ஓசனிச்சிட்டு

​ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனை
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவதென்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகளைப் படைத்து ஒரு இடத்தைப் பெற்றுவிட்டன. அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஒரு பறவையைப் பற்றி அறிய விருப்பமா?
உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5 சென்டிமீட்டர் நீளம் மற்றும் 2 கிராம் நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஒரு ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்கிற உலக சாதனையைப் படைத்தது மட்டுமில்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்கிற சாதனையையும் படைத்துள்ளது.
அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டுமில்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கக்கூடிய பறவை ஆகும். இது எல்லாமே போதாது என்று, நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனையும் இந்தப் பறவை கொண்டதாகும். அட அப்படி மிதப்பதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? நண்பர்களே, ஒரு பறவையால் அப்படி மிதப்பது என்பது ஒரு அதிசயம் தான். ஏனென்றால், அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனித கண்களால் பார்க்கவே முடியாது என்றால் யோசித்துப் பாருங்கள் அது எவ்வளவு பெரிய சாதனை என்று. 
பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவில் இருந்து இன்னுமொரு பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதன் சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக இந்த வல்லுநர்கள் ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களைத் தொட்டு விடுகின்றன.
நண்பர்களே, இது ஆச்சரியமாக இல்லையா? இந்த உலக சாதனை படைத்த அதிசயப் பறவையைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதற்குரிய பதிலை மட்டும் இல்லை, எனது சிறு கட்டுரை பற்றிய அபிப்பிராயத்தையும் எனக்குக் கண்டிப்பாக அறியத் தாருங்கள்!
அது வரை தொடர்ந்தும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும்,

உங்கள் SciNirosh (Dr. Niroshan Thillainathan)

——————————————— 

இதைப் போல் வேறு அறிவியல் கேள்விகளுக்குப் பதில் தெரிய வேண்டும் என்றால் எனது YouTube Channelஐ Subscribe செய்யுங்கள்: https://www.youtube.com/c/SciNirosh?sub_confirmation=1
Snapchat & Instagram: @SciNirosh

Leave a Reply