ஒரு கப் டீக்குப் பின்னால்……

சென்னையில், இரவு 10 மணிக்கு மேல், ஒரு தனி உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பலதரப்பட்ட மனிதர்களைக்கொண்டு அது இயங்கினாலும், பெரும்பாலும் அனைவரது கண்ணிலும் படுபவர்கள், டீ விற்பனை செய்பவர்கள்தான். சைக்கிள், டிவிஎஸ் XL போன்ற வாகனங்களில், அதன் பின் இருக்கையைத் தூக்கிவிட்டு, ஒரு டீ கேனை அதில் வைத்துக்கொண்டு, மாநகரத்தின் முக்கிய இடங்களில் அவர்கள் சுற்றிவருவார்கள்; இரவுக்கு இருக்கக்கூடிய ஆயிரம் கண்களில், நிச்சயம் ஒரு கண் இவர்களுடையதுதான். அப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துப் பேசியதின் தொகுப்புதான் இந்தக் கட்டுரை!

அசோக்பில்லர் பகுதியில் டீ விற்கும் ஒருவரிடம் பேசியதில்,  “மூணு மாசத்துக்கு முன்னாடி வரை, டிவிஎஸ் XL வண்டிலதான் டீ வித்துட்டு இருந்தேன். அது என்னோட சொந்த வண்டி; தவணை கூட கட்டி முடிச்சுட்டேன். ஒரு நாள் ராத்திரி 12 மணிக்கு ரவுன்ட்ஸ் வந்த போலீஸ்காரவுங்க, ரோட்டுல டீ விக்கக் கூடாதுனு சொல்லி, லத்தியால பயங்கரமா அடிச்சுப் போட்டுட்டு போய்ட்டாங்க; கை காலெல்லாம் வீங்கிப்போயிருச்சு. அப்போ அவங்க அடிச்ச அடியால, ஜுரம் வந்து படுத்த படுக்கையாகிட்டேன். வேற வழியில்லாம, குடும்பத்தக் காப்பாத்துறதுக்காக வண்டிய வித்துட்டேன். எத்தன நாள் வருமானமே இல்லாம வீட்டுல இருக்கறது? வீட்லயும் கஷ்டம்; அதான் இப்போ ஆயிரம் ரூபாய்க்கு ஒரு சைக்கிள் வாங்கி, அதுல டீ கேனை வச்சு டி வித்துக்கிட்டு இருக்கேன். இப்போ வரைக்கும், வலது கையை சரியா தூக்க முடியல. இந்தத் தொழில்ல, நெறயப் பிரச்சனை இருக்கு தம்பி” என்கிறார் வருத்தத்துடன்.

 

ஈக்காட்டுதாங்கல்  பேருந்து நிறுத்தத்துக்கு அருகில், சாலை மறைவில் டீ விற்றுக்கொண்டிருந்த இன்னொருவரிடம் பேசியபோது,  “ஒரு நாள் ரெண்டு மணிக்கு, ஒரு போலீஸ் ஜீப் வந்துச்சு. வா வண்டில ஏறுன்னு சொல்லிட்டாங்க; டீ, சைக்கிள அப்டியே நடுரோட்டுல விட்டுட்டு, அவங்க கூட ஏறிட்டேன். பாதி தொலைவு போனதும், ‘முன்னூறு ரூவா குடு’ உன்ன எறக்கி விட்டுர்றோம்; இல்லன்னா வழக்கு போட்ருவோம்னு மிரட்டுனாங்க. சைக்கிள் பொருளெல்லாம் ரோட்டுல இருந்தனால, அவங்க கேட்ட காசக் குடுத்துட்டேன். பூந்தமல்லி ரோட்டுல அப்படியே என்ன எறக்கி விட்டுட்டு போய்ட்டாங்க; மனசு வெறுத்து 2 கி.மீ தூரம் ஓடி வந்தேன். சம்பவ இடத்தத் திரும்பி வந்து பார்க்கும்போது, என்னோட சைக்கிளை பக்கத்துல ஒரு ஹிந்திக்காரர் பாதுகாப்பா வச்சிருந்தார். எப்பவும் என்கிட்டதான் அவர் டீ வாங்கிக் குடிப்பாரு. நான் போலீஸ் ஜீப்ல ஏறுனத பாத்துட்டு, திரும்பி வர்ற வரை அங்கேயே நின்னுட்டு இருந்தாரு; அந்த ஒரு மனிதர்தான், நான் வாழணும்னு ஒரு நம்பிக்கைய குடுத்தாரு” என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

 

 

