காயில் ஈரப்பதம் 82 சதவிகிதந்தான் உள்ளது. இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், நியாசின் போன்றவையும் இதில் இருப்பதால் நரம்புக் கோளாறுகள், நரம்புத் தளர்ச்சி முதலியவை ஏற்பட்டுவிடாமல் இது தடுக்கிறது.

களைப்பைப் போக்கும் காய்!

இரத்த சோகை, மூச்சுவிடுவதில் சிரமம், பசியின்மை முதலியவற்றை இதில் உள்ள வைட்டமின் ‘பி’யும், மூட்டுவலி, அதிகக் களைப்பு முதலியவற்றை இதில் உள்ள வைட்டமின் ‘சி’யும் போக்குகின்றன.

அடிக்கடி பசியா?
புரதச்சத்தும் கார்போஹைடிரேட்டும் முறையே உடல் வளர்ச்சிக்கும், உடலுக்குத் தேவையான சக்தியையும் வழங்குபவை. இவை இரண்டும் அவரைக்காயில் அதிகமாய் இருப்பதால் அடிக்கடி பசி எடுத்துச் சாப்பிடும் குழந்தைகளுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவர்களுக்கம் அவரைக்காய் அரிய சத்துணவாகவும் மருந்தாகவும் திகழ்கிறது.

முற்றாத அவரைப் பிஞ்சுகளைக்கொண்டு மிக்ஸி மூலம் தயாரிக்கப்பட்ட சாறு உடலுக்கு ஊட்டம் தரும் சத்துணவுப்பானம் ஆகும்.

இரவு உணவுக்கும், ஆண்மை விருத்திக்கும் அவரைக்காய் சிறந்த உணவாகும்.
பெண்களின் மலட்டுத் தன்மை குணமாக வழி!

இரு பாலார்களின் மலட்டுத்தன்மையை அவரைக்காய் நீக்கும். உடல் பருமைனக் குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது அரிய உணவு மருந்தாகும்.

எல்லா வயதுக்காரர்களுக்கும் – குறிப்பாக வயதானவர்களுக்கு – அருமையான காய்கறி இது.
மூட்டு வலியைக் குணமாக்க இருநூறுகிராம் அவரைப் பிஞ்சுகளை நன்றாக அரைக்கவும். பிறகு, அவற்றுடன் மண் சட்டியில் தலா ஒரு தேக்கரண்டி மிளகுத்தூளும், சுக்குத்தூளும் கலந்து, மூன்று டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கவும். இளஞ்சூட்டில் வலியுள்ள இடங்களில் இந்தப் பசையை எடுத்துப் பற்று இட வேண்டும். மூன்று நாட்களில் கால்கைகளில் உள்ள மூட்டு வலிகள் குணமாகும்.

பிஞ்சே சிறந்தது!
குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலி நீங்க இளம் பிஞ்சுகளை நன்குஅரைத்து, அதை விளக்கெண்ணெயில் குழைத்து, தொப்புளைச் சுற்றிப் பற்றுப் போடவும். வயிற்றுவலி உடனே குணமாகும்.

எப்போது சமைத்தாலும் அவரைப்பிஞ்சகளையே சமைக்க வேண்டும். முற்றிய அவரைக்காய்களுக்கு மருத்துவக் குணங்கள் மிகவும் குறைவு.

வாயுத் தொந்தரவையும், வாய் நாற்றத்தையும் போக்கும் காய்கறிகளுள் அவரைக்காயும் ஒன்றாகும்.

உடல் உறுதிக்குப் பயன்படும் முருங்கைக்காய்!
இந்தியர்களின் உணவில் அதிக அளவில் இடம் பெறும் முருங்கைக்காய், நல்ல மருத்துவக் குணங்களும் ஊட்டச்சத்துகளும் இரும்புச்சத்தும் நிரம்பிய முக்கியமான காய்கறியாகும்.

இதயம், நரம்பு மண்டலம், இரத்த ஓட்டம் முதலியவை சிறப்பாக இயங்க மிகச்சிறந்த ஊக்க உணவாக முருங்கைக்காய் திகழ்கிறது. குறிப்பாக, பிஞ்சு முருங்கைக்காயை சமைத்து உண்டால் மேற்கண்ட நன்மைகள் நிச்சயம் உண்டு. இதன் சதை, எளிதில் செரிமானம் ஆகக்கூடியது.

இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது, முருங்கைக்காய். இதன் விஞ்ஞானப் பெயர், மோரிங்கா ஒலிஃபெரா என்பதாகும்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளில் இது நன்கு விளைகிறது. தமிழ் நாட்டில் நீள நீளமாய்க் கிடைக்கும் முருங்கைக் காய் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இங்கே பயிரிடப்பட்ட மரமாகும்.

100 கிராம் முருங்கைக்காயில் கிடைக்கும் கலோரி 26 ஆகும். இக்காயில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-சி, முதலியனவும் போதுமான அளவில் உள்ளன.

ஆறிலிருந்து அனைத்துவயதினரும் தினமும் முருங்கைக்காய் சாப்பிடலாம். கெடுதல் எதுவும் ஏற்படாது; மாறாக நன்மைகள் அதிகம்! நோய்க்கிருமிகளை அண்டவிடாது பார்த்துக்கொள்ளும் ஆற்றல் இந்தக் காய்க்கு அதிகம் உண்டு. இதை உண்பவரின் உடல் உறுதியும் ஆரோக்கியமும் தொடர்ந்து பாதுகாக்கப்படும். இக்காயில் எல்லாவிதமான அமினோ அமிலங்களும் உள்ளன.

எளிதில் தொற்றக்கூடிய பாக்டீரியாக்களைக் கூட ‘என்ன சேதி’ என்று கேட்டு, நம் உடலுக்குள் நுழையவிடாமல் தடுத்துவிடும்.

பெனிசிலின் மருந்துக்கு இணையானது, முருங்கைக்காய்! ஆஸ்துமா, இதய நோய் முதலியவற்றைத் தடுக்க முருங்கைக்காய்ச்சாம்பார், முருங்கைக்கீரை அவியல் முதலியவற்றை இயன்றபோதெல்லாம் சாப்பிடவேண்டும்.

முருங்கைக்காயைப் போலவே முருங்கைக்கீரையும் முருங்கைப் பூவும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

பிறந்த குழந்தை நன்கு வளர
கைக்குழந்தையின் எலும்புகள் உறுதியுடன் வளர, முருங்கைக் கீரையைச் சாறாக மாற்றி, வடிகட்டி, அதைப் பாலுடன் சேர்த்துக் கொடுக்கலாம். அந்த அளவுக்கு ஆரோக்கியத்தைத் தரும் மிகச் சிறந்த டானிக் இது.

பிரசவம் எளிதாய் நடைபெற…
இந்த டானிக்கை கர்ப்பிணிகள் தினமும் அருந்தினால் அவர்களுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை கிடைத்துவிடும். மேலும், மெல்ல மெல்லக் குழந்தையை நகர்த்திக்கொண்டு வந்து பிரசவத்தை இலகுவாக்க இதில் உள்ள இரும்புச்சத்து பயன்படுகிறது. எனவே முருங்கைக்கீரையைப் பயன்படுத்துகிறவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஆரோக்கியமாகக் குழந்தை பிறந்துவிடும்

தாய்ப்பால் நன்கு சுரக்க…
குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் நன்கு சுரக்க, முருங்கைக் கீரையைத துவரம் பருப்புடன் பொரியல் செய்து, பசு நெய் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் குழந்தைக்குத் தாய்ப்பால் பஞ்சமில்லாமல் கிடைக்கும். தாயின் உடல் நலமும், கணவனின் பணமும் வீணாகாமல் இருக்க, முருங்கைக் கீரையைப்போல் வேறு எதுவும் பயன்படுத்துவதில்லை!

ஆண்மை விருத்திக்கு…
ஆண்கள், மேற்கண்ட பொரியலை இரு மாதங்கள் தினமும் ஒருவேளை உணவுடன் சேர்த்து உண்டால் ஆண்மை விருத்தியாகும்! உடல் வலுவடையும்.

முருங்கைப் பூக்களைப் பாலில் கொதிக்க வைத்துத் தினமும் ‘சூப்’ போல் ஆண்கள் அருந்தினால் விந்து விருத்தி ஏற்படும்.

சிறுநீர் தடையின்றிச் செல்லவும், உணவு நன்கு செரிமானம் ஆகவும், முருங்கைக் காயையும், முருங்கைக் கீரையையும் நன்கு பயன்படுத்த வேண்டும்.

நீரிழிவு நோயாளிகள், முருங்ககைக்கீரையில் எள் சேர்த்துச் சமைத்து உண்டால், நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு ஆகியன உள்ளவர்களுக்கு இக்கீரை அருமருந்து. இதில் உள்ள வைட்டமின் ‘சி’ யே இதற்குப் பயன்படுகிறது.

இரத்த விருத்திக்கு இதில் உள்ள இரும்புச்சத்து பயன்படுகிறது.
வாயுக்கோளாறுகளை முருங்கைக்காய் போக்குகிறது.

காலரா, வயிற்றுப்போக்கு, குடல் அழற்சி, மஞ்சள் காமாலை ஆகியவை குணமாக, ஒரு தேக்கரண்டி அளவு இளந்தளிரான கீரையின் சாற்றுடன், சமஅளவு தேன் சேர்த்து, அதை ஒரு டம்ளர் இளநீருடன் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தக் குணம் தெரியும்.

பித்தக் கோளாறுகளும், கண் தொடர்பான நோய்களும் நீங்க, முருங்கைக்காய் பொரியல் பயன்படும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியமருந்தாய் உள்ள முருங்கைக்காயும் கீரையும் மிகச்சிறந்த நோய் தீர்க்கும் மருந்து என்பது மறுக்கவியலாத உண்மை.

100 கிராம் கீரையில் 108 கலோரி கிடைக்கிறது. கால்சியம் 440 மில்லிகிராமும், பாஸ்பரஸ் 70 மில்லி கிராமும், இரும்புச்சத்து 7 மில்லிகிராமும், வைட்டமின் பி காம்ப்ளஸ் சிறிதளவும் உள்ளன. எனவே, ஆரோக்கியமான உடல் கட்டுத் தேவைப்படுவோர்கள் கீரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உடல் சூட்டுடன் மூளை வளர்ச்சியும் நன்கு சிந்திக்கும் திறனும் வேண்டும் என்பவர்கள், 100 கிராம் முருங்கைக்காயில் கிடைக்கும் 100 மில்லிகிராம் பாஸ்பரஸை பயன்படுத்திக்கொள்ள தினமும் உணவோடு முருங்கைக்காயையும் கீரையுடன் சேர்த்து அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்!

அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும் வெண்டைக்காய்

மூளை சுறுசுறுப்பாய் செயல்பட வெண்டைக்காய் சாப்பிடச் சொல்வார்கள். காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது!

மற்ற காய்கறிகளிலும் பாஸ்பரஸ் இருக்கிறது. குறிப்பாக, வெண்டைக்காயில் உள்ளதைவிட அதிக அளவில் இருக்கிறது. இருந்தாலும், இக்காயை ஏன் சிபாரிசு செய்கிறார்கள்?

உயர்தரமான பாஸ்பரஸுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவிதமான தாவரபசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக்காயில் உள்ளது; அத்துடன் அலுபொமினோ அமிலங்களும், எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக்காயில் உள்ளன.

கொலாஸ்டிரலைக் கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும்.

மேற்கண்ட காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது. மரம் போன்ற நார்ப்பொருள், தாவரபசைப்பொருள் ஆகியவற்றால்தான் வெண்டைக்காய்ப் பச்சடி பசை போல் இருக்கிறது. வெண்டைக்காய் சேர்த்து தயாரிக்கப்பட்ட சாம்பார் குழம்பு முதலியவை தண்ணீராய் இல்லாமல் கெட்டியாய் இருக்கின்றன.

வாய்நாற்றம் அகலும்!
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை.

நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் அகன்று குடல் சுத்தமாகிறது.
மலச்சிக்கலும், வாய்நாற்றமும் அகல வெண்டைக்காய் சாப்பிடுவது நல்லது.

திருமண விருந்துகளில் சாப்பாடு உடனடியாகச் செரிமானம் ஆகத்தான் வெண்டைக்காய்களை மோரில் போட்டு மோர்க்குழம்பு தயாரித்துப் பரிமாறுகிறார்கள். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், இம்பிஞ்சான காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

முற்றிய வெண்டைக்காய் வேண்டா!
பிஞ்சு வெண்டைக்காயில் தான் மருத்துவக் குணங்கள் அதிகம். அதனால்தான் பெண்கள் பிஞ்சுக் காயா என அறிய வெண்டைக்காய் நுணியை ஒடித்துப் பார்த்துக் கடைகளில் சேகரிக்கிறார்கள்!

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்டவும் தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மினுமினுப்பான தோலையும் பெறலாம். சுறுசுறுப்பாகவும் வாழலாம்.

வெண்டைக்காயைத் தண்ணீர் ஊற்றிச் சமைக்க வேண்டும்; வறுத்துச் சாப்பிடக்கூடாது. வயிற்றுப் போக்கைத் தீவிரமாய் குணப்படுத்தும் தன்மை வெண்டைக்காய் பச்சடிக்கு உண்டு.

வாத நோய்க்காரர்களும், உடல் குண்டாய் உள்ள எல்லா வயதுக்காரர்களும் வெண்டைக்காயைத் தவிர்ப்பது நல்லது.

முதிர்ந்த வெண்டைக்காயில் சத்துக்கள் இல்லை. அமெரிக்காவிலுள்ள பல மாநிலங்களிலும் இன்னும் சில நாடுகளிலும் வெண்டைக்காய் விதையை காபிப்பொடியாகப் பயன்படுத்துகிறார்கள்.

இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.

வீக்கம் குறையும்!
கிழக்கத்திய நாடுகளில் கட்டி, வீக்கம் புண் முதலியவை குணமாக வெண்டைக்காய்ச் செடியின் இலைகளையும், இளம் பிஞ்சுகளையும் மெல்லிய துணியில் வைத்து, குறிப்பிட்ட இடங்களில் கட்டுகிறார்கள். இதனால் கட்டி, வீக்கம் முதலியவையும், புண்ணும் விரைந்து குணமாகின்றன.

ஆண்மை பெருகும்!
இச்செடியின் வேரைக் காயவைத்துப் பொடியாக்கிப் பாலுடன் சேர்த்துச் சாப்பிட்டால் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் ஏற்படும். ஆண்களின் ஆண்மையும் பெருகும்.

ஆண்டு முழுவதும் பயிராகும் இக்காயின் தாயகம் ஆப்பிரிக்காவாகும். கிழக்குக்கோளார்த்தத்தில் தோன்றிய இக்காய் மேற்குக் கோளார்த்தத்தில்தான் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

அமெரிக்கர்களும், இஸ்தான்புல்காரர்களும் வெண்டைக்காய்ப் பிரியர்களாய் இருக்கின்றனர்.
வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹிபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.
சமைத்தோ, ஊறுகாய் போட்டோ, பதப்படுத்தி டின்களில் வைத்திருந்தோ பல நாடுகளில் இக்காயைச் சாப்பிடுகின்றனர்.

‘புரோடோபிளாசம்’ என்னும் திரவத்தில் நமது உயிரணுக்கள் மிதந்துகொண்டிருக்கின்றன. இந்தத்திரவத்தில் முக்கியமாய் இடம் பெற்றுள்ளது பாஸ்பரஸ். இது இரத்தத்தைத் திரவ நிலையில் வைத்திருக்க உப்புச்சத்துடன் பயன்படுகிறது. உயிரணுக்களையும் குறிப்பிட்ட வடிவமைப்பில் தொடர்ந்து இருக்கவும் பயன்படுகிறது.

எனவே, உயர் தரமான பாஸ்பரஸ் அடங்கியுள்ள வெண்டைக்காய் என்னும் இனிமையான காய்கறிக்கும் உணவில் முக்கியத்துவம் கொடுங்கள்; உடல் நலத்துடன் வாழுங்கள்.

மன நலத்தைப் புதுப்பிக்கும் பச்சைப்பட்டாணி!
எல்லாக் காய்கறிகளையும்விட ஊட்டச் சத்து மிகுந்த காய்கறி, பச்சைப்பட்டாணி ஆகும். அவரைக்காய், பச்சைப்பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான்.

100 கிராம் பச்சைப்பட்டாணி மூலம்103 கலோரி வெப்பமும், உலர்ந்த பட்டாணி மூலம் 365 கலோரி வெப்பமும் நம் உடலுக்குக் கிடைக்கிறது.

மேற்கண்ட அளவு சக்தியைத் தரும் பச்சைப்பட்டாணியில் புரதமும், மாவுச்சத்தும் எல்லாவிதமான இறைச்சிகளுக்கும் இணையாக இருக்கிறது.

சுறுசுறுப்பாய் வாழ!
இறைச்சி உணவு சாப்பிட்டால் விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படும். அதற்கு மாற்றாகப் பச்சைப் பட்டாணியைச் சாப்பிட்டால் தேவையான சக்தி கிடைக்கும். மேலும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’, வைட்டமின் ‘சி’, நார்ப்பொருள்கள் முதலியவற்றால் மாரடைப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற அபாயங்கள் இன்றி இளமைத் துடிப்புடனும் இளமையான தோற்றத்துடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாய் வாழலாம்.

பச்சைப்பட்டாணியைச் சமைத்துத்தான் சாப்பிடவேண்டும். சுண்டலாகவோ முட்டைக்கோஸுடன் சேர்த்துப் பொரியல், கூட்டு என்று சமைத்தோ சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது, ஆரோக்கியமும் விருத்தியாகும்.

இதயம் பலம் பெறும்!
நுரையீரலுக்கும் இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. எனவே, அதைத் தினமும் மருந்து போல் ஒருகைப்பிடி அளவு பிற காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிடுங்கள்.

கடலைப்பருப்புடன் பச்சைப்பட்டாணியைச் சமைத்தால் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே, துவரம்பருப்புடன் சேர்த்தே சமையுங்கள்.

சீசன் சமயம் தவிர மற்ற நேரங்களில் உலர்ந்த பட்டாணியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போடடு, சமையலில் பயன்படுத்த வேண்டும். இதனால் உலர்ந்த பட்டாணியால் ஏற்படக்கூடிய வாயுக்கோளாறு ஏற்படாமல் தடுக்கப்படும். பச்சை பட்டாணியில் உள்ள சத்தில் உலர்ந்த பட்டாணியில் மூன்றில் ஒரு பங்குச் சத்தே கிடைக்கிறது. தோல் நீக்கிய வறுத்த பட்டாணியில் பச்சைப் பட்டாணியின் சத்தில் அரைப்பங்கே கிடைக்கிறது. எனவே, பச்சைப் பட்டாணியையே அதிகம் பயன்படுத்துங்கள்.

சிறு குழந்தைகள் பச்சைப்பட்டாணியைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும். வளரும் குழந்தைகள் மருந்து போல் தினமும் மூன்று தேக்கரண்டி பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்து வந்தால் மூளை பலம் பெறும்! ஞாபகச்தி அதிகரிக்கும். வெண்டைக்காயில் உள்ளதைவிட மூன்றுமடங்கு அதிகமான பாஸ்பரஸ் பச்சைப்பட்டாணியில் இருப்பதால், குழந்தைகளின் புத்திக் கூர்மையும் பலமடங்கு அதிகரிக்கும்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 100 கிராம் பச்சைப் பட்டாணி சுண்டல் சாப்பிட்டால் அவர்கள் வரைவில் குணமடைவார்கள். காரணம், இதில் உள்ள பாஸ்பரஸ்தான்.

100 கிராம் பச்சைப்ட்டாணியில் 14.4 கிராம் மாவுச்சத்தும், 6.3 கிராம் புரதமும், 0.4 கிராம் கொழுப்பும், 2.0 கிராம் நார்ச்சத்தும், 27 மில்லி கிராம் வைட்டமின் ‘சி’யும், 2.9 மில்லிகிராம் நியாஸினும் 140 மைக்ரோ மில்லி கிராம் ரிபோபிலவினும், 350 மைக்ரோ மில்லி கிராம் தயாமினும், 640 சர்வதேச அலகு வைட்டமின் ‘ஏ’யும் உள்ளன.

