ஓவர் சுத்தம் உடம்புக்கு ஆகாது!

சுத்தம் என்கிற பெயரில் என் மனைவி ஒரு நாளைக்குப் பல முறை ஹேண்ட் வாஷ் மற்றும் சானிடைசர் உபயோகித்து கை கழுவுகிறாள். இது சரியானதுதானா?
– சி.ஜெயராம், சென்னை – 31.

ஐயம் தீர்க்கிறார் சருமநல நிபுணர் டாக்டர் ப்ரியா ராமநாதன்... ‘ஒரு நிமிடத்தில் 99 சதவிகித பாக்டீரியாக்களை அழித்துவிடும்’ என்பது போன்ற விளம்பரங்களைப் பார்த்துவிட்டு ஆன்ட்டிபாக்டீரியல் சோப், ஷாம்பு, ஹேண்ட் வாஷ், சானிடைசர் என நிறைய பேர் உபயோகிக்கிறார்கள்.வெளியில் சென்றுவிட்டு வரும்போதோ, குழந்தைகள் வெளியே விளையாடி விட்டு வரும்போதோ கைகளில் ஏற்படும் அழுக்குகளை சாதாரண சோப்பு போட்டு கழுவினாலே அழுக்குகளும் பாக்டீரியாக்களும் நீங்கிவிடும்.

ஆன்ட்டி பாக்டீரியல் சோப்புகள் சரும நோயுள்ளவர்களும், வெயில் காலங்களில் ஏற்படும் வியர்க்குரு, ரேஷஸ், ஃபங்கஸ், பாக்டீரியல் தொற்று நோய்கள் உள்ளவர்களும் பயன்படுத்தக்கூடியவை. மேலும் அவற்றில் உள்ள ட்ரைக்ளோசன், ட்ரைக்ளோகார்பன் போன்ற மூலப்பொருட்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை அழிக்கக்கூடியவை.

இது உடலில் உள்ள நோய்க்கிருமிகள் உடலின் மற்ற பாகங்களில் பரவாமல் கட்டுப்படுத்துவதோடு, நோயின் தீவிரத்தையும் தடுக்கிறது.
மருத்துவர் அறிவுறுத்தல் இன்றி, ஆன்ட்டிபாக்டீரியல் பொருட்களைப் பயன்படுத்தும்போது ஆன்ட்டிபயாடிக் ரெசிஸ்டன்ஸ் அதிகம் ஆகவும், ட்ரைக்ளோசன் மூலப்பொருள் நீரில் கலந்து பக்கவிளைவுகள் ஏற்படவும் கூடும். இது ஹார்மோன் சமநிலையையும் பாதிக்கக்கூடும்.

கூடியவரை ஆன்ட்டிபாக்டீரியல் அடங்கிய சோப், ஷாம்பு, ஹேண்ட்வாஷ், சானிடைசர் போன்றவற்றின் உப யோகத்தை குறைத்துக் கொள்வதே நல்லது.

சாதாரணமாக குழாயிலிருந்து வரும் நீரில் (Running water) நேரிடையாக சோப்பு போட்டு 20 வினாடிகள் கைவிரல்களுக்கு இடையே,
உள்ளங் கை, கைகளின் மேற்புறம் என கழுவுவதே போதுமானது. இதையே குழந்தைகளுக்கும் கற்றுத்தர வேண்டும்.
– உஷா

Leave a Reply