எது ஆடிபெருக்கு? ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்!

கைவலிக்க எழுதியிருக்றேன்… தயவு செய்து படித்து, அவசியம் உணர்ந்தால் பகிரவும்.
எது ஆடிபெருக்கு? ஏமாற்றும் அரசும், ஏமாறும் மக்களும்!
தமிழர்களின் வழிபாடுகள் அனைத்தும் மரம், செடி, கொடி என பசுமை சார்ந்தே இருக்கிறது. மனிதர்களுக்கு நன்மை செய்யும் ஆற்றல்கள் அனைத்தும் போற்றிப் பாதுகாக்கவே அதனை பக்தியோடு வழிபட்டுள்ளான் தமிழன்.
பறவைகள், விலங்குகள், ஆயுதங்கள், வேட்டைக் கருவிகள், வேளாண்மைக் கருவிகள் என அனைத்தும் வழிபாட்டு முறைகளில் ஈடுபடுத்தப்பட்டன. இவை யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. பூச்சிகளும், வண்டுகளும், பறவைகளும் விலங்குகளும் இந்த பூமியை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மனிதன் தன் தேவைக்கு இயற்கையிலிருந்து எடுத்துக்கொண்டு வாழ்ந்தான். இயற்கையின் குணத்தை உணர்ந்து அதன்படி பருவ காலத்தில் கிடைக்கும் வளங்களை முறையாக பயன்படுத்தவும், பாதுகாக்கவும் செய்தான். ஆனால் அந்நிலையை அந்நிய படையெடுப்புகள் விரும்பவில்லை. வளங்கள் எல்லாம் அரசு எனும் கொடிய முறைக்குள் சிக்குண்டது. மக்கள் வளங்களை பயன்படுத்த முடியாமல் அரசு ஆக்கிரமித்தது. அனைத்தும் சூறையாடப்பட்டு இயற்கை வளமில்லாத பாலைவன நாடுகளுக்கு கொண்டுசெல்லப்பட்டது.
உயர்ந்த காடுகளை அழித்து விற்பனை செய்தனர். அந்த திசையில் இருக்கும் நிலங்களில் மழை இல்லை. பறவைகள்  விலங்குகள் பரிதவித்தன. பூக்களில்லை, பூச்சிகள் அழிந்தது. மகரந்தம் இல்லாமல் புதிய காடுகள் உருவாகவில்லை. தாவரங்கள் அழிந்து எல்லாம் தரையாகின. ஊர்வன உணவில்லாமல் மடிந்தது. பூச்சி முதல் மனிதன் வரை இருந்த உணவுச் சங்கிலி அறுபட்டது. 

இதையெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுவிடக் கூடாதல்லவா ? அதற்குத்தான் , பூங்காக்கள், சரணாலையங்கள். எஞ்சியதை பிடித்து கூண்டுக்குள் அடைத்து காட்சிப்பொருளாக்கினர். நாமும் கட்டணம் செலுத்தி பார்த்துவருகிறோம் .
கீழிருந்து நீர் ஆவியாகி தேங்கி திரண்டு நிற்கும் மேகங்களை குளிர்விக்க உயர்ந்த காடுகள் இல்லை. குளிர்ந்த காற்றில்லை. மழை இல்லை. அருவிகள் வரண்டது. ஆறுகள் வரண்டது. ஆங்காங்கே இருக்கும் காடுகளால் கிடைக்கக்கூடிய சொற்ப மழை மனிதர்கள் வாழ போதுமானதாக இருந்தாலும் அதனை ஆறுகளில் பாய்ச்சி அணைகளில் தேக்கி, தேவைப்படும் இடத்திற்கு இணைப்பினை ஏற்படுத்தி வழங்க வேண்டிய அரசு செய்யவில்லை. அது மணல் குத்தகை விடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் வசதியாக காலி ஆறுகளாகவே வைத்திருக்கிறது.
இதையெல்லாம் நாம் எதிர்த்துக் கேட்கும் சூழ்நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாம் நீர்நிலைகள், வேளாண்மை தொடர்பாக ஏதேனும் விழாக்கள் கொண்டாடினால் அன்றைய தேவைக்கு மட்டும் நீர் திறக்கப்பட்டு பெரும் சாதனையாக ஊடகமும், அரசும் பிரச்சாரம் செய்கிறது. இன்னும் வளமாகத்தான் இருக்கின்றோம் என்றும் நமது வழிபாட்டிற்கு அதிகார வர்க்கம் மதிப்பு செய்வதாகவும் காட்டிக்கொள்கின்றார்கள்.
அடையாறு, அமராவதி ஆறு – காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு – காவிரியின் துணையாறு, சிற்றாறு,சின்னாறு,செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாநதி – தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு – தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு(அமராவதியின் துணையாறு), நங்காஞ்சி ஆறு(குடகனாற்றின் துணையாறு), கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு (கன்னியாகுமரி), மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு – தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு – காவிரியின் துணையாறு, பச்சை ஆறு – தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா நதி, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு (400 கி.மீ), தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு (190 கி.மீ), வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, சனத்குமார நதி- காவிரியின் துணையாற, மார்கண்ட நதி- தென்பெண்னையாற்றின் துணையாறு, பாம்பாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, வாணியாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு,கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறு 

என்று தமிழகம் முழுவதும் நரம்பு மண்டலம்போல இருந்து நம்மை எல்லாம் செழிப்பாக வாழவைத்த இந்த ஆறுகள் எல்லாம் இன்று கூவங்கலாகவும், மணல் குவாரிகளாகவும், சாயக்கழிவு தொட்டிகளாகவும், வீடுகளாகவும், சாலைகளாகவும் மாறிவிட்டது. இந்த ஆறுகள் அனைத்திலும் சீமை கருவேலமரங்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டு மூலிகை இனங்களும் அழிக்கப்பட்டுள்ளது.அம்மரங்களை  காடுகள் என கணக்கிட்டு ஆயிரகணக்கான கோடிகளும் சுருட்டப்பட்டுள்ளது.
1980 காலங்கள் வரை குளம், குட்டை, ஏரிகள் என்று அனைத்தையும் கிராம கட்டுபாட்டிலிருந்து அரசு கட்டுப்பாட்டிற்கு சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட நீர்நிலைகளை சுத்தம் செய்ய மாவேள், சீமை  கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் போன்ற தன்னார்வ அமைப்புகள் முயற்சித்தாலும் அதனை அரசு தடுத்து நிறுத்திவிடுவதை நாம் கவனிக்க வேண்டும்.
உயர்ந்த மலைகள் தகர்க்கப்பட்டு உலக நாடுகளின் உயர்ந்த கட்டிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வளங்கள் கப்பல்களில் பயணம் செய்கிறது. விதைகள் போனது. கூடவே பரதேசியாக்கப்பட்ட அடிமைத் தமிழரும் இன்றுவரை வெளிநாட்டு வேலை என்று அனுப்பி வைக்கப்படுகின்றான். இந்நிலை மாற வேண்டும். அரசு என்பது யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்வோம். மக்கள் துணிந்தால்  அரசு அடிபணிந்து வரும். 
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இதை சமய விழாபோல மாற்றுகின்றனர். இன்று ஆடிபெருக்கிற்கு கூலிக்கு தண்ணீர் திறந்துவிடுகிறார்கள்.  நாளைக்கு ஆளுக்கு இரண்டு துளி தீர்த்தம் கொடுக்கும் சூழல் உருவாகும்.

www.channeltamil.tv ( சேனல் தமிழ் ) 
-ஏனாதி பூங்கதிர்வேல்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்,

விவசாயிகள் விடுதலை கழகம்.

Leave a Reply