கண்பார்வைத் திறனுக்கு வைட்டமின் ‘ஏ’ இன்றியமையாதது.
உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படாமலிருக்கவும் பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது, வாய் நாற்றமும் அகன்றுவிடுகிறது.
நியாஸின், ரிபோபிலவின், தயாமின் போன்ற ‘பி’ குரூப் வைட்டமின்கள் உள் உறுப்புகள் அனைத்தையும் வலிமைப்படுத்துகின்றன. இந்த வைட்டமின் குறைந்தால் இதயத்துடிப்பு, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, உடல் பலவீனம், பசியின்மை ஆகியவை உண்டாகும். இவை குணமாகவும் வாய், நாக்கு முதலியவற்றில் உள்ள புண்கள் குணமாகவும், செரிமான உறுப்புகள் நன்கு செயல்படவும் இதில் உள்ள வைட்டமின் ‘பி’ நன்கு பயன்படுகிறது.

எனவே, ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும் உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஓட்டல்காரர்கள் தங்கள் சாப்பாட்டில் பரிமாறப்படும் காய்கறி வகைகளுள் சிறிதளவு பச்சைப்பட்டாணியையும் சேர்த்துத் சமைத்தால் வியாபாரம் பெருகும். மிகவும் ருசியான பச்சைப் பட்டாணியைச் சாப்பிடத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

வீட்டிலும் தினசரி பச்சைப் பட்டாணியை மற்ற காய்கறிகளுடன் சிறிதளவு சேர்த்துச் சமைத்தால், மற்ற காய்கறிகளையும குறைவாகப் பயன்படுத்தலாம். பச்சைப்பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும்.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட பச்சை பட்டாணியின் தாயகம் தென்மேற்கு ஆசியாவும் தெற்கு ஐரோப்பாவும் ஆகும். காடுகளில் தானாகவே வளர ஆரம்பித்த இத்தாவரம் குளிர்காலத்தில் மட்டுமே வளரும். கி.மு. 2000ஆம் ஆண்டிலேயே சீனர்கள் பச்சைப் பட்டாணியைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பைபிளில் பச்சைப் பட்டாணியைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இங்கிலாந்தில் கி.பி.1600 ஆம் ஆண்டு இறுதியில்தான் பச்சைப் பட்டாணி அறிமுகமானது.

இன்று 1300 இனங்கள் இதில் உள்ளன. வீடுகளில் வளர்த்துச் சமைக்கப்படும் வகையே புகழ்பேற்றது. இதுவே பச்சைப் பட்டாணி! தோட்டப் பட்டாணி என்றும் இதற்குப் பெயர் உண்டு. இதன் தாவர விஞ்ஞானப் பெயர், பிஸும் ஸாடிவம் என்பதாகும்.

500 ஆண்டுகளுக்கு முன் மனிதன் நன்கு பயன்படுத்திய பச்சைப் பட்டாணி இன்று உலகம் முழுவதும் பயிராகிறது. இதன் கொடிகள் ஆடுமாடுகளுக்கு நல்ல உணவு.
இதயம், நுரையீரல்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் இருக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பின்பற்றும் பெண்களுக்குக் குழந்தை பிறக்காமலிருக்கவும், ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படாமலிருக்கவும் பச்சைப் பட்டாணியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இளநீருக்கு இணையான வெள்ளரிக்காய்
காய்கறிகளுள்ளே குறைவான கலோரி அளவைக் கொண்டிருப்பது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் கிடைக்கும் கலோரி 18 தான்.

விஞ்ஞானிகள் வெள்ளரிக்காயைப் பழவகையில் சேர்த்துள்ளனர்; ஆனால், மக்கள் இதைக்காய்கறிப் பட்டியலில் சேர்த்துள்ளனர்; பச்சையாகவும், சமையலில் சேர்த்தும் சாப்பிடுகின்றனர்.

வெள்ளரிக்காய், குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத்தூண்டும் அளவுக்குத்தனிச்சுவையுடையது. நன்கு செரிமானம் ஆகக்கூடியது. சிறுநீர்ப்பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது.

வாதநோய்கள் குணமாகும்!
இக்காய் பித்த நீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.

அண்மைக்கால ஆராய்ச்சி முடிவுகளை, வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமை மிக்க உணவாகத் திகழ்வதையும் நிரூபித்துள்ளன.
ஆந்திரர்களின் வெள்ளரிக்காய் பிரியம்!

ஆந்திர உணவில் எப்போதும் வெள்ளரிக்காயும் பாசிப்பருப்பும் கலந்து தயாரிக்கப்படும் பச்சடி உண்டு. காரணம், ஆந்திர சமையலில் காரம் அதிகம். 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவிகிதம் ஈரப்பதம் உள்ளது. அது உணவில் உள்ள காரத்தை மட்டுப்படுத்தி இடையில் அடிக்கடி தண்ணீர் அருந்தாமல் சாப்பிட வைக்கிறது. மீதி நான்கு சதவிகிதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் ‘பி’ ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் ‘சி’யும் சிறிதளவு உண்டு.

வெள்ளரிக்காய் ஜுஸ் சாப்பிடுவதுண்டா?

சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், வெள்ளரிக் காய்களை மிக்ஸி மூலம் சாறாக்கியும் அருந்தலாம்.

இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச்சாறு திகழ்கிறது.
வெள்ளரியைச் சமைத்துச் சாப்பிடும்போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகின்றன. எனவே, வெள்ளரிச்சாறுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

வயிற்றுப்புண் உள்ளவர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு தடவை ஆறு அவுன்ஸ் வீதம் வெள்ளரிச்சாறு அருந்தினால் குணம் தெரியும்.

காலரா குணமாகும்!
காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒரு மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்தவேண்டும்.

தோல் பளபளப்பாக…
வறண்ட தோல், காய்ந்துவிட்ட முகம் உள்ளவர்கள், வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச்சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.

சிறந்த சத்துணவு சாலட் இது?
தினமும் மிகச் சிறந்த சத்துணவு போல் சாப்பிடத் தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் காரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றின் சிறிய துண்டுகளையும போட்டு வைத்து வெஜிடேபிள் சாலட் போல் பரிமாறவேண்டும். அது இல்லத்தில் உள்ள அனைவருக்கும் சத்துணவு கிடைக்கச்செய்கிறது. மேலும் இது நோய் எதிர்ப்புச்சக்தியை அளிக்கும் ஆற்றலையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கச் செய்யும்.

பிளட் பிரஷர் குறையும்!
இக்காயில் உள்ள சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லது.

மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக் காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
பருக்கள் மறைந்துவிடும்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூச வேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்க வேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும். பெண்கள் இந்த முறையைத் தினசரி பின்பற்றலாம்.

உடல் எடை குறையும்!
நீரிழிவு நோயாளிகள் எடை குறைய விதையுடன் சேர்த்தே வெள்ளரிக்காய் சாற்றை அருந்த வேண்டும். சிறிய வெள்ளரிக்காய் என்றாலும் பெரிய வகை வெள்ளரிக்காய் என்றாலும், அதை விதையுடன்தான் அரைத்துச் சாறு அருந்த வேண்டும். இதனால் ஆண்மை பெருகும்.

முடி நன்கு வளர எளிய வழி
முடி வளர்ச்சிக்கு குறிப்பாகப் பெண்கள் வெள்ளரிச் சாற்றை அருந்த வேண்டும். வெள்ளரியில் உள்ள உயர்தரமான சிலிகானும், சல்ஃபரும் முடிவளர்ச்சிக்குப் பயன்படுகின்றன. இந்தச் சாற்றுடன் இரு தேக்கரண்டி காரட்சாறு, இரு தேக்கரண்டி பசலைக்கீரைச்சாறு, பச்சடிக்கீரைச்சாறு போன்றவற்றையும் சேர்த்து அருந்தினால் முடி நன்கு வளரும். முடிகொட்டுவதும் நின்றுவிடும்.
காரட் கிழங்கைப் போலவே, வெள்ளரிக் காயில்ன தோல் பகுதி அருகில்தான் தாது உபபுகளும், வைட்டமின்களும் அதிக அளவில் உள்ளன. எனவே, தோல் சீவாமலேயே வெள்ளரிக்காய்களை நன்கு கழுவிப் பயன்படுத்துங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தியாவில் தோன்றிய வெள்ளரிக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் குக்குமிஸ் ஸாடிவாஸ் என்பதாகும். இது மலைப்பகுதிகளில் நன்கு வளர்கிறது. இமய மலைப்பகுதியிலிருந்து வரும் சிக்கிம் வெள்ளரி 15 அங்குலம் நீளமும் 6 அங்குலம் கனமும் உள்ளது.

ஜமைகா நாட்டு வெள்ளரிக்காய் எலுமிச்சம் பழ அளவிலும், நிறத்திலும் இருக்கிறது. கிழக்கத்திய நாடுகளில் வாசனைக்காக வெள்ளரி அதிகம் பயிராக்குகின்றனர். பிரிஸ்ஜில் இரு வாரங்கள் வரை வைத்து வெள்ளரிக் காய்களை பயன்படுத்தலாம்.

பண்டைய எகிப்தியர்களும், கிரேக்கர்களும், ரோமானியர்களும் நன்கு பயன்படுத்திய வெள்ளரிக்காயை, இன்று இந்தியாவின் கிராமமக்கள்தாம் நன்கு சாப்பிடுகிறார்கள். நகர மக்களும் மற்றவர்களும் சாப்பிடத் தொடங்குவது எப்போது?

தோல் நோய்களைக் குணப்படுத்தும் முள்ளங்கி
முள்ளங்கிக் கிழங்கின் இலை, கிழங்கு, விதை முதலியவை மருத்துவத்தன்மை நிறைந்தவை. பசியைத் தூண்டும் இயல்புடையவை. இவற்றை உட்கொண்டால் உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் எப்போதும் பாய்ந்தோடிக் கொண்டிருக்கும். இந்த இரு குணங்களுக்காகவே முள்ளங்கிக் கிழங்கை உலகம் முழுவதும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

சுத்தமான இரத்தத்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. இதனால் தொடர்ந்து உடல் நலப் பாதுகாப்புடன் வாழ முடிகிறது.