ஒலிம்பியா டெக் பார்க் பக்கத்தில், கொசுக்கடிக்குப் பயந்து ஒரு ஓரத்தில், அட்டையைப் பற்றவைத்து, அதற்குப் பக்கத்தில் நின்று டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் ஒரு டீயை வாங்கிக்கொண்டு பேச்சுக் கொடுத்தேன். “பத்தொன்பது வருசமா டீ வித்துட்டு இருக்கேன், அப்போல்லாம் இந்த ஏரியாவுல நான் மட்டுந்தான்; எல்லாரும் என்கிட்டேதான் டீ வாங்கிக் குடிப்பாங்க. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் நாலஞ்சு வண்டி எப்பவும் நின்னுட்டே இருக்கும். பதினாறு பிளாஸ்க் வரை ஒரு நைட்டுல டீ வியாபாரம் பண்ணிருக்கேன். ஆனா இப்போ, நாலு பிளாஸ்க் டீ விக்கிறதுக்குள்ள, நாயி படுற பாடா இருக்கு. ஒரு இடத்துல நின்னாத்தான் பொழப்பு போகும்; அலைஞ்சிகிட்டே இருந்தா எங்க தொழிலுக்கு சரிப்பட்டு வராது. போலீஸ் நிக்க விடாம தொரத்திகிட்டே இருப்பாங்க. பொழுது விடியும் போது பார்த்தா ரெண்டு பிளாஸ்க் டீ அப்படியே இருக்கும். விக்காத டீயை வீட்டுக்கு எடுத்துட்டுபோகும் போது, மனசு அவ்வளவு கனமா இருக்கும்; இத நம்பி கடன் வாங்குனது எல்லாம் கண்ணுக்குள்ள வந்து வந்து போகும்பா. நான்லாம் நல்லா தூங்கியே ரொம்ப வருஷம் ஆச்சு, இப்போல்லாம் தூக்கமே வர்ரது இல்ல” என்கிறார்.

 

ஒரு கப் டீக்குப் பின்னால், நமக்குத் தெரியாத பல அடர்த்தியான  விஷயங்கள் இருக்கவே செய்கின்றன. டீ விற்பனை செய்கிற எல்லோரும், சென்னையில் உள்ள  டீ கம்பெனிகளில் டீயை மொத்தமாக வாங்கி, கேன்களில் வைத்து வியாபாரம் செய்கிறார்கள். ஒரு பிளாஸ்க் டீ நூறு ரூபாய்; அதில் மொத்தமா சுமார் முப்பது டீ வரும். ரெண்டு வருசத்துக்கு முன்பெல்லாம், விற்பனை ஆகாத டீயை, அந்தக் கம்பெனியே திரும்பப் பெற்றுக்கொள்ளும். இப்போ, டீ வியாபாரிகள் எண்ணிக்கைப் பெருகிவிட்டதால, இப்போது அந்த டீ கம்பெனி, யாரிடமும் விற்பனையாகாத  டீயைத் திரும்பப் பெறுவதில்லை.

 

chennai night

 

இரவில் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு, டீ விற்கக் கூடாது என்று காவல் துறை சொல்வதற்கு முக்கிய காரணமே, “டீ விற்கிறேன் என்ற பெயரில், சிலர் போதைப் பொருள்கள் விற்பதுதான்” என்கிறார்கள். சைக்கிளில் டீ விற்பவர்களோடு சேர்ந்து, ஒருசிலர் போதைப் பொருள்களையும்  விற்பனைசெய்வதால்தான், டீ விற்பனை செய்பவர்களுக்கும் பிரச்னைவருகிறது என்றார்கள். அவர்கள் சொல்வது போலவே, பைக்கில் வரும் சிலர், சைக்கிள் அருகில் வந்ததும், டீ விற்பவரின் முகத்தைப் பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்று விடுகிறார்கள்; ”அவர்கள் எல்லோருமே, போதையைத்  தேடி இரவில் வருபவர்கள்தான் என அவர்கள் சொன்னார்கள். இப்படி சிலர் செய்கிற தவறுகளால், ஒட்டுமொத்தமாக டீ விற்பவர்களைக் குற்றவாளியாகப் பார்ப்பது கவலையளிக்கிறது” என்கிறார்கள் டீ விற்பவர்கள்.

 

“போலீஸ் வந்துரும் சீக்கிரம் டீயைச் சாப்பிட்டுட்டு கிளம்புங்கப்பா” – இந்த ஒரு வாக்கியத்தில்தான், அவர்களின் ஒட்டுமொத்த இரவுமே அடங்கியிருக்கிறது. இரவு நேரத் தவறுகள், சட்டம், தண்டனை ஆகியவற்றைத் தாண்டி, இந்த எளிய மனிதர்களுக்கென ஒரு வாழ்க்கையும் கதையும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அப்படியான மனிதர்களின் கதை, எப்போதும் அவர்கள் நினைத்தபடி இருந்ததே இல்லை. இருக்கப் போவதுமில்லை.

 

 – ஜார்ஜ் ஆன்டனி

 

vikatan

Leave a Reply