ஒரு சொட்டு எண்ணெய் இல்லா தண்ணீர் பூரி

இயற்கை உணவுகள்

தேவையானவை:.

கோதுமை மாவு – 150 கிராம்
காய்கறிச்சாறு  (வெண்பூணி, கேரட், தக்காளி
ஏதேனும் ஒரு காயில் சாறு தயாரிக்கவும்)
இந்துப்பு – தேவையான அளவு
தேங்காய்த் துருவல்- அரைமூடி,
கரும்பு வெல்லத்தூள் – 100 முதல் 150 கிராம்

மாவு பிசையும் முறை:

சப்பாத்தி, பூரிக்கு மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் சிறிது சமையல் எண்ணெய் கலந்து, சிறிது பால் கலந்த தண்ணீர் சேர்த்து மாவு பிசைவார்கள். இதற்குப் பதிலாக இங்கு காய்கறிச் சாறு 50 கிராம் எடுத்து அரை மணி நேரம் முன்பாக கோதுமை மாவில் கலந்து, சிறிதளவு நீர்விட்டு (பாலுக்குப் பதிலாக கெட்டித் தேங்காய்ப்பால், முளைதானியப் பால் கலந்தும் தயாரிக்கலாம்) நன்றாகப் பிசையவும். இதனுடன் தேங்காய்த்துருவலையும் சேர்த்துப் பிசையவும். பிறகு, இந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக்கி பூரிக்கட்டையில் தேய்க்கலாம். அல்லது பிரஸ்ஸிங் கருவியை பயன்படுத்தியும் தேய்க்கலாம்.

தண்ணீர் இல்லாத பூரி தயாரிப்பு முறை:

5 லிட்டர் கடாய் அல்லது வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் (மூன்றரை லிட்டர்) நீர் விட்டு, நன்றாகக் கொதிக்கவிட வேண்டும். தேய்த்த மாவை சல்லிக் கரண்டியில் வைத்து, கொதிநீரில் இறக்கி, இரண்டு நிமிடம் வேக வைத்து அப்படியே கரண்டியுடன் வெளியே எடுத்து, தண்ணீர் வடிந்தவுடன் வேறு தட்டில் வைக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் குருமா, தக்காளி கொஸ்து, விதம்விதமான சட்னி என்று எதையும் இந்த பூரிக்கு சைட் டிஷ்ஷாகப் பயன்படுத்தலாம்.

பயன்கள்:

சொட்டு எண்ணெய் இல்லாத, அரிசி இல்லாத அருமையான உணவுதான் இந்த தண்ணீர் பூரி. தேங்காய்த்துருவலை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துவதால், கொலஸ்ட்ரால் பயம் தேவையில்லை. பல் இல்லாதவர்களுக்கு மிகவும் பொருத்தமான உணவு. மற்ற பூரியை விட தண்ணீர் பூரி அளவான வெப்பசக்தி (கலோரி) உடையதென்பதால், ஒருவேளையில்  5 முதல் 8 வரை சாப்பிடலாம். தொப்பை, கொலஸ்ட்ரால், கூடுதல் எடை, இதயநோய், அல்சர், நீரழிவு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இது அருமையான உணவு. தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம்.

குறிப்பு: கோதுமை மாவுக்கு பதிலாக, ராகி மாவு, கம்பு மாவு, சத்து மாவு இவற்றில் ஏதேனும் ஒரு மாவைப் பயன்படுத்தியும் பூரி தயாரிக்கலாம்.

காய்கறிச் சாறுக்குப் பதிலாக கீரைச்சாறு (பசலைக்கீரை, வெந்தயக்கீரை, அரைக்கீரை என ஏதேனும் ஒரு கீரை) பயன்படுத்தலாம். அல்லது மூலிகைச் சாறு (கறிவேப்பிலை/ மணத்தக்காளி/ பூண்டு/ வல்லாரை/ வில்வம் என ஏதேனும் ஒரு மூலிகை) பயன்படுத்தலாம். கடல் உப்பு பயன்படுத்தக் கூடாது என்பதால், இங்கே இந்துப்பு பயன்படுத்துகிறோம். இதற்குப் பதிலாக கறுப்பு உப்பு, எலுமிச்சைச்சாறு, நெல்லிப்பொடி ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.

கரும்பு வெல்லத்துக்குப் பதிலாக பனைவெல்லம், தேன், பேரீட்சைத் துண்டுகள் என ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். தினமும் ஒருவகை மாவில், ஒருவித காய்கறிச்சாறு, ஒருவகை கீரைச்சாறு என மாற்றி மாற்றித் தயாரிக்கலாம். இந்த பூரிக்கான காய்கறிச்சாறு கேரட் அல்லது தக்காளிச் சாறாக இருந்தால், பூரியானது சிவப்பாக இருக்கும். கீரைச்சாறு, மூலிகைச்சாறு பயன்படுத்தி செய்தால், பச்சையாக இருக்கும். வாரம் ஒருமுறை இருமுறை இந்த உணவை இரவில் செய்து சாப்பிடுவது நல்லது.


வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை

தேவையானவை:

கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்)  150 கிராம்.
உளுந்து – 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று,
முட்டைக்கோஸ் – 25 கிராம்,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
குடமிளகாய் – ஒன்று
இந்துப்பு (பிளாக் சால்ட் அல்லது நெல்லிப்பொடியும் பயன்படுத்தலாம்) சிறிதளவு

மாவு கலக்கும் முறை:

முறை 1:

காய்கறிகளை சிறிதளவு நீர் விட்டு அரைத்து, அவற்றில் கேழ்வரகு மாவைக் கலக்கவும். பின், சிறிதளவு நீர்விட்டு பிசையவும். பிசைந்த மாவு சிறிது நெகிழ்ச்சியாக, குழைவாக இருக்க வேண்டும். வடைமாவு போல் அளவான நீரில் கலக்கவும்.

முறை 2:

அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும். கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகளைச் சேர்த்து கலக்கவும்.  இந்த இரண்டு முறைகளில் எந்த முறையில் வேண்டுமானாலும் மாவு தயாரிக்கலாம். இதற்கு, கடல் உப்புக்கு பதிலாக இந்துப்பு சேர்க்கவேண்டும். இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம். கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும். முந்திரி, வேர்க்கடலை சேர்த்தும் செய்யலாம். இதுபோல் முருங்கைக் கீரை+கேழ்வரகு மாவு கலந்து முருங்கைக்கீரை மிக்ஸ் கேழ்வரகு அடை செய்யலாம்.

குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.


‘என்னது, சொட்டு எண்ணெய் இல்லாம பூரியா! இன்னிக்கு எண்ணெய் விற்கிற விலைக்கு, தண்ணியிலயே பூரி சுடலாம்னா, யாருக்குத்தான் ஆசை இருக்காது… சொல்லுங்க!’ என்று ஆச்சர்யம் பொங்குகிறதுதானே. இதோ, தண்ணீரில் பூரி சுடுவதையும், வெஜிடபிள் கேழ்வரகு அடை செய்வதையும் உங்களுக்காக இங்கே செய்துகாட்டுகிறார், ‘இயற்கைப்பிரியன்’ இரத்தின சக்திவேல்.

2 comments

  1. செய்முறையை வீடியோ எடுத்துப் போட்டால் பயனுள்ளதாகஇருக்கும்

    1. உங்கள் கருத்திற்கு நன்றி…

      கிடைத்தால் பதிவு செய்கிறோம்…

Leave a Reply