மலச்சிக்கல், இரைப்பைக் கோளாறுகள், நெஞ்சுவலி, சிறநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலக்கடுப்பு, மஞ்சள் காமாலை, முகம் கறுப்பாகமாறுதல் போன்றவைகளையும் முள்ளங்கிக்கிழங்கும், அதன் இலைகளும் நன்கு குணப்படுத்திவிடுகின்றன.

மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட முள்ளங்கிக்கிழங்கின் தாவர விஞ்ஞானப் பெயர், ராப்ஹான்ஸ் சாட்டிவஸ் என்பதாகும்.

பண்டைக்காலத்தில் எகிப்து, கிரீஸ், ரோம் போன்ற நாடுகளில் முள்ளங்கி அதிகம் பயிர் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியா உட்பட உலகில் உள்ள வெப்பமண்டலப் பிரதேச நாடுகள் அனைத்திலும் முள்ளங்கிக் கிழங்கு நன்கு பயிர் செய்யப்படுகிறது.

100 கிராம் முள்ளங்கிக் கிழங்கில் ஈரப்பதம் 9.4%ம் மாவுச்சத்து, 3%ம் உள்ளது. மீதியில் சிறிதளவு புரதம், கொழுப்பு, தாதுஉப்புகள், நார்ச்சத்து முதலியவை உள்ளன. வைட்டமின் ‘சி’ வைட்டமின் ‘பி’ காம்ப்ளக்ஸ் ஆகியவற்றுடன் இரும்புச்சத்தும் (0.4 மில்லி கிராம்), கால்சியமும் (35 மில்லி கிராம்), பாஸ்பரஸும்(22 மில்லிகிராம்) இருக்கின்றன. இதனால் கிழங்கைப் பச்சையாகவோ சாறாகவோ உணவில் சேர்த்துக்கொண்டால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி அளவு 17தான். சாப்பிட்டவுடன் செரிமானம் ஆகவும் முள்ளங்கிக்கிழங்கு சாப்பிடுவது நல்லது.

மூலநோய் குணமாகக் காலையும், மாலையும் 50 முதல் 100 மில்லி வரை முள்ளங்கிக் கிழங்கின் சாறு அருந்திவர, மூலம் கட்டுப்படும்.

ஒரு கப் முள்ளங்கிக் கீரைச் சாற்றை அருந்தினால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் உட்பட அனைத்துச் சிறுநீரகக் கோளாறுகளும் குணமாகும். குணமாகும்வரை தினமும் ஒரு கப் அருந்தி வர வேண்டும்.

மஞ்சள் காமாலை உடனே கட்டுப்பட முள்ளங்கிக் கீரையின் சாற்றை மெல்லிய வெள்ளைத் துணியில் வடிகட்டி, அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். வயதானவர்கள் தினமும் அரைக்கிலோ முள்ளங்கிக் கீரையைச் சேகரித்து இந்த முறையில் அருந்தினால் மிக விரைவில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து குணமாகிவிடுவார்கள்.

இருமல், நெஞ்சு சம்பந்தமான நோய்கள் (இதயவலி) வயிற்று உப்புசம் தொண்டைப்புண், தொண்டைக்கட்டு முதலியவை குணமாக ஒரு தேக்கரண்டி முள்ளங்கிக் கிழங்குச் சாறுடன் அதே அளவு தேனையும் கலந்து சாப்பிட வேண்டும். சிறிது உப்பும் இதில் சேர்க்கப்படவேண்டும். தினசரி மூன்று வேளை இது போல் சாப்பிட்டால் மேற்கண்ட கோளாறுகள் குணமாகும். இது மிக உயர்தரமான நன்மையைத் தரும் மருத்துவமுறையாகும்.

தோலில் வெண்புள்ளி உள்ளவர்கள் முப்பது முதல் ஐம்பது கிராம் வரை முள்ளங்கி விதையை இடித்து, வினிக்கர் மூலம் பசையாக்கி, வெண்புள்ளி உள்ள இடங்களில தடவவேண்டும். தொடர்ந்து தினசரி தடவினால் இந்த விதைப்பசை தோலின் நிறத்தை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.

படர்தாமரை நோய், முகத்தில் உள்ள கருப்புள்ளிகள், தவிட்டு நிறமுள்ள புள்ளிகள், எண்ணெய் வடிதல் ஆகியவற்றின் மீதும் முள்ளங்கி விதைப்பசையைத் தடவினால் குணமாகும். முள்ளங்கி விதையில் ஒரு வகையான பிளீச்சிங் பொருள் இருக்கிறது. அதுவே, தோல் தொடர்பான நோய்களையும் குணமாக்குகிறது.

முள்ளங்கிக் கிழங்கையும், கீரையையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான உடல் நலத்துடன் திகழலாம் என்பத நிச்சயம்.

முள்ளங்கியைச் சமைக்கலாமா?
முள்ளங்கிக் கிழங்கைச் சமைத்துச் சாப்பிட்டால் வைட்டமின்களும், தாது உப்புகளும் அழிந்துவிடுவதுடன் நோய் எதிர்ப்பு பாக்டீரியாக்களும் கூடவே சிதைந்துபோய் விடுகின்றன.

எனவே, பச்சையான முள்ளங்கிக்துண்டுகளுடன் காரட், பீட்ரூட் துண்டுகளையும் கலந்து, அவற்றில் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து, உப்பு சேர்த்து, சாலட் போல் சாப்பிட்டால் உடலுக்கு அதிக அளவு ஆரோக்கியம் கிடைக்கும்.

இதே போல், முள்ளங்கிக் கீரையையும் சமைக்காமல், சிறுதுண்டுகளாக நறுக்கி, பச்சையாகச் சாப்பிடவேண்டும். அல்லது மேற்கண்ட சாலட் (Salad)டில் சேர்த்துக் கொள்ளலாம். கிழங்கைவிடக் கீரையில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘சி’ முதலியவை அதிகம் உள்ளன. 100 கிராம் கீரையில் கிடைக்கும் கலோரி அளவு 28 ஆகும்.

எனவே, கீரையையும், கிழங்கையும் பச்சையாகவே பயன்படுத்துங்கள். அதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறுங்கள்.

தாம்பத்திய வாழ்வில் ஆர்வம் வேண்டுமா?
சிறுநீர் நன்கு கழியவும், எரிச்சல் நீங்கவும் சிறுநீரில் கற்கள் சேராமல் இருக்கவும முள்ளங்கிச் சாம்பார் செய்து சாப்பிடலாம். (துண்டுகள், பெரியனவாக வெட்ட வேண்டும்)

வெள்ளை, சிவப்பு ஆகிய நிறங்களில தான் முள்ளங்கிக்கிழங்கு கிடைக்கிறது. மற்ற நிறங்களிலும் சில இடங்களில் பயிராகிறது.

இருவகை முள்ளங்கியிலும் மருத்துவக் குணங்கள் ஒரே மாதிரிதான் உள்ளன. நன்கு சாப்பிட்ட திருப்தி வேண்டும் என்பவர்களும், தாம்பத்திய வாழ்வில் அதிக ஈடுபாடு வேண்டும் என்பவர்களும் மட்டும் சிவப்பு முள்ளங்கிக் கிழங்கை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.

புத்தியுள்ள குழந்தைகள் வேண்டுமா?
குழந்தைகள் மந்தபுத்தி இல்லாமல் சுறுசுறுப்பாய் இருந்து படிக்கவும், நன்கு உடலுறுதியுடன் வளரவும் முள்ளங்கிக் கிழங்குடன் முள்ளங்கிக்கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உள்ளன.

வாத நோய்க்காரர்கள் முள்ளங்கிக்கிழங்கைச் சாப்பிடலாம். ஆனால், முள்ளங்கிக் கீரையைச் சாப்பிடக் கூடாது.

இதயநோய்களுக்குச் சிறந்த டானிக். காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் மருந்து. உடல் சூட்டைத் தணித்துக் குளிர்ச்சி தரும் காய்கறி. நீரிழிவு நோயாளிகள் உடல் எடையை எளிதாகக் குறைக்கப் போதுமான அளவு சத்தும், குறைந்த அளவு கலோரியும் கொண்ட காய்கறி. மஞ்சள் காமாலை, தலை வழுக்கை எனப்பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அரிய காய்கறியான புடலங்காய் பேதி மருந்தாகவும் பயன்படுகிறது.

புடலங்காயின் தாயகம் இந்தியாதான். காய்ச்சல் நேரத்தில் காய்ச்சலை மட்டுப்படுத்தப் புடலங்காய் பொறியல் செய்து சாப்பிட்டால் போதும். சிலர் அலுவலகம் வரும் வரை நன்றாய் இருப்பார்கள்.

தம் இருக்கையில் அமர்ந்ததும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும். ஏதேனும் ஒரு காய்ச்சல் மாத்திரையை அப்போது போட்டுக்கொள்வார்கள். காய்ச்சல் உடனே குணமாகும். பிறகு, மாலை அலுவலகத்திலிருந்து புறப்படும் போது மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுவிடும்.

இப்படி விட்டுவிட்டுக்காய்ச்சல் ஏற்படும் உடல்வாகைப் பெற்றவர்கள் தொடர்ந்து ஒரு வாரம் புடலங்காய்ப் பொறியல், கூட்டு என்று தயாரித்துச் சாப்பிட்டால் போதும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகம் தரும் காய்கறி இது. பிறகு இதுபோன்ற திடீர்க்காய்ச்சல் ஏற்படாது.

கவலையை விரட்டும் காய்!
அதிக உழைப்பு, கவலை, நோய் முதலியவற்றால் அல்லல்படுபவர்களுக்கு நெஞ்சுத்துடிப்பு மிகவேகமாய் இருக்கும். சிலருக்கு இதயவலியும் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் புடலங்காயைச் சாப்பிடவேண்டும். மேலும், அவர்கள் அதிகாலையில் புடலைக் கொடியில் இளந்தரான இலையைப் பறித்து, சாறாகப் பிழிந்து வைத்துக்கொண்டு, ஒரு வேளைக்கு இரண்டு தேக்கரண்டி வீதம் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும். இதனால், இதயம் கடும் முயற்சி செய்து இயங்குவது சமமாகி சாதாரணமாக இயங்க ஆரம்பிக்கும்.

வழுக்கைத் தலையா?

