கரிச்சான் குருவி

உயிர்மூச்சு (31.1.2015) இதழில் வெளியான சூழலியல் எழுத்தாளர் நக்கீரனின் நேர்காணலில் ஆனைச்சாத்தான் பறவையே கரிச்சான் குருவி என்று ஒரு முதியவர் தெரிவித்ததாகக் கூறியிருந்தார்.
அவர் கூறியுள்ளது போலவே, ஆனைச்சாத்தான் என குறிப்பிடப்படுவது கரிச்சான் குருவிதான் என்பது சரியான கருத்து.
இது அதிகாலை 4 மணிக்கு கீச்சு கீச்சு என்று இனிமையாக ஒலி எழுப்பும். அத்துடன் பசுக்கள் மேயும் இடத்தில் பசுக்கள் மீது ஏறி சவாரி செய்யும் காட்சியையும் காணலாம்.
திருப்பாவை பாடலில் வரும் ஆனைச்சாத்தான் பறவை எது என்று மூன்று ஆண்டுகளுக்கு முன் நானும் தேடினேன். அது கரிச்சான் குருவி என்ற முடிவுக்கு நான் வந்ததற்குக் காரணம் இருக்கிறது.
ஆநிரை என்றால் பசுக்கள் கூட்டம். சாத்தான் என்பது சார்ந்து இருப்பது அல்லது காவல் புரிவது (காத்தான்). இதனால் இந்தப் பறவை ஆநிரைச்சாத்தான் என்று அழைக்கப்பட்டு, பின்னர் அது ஆனைச்சாத்தான் என்று மருவி இருக்கலாம்.
இதை பறவைகளின் அரசன் என்றும் கூறுவார்கள். உருவத்தில் சிறிய இப்பறவையைக் கண்டால் மற்ற பறவைகள் ஓடிவிடும்.
காகங்கள், பசுக்களின் உடலில் உள்ள சிறிய காயங்களைக் கொத்திப் பெரிதாக்கிவிடும். இதைத் தடுக்கவே இவை பசுக்கள் மீது அமர்ந்திருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
பாவனா ஆரிச்சன், திருநெல்வேலி

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும்

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

by          இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்
                                                                               ( நடராஜன் கல்பட்டு )

 

இதற்கு கரிச்சான், மாட்டுக்காரன், இரெட்டைவால், வால் நீண்ட கருங்குருவி என்றெல்லாமும் பெயர்கள் உண்டு.

ஆங்கிலத்தில் இதனை Black drongo அல்லது King crow என்றழைப்பார்கள்.

விஞ்ஞான ரீதியாக இதற்களிக்கப் பட்ட பெயர் ‘Decrurus macrocercus என்பதாகும்.

http://en.wikipedia.org/wiki/Image:Dicrurus_macrocercus.jpg

கரிச்சான் குருவியின் நிறம் பளபளவென மின்னும் கருப்பு நிறம். புறாவை விட சற்று சிறிதான உடல். நீளமான வால் சிறகுகள்.
அலகுகள் ஆரம்பிக்கும் இடத்தில் மீசை போன்ற ரோமங்கள். இந்த ரோமங்கள் பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும் போதே அவற்றைப் பிடிக்க உதவுகின்றன.

கரிச்சான் குருவிகள் கிராமப் புரங்களில் இடையன் ஆடு மாடுகளை மேய ஓட்டிச் செல்லும் போது அவற்றின் மீது உட்கார்ந்து சவாரி செய்யும். அப்போது ஆடு மாடுகளின் கால்கள் செடிகளில் உட்கார்ந்து இருக்கும் வெட்டுக்கிளி, வண்ணாத்திப் பூச்சி இவற்றைக் கிளப்பிவிட அவை பறக்கும்போது, கரிச்சான் குருவி இறக்கைகளை விரித்தபடி வைத்துக் கொண்டு‘கிளைடர்’ விமானம் போல பறந்து சென்று பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு அதே மூச்சில் தான் இருந்த இடத்திற்கே வந்து சேரும் ‘பூமரேங்’ என்னும் ஆயுதம் போல.

கரிச்சான் குருவியை மின் கம்பிகள், விளக்குக் கம்பங்கள் இவற்றின் மீதும் பார்க்கலாம். அவ்வப்போது சிறிது தூரம் பறந்து சென்று இருந்த இடத்திற்கே திரும்புவதைக் காண முடியும். இதுவும் அவை தன் உணவை அடையும் பொருட்டே.

கிராமப் புரங்களில் ஒரு பாட்டு,

“வால் நீண்ட கருங்குருவி வலமிருந்து இடம் போனால்
கால் வீழ்ந்த கிழவியும்தான் குமரியாவாளே” என்று.

இவ்வாறு வழக்கில் வரக் காரணம் ஒருக்கால் எப்போதுமே வால் நீண்ட கருங்குருவி தான் உட்கார்ந்திருக்கும் இடத்தில் இருந்து புறப்பட்டு பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க கடிகார முள் போன்று இடமிருந்து வலமாகவே பறக்குமோ?

சில பறவைகள் தங்களது சிறகுகளில் பேன் போன்ற சிறு பூச்சிகள் சேராமல் தடுக்க ஒரு உத்தியினைக் கையாளும். அவை எறும்புப் புற்றின்மீது சென்றமரும். அப்போது அவற்றின் மீது ஏறும் எறும்புகள் வெளியிடும் ஃபார்மிக் அமிலத்தில் பேன்கள் இறந்து விடுகின்றன.

கரிச்சான் குருவி எறும்பு வைத்தியம் செய்து கொள்கிறது
http://en.wikipedia.org/wiki/Image:Black_Drongo_I2_IMG_5683.jpg

கரிச்சான் குருவிகளில் மற்றொரு வகை துடுப்பு வால் கரிச்சான் குருவி. இதன் வால் நீண்டு துடுப்பு போன்று இருக்கும் இதை ஆங்கிலத்தில் Racket-tailed Drongo என்று சொல்வார்கள்.

துடுப்பு வால் கரிச்சான் குருவி
http://en.wikipedia.org/wiki/Image:Dicrurus_paradiseus.jpg

கரிச்சான் குருவிக்கு பயம் என்பதே துளியும் கிடையாது. இது தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் பெரிதான காகம், கழுகு, பருந்து போன்ற பறவைகளைத் துரத்தித் துரத்தி விரட்டும். அந்தப் பறவைகளும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று திரும்பிப் பாராமல் அதி வேகமாகப் பறந்து செல்லும். இந்தக் காட்சி பார்க்க வேடிக்கையான ஒன்று. King crow என்ற பெயர் வரக் காரணம் இதுவே.

இயற்கையின் எழில் மூலம் இறைவன் நமக்கு அளிக்கும் இக் காட்சிகளில் தான் எத்தனை பாடங்கள் !

உருவத்தில் சிறியவனாக இருந்தாலும் உள்ளத்தில் உரம் இருந்தால் உன்னைவிட பலசாலியான எதிரியையும் ஓட ஓட உன்னால் விரட்ட முடியும் என்பதை நமக்கு இப்பறவையின் மூலம் ஆண்டவன் உணர்த்துகிறாரோ!

Leave a Reply