கடற்புற்கள்

சிலவகை கடற்புற்களை வளர்ப்பதன் மூலம் வேகமாக அழிந்துவரும் பவழப்பாறைகளை காப்பாற்ற முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
கடலில் இருக்கும் பவழப்பாறைகள், கடந்த 40 ஆண்டுகளாக வேகமாக அழிந்துவருகின்றன. பூமியானது வேகமாக வெப்பமடைவது தான் இதற்கான பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.
அதாவது மனிதனும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கரியமிலவாயுவின் அளவு வேகமாக அதிகரித்து சுற்றுசூழலில் கார்பனின் அளவை அதிகப்படுத்துகிறது. இப்படி சுற்றுச்சூழலில் அதிகரிக்கும் கார்பன், கடல்நீரிலும் அதிகரிக்கும் போது கடல்நீரின் அமிலத்தன்மையும் கூடுகிறது.
இப்படி கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரிக்கும்போது, அது பவழப் பாறைகளை அழிக்கிறது. காரணம் பவழப்பாறைகளை உருவாக்கும் சுமார் ஒரு செண்டிமீட்டர் நீளமுள்ள புழுவைப்போன்ற தோற்றமுடைய கடல்வாழ் உயிரினம், ஆரோக்கியமாக வாழ்ந்தால் தான் அவை சுரக்கும் வேதிப்பொருள் பவழப்பாறையாக வளரும். கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தால் இந்த புழுக்கள் அதில் வாழமுடியாது என்பது ஒருபக்கம் இருக்க, அவை உருவாக்கும் பவழப்பாறைகளும் இந்த அமிலத்தன்மை மிகுந்த தண்ணீரில் கரைந்து காணாமல் போய்விடும்.
இது தான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் பவழப்பாறைகள் குறித்து பெரும் கவலையை தோற்றுவித்து வந்திருக்கிறது. பலவகையான கடல்வாழ் உயிரினங்களும் குஞ்சு பொறிக்கவும், குட்டிபோடவும் தேவையான பாதுகாப்பான சூழலை பவழப்பாறைகள் அளித்து வருவதுடன், தென் பசிபிக் கடற்பகுதியில் இருக்கும் பல்வேறு குட்டித்தீவுகளின் இயற்கை பாதுகாவலனாகவும் இவை செயற்படுகின்றன.

இந்த பின்னணியில் பவழப்பாறைகளின் அழிவு என்பது அவற்றின் அழிவாக மட்டுமில்லாமல், கடல்வாழ் உயிரினங்கள், குறிப்பாக பலவகையான மீனினங்களின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதால் பவழப்பாறைகளை பாதுகாப்பதற்கு விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் ஆக்ஸ்போர்ட், ஸ்வான்ஸி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குக் பல்கலைக்கழகங்கள் கூட்டாக இணைந்து செய்த ஆய்வின் முடிவில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வை கண்டறிந்திருப்பதாக ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகளின் தலைவர் முனைவர் ரிச்சர்ட் அன்ஸ்வொர்த் அறிவித்திருக்கிறார்.
அதாவது குறிப்பிட்ட சிலவகை கடற்புற்கள், கடல் நீரில் இருக்கும் கார்பனை மிகவேகமாக உள்வாங்கிக்கொள்வதன் மூலம் கடல்நீரின் அமிலத்தன்மையை குறைக்கின்றன. இது பவழப்பாறைகளின் அழிவை தடுப்பதுடன், அவை ஆரோக்கியமாக வளரவும் வழி செய்கிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அதாவது குறிப்பிட்ட இந்தவகை கடற்புற்கள், கடல்நீரில் இருக்கும் கரியமிலவாயுவை பயன்படுத்தி போடோசிந்தஸிஸ் என்கிற ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும், இதன் மூலம் இந்த புற்கள் இருக்கும் இடத்தில் கடல்நீரின் அமிலத்தன்மை குறைந்து காரத்தன்மை அதிகரிப்பதாகவும் இது பவழப்பாறைகள் ஆரோக்கியமாக வளர உதவுவதாகவும் ரிச்சர்ட் கண்டறிந்திருக்கிறார்.
இதைத்தொடந்து எங்கெல்லாம் பவழப்பாறைகள் வேகமாக அழிந்து வருகிறதோ அந்த பகுதியில் இந்த குறிப்பிட்ட கடற்புற்களை வளர்க்கலாம் என்கிறார் அவர்.
அதேசமயம், இந்த கடற்புற்களும் கூட எல்லா இடங்களிலும் தாக்குப்பிடித்து வளர முடியாது என்கிறார் அவர். மீனவர்கள் பயன்படுத்தும் தடைசெய்யப்பட்ட வலைகள், மனிதர்களின் வேதிக்கழிவுகள் அதிக அளவில் கடலில் கலப்பது உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த கடற்புற்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

Leave a Reply