இளமையிலேயே வழுக்கைத் தலையுள்ளவர்கள் மேற்கண்ட முறையில் புடலங்காய் இலைச்சாற்றைத் தயாரித்து தினமும் ஒரு கப் அருந்தி வரவேண்டும். வாரத்தில் மூன்று நான்கு நாள்களாவது புடலங்காயையும் உணவுடன் சேர்த்து வரவேண்டும். விரைவில் இவர்களுக்கு வழுக்கை விழுந்த இடத்தில் முடிமுளைக்க ஆரம்பிக்கும்! இதற்காகவாவது வீட்டில் புடலைக் கொடியை வளர்த்துத் தினமும் பசுமையான இலைகளைப் பறித்துச் சாறாக்கி அருந்த வேண்டும்.

காய்ச்சல் நேரத்தில் புடலங்காயைத் தண்ணீரில் கொதிக்க வைத்துக் காய்ச்சிக் கஷாயமாய் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பித்தம் சம்பந்தமான காய்ச்சல், நாக்குவறட்சி, மலச்சிக்கல் போன்றவையும் இந்தக் கஷாயத்தை அருந்துவதால் குணமாகும். கஷாயம் நன்கு பயன்தரச் சிறிதளவு தேனையும் சேர்த்து அருந்தலாம்.

காய்ச்சல் கடுமையாய் இருந்தால் 50 கிராம் புடலங்காய்த் துண்டுகளையும் 50 கிராம் கொத்துமல்லியையும் இரவு முழுவதும் தண்ணீரில் ஊறப்போட்டு, மறுநாள் அதை வடித்து அருந்த வேண்டும்.

பித்தநோயைக் குணப்படுத்த இலைக்கஷாயத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து அருந்தலாம்.
வாந்தி எடுக்க வைக்கவும் இந்த இலைச்சாறு பயன்படும். இதில் கொத்துமல்லி சேர்க்கக்கூடாது.

கீல்வாதம் குணமாகும்!
கல்லீரல் கோளாறு, கீல்வாதம் முதலியவற்றுக்கு இலைக் கஷாயத்தை தைலம் போல மேல் பூச்சாக உடல் முழுவதும் தேய்க்க நற்பயன் கிடைக்கும்.

மஞ்சள் காமாலையைக் குணமாக்க முப்பது முதல் ஐம்பது கிராம்வரை எடையுள்ள புடலங்காய்க்கொடியின் இலைகளைக் கொத்துமல்லியுடன் இரவு முழுவதும் ஊறப்போட்டு, காலையில் அதை வடித்து, மூன்று வேளைக்குச் சமமாகப் பிரித்து வைத்துக்கொண்டு அதை அருந்த வேண்டும்.

நாட்டு மருத்துவத்தில் முக்கியமான மருந்தாய் இருக்கும் புடலை இலை இப்போது இந்திய இயற்கை மருத்துவத்திலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

குழந்தைகளுக்குப் பேதி மருந்தாகவும், வாந்தி எடுக்க வைக்கும் மருந்தாகவும் இந்த இலைச்சாற்றையே பயன்படுத்தலாம்.

புடலங்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், டிரிச்சோ சன்தீன் ஆங்கினா (Trichosanthes anguina) என்பதாகும்.

100 கிராம் புடலங்காயில் கிடைக்கும் கலோரி அளவு 18 தான். போதுமான அளவு புரதம், கொழுப்பு. நார்ச்சத்து, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின், ரிபோபிலவின், நியாஸின் போன்றவை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இதை நன்கு சேர்த்துக்கொண்டால் உடல் எடையைப் படிப்படியாகக் குறைத்துவிடலாம்; உடலுக்குச் சத்துணவும் கிடைக்கும். உடலும் பலவீனமடையாது.

புடலையைக் காயாகத்தான் வேகவைத்துச் சமைத்து உண்ணவேண்டும். பழுத்த புடலையை உண்ணக்கூடாது. அது எளிதில் செரிமானம் ஆகாது. பழுத்த புடலையின் உள்ள காய்களை மட்டும் காயவைத்து, அதை இரவில் ஊறவைத்துத் தண்ணீரை வடிகட்டி அருந்தினால் பேதி ஆகும். பழுத்த புடலங்காயில் உள்ள விதைகளைப் பேதிமருந்தாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தினசரி புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் இதயநோயின்றியும், உடல் எடை அதிகரிக்காமலும், அடிக்கடி காய்ச்சல் ஏற்படாமலும் வாழலாம். ஆரோக்கியமாய் வாழப்பயன்படும் அரிய மருந்து, புடலை.

டல் பருமனைக் குறைக்கும் முட்டைக்கோஸ்
அயோடின் உப்பு பற்றி அதிகம் பேசப்படுகிறது. அந்த உப்பு அதிகம் உள்ள இயற்கையாகவே அமைந்துள்ள காய்கறி, முட்டைக்கோஸாகும்.

முட்டைக்கோஸ் உண்மையில் கீரைவகையைச் சோந்ததாகும். இதன் தாவர விஞ்ஞானப் பெயர் பிராஸிகா ஆலர்சியா வார் (Rassica Oleracea Var) என்பதாகும்.

பண்டைய கிரேக்கர்களின் முக்கிய காய்கறிகளுள் முட்டைக்கோஸும் ஒன்றாகும். ரோமானியர்கள் தாங்கள் வென்ற இடங்களில் எல்லாம் முட்டைக்கோஸையும் அறிமுகம் செய்து கொண்டே சென்றனர்.

தெற்கு ஐரோப்பாவிலும், மத்திய தரைக்கடல் பகுதிகளிலும், இங்கிலாந்திலும், வடமேற்கு பிரான்சிலும்தான் இந்தக் கீரை முதலில் தோன்றியது. மேற்கண்ட இடங்களில் பச்சை, சிவப்பு, நீலம் போன்ற நிறங்களிலும், விதவிதமான வடிவங்களிலும் முட்டைகோஸ் பயிராகிறது.

முட்டைகோஸ் மூன்று முக்கிய காரணங்களுக்காக அதிகம் உண்ணப்படுகிறது. உயர்தரமான தாது உப்புகள், வைட்டமின்கள், சுண்ணாம்புச்சத்து ஆகிய அமிலங்களுக்காக அதிகம் சாப்பிடுகின்றனர்.

உடலின் உள்ளுறுப்புக்களை நன்கு சுத்தப்படுத்துவதில் முட்டைகோஸிற்கு முக்கிய இடம் உண்டு. இதில் உள்ள கந்தகச்சத்து, குளோரின், அயோடின் போன்றவை குடலில் உள்ள சளிச்சவ்வு முதலியவற்றை வெளியேற்றி குடலை நன்கு தூய்மையாக்கிவிடுகிறது.

மேற்கண்ட நன்மையைப் பெற முட்டைக் கோஸைச் சமைக்காமல் அரிந்து பச்சையாகவோ, சூஸாகவோ சாப்பிடவேண்டும். இரண்டாவது, சூஸில் உப்பு சேர்க்கக் கூடாது. மூன்றாவது, முட்டைக்கோஸை எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் இன்னொரு காய்கறியுடன் சேர்த்துத்தான் சாப்பிட வேண்டும்.

சமைக்கும்போது முட்டைக்கோஸுடன் காரட், பீன்ஸ் போன்றவற்றையும் சேர்த்துச் சமைக்கவேண்டும். பயறு வகைகள் சேர்வதும் நலமே!

பச்சையாகச் சாப்பிடுங்கள்!
சமைத்துச் சாப்பிடுவதைவிட பச்சையாகச் சாப்பிடும் முட்டைக்கோஸில் மதிப்பு மிக்க ஊட்ட உணவு நிறைய நம் உடலுக்குக் கிடைக்கிறது.

சமைக்கப்பட்டதை விட பச்சையான கோஸ் விரைவாகச் செரிமானம் ஆகிறது.
அளவுடன்தான் சாப்பிடவேண்டும். பச்சையாகச் சாப்பிடும்போது இந்த விதியைக்கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். காரணம், இது கசப்பாகவும் இருக்கும். சூஸின் அளவு அதிகமாகும்போது குரல்வளைச் சுரப்பியில் வீக்கம் ஏற்பட்டு விடுகிறது. மருந்து போல் அளவுடன் பயன்படுத்துவதால் தொற்றுநோய், புண்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள், செரிமானக் கோளாறுகள் முதலியவை உடனே குணமாகின்றன. இவை எல்லாம் ஏற்படாமலும் முன்கூட்டியே தவிர்த்துவிடுகின்றன.

முகத்தில் எண்ணெய் வழியாது!
சமைக்காமல் இப்படிச் சாப்பிடுவதால் இன்னொரு மாபெரும் நன்மையும் உண்டு. உடல் எப்போதும் இளமைத் தோற்றத்துடனும், பிளீச்சிங் செய்த முகம் போலவும் பொலிவுடனும் மலர்ச்சியுடனும் முகம் விளங்கும். இந்த நன்மையைப் பெறக் கேரட் சாறுடன் முட்டைக்கோஸ் சாற்றையும் உப்பு சேர்க்காமல் கலந்து அருந்துங்கள்.

நாள் முழுவதும் வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களும், வரவேற்பறையில் அமர்ந்து பணிபுரியும் பெண்களும் அடிக்கடி பிளீச்சிங், பவுடர் போன்றவற்றை நாடுவதை இது குறைத்துவிடும். எவ்வளவு நேரம் அலைந்தாலும், வேலைபார்த்தாலும் முகத்தில் எண்ணெய் வழியாது. எல்லாவற்றையும்விட உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியும் அதிகரிக்கிறது. திசு அணுக்களைப் புதுப்பித்து நன்கு ஆற்றலுடன் செயல்படவும் இந்தச் சாறு பயன்படுகிறது.

100 கிராம் முட்டைக்கோஸில் மாவுச்சத்து 4.6 சதவிகிதமும், புரதம் 1.8 சதவிகிதமும், சுண்ணாம்புச்சத்து 39 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 45 மில்லிகிராமும், வைட்டமின் சி 124 மில்லி கிராமமும், சிறிதளவு இரும்புச்சத்தும், வைட்டமின் ‘ஏ’ யும், வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸும் அதிக அளவில் உள்ளன.

கண்ணுக்கு முட்டைக்கோஸ் அழகு!
முட்டைக்கோஸ் சாப்பிடுவது கண்பார்வைத் தெளிவைக் கூர்மைப்படுத்தும். 100 கிராம் முட்டைக்கோஸில் வைட்டமின் ‘ஏ’ மட்டும் 130 சர்வதேச அலகு உள்ளன.

மலச்சிக்கல் உடனே குணமாகப் பச்சை முட்டைக்கோஸை அரிந்து கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்து எலுமிச்சம் பழ இரசத்தில் கலந்து அருந்தினால் போதும். மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் முட்டைக்கோஸ் பொரியல் தயாரித்து மதிய உணவுடன் சாப்பிட வேண்டும்.

வயிற்றுப்புண் குணமாக 75 கிராம் முட்டைக்கோஸ் இரசத்தைத் தினமும் மூன்று வேளை வீதம் சாப்பிட வேண்டும். இதில் உப்போ வேறு காய்கறிகளோ சேர்க்கக்கூடாது.

100 கிராம், முட்டைக்கோஸ் தரும் சக்தியின் கலோரி அளவு 27தான். எனவே, உடல் பருமன் குறைந்து ஒல்லியான தோற்றத்தில் அழகாகக் காட்சியளிக்க விரும்புகிறவர்கள், உடலுக்கோ, மனத்திற்கோ அதிகம் சிரமம் தராத முட்டைக்கோஸ் சாற்றையே அருந்தினால் போதும், வியக்கத்தக்க முறையில் உடல் பருமன் குறைந்து குணமாகிவிடுவீர்கள்.

இதனால் சொறிசிரங்கு குணமாகும். வயதுக்கு முந்தியே முதுமைத் தோற்றம் அடைவது கட்டுப்படுத்தப்படுகிறது. முதுமையிலும் இளமைத் தோற்றத்துடன் திகழ உடல் வலுப்பெற முட்டைக்கோஸையும் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸை ‘கேபேஜ்’ என்று ஆங்கிலத்தில் வழங்குவது ஏன்? காபட் என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்குத் தலை என்பது பொருள். அதிலிருந்தே ‘கேபேஜ்’ என்ற ஆங்கிலப் பெயர் வந்தது. முட்டை போன்ற வடிவமைப்பில் உள்ளதால் தமிழில் முட்டைக்கோஸ் என்னும் பெயர் இட்டுள்ளனர்.

பார்வைக்கோளாறு, மூட்டு வீக்கம், பல்வியாதிகள், இரத்தசோகை, வெண்குஷ்டம, இரைப்பை எரிச்சல், மூலவியாதி, இருமல், வயிற்றுப்பொருமல் ஆகியவை குணமாகவும் தினமும் பச்சையாக முட்டைக்கோஸை சூஸாகவோ, பேல்பூரியாகவோ தயாரித்து உண்டு உடலுக்கு நன்மைபெறலாம்.
வைட்டமின் ‘யு’ என்னும் பொருள் இதில் இருக்கிறது. அதுவே வயிற்றுப் புண்களை முற்றிலும் குணமாக்கி விடுகிறது. இரத்தம் சுத்தம் பெறவும் தினமும் முட்டைக்கோஸை சமையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர நன்மை கிடைக்கும்.

அனைத்து வயதினருக்கும் முட்டைக்கோஸ் மிக முக்கியமான உணவு மருந்து என்பதை மறந்து விடாதீர்கள்.

குண்டாக விரும்புகிறவர்களுக்குப் பயன்படும் காலிஃபிளவர்
பூக்கோசு என்று சொல்லப்படும் காலிஃபிளவரின் தாயகம் பசிபிக் பெருங்கடல் பகுதி அருகே உள்ள நாடுகள்தாம். அமெரிக்காவில் அரிசோனா, கலிபோர்னியா ஆகிய மாநிலங்களில் இது நன்கு விளைகிறது.

சீசன் சமயத்தில் தினமும் காலிஃபிளவர் சாப்பிடுவது உடலுக்கு சிறந்த சத்துணவாக அமையும்.100 கிராம் பூக்கோசில் கிடைக்கும் கலோரி அளவு 33தான். எனவே, 200 கிராம் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.

குறிப்பாக, உடல் குண்டாக உடற்பயிற்சி, பலவகையான சத்துணவு வகைகள் சாப்பிட்டும் உடலில் சதை கூடாமல் இருப்பவர்கள் பூக்கோசைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இதனால் சீசன் முடிவதற்குள் ஒல்லியாய் இருப்பவர்கள் ஓரளவு குண்டாகிவிடுவார்கள்.
காரணம், இதில் மாவுச்சத்தும் உயர்தரமான புரதமும் தாதுஉப்புகளும் அடங்கி யுள்ளமையே.
அதே நேரத்தில், படுகுண்டாய் இருப்பவர்கள் பூக்கோசை அளவுடன்தான் சாப்பிடவேண்டும். இல்லையெனில், அவர்கள் மேலும் குண்டாகிவிடுவார்கள்!

வாதநோய்காரர்கள் பூக்கோசை உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடாது!
வளரும் குழந்தைகளுக்குத் தினமும் சூப்பாக சமைத்துக்கொடுத்தால் பூக்கோசில் உள்ள இரும்பு சத்து, திசுக்கள், நகம், முடி வளர உதவும். கந்தகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், புரதம், மாவுச்சத்து ஆகியவற்றால் குழந்தைகள் வாட்ட சாட்டமாய்த் திடகாத்திரமாய் வளர்வார்கள்.

குழந்தைகளைப் போலவே சத்துணவுடன் இரத்த விருத்தி, ஆரோக்கியமான உடற்கட்டு தேவை என்று விரும்பும் பெரியோர்களும் பூக்கோசைத் தவிர்க்கக்கூடாது.

கைகால்களில் ஏற்படும் மூட்டுவலி குணமாகவும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இதில் உள்ள வைட்டமின் ‘சி’ பயன்படுகிறது. 100 கிராம் பூக்கோசில் 55 மில்லிகிராம் அளவு வைட்டமின் ‘சி’ இருக்கிறது.

காலிஃபிளவரில் புழுக்கள் இருக்கும். எனவே, நன்கு கழுவின பிறகே சமைக்க வேண்டும்.
100 கிராம் பூக்கோசில் 1.2 சதவிகிதம் நார்ச்சத்து அமைந்துள்ளது. இது குடலில் தங்கியுள்ள கழிவுப்பொருள்களை வெளியேற்றிவிடுகிறது. மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை. இரத்த ஓட்டத்தில் பித்தநீரும் கொழுப்பும் அதிக அளவு சேர்ந்துவிட்டால் நார்ச்சத்தே தடுத்துவிடுகிறது.

இதனால் எல்லாவிதமான இதயநோய்களும் முன்கூட்டியே தடுக்கப்பட்டுவிடுகிறது.

மாரடைப்பு, அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு முதலிய நோய்கள் ஏற்படாமல் நீண்டகாலம் நலமாய் வாழவேண்டும் என்பதற்காகத்தான் பட்டாணி, மொச்சை போன்றவற்றைப் பலரும் தொடர்ந்து சாப்பிடுகிறார்கள். அவற்றில் உள்ளதைப் போலவே பூக்கோசிலும் நார்ச்ச்த்து தக்கவிகிதத்தில் அமைந்துள்ளது.

பூக்கோசு சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். நாக்கு வறட்சி, தோல்வறட்சி ஆகியன நீங்கும். சளித்தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு இந்த உணவே மருந்தாகும்!

அடிக்கடி தலைவலியால் சிரமப்படுபவர்களுக்குப் பூக்கோசு குணமளிக்கும். வைட்டமின் ‘ஏ’யும் சிறிதளவு இருப்பதால் கண் பார்வை தொடர்பாக ஏற்படும் தலைவலியும் உடன் குணமாகும்.
உடல் பளபளப்பிற்காகப் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்கள் காலிஃபிளவரையும் தொடர்ந்து சாப்பிட்டு இதே நன்மையைப் பெறலாம்.

எல்லா வயதுக்காரர்களும் மிகவும் விரும்பிச் சாப்பிடும் பூக்கோஸில் அதற்கு ஏற்றவாறு பாஸ்பரஸ் சத்தும் போதுமான அளவில் அமைந்துள்ளது. இது மந்தப்புத்தியை அகற்றி மூளையைச் சுறுசுறுப்புடன் செயல்படத் தூண்டிக் கொண்டே இருக்கும்.

எனவே, காலிஃபிளவர் (சீசனின்போது) தினசரி நன்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தைப் புதுப்பித்துக்கொள்ள மறவாதீர்கள்.

பாகற்காய் : சில இனிப்பான செய்திகள்
வேம்பு போன்று கசப்பான சுவையுள்ள காய்கறி, பாகற்காய் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பிரதேசத்தில் தோன்றிய மிக முக்கியமான இரு காய்கறிகளுள் பாகற்காயும் ஒன்றாகும். (இன்னொன்று, பறங்கிக்காய்)

பாகற்காயின் தாவர விஞ்ஞானப் பெயர் மோனோர்டிகா சாரண்டிகா (Monordica Chawantica) என்பதாகும்.

அமெரிக்காவைக் கொலம்பஸ் கண்டுபிடிப்பதற்கு முன்பே அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி அருகே பாகற்காய் நன்கு விளைந்தது. அங்கிருந்து இங்கிலாந்து மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு அதன் விதைகள் எடுத்துச் செல்லப்பட்டன. தற்போது இந்தியா, ஸ்ரீலங்கா, இந்தோனேஷியா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிலும் பாகற்காய் நன்கு பயிராகிறது.

மிகச்சிறந்த மருத்துவகுணங்களை நிரம்பிய காய்கறி இது; நஞ்சை முரிக்கும்; குடிமயக்கத்தை நீக்கும; காய்ச்சலைத் தணிக்கும்; வயிற்றுக் கோளாறுகளைக் குணப்படுத்தும்; பசிக்சுவையை உண்டுபண்ணும்; பித்தத்தைப் போக்கும்; மலச்சிக்கலையும் போக்கும் அரிய உணவு மருந்து இது.

இவ்வளவு சிறப்புகளையும் பாகற்காயை நீரிழிவு நோயாளிகளைத் தவிர மற்றவர்கள் விரும்பி உண்ணுவதில்லை. காரணம், பாகற்காயில் உள்ள கசப்புச் சுவைதான்! ஆனால் இக்காயின் அருமையை இருபதாம் நூற்றாண்டில் மக்கள் நன்கு உணர்ந்துவிட்டார்கள்.

அதன் விளைவாக ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் பாகற்காய் சமையலில் அதிகம் இடம்பெற ஆரம்பித்துள்ளது.

பிரிட்டன் நாட்டு டாக்டர்கள், பாகற்காயில் இன்சுலின் போன்ற ஒரு முக்கியமான பொருள் இருக்கிறது; அதுதான் நீரிழிவுக்காரர்களின் இரத்தத்திலும், சிறுநீரிலும் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது என்று 1993 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர்.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கக் கண்ட இயற்கை மருத்துவச் சிகிச்சையில் பல்லாண்டுகளாகப் பாகற்காய் உணவு மருந்தாகவே பயன்படுத்தப்பட்டு வருவதற்கு இதுதான் முக்கியகாரணம் என்றும் மேற்படி பிரிட்டன் ஆய்வு உறுதி செய்துள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல, தொற்றுநோய் பரவாமல் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துணவும் பாகற்காயில் உள்ளது.
எனவே, காலையில் காபி, தேநீர் முதலிய பானங்களுக்குப் பதிலாக 5, 6 பாகற்காய்களை (பழுத்தவை) சூஸாகத் தயாரித்து நீரிழிவு நோயாளிகள் அருந்தினால் அடிக்கடி பசி எடுக்காது. மற்றவர்களுக்கும் இதே நன்மை கிட்டும்.

100 கிராம் பாகற்காயில் வைட்டமின் ‘ஏ’ வைட்டமின் ‘பி1′, ‘பி2′ வைட்டமின் ‘சி’-8 மில்லிகிராம், இரும்புச் சத்து, 2 மில்லிகிராம் மற்றும் பாஸ்பரஸ், கால்சியம் போன்ற தாது உப்புகளும் போதுமான அளவில் உள்ளன. எனவே, உயர் இரத்த அழுத்தம் நரம்புக்கோளாறுகள், மாவுச்சத்துக் குறைபாடுகள், கண் தொடர்பான நோய்கள் முதலியவை இருந்தால் அவை குணமாகவும், அல்லது மேற்கண்ட கோளாறுகள் வந்துவிடாமல் முன்கூட்டியே தடுக்கவும், காலையில் பாகற்காய் சூஸ் வெறும் வயிற்றில் அருந்தி வாருங்கள்; தொற்று நோய் எதுவும் அண்டாது.

பாகற்காயைச் சமைத்துச் சாப்பிட்டாலும் சூஸாக அருந்தினாலும் மூலத்தொந்தரவு குணமாகிறது; இரத்தம் சுத்தப்படுத்தப்பட்டுவிடுகிறது.

இரும்புச்சத்தால் இரத்த விருத்தியும் தொடர்ந்து உற்பத்தியாகிறது. சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் குணமாகிறது.

மூலத்தொந்தரவு உள்ளவர்கள் பாகற்கொடியின் இலைகளைப் பறித்து, மூன்று தேக்கரண்டி அளவு சாறாகத் தயாரித்து, அதை மோருடன் கலந்து காலையில் அருந்த வேண்டும். இந்தச் சிகிச்சை முறையை ஒருமாதம் தொடர்ந்தால் மூலநோய் கட்டுப்படும்.

தொழுநோய் குணமாக….
சொறி, சிரங்கு, நமட்டு எரிச்சல், படர்தாமரை, தொழுநோய் போன்றவற்றை வேருடன் அழித்துக் குணப்படுத்தும் அரிய மருந்து பாகற்காய்! மேற்கண்ட நோய்கள் குணமாக ஒரு கப் பாகற்காய்ச் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தைக் கலந்து, சூடான காபியை ஒவ்வொரு மடக்காக சாப்பிடுவது போல சாப்பிட வேண்டும். ஆறுமாதம் வரை தினமும் அதிகாலையில் இந்த முறையில் சாப்பிடும் பாகற்காய்ச் சாறு, இரத்தம் தொடர்பாக தோலில் ஏற்பட்டுள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்தி மேனி எழிலுக்கு ஏற்றது பாகற்காய் என்பதை மற்றவர்களுக்கும் உங்களைச் சொல்ல வைக்கும்.

சாதாரணமாகச் சமைத்துச் சாப்பிட்டாலும் மேற்கண்ட அனைத்து நோய்களும் குணமாகி ஆரோக்கிய விருத்தியைப் பெற முடியும். சமைத்துச் சாப்பிடும் பாகற்காய் தொண்டை வலி, மூக்கில் ஏற்படும் கோளாறுகள் முதலியவற்றையும் குணப்படுத்துகிறது.

பழுத்த பாகற்காயின் விதைகளை மணமூட்டும் பொருளாகப் பல்வேறு பொருள்களில் இந்தியா பயன்படுத்திக்கொள்கிறது.

பசலைக்கீரையை போல பாகல் இலையைச் சமைத்துச் சாப்பிட்டும் குறைந்த செலவில் உடலுக்கு அதிக நன்மைகளைப் பெறலாம்.

அழகான, ஆரோக்கியமான உடல் தோற்றத்திற்கு காரட் கிழங்கு
கண்பார்வைக்குத் தேவையான முக்கியமான உணவுச்சத்து, வைட்டமின்-ஏ, இந்த ‘ஏ’ வைட்டமின் உற்பத்தியாவதற்குத் தேவையான முக்கியப் பொருள் ‘காரட்டீன்’. காரட் கிழங்கின் நடுவில் மஞ்சளாகக் காணப்படும் பொருள்தான் காரட்டீன்.

காய்கறிகளுள்ளே மிக அதிகமாகக் காரட் கிழங்கில்தான் ‘காரட்டீன்’ அமைந்திருக்கிறது. அதனால்தான் மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படும் இந்தக் கிழங்கிற்குக் காரட் என்று பெயர் இட்டுள்ளனர்.

100 கிராம் காரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’யின் சர்வதேச அலகு 11,000 ஆகும். வேறு எந்தக் காய்கறிகளிலும் இந்த அளவு வைட்டமின் ‘ஏ’ அமைந்திருக்கவில்லை. இதனால் தினந்தோறும் காரட்டை மிக்ஸியில் அடித்துச் சாறாகவோ உணவுடனோ சேர்த்தோ சாப்பிட்டால் கண்பார்வை மிகவும் கூர்மையாகும். கண்ணாடி அணிவதைத் தவிர்த்துவிடலாம். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் லென்சின் பவர் எண் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

100 கிராம் காரட்டில் மாவுச்சத்து 9.7 கிராம, புரதம் 1.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், வைட்டமின் ‘சி’ 8 மில்லிகிராம், நியாஸின் 0.6 மில்லிகிராம், ரிபோஃபிளவின் 50 மைக்ரோகிராம், தயாமின் 60 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்கின்றன. மேலும், கால்சியம் 80 மில்லி கிராம், பாஸ்பரஸ் 530 மில்லிகிராம், இரும்புச்சத்து 2.2 மில்லிகிராம் என்ற அளவிலும் உள்ளன. 100கிராம் காரட்டில் கிடைக்கும் கலோரி அளவு 48. தினமும் 200 கிராம் காரட்டைப் பச்சையாகக் கடித்தோ சாறாகவோ சாப்பிட்டால் போதும். காரட்டை அளவுக்கு மேல் பயன்படுத்தினால் மூலத்தொந்தரவு ஏற்படும்.

சுவையான காரட்டின் வரலாறு!
‘Faulus Carota’ என்பது காரட்டின் தாவர விஞ்ஞானப் பெயராகும். மனிதன் சாப்பிடுவதற்காகவே பயிர் செய்யப்படும் தாவரம், காரட். பண்டைய காலத்தில் பெரிது பெரிதாகக் காரட்கிழங்கு வளர்த்தது. அதன் பிறகுதான் சிறதாக வளரும் காரட் கிழங்கை மனிதன் கண்டுபிடித்தான். ஆதிகால மனிதன் உணவாகச் சாப்பிட்டாலும், பண்டைய கிரோக்கர்களும் ரோமானியர்களும் காரட்கிழங்கை உணவாக உண்ணாமல் மருந்தாகத்தான் பயன்படுத்தினார்கள்!

அவர்களின் கண்டுபிடிப்பு சரியானதே என்பதை நிரூபிக்கும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் காரட் கிழங்கு உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டில்தான் காரட்டில் காரட்டீன் என்னும் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!

காரட், முதல்முதலாக ஆப்கானிஸ்தான் நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகளிலும் பயிரானது. இயேசுநாதர் பிறப்பதற்கு முன்பே கி.மு.13ஆம் நூற்றாண்டிலேயே மத்திய தரைக்கடல் பகுதிகளிலும், வடமேற்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் காரட் கிழங்கு பயிர்செய்யப்பட்டுள்ளது.

முதலாம் எலிசபெத் காலத்தில்தான் நெதர்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்தில் காரட் அறிமுகமானது. அதன் பிறகே மற்ற நாடுகளிலும் காரட் அறிமுகமானது. அதன் பிறகே மற்ற நாடுகளிலும் காரட் கிழங்கு பரவியது. இங்கிலாந்து நாட்டில் பெண்கள் தங்களின் தலையலங்காரத்திற்குக் காரட் கீரையைப் பயன்படுத்தினார்கள். (இந்த வகைக் காரட்டிற்கு ‘Queen Ann’s Lace’ என்னும் பெயர் இட்டிருந்தார்கள்.)

இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளிலும் தற்போது காரட் கிழங்கு நன்கு பயிராகிறது.

காரட்டைப் பச்சையாகச் சாப்பிடலாமா?

காரட்டிலிருந்து கிடைக்கும் காரட்டீன் வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றப்பட்டு உடலுக்குப் பயன்படுகிறது. எஞ்சியவை கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. நம் உணவில் வைட்டமின் ‘ஏ’ குறையும் போது சேமிப்பலிருக்கும் வைட்டமின் ‘ஏ’ யை உடல் எடுத்துக்கொள்கிறது.

காரட் சாறு சாப்பிடச் சுவையாய் இருக்கும்; பசியைத் தூண்டும்; இரைப்பை எரிச்சலைத் தணிக்கும்; குடலில் உள்ள பூச்சிகளைக் கொன்று, மலச்சிக்கலையும் போக்கிக் குடலையும் சுத்தம் பண்ணிவிடும். இருமலையும், சளியையும் வேருடன் பிடுங்கி அழித்துவிடும். எனவே, காலையில் சாறாக அருந்துவதே நல்லது.

உருளைக்கிழங்கில் உள்ளதைவிட ஆறுமடங்கு அதிகமாகக் கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து இக்கிழங்கில் உள்ளது. இந்தச் சுண்ணாம்புச் சத்தும் எளிதில் செரிக்கக்கூடிய தன்மைையுயம் பெற்றுள்ளது. இதனால் எலும்பு, பல் முதலியன வளர்ச்சி பெறுகின்றன. அவை நன்கு பலப்படுத்தப்படுகின்றன. சுண்ணாம்புச்சத்துக் குறைந்தால் உடலில் நோய் தோன்றும், இரத்தம் உறைவதும் தடுக்கப்படும்.

1994ஆம் ஆண்டு பாஸ்டன் (அமெரிக்கா) ஆய்வாளர்கள் சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். கால்சியசத்து அதிகம் உள்ள உணவு உண்ணும் போது இரத்த அழுத்தம் உயர்வது தாமதப்படுகிறது; எலும்புகளும் நன்கு பராமரிக்கப்படுகின்றன என்றும் கண்டுபிடித்துள்ளனர். எனவே, வளரும் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் உறுதியான ஆரோக்கியமான உடலைப் பெறக் கால்சியம் அதிகம் உள்ள காரட்கிழங்கைத் தினமும் உணவில் சேர்த்து வருதல் நல்லது.

காரட்டில் இரும்புச்சத்தும் இருப்பதால் இரத்திவிருத்தி நன்கு உண்டாகிறது.
100 கிராம் திராட்சைப் பழத்தில் உள்ளதை விட 100 கிராம் காரட் கிழங்கில் 25 மடங்குக்கு மேல் பாஸ்பரஸ் சத்து அடங்கியிருக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாகிறது. ஞாபகச்சக்தியும், செயல்படும் ஆற்றலும் அதிகரிக்கின்றன.

நகம், முடிபோன்ற திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான கந்தகச் சத்து, சோடியம், அயோடின் போன்ற தாது உப்புகள் காரட் கிழங்கின் தோல் பகுதி அருகில் அதிக அளவில் உள்ளன. எனவே, காரட்டை நன்கு கழுவினால் மட்டும் போதும். தோல் சீவாமல் உணவில் பயன்படுத்தினால் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் இந்த அதி அற்புத காரட் கிழங்குகளிலிருந்து பெறலாம்!
காரட் இரத்தத்தையும் சுத்தப்படுத்தி, சளி, புழுக்கள் போன்றவற்றையும் வெளியேற்றி, வறண்ட தோலையும் பளபளப்பாக்கிவிடுகிறது. முக அழகு ரோஜாபோல் இருக்க வேண்டும் என்றால் காரட் சாறு அருந்துங்கள். எண்ணெய் வழிவதும் பருக்கள் தோன்றுவதும் அகன்று முகம் ‘பளிச்’ என்று ஆகிவிடும். சளிச்சவ்வு எந்த இடத்தில் இருந்தாலும் வெளியேறிவிடும். புகைபிடிப்பவர்கள் இருமலில் இருந்தும், சளித்தொல்லையில் இருந்தும் விடுபடக் காரட் சாறு அருந்துவது நலம் பயக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது காரட்சாறு, இன்சுலின் போன்ற ‘Tockincin’ என்னும் ஹார்மோன் காரட்டில் இருக்கிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் காரட் சாறு அருந்தச் சிபாரிசு செய்யப்படுகிறார்கள்.

சொறிசிரங்கு உள்ளவர்கள் காரட்டை உப்புடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டால் போதும்.

காரட் சாற்றின் பயன்கள்
காரட்சாறு இரத்தத்தில் உள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. இதனால் கீல்வாத நோய்க்காரர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைகின்றன.

சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையவும், ஈரல் நோய்கள், சயரோகம், மாதவிலக்கு குறைபாடு போன்றவை குணமாகவும், காலை உணவாக ஒரு கப் காரட்சாறு அருந்தினால் பலன் கிட்டும்.

மலட்டுத் தன்மை நீங்க
காரட்டில் வைட்டமின் ‘ஈ’யும் இருப்பதால் மலட்டுத்தன்மை குணமாகிறது. குழந்தை பிறக்க வாயப்பு ஏற்படுகிறது. இதே வைட்டமின் ‘ஈ’ இரத்தப் புற்றுநோய் இருந்தால் அதைக் குணமாக்கிவிடுகிறது. தினமும் காரட் சாறு அருந்துபவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை.

குடல்புண்கள் :
காரட்டினால் குடலில் உள்ள கெடுதியான பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. குடல் புண்கள் முற்றிலும் குணமாகிவிடுகின்றன. மேற்கண்ட உண்மைகளை ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் மெட்சினிகோஃப் என்பவர் பரிசோதனைகளின் மூலம் 1993 ஆம் ஆண்டு நிரூபித்துக் காட்டினார்.

பற்களைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள…

உணவு உண்டபின் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிட்டால் வாய்ப்பகுதியில் உள்ள கெடுதலான கிருமிகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிடும். பற்கள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு, பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமலும் முன் கூட்டியே பாதுகாத்துவிடும். பற்களில் சொத்தையே ஏற்படாது.

மலச்சிக்கலுக்கு…
தொடர்ந்து மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் 250மில்லி காரட் சாற்றுடன் 50மில்லி பசலைக் கீரைச் சாற்றையும் சேர்த்து அதனோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து இரண்டு மாதங்கள் தினமும் அருந்த வேண்டும். பசலைக்கீரை குடல்களை நன்கு சுத்தம் செய்துவிடும். அதன்பிறகு காரட்டை மட்டும் சாறாக அருந்தினால் போதும். வாழ்நாளில் இதற்குப் பிறகு மலச்சிக்கல் தொல்லையே ஏற்படாது.

பேதி குணமாக…
காரட்டைச் சூப்பாகத் தயாரித்து அருந்தலாம். வயிற்றுமந்தமும் குணமாகிவிடும். பெக்டின் என்னும் நார்ப்பொருள் தேவையற்ற சக்கைகளை வெளியேற்றி வயிற்றுப் போக்கையும் குணமாக்கிவிடும்.

உணவு செரியாமையா?

உணவு செரிமானம் ஆகாத சமயத்தில் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிடுங்கள். விருந்துகளில் பலமாகச் சாப்பிட்டுவிட்டு செரிக்காமலோ வாந்தி வருவது போலவோ இருந்தால், இந்த முறையில் காரட்டைச் சாப்பிடுவது நல்லது. தேவையான எச்சில் ஊறி அதன் மூலம் செரிமானப் பொருள்களும், தாது உப்புகளும், வைட்டமின்களும் உடனடியாகக் குடல் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுச் சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஆரம்பித்துவிடும். சோடா, ஐஸ்கிரீம் போன்றவற்றுக்குப் பதிலாகக் காரட்டுகளை சாப்பிட்டால் உடனே உணவு செரிமானம் ஆகிவிடும். கடும் வயிற்றுவலி, பெருங்குடல் வீக்கம், இரைப்பைப்புண், முதலியவையும் தினசரி காரட் கிழங்குகள் சாப்பிடுவதால் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.

குழந்தைகளின் குடல் பூச்சிகளை அழிக்க ஒரு கப் காரட் சாற்றை மட்டும் காலை உணவாகக் கொடுத்தால்போதும். மதியம் வழக்கம்போல் வேறு உணவுவகைகள் கொடுக்கலாம். இது அருமையான உணவு மருந்து!

காரட்டைச் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்தான் எல்லாவிதமான சத்துக்களும் அழிந்துவிடாமல் கிடைக்கும். சமைத்துச் சாப்பிட்டால் சத்துகள் குறைவாகத்தான். பெரும்பாலும் சத்தே இல்லாமல் கிடைக்கும்.

ஞாபகசக்தி அதிகரிக்கவும், இதயம் சீராக இயங்கவும், இரத்தம் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்குவும், மஞ்சள் காமாலை நோய்காரர்கள் விரைந்து குணமாகவும், நெஞ்சுவலி, முதுகு வலியிலிருந்து குணமாகவும் தினமும் காரட்சாறு அருந்துங்கள்.

பால் கொடுக்கும் தாய்மார்கள் பலவீனம் அடையாமல் தொடர்ந்து சக்தி பெற்றுக் கைக்குழந்தைக்கு நன்கு பால் கொடுக்க – பால் சுரக்க காரட்சாறு அருந்த வேண்டும். இதனால் உடல் பலமும் பெறுகிறது.

1994 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகம் காரட் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 87 ஆயிரம் நர்சுகளைத் தேர்வு செய்தார்கள். அவர்களுள் பாதிப்பேர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் வழங்கப்பட்டது. மீதிப் பேர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் காரட் சாப்பிடத்தரப்பட்டது.

வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் சாப்பிட்டவர்களுள் 68 சதவிகித நர்சுகளுக்கு இதய நோய் மிகவும் குறைவாக இருந்தது. “காரட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். இதய நோய்கள் தாக்குவது மிகவும் குறைந்து விடும்” என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய டாக்டர் ஜோஆன் மான்ஷன் கூறியுள்ளார்.

காரட்டைப் போலவே காரட்கீரையும் மருத்துவக்குணம் நிரம்பியது. முடக்குவாதம் குணமாகவும், இரத்தம் பெருகவும் இக்கீரையைச் சமைத்து உண்ணலாம். உண்மையில் மேனி சிவப்பாகவும் பளபளப்பாகவும் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் காரட் கீரையையும் தொடர்ந்து சாப்பிடுங்கள்ள.

காய்கறிகள், கிழங்குவகைகள், கீரைவகைகள் முதலியவற்றுள் மிக மிக முக்கியமானது, உயர்தரமானது காரட் கிழங்கு! அதை எந்த வயதுக்காரரும் தவிர்க்கக்கூடாது என்பதற்காகத்தான் நிரூபிக்கப்பட்ட மேற்கண்ட உண்மைகளைத் திரட்டி விரிவாகத் தரப்பட்டுள்ளது.

எனவே, தினமும் ஏதாவது ஒரு வகைகளில் காரட்டை உணவோடு சேர்த்துக்கொண்டு உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழுங்கள்

Leave a